Friday, June 29, 2007

சவுதி ஆட்டம் - 1

முதன் முதலில் வெளிநாடு சென்று வேலை பார்க்க போகிறேன். உற்றார், உறவினர், நண்பர்கள் என்று வஞ்சனையில்லாமல் எல்லோருக்கும் என் பயணத்தைப் பற்றி தெரிவித்திருத்தேன். நட்புக்காக உயிரையும் கொடுக்க கூடிய பாஸ்கர், அப்போதுதான் 4 வருட பொறியியல் படிப்பை 8 வருடங்களில் முடித்திருந்தான். வீட்டிற்கு ஒரே பிள்ளை என்பதால் மதுரைப்பக்கம் மட்டும் வேலை தேடிக்கொண்டிருந்தான் பெற்றோரின் அறிவுரைப் படி. சீனியை சென்னையிலிருந்து வழியனுப்பிவிட்டு வருகிறேன் என்று வீட்டில் கூறி மும்பை வந்திருந்தான்.

குறிக்கப்பட்ட நாளில் உற்றார், உறவினர், நண்பர்கள் புடைசூள விமான நிலையம் வரை சென்று விமான சீட்டு / கடவு சீட்டு பிரச்சனையால் 2 நாட்கள் கழித்து பயணமானேன். சவுதியா விமானத்தில் முதலில் அரபியில் இறைவனை வேண்டினார்கள். புரண்டு, உருண்டு வளர்ந்ததெல்லாம் முஸ்லிம் தெருவிலும் பள்ளிவாசல் என்பதால் ஒன்றும் வித்தியாசமாக தெரியவில்லை.அடுத்த மதத்தைப் பற்றி தெரிந்து வைத்திருந்தால் ' religious tolerance' கொஞ்சம் இருக்கும் என்பது என் நம்பிக்கை. அதை சிறு வயதிலிருந்தே கொண்டு வந்தால்தான் முடியும். சிங்கப்பூரில் பள்ளியிலிருந்து குழந்தைகளை மற்ற மத வழிபாடு இடங்களுக்கு அழைத்து செல்வார்கள். கோயில், பள்ளிவாசல், குருத்வாரா உள்ளே என்ன நடக்கிறது, எப்படி வழிபடுகிறார்கள், மற்ற மத நம்பிக்கைகள் பற்றி சிறு வயதில் அறிந்தாலே நாட்டில் கொஞ்சம் மத வெறி குறையலாம்.

விமானத்தின் பின்புறம் நாலைந்து அரபியர்கள் புகைத்து கொண்டிருந்தார்கள். பணிஆண்கள் சாப்பாடு பரிமாறினார்கள். குடிக்க தண்ணீர் மட்டும்தான். alcohol க்கு தடா. தமாம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. எல்லா பெட்டியையும் எடுத்துக் கொண்டு வெளியே வரும் போது ' பெட்டிகள் சோதனை' என்றார்கள். மிக நீள மேசையில் ஒவ்வொரு பெட்டியையும் பிரித்து மெய்ந்து கொண்டிருந்தார்கள் இரண்டு அரபியர்கள்.
முதன் முதலில் சவுதி என்பதால் ஏன்? எதற்கு? எப்படி? என்று கேட்காமல் (கேட்க முடியுமா?) நானும் பெட்டியை திறந்து வைத்தேன். எனக்கு முன் உள்ளவனுடைய ( பார்த்தால் நம்ம ஊர் மாதிரி இருந்தான்) பெட்டியை சோதித்து உள்ளே இருந்து போஸ்ட் கார்டு அளவில் உள்ள பிள்ளையார்பட்டி பிள்ளையார் புகைபடத்தை எடுத்தான் அரபி. நம்மாளை ஒரு முறை முறைத்து விட்டு நான்காக கிழித்து குப்பையில் எறிந்தான் பிள்ளையாரை. நம்மாளோ ' ங ' என்று விழித்தான். நான் அதிர்ந்தே விட்டேன். அடுத்து என் பெட்டியை பார்த்தான். துணிகள் அழகாக மடிக்கப் பட்டதை பார்த்து எதையும் கலைக்காமல் அடியில் உள்ளே கை விட்டான். பெட்டியை இரண்டு முறை சுண்டி தட்டி பார்த்தான். என்ன நினைத்தானோ என்னை போக சொல்லிவிட்டான். நான் கொண்டு சென்றது தப்பித்தது. பெட்டியை எடுத்து வைத்துக் கொண்டிருந்தேன். அடுத்து வந்த மலையாளத்தானை சோதனையிட்டான். அவன் என்னை போல புதிது போல. உள்ளேயிருந்து ஒரு நூலை எடுத்து அவனிடம் காண்பித்து ' இது என்ன?' என்று வினவினான். அவன் ' பைபிள்' என்றான். அதை கிழிக்கா முடியாததால் குப்பையில் எறிந்தான் அரபி.

கைப்பற்றியதை எல்லாம் என்ன செய்வார்கள்? படித்து பார்ப்பார்களா? எரித்து விடுவார்களா? பக்கோடா பொட்டலம் போட பயன்படுத்துவார்களா? யோசித்துக் கொண்டே வெளியே வந்தேன். பின்புதான் தெரிந்தது, சோதனையிடுவது மாற்று மத நூல்களையும், விக்ரகங்களையும், படங்களையும் தடுப்பதற்கு மட்டுமல்ல, நீல படங்கள், மஞ்சள் பத்திரிக்கை, ஒலி நாடா ( என்ன கலர்? ) மற்றும் போதை மருந்துகளை தடுப்பதற்க்காகவுமே. இதில் வேடிக்கை என்னவென்றால் மேற் கூறிய எல்லாம் சவுதிக்குள் தாராளமாக புழங்குவது எல்லோரும் அறிந்த உண்மை.



சவுதி ஆட்டம் தொடரும் .....

Wednesday, June 6, 2007

ஆஹா!! கடா வெட்டுறாய்ங்கடோய்...

http://www.youtube.com/watch?v=9GpPcMVbmtw


இதை ஏற்பாடு செய்த "HR Manager" இறந்து ( ஒரு பேச்சுக்குத்தான்) மேலுலகம் சென்றாராம்.
"தங்கள் வரவு நல்வரவாகுக" என்று வரவேற்ற சித்திரகுப்தன், " பாருங்கள் இதுவரை இங்கே மனித வள மேளாளர் எவரும் வந்ததில்லை. அதனால் உங்களை எங்கே அனுப்புவது என்று தெரியவில்லை" என்றார்.
மனித வள மேளாளரோ " என்னை சொர்க்கத்ற்குள் விடுங்கள். நான் அங்கேயே காலத்தை கழிக்க விரும்புகிறேன்" என்றார்.
" இல்லை !! எருமை பார்ட்டியிடமிருந்து உத்தரவு வந்திருக்கிறது. நீங்கள் ஒரு நாள் சொர்க்கத்திலும், ஒரு நாள் நரகத்திலும் இருக்கவேண்டும். அதன் பின், மீதி நாட்களை எங்கே கழிக்கவேண்டுமென்று உங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுக்கலாம் " என்றார்.
ஆனால் மனித வள மேளாளரோ " எனக்கு நரகம் போக விருப்பமில்லை, நான் சொர்க்கத்திலேயே இருக்கிறேன்" என்றார்.
" மன்னிக்கவும்!! சட்டம் என்றால் சட்டம்தான். உங்க ஊர் ஹெல்மட் சட்டம் அல்ல. நீங்கள் ஒரு நாள் சொர்க்கத்திலும், ஒரு நாள் நரகத்திலும் இருக்கவே இருக்கவேண்டும் " என்று கூறி மனித வள மேளாளரை மின் தூக்கி உள்ளே அனுப்பினார்.
மின் தூக்கி கீழே கீழே கிழே நரகத்திற்குச் சென்றது.
மின் தூக்கி கதவு திறக்கப்பட்டது. அங்கே அவர் கண்டது கண்கொள்ளா காட்சி. எங்கு பார்த்தாலும் பசுமை, அழகான பூங்கா, தூரத்தில் அவர் அடிக்கடி செல்லும் மனமகிழ் மன்றம். வெளியே அவருடன் வேலை பார்க்கும் நண்பர்கள் கையில் மாலையுடன் வரவேற்கிறார்கள். படத்தில் உள்ளது போல் எல்லோரும் கை கொடுத்து கை தட்டி உற்சாகபடுத்துகிறார்கள். யானையும் வந்து அவருக்கு மாலை போட்டது. அதன் பிறகு ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். நண்பர்களுடன் பழைய கதைகள் பேசி பேசி பொழுது போனதே தெரியவில்லை.
மனித வள மேளாளருக்கு பிடித்த "வயதான பிச்சு (old monk)" ரம் & வறுத்த கோழியுடன் இரவில் மிக அருமையான விருந்து. விருந்தில் சாத்தானை சந்தித்தார். சாத்தான் மிக அழகாக இருந்தார் அடிக்கடி "A' ரக ஜோக் சொல்லி குஷிபடுத்தினார். சாத்தானுடன் நடனமாடினார்.
" ஆகா! இவ்வளவு இன்பமானதா நரகம் " என்று நினைக்கும்போதே அவர் விடைபெறும் வேளை வந்தது. அவர் நண்பர்களும் சாத்தானும் கை குலுக்கி மின் தூக்கி வரை வந்து வழி அனுப்பினார்கள்.
மின் தூக்கி மேலே மேலே சென்றது. சித்திரகுப்தன் கதவை திறந்து " அடுத்த ஒரு நாள் சொர்க்கத்தில்" என்று கூறி அவரை சொர்க்கத்திற்கு அனுப்பினார்.
ஒரு நாள் முழுவதும் தேவதைகளுடன் மேக கூட்டதிற்குள் உய்யலாலா பாடி திரிந்தார். ரம்பை, ஊர்வசி, மேனகா நடனங்களை கண்டு ரசித்தார். ஒரு நாள் முடிந்தது. சித்ரகுப்தன் மீண்டும் வந்தார்.
"சரி. நீங்கள் ஒரு நாள் சொர்க்கத்திலும், ஒரு நாள் நரகத்திலும் இருந்தீர்கள். இப்பொழுது மீதி நாட்களை எங்கே கழிக்கவேண்டுமென்று உங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுக்கலாம் " என்றார்.
மனித வள மேளாளர் சிறிது நேரம் யோசித்து " நல்லது. நான் இதை சொல்வேன் என்று நானே எதிர் பார்க்கவில்லை. சொர்க்கம் நன்றாகத்தான் இருந்தது ஆனால் அதைவிட நரகத்தில்தான் நன்றாக பொழுது போனது"
உடனே சித்ரகுப்தன் அவரை மின் தூக்கிக்கு அழைத்துச் சென்று நரகத்திற்கு வழிஅனுப்பிவைத்தார்.
மின் தூக்கி கீழே கீழே கிழே நரகத்திற்குச் சென்றது.
மின் தூக்கி கதவு திறக்கப்பட்டது. நரகத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் மேளாளர் . கண்ணுக்கு எட்டியவரை எங்கு பார்த்தாலும் பாலை நிலம். ஒரு மரம் கூட தென்படவில்லை. எங்கு பார்த்தாலும் மனித மலம். ஒரே துற்நாற்றம்.
மேளாளரின் நண்பர்கள் கிழிந்த உடையுடன் குப்பை அள்ளிக் கொண்டிருந்தார்கள். தூரத்தில் இரண்டு தடியர்கள் எண்ணெய் சட்டிக்கு தீ மூட்டிக் கொண்டிருந்தார்கள்.
மேளாளர் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார். அப்பொழுது சாத்தான் அவர் அருகில் வந்து தோளில் கை போட்டு புன்னகை செய்தார்.
மேளாளர் நடுக்கமுடன் " எனக்கு ஒன்றும் புரியவில்லை, நேற்று நான் இங்கு இருந்தேன். நண்பர்களுடன் ஆடினேன் பாடினேன், ஆனால் இப்போ .... " வார்த்தை வராமல் தடுமாறினார்.

சாத்தான் மேளாளரைப் பார்த்து புன்னகைத்து

"Yesterday we were recruiting you, today you're an Employee"

Sunday, June 3, 2007

என் முதல் பதிவு

மும்பையில் வேலை பார்த்து கொண்டிருந்த சமயம்। வேலை அலுவலாக 15 நாட்கள் துபாய் சென்று வந்ததிலிருந்து, நாமும் வெளிநாடு சென்று வேலை பார்க்க வேண்டும் என்ற தாக்கம் அதிகமாயிற்று. என் நண்பன் கஞ்சா சரவணன் வெளிநாட்டு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருந்தான்.
"டேய் மாப்ளே என்னையும் ஆட்டையில் சேர்த்துகோடா " என்று அடைகலமானேன்.

கஞ்சா சரவணன் - பெயர் காரணம் நீங்கள் நினைப்பது போல் அல்ல. திண்டுக்கல் அருகில் உள்ள சின்னாளபட்டி சொந்த ஊர். (பொறியியல்) கல்லூரி நாட்களில் நன்கு படிப்பவன். பரிட்சை திருவிழாவை முதல் வாரத்திலேயே முடித்துவிட்டு மீதமுள்ள நாட்களில் எங்களுக்காக பிட் அனுப்புவது, எந்த கேள்விகளை பிட் எழுதி கொண்டு செல்ல வேண்டும் என்றுஅறிவுரை கூறுவது அவனது பொழுதுபோக்கு + கடமை.
பரிட்சை திருவிழா - நிறைய அரியர்ஸ் வைத்து கொண்டு ஒரு மாதத்திற்கும் மேலாக காலை, மாலை என்று இரவு பகல் பாராமல் பரிட்சை எழுதுவதால்.

"டேய் சீனி ! வெளிநாட்டில் பைபிங் வேலை தான் அதிக சம்பளம். அதனால் நாம் பைபிங் இஞ்ஜினியராக போகிறோம்" என்றான்.
"உனக்கு ஏற்கனவே தெரிந்த தொழில். ஆனால் எனக்கு? பைப் என்றால் வீட்டிலிருக்கும் குழாய் தான் தெரியும்." என்றேன்
"நான் உனக்கு சொல்லி தருகிறேன்" என்று கூறி பாடத்தை ஆரம்பித்தான். நானும் கேட்டுக்கொண்டேன் வாரமொருமுறை. கஞ்சா சரவணனுக்கு மும்பையில் நிறைய இடைததரகர்கள் தெரியும். ஓரு நாள் அவனிடமிருந்து போன், பாந்த்ரா குர்லா காம்ப்ள்க்ஸில் இருக்கும் வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பும் அலுவலகதிற்கு வந்துவிடு, உனக்கு நாளை பைபிங் இஞ்ஜினியருக்கு நேர்காண்ல். வெற்றியென்றால் நேர்காணல் எடுத்த அதிகாரிக்கு 1 மாத சம்பளம் கையூட்டு கொடுக்கவேண்டும்" என்றான்.
மறுநாள் நானும் இயன்றவரை பைப் பற்றி படித்து சென்றேன். இருந்தாலும் எதுவும் தெரியாத ஏரியாவில் நேர்காணல் என்றால் உதறல்
எடுக்கத்தானே செய்யும். ஆனால் நடந்ததோ வேறு.
" சீனி, பைபிங் இஞ்ஜினியருக்கு வேறு ஆளை போட்டு விட்டார்களாம், பைபிங் போர்மேன் களுக்கு ஆட்களை எடுக்கிறார்களாம்"
" டேய் கஞ்சா, பைபிங் போர்மேனா போனா என்னடா?"
" வேண்டாம்டா, வேறு வேலை பார்க்கலாம், கொஞ்சம் பொறு"
" இல்லடா, நேர்காணல் ஏற்பாடு செய்" என்றேன்.
கொஞ்ச நேரத்தில் ஏற்பாடு செய்து அலுவலகத்திற்குள் அனுப்பினான் என்னை. முதல் மற்றும் அடித்தளத்தில் இயங்கும் அலுவலகம் . நிறைய தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைக்கு முற்றுகையிடும் இடம். இதில் தமிழ், மலையாளம், பிஹார் மக்கள் தான் அதிகம்.
மலையாளிகள் அநேகமாக Skilled workers.
தமிழர்கள் - casual labours
பிஹாரி - Brick works / carpenters
Welder, Fitters போன்றவர்களுக்கு அடித்தளத்தில் நேர்காணல். வராந்தா வில் வரிசையாக மேசை போட்டு அதிகாரிகள் அமர்ந்திருந்தார்கள்.
இடைததரகர்கள் ஆட்களை நேர்காணலுக்கு அழைத்து வந்து விடுவார்கள். அந்த இடம் சந்தையை போன்று ஒரே சத்தம்.
நானும் நேர்காணல் அதிகாரி முன் சென்று அமர்ந்தேன். இது நாள் வரை என் வாழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட நேர்காணல் மற்றும் தொலைகாணல் கண்டிருக்கிறேன். சில நேர்காணல் மறக்க முடியாத அனுபவம். அதில் ஒன்றுதான் இது.
இந்தியில் தான் ஆரம்பித்தார். எனக்கோ இந்தி சரியாக வராது. தமிழகத்தில் அதிகம் பேர் இந்தியில் பேசுபவர்கள் உள்ள ஊரை சேர்ந்தவனென்றாலும் இந்தி கற்றுக்கொள்ள வில்லை. முதன் முதலில் மும்பை வந்தபோது இந்தி கற்றுக்கொள்ளாததின் வலியை உணர்ந்தவன். தாய் மொழி மேல் காதல் கொண்டிருந்தாலும், பிழைப்பிற்காக மற்ற மொழிகளை தெரிந்து வைத்து கொள்வது நலம் என்று கருதுபவன்.அதனால்தான் கொஞ்சம் தெலுங்கு, கொஞ்சம் கன்னடம், கொஞ்சம் மலையாளம், கொஞ்சம் இந்தி கற்றுகொண்டேன். ஏன், சீன மொழி கூட மொழிபள்ளிக்கு சென்று கற்றுகொண்டேன். நான் கற்றுக்கொள்ளவில்லை என்று வருத்தப்பட்ட ஒரே மொழி " மலாய்". மிகவும் எளிய மொழி. கற்றுக்கொள்ள வாய்ப்பிருந்தும் கற்றுக் கொள்ளவில்லை. ஏன் என்று எனக்கே தெரியவில்லை.

நேர்காணலை ஆரம்பிக்கலாமா என்று வினவினார். சரி என்றேன்.
" ஆங்க் லக்னெக்கேலியே கியா கியா சாஹியே" ( தீ பிடிக்க என்ன என்ன வேண்டும் )
" ஆங்க் சாஹியே" ( தீ வேண்டும் ) என்றேன்.
"பச் ! தீ பிடிக்க என்ன என்ன வேண்டும்"
"தீ வேண்டும்" என்றேன் மறுபடியும்.
" டீக்கே டீக்கே, ஓ ஆங்க் லக்னெக்கேலியே கியா கியா சாஹியே" (சரி சரி , அந்த தீ பிடிக்க என்ன என்ன வேண்டும் )
" தீ குச்சி வேண்டும்" என்றேன்
" வேற"
"side சாஹியே" என்றேன்
" வேற"
........
" அரே ! ஹவா சாஹியே" ( காற்று வேணும் ) என்று கூறி கெகே பிகே என்று சிரித்தார். பின்பு மேசை ட்ராயரிலிருந்து ஒரு ட்ராயிங் எடுத்து விரித்து " இந்த ட்ராயிங் பெயர் என்ன" என்றார். நானே ஒரு அண்ட்ராயர் (undrawer). scale வைத்து கோடு போட்டாலே நேர் கோடு வராது. கல்லூரி நாட்களில் machine drawing தேர்வில் ஒன்றும் தெரியாமல் அசிங்கமான படம் வரைந்து வைத்து விட்டு வந்ததால் விசாரணைக்கு ஆளானவன்.
" நஹி மாலும்" என்றேன்.
அடுத்து புகைபட அல்பம் ஒன்றை எடுத்தார்। அதில் ஒரு படத்தை காண்பித்து இது என்ன? என்றார். ( அது ஒரு சுமை தூக்கி). தெரியாது என்றேன். அடுத்து ஒரு படத்தை காண்பித்து "இதில் குழாய் ஏன் வளைந்துள்ளது" என்றார்.(Expansion Loop in steam piping)
"குழாய் போட இடமில்லை, அதனால் வளைத்து போட்டிருக்கிறார்கள்" என்றேன்.
கடுப்பாகி "ஒரு பதிலாவது சரியாக சொல்வாய் என எதிபார்த்தேன். சரி பரவாயில்லை. நீ தேர்வாகிவிட்டாய். உன் நண்பனை என்னை வந்து பார்க்க சொல் " என்றார்.
நானும் வெளியே வந்து சரவணனை உள்ளே அனுப்பினேன். திரும்பி வந்தவன் " சீனி, பத்தாயிரம் கேட்கிறாண்டா, சம்பளத்தை அதிகரித்தால் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறேன்" என்றான்.
இரண்டு நாட்களில் உடன்பாடு எட்டப்பட்டது. மாதம் 350 அமெரிக்க டாலர் சம்பளம். சவுதி அரேபியாவில் உள்ள "அல் மொஜில்" என்ற மிக
பெரிய கம்பெனியில் வேலை.
ஒரே மாதத்தில் விசா தயாராகிவிட்டது. மூன்றரை ஆண்டுகள் மும்பையில் வேலை பார்த்த கம்பெனியிலிருந்து ராஜினாமா செய்தேன்.
சவுதி அரேபியா கனவில் மிதக்க ஆரம்பித்தேன். கஞ்சா சரவணன் கடைசி வரை " " வேண்டாம் கொஞ்சம் பொறுடா வேறு வேலை பார்க்கலாம் " என்றான்.
போய் பார்த்துதான் பார்க்கலாமே என்னவென்று. பிடிக்கவில்லையென்றால் திரும்பி வரபோகிறேன்.