Thursday, March 3, 2011

அது ஒரு துன்பியல் சம்பவம்

மாலை வீடு திரும்பியதும் தான் என் அலைபேசியை கவனித்தேன். இரண்டு மிஸ்டு கால்கள் இருந்தது. ஊரிலிருந்து அம்மா அழைத்திருக்கிறார்கள். எதற்காக இருக்கும் என் நினைத்துக் கொண்டே அம்மாவை அழைத்தேன்.

"என்னம்மா கூப்பிட்டிருந்தீங்க, என்ன விஷயம்" என்றேன்.
"டேய் ! இன்று ஒருவன் நம் வீட்டிற்கு வந்திருந்தான், திண்டுக்கல்லில் உன் கூட பொறியியல் கல்லூரியில் படித்தவனாம் பெயர் சீனிவாச பாபு என்று சொன்னான். படிப்பு முடிந்து 20 ஆண்டுகள் ஆனதால் எல்லோரும் கல்லூரியில் ஒன்று கூடுகிறார்களாம். 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த முகவரியில் கடிதம் போட்டிருக்கிறான். ஏற்கனவே கடிதம் போட்டிருந்தேனே, ஏன் பதில் இல்லை என்றான். வீட்டு முகவரி தான் ஆண்டுக்கு ஒரு முறை மாறிக்கொண்டிருக்கிறதே.

உன்னைப் பற்றி விசாரித்தான். சென்னையில் இருப்பதாகக் கூறினேன். உன்னிடம் பேசவேண்டும் என்றதால் உன்னை இரண்டு முறை அழைத்தேன். உன்னைப் பிடிக்க முடியவில்லை. உன் மொபைல் நம்பரை கொடுத்திருக்கிறேன். அவனும் சென்னையில் தான் இருக்கிறானாம். உன்னிடம் பேசுவான். என்றார்கள்.

'சரிம்மா, பாபு அழைத்தால் நான் பேசிக்கொள்கிறேன் 'என்றேன்.

அலைபேசியை அணைத்துவிட்டு, தொலைகாட்சியை போட்டேன்.


கண்கள் தொலைக்காட்சியில் நிலைத்திருந்தது மனம் கல்லூரி நாட்களை அசை போட்டது. எல்லோரையும் போல பல கனவுகளுடன் கல்லூரிக்குச் சென்ற எனக்கு முதல் வருடத்தில் இருந்தே பிரச்சனை. சேர்ந்த அன்றே ராகிங் செய்தார்கள் சீனியர்கள். ஏற்கனவே இதை எதிர்பார்த்திருந்ததால் நானும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அந்தி மாலை சந்தி சாய, அந்த மாமுனிவர்கள் ...... தெரியாமல் இங்கு வந்து சேர்ந்தேனே முன்னோர்களே மூததோர்களே அடியேனை வாழ்த்துங்களேன் என சீனியர்களுக்கு சலாம் போட்டேன். எறும்பை வாக்கிங் நடத்திச் சென்றேன் ஒரு குச்சியோடு. "ஆயிரம் நிலவே வா, 999 நிலவே வா, என ஒன்று வரை பாடினேன்.

இதெல்லாம் கொஞ்ச நாட்களுக்குத்தான்.ஒரு நாள் இரவு நேரம், விடுதியில் (ஹாஸ்டலில்) சீனியர்களுக்கும் எங்களுக்கும் தகராறு. எப்படி ஆரம்பித்தது என தெரியவில்லை. வராந்தாவில் இருந்த விளக்குகளையெல்லாம் அடித்து உடைத்துவிட்டார்கள். உணவு விடுதியிலிருந்து திரும்பி வந்தபோது அடிதடி நடந்து கொண்டிருந்தது. நடந்ததை வேடிக்கைப் பார்த்ததைப் பார்த்தவன் போட்டுக் கொடுத்துவிட்டான், பிறகு நடந்த கல்லூரி விசாரணையில். கல்லூரியில் இருந்து இரண்டு வாரங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டேன் செய்யாத குற்றத்திற்காக. அன்றிலிருந்து - காவல் நிலையத்திலுள்ள ரவுடிகள் லிஸ்ட் இருப்பது போல் - கல்லூரிக்குள் எது நடந்தாலும் அழைத்து விசாரிக்க ஆரம்பித்தார்கள்.

ஒரு நாள் இரவு கல்லூரி மொட்ட மாடியில் (நான்காவது மாடிக்கு மேல்) திடீரென்று வெடி சத்தம். விடுதியில் இருந்த வார்டனும் சில அல்லக்கைகளும் (வார்டனுக்கென்று ஒரு மாணவர்கள் கூட்டம் உண்டு) மேலே சென்று பார்த்தார்கள். யாரோ அணுகுண்டு (சிவகாசி பட்டாசு) வெடித்திருக்கிறார்கள். சிறிது நேரம் கழித்து மீண்டும் வெடி சத்தம். திரும்பவும் சென்று பார்த்தார்கள். அதே பட்டாசு. வெடி வைத்தவர்கள் யாரென்று தெரியவில்லை. மறுபடியும் வெடி என்று நான்கு தடவை நான்கு மூலையில் வெடித்தது. யாரோ ஒரு குறும்புக்கார மாணவன், அகர்பத்தியில் வெடியை பொருத்தி (time bomb) நான்கு மூலையிலும் அடுத்தடுத்து வெடிக்கச் செய்திருக்கிறான். மறுநாள் என்னை கோழி அமுக்குவது போல் அமுக்கி, உன்னுடன் சுற்றித் திரியும் சிவகாசிகாரனிடம் நீ வெடி வாங்கி வரச் செய்து, நீதான் இதைச் செய்திருக்கிறாய், என திரைக்கதை, வசனம் எழுதி டைரக்ட் செய்து விட்டார் வார்டன், பிரின்ஸிபாலிடம். மீண்டும் சஸ்பெண்ட்.

உணவு விடுதியில் வாரம் ஒரு முறை தான் புரோட்டா போடுவார்கள் வெள்ளியன்று, அது ஒன்றுதான் நன்றாக இருக்கும். அதற்காகவே வயிற்றை காய போட்டு இரவு புரோட்டாவை வெளுத்துக் கட்டும் ஒரு மாணவர்கள் கூட்டம் உண்டு. ஒரு நாள் புரோட்டா போடவில்லை, எல்லோரும் அதிகமாக சாப்பிடுவதால் புரோட்டா போடுவதை நிறுத்தி விட்டதாக சொன்னார் மெஸ் நடத்தும் ஐயர். அடுத்து ஒரு மணி நேரத்தில் எல்லா மாணவர்களும் விடுதியை விட்டு வெளியேறி சாலை மறியலில் ஈடுபட்டனர், சீனியர், ஜுனியர் என்ற பேதமில்லை. காலவறையற்ற விடுமுறை விட்டது கல்லூரி நிர்வாகம் . எல்லோரோடும் சேர்ந்து நானும் வெளியே நின்றதால் மீண்டும் சஸ்பெண்ட். மேலும் கல்லூரி நிர்வாகம் என்னை விடுதியிலிருந்தும் வெளியேற்றிவிட்டது.

இம்மென்றால் என்கொயரி, ஏனென்றால் சஸ்பெண்ட் என போய்க்கொண்டிருந்தாலும் படிப்பில் குறைவைக்கவில்லை. Mr. Enquiry என்ற பட்ட பெயரே வந்து விட்டது.

' என்னங்க!! ரொம்ப களைப்பா? ஒரு மாதிரி இருக்கீங்க', என் மனைவியின் குரலைக் கேட்டு திடுக்கிட்டேன்.

'ஒன்றுமில்லை பழைய கல்லூரி நினைவுகள்', என்றேன்.


இரண்டு நாட்கள் வேலை பளுவில் எல்லாம் மறந்திருந்த நேரம் பாபு போன் பண்ணினான். ரொம்ப மகிழ்ச்சியாக பேசினான், கல்லூரி நாட்களைப் பற்றி.
இணையத்தில் யாஹூ குரூப்ஸ் ல் நம் கூட படித்தவர்களுடன் ஒரு வருடங்களாக திட்டமிடுகிறோம். சில பேர்களுக்கு சில பொறுப்புகளைக் கொடுத்திருக்கிறான் தேனி மனோகர். அமெரிக்காவில் உள்ள நம் பேட்ச் மக்களிடம் பேசி அழைத்து வருவது, லலிதாவும் கல்லூரி மாடியில் வெடி வைத்த அனில் குமாரும். மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளவர்களை அழைத்து வருவது சரவணன் பொறுப்பு. சிவில் பேட்ச்க்கு சந்துரு, மெக்கானிக்கலுக்கு அரச பாஸ்கர். விழா ஏற்பாடு எல்லாம் அறிவழகனும், பழனிகுமாரும் பொறுப்பு.

வருகிற ஜூலை மாதம் 17ந் தேதி திண்டுக்கல்லில் ஒன்று கூடுகிறோம். இன்னும் ஒரு மாதம் தான் இருக்கிறது.சென்னையில் உள்ளவர்களை அழைத்து வருவது என்னோட பொறுப்பு. நீ உன் குடும்பத்துடன் கண்டிப்பாக திண்டுக்கல் வரவேண்டும் என்றான். மனதிற்குள் போராட்டம், போகலாமா, வேண்டாமா என்று. பார்க்கலாம் என்றேன். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு என் வீட்டிற்கு வர அழைப்பு வைத்தேன், அருகில் அவன் வீடு இருந்ததால்.

இரண்டு வாரங்கள் சென்ற பின் ஒரு சனிக்கிழமை வீட்டிற்கு வந்தான். விழாவிற்கு கல்லூரி நிர்வாகத்திலிருந்து யாரெல்லாம் வருகிறார்கள் என்பதைப் பற்றி பேசினான். கூட படித்தவர்களை கண்டு பிடித்ததைப் பற்றியும் தற்சமயம் ஒவ்வொருவரும் எப்படி இருக்கிறார்கள் என்பதைப் பற்றியும் விலாவாரியாக விவரித்தான்.

டேய் ! போன மாதம் ஜெஸியை சந்தித்தேன், என்றான் என்னைக் குறும்பு பார்வை பார்த்து சிரித்தபடி. "ஆண்ட்டி ஆகிட்டாடா " என கெக்கேபிக்கே என சிரித்தான். சொட்டையுடனும் தொப்பையுடனும் நாம் அங்கிள் ஆகும்போது அவள் ஆண்ட்டி ஆகமாட்டாளா என சிரித்துக் கொண்டேன்.

கிளம்பும்முன் நான் எதிர்பார்த்த கேள்வியை கேட்டான் பாபு. " ஆமா ! கடைசி வருடத்தில் உன் அப்பா இறந்தவுடன் நீ ஆறு மாதங்கள் லீவில் போய் விட்டு வந்து படித்தாயே, எப்போ டிகிரி முடித்தாய்" என்றான்.

மறு வருடத்திலேயே முடித்துவிட்டேன் என்றேன் எந்தவித சலனமில்லாமல்.

பாபுவை வழியனுப்பிவிட்டு வந்து இருக்கையில் சரிந்தேன். அப்பாவின் அகால மரணம் குடும்பச் சூழ்நிலையை தலைகீழாக புரட்டிப் போட்டுவிட்டது. அப்பா நடத்திவந்த கடையை நான் கவனிப்பதற்காக கல்லூரி முதல்வரிடம் மன்றாடி ஆறு மாதங்கள் லீவ் வாங்கினோம். ஆறு மாதத்தில் என் அண்ணன் படிப்பு முடிந்து அவன் கடையை ஏற்று நடத்துவான், நான் திரும்பவும் கல்லூரிக்கு வந்து கடைசி ஆறு மாத படிப்பை முடிப்பதாகத் திட்டம். கடவுள் எப்போது புன்னகைப்பார்? நம் திட்டத்தை அவரிடம் கூறும்போது.

ஆறு மாதங்கள் கழித்து திரும்ப கல்லூரிக்கு வந்தேன். பழைய வகுப்பறை நண்பர்கள் எல்லோரும் கல்லூரியை முடித்து வெளியேறி விட்டார்கள் வெகு சிலரைத் தவிர. கல்லூரி வாழ்க்கையில் கொடுமையானது ஜுனியர்களுடன் ஒரே வகுப்பில் படிப்பது. அதைவிட கொடுமையானது நம்முடன் படித்தவனே நமக்கு வாத்தியாராக வருவது. பொறியியல் கல்லூரியில் நன்றாக படித்து முடித்து அதே கல்லூரியில் வேலை பார்ப்பது என்பது சகஜம். அப்படி எனக்கு வாத்தியாராக வந்தவன்தான் மாரீசன், 'Refrigeration and Airconditioning' என்றொரு பாடத்திற்காக.

"டேய் மாரீசா, உன் வகுப்பறைக்கு நான் வரமாட்டேன், ஆனால் உன் பாடத்தில் கட்டாயம் பாஸ் பண்ணி விடுவேன்" என்ற வாக்குறுதிக்கிணங்க எனக்கு அட்டென்டென்ஸ் போட்டான். வகுப்பறைக்குச் செல்லாமலே, அதே பாட பரிட்சையில் நான் தான் கல்லூரியில் இரண்டாம் இடம். முதல் இடம், பாடத்தை நான் சொல்லிக்கொடுத்து பரிட்சை எழுதிய மாலவன், என் ஜூனியர்.

அடுத்து வந்த நாட்களில் அடிக்கடி பாபு போன் பண்னினான். அவனுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை விழாவில் கலந்துகொள்வதைப் பற்றி.
என்னாலும் முடிவெடுக்க முடியவில்லை. விழாவிற்கு போனால் பழைய நண்பர்களைப் பார்க்கலாம் பழைய கதைகளைக் கேட்கலாம். ஏன், பழைய கல்லூரி முதல்வரையும் பார்க்கலாம். இன்னும் என்னை ஞாபகம் வைத்திருப்பாரா? பழைய நண்பர்களையும் இடங்களையும் பார்க்கணும் என ஆசைதான் ஆனால் பழைய கசப்பான அனுபவங்கள் தடுத்தன, விழாவிற்குச் செல்ல.

விழா நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் பாபுவிடமிருந்து போன். ' என்னடா ! கிளம்புகிறாயா? வருவேன், மாட்டேன் என எந்த பதிலும் உன்னிடமிருந்து வரவில்லை. விழாவிற்கு நீ மட்டுமாவது வாடா' என மன்றாடினான். சில பல சாக்குப் போக்குகள் சொல்லிப் பார்த்தேன். எல்லாவற்றிற்கும் தயாராக பதில் சொல்லி என்னை வரவழைப்பதில் உடும்புப் பிடியாக இருந்தான்.

கடைசி இரண்டு பரிட்சைகள் தான் இருக்கிறது, முடிந்தால் கல்லூரிப் படிப்பும் முடிந்து விடும், டிகிரியும் கிடைத்துவிடும். பரிட்சை நேரங்களில் நண்பர்களுடன் விடிய விடிய படிப்பதென்பது வாடிக்கை. அதிகாலை மூன்று மணிக்கு சூடாக இட்லி சாப்பிட விளக்கில்லா பைக்கை ஓட்டிச் சென்று முன்னால் போய் கொண்டிருந்த மாட்டு வண்டியில் மோதியதில் நான் மயக்கமானேன். உயிர் காப்பான் தோழன் என்பதற்கேற்ப, என்னுடன் வந்த ஜாக்ஸன் என்னைக் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தான். கண்விழித்தபோது முக தாடையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருந்தார்கள், கை கால்கள் எல்லாம் கட்டுக்கள். எழுந்து நடமாட ஆறு மாதங்கள் ஆயின. என் அன்னைக்கு என் படிப்பை விட என் உயிர் முக்கியமாகப் பட்டதால் என்னை கடைசி இரண்டு பரிட்சையை எழுத அனுமதிக்கவில்லை. நான் பொறியியல் பட்டப்படிப்பை முடிக்கவில்லை.

என்னடா நான்பாட்டுக்கு பேசிட்டே இருக்கிறேன், எந்தவித பதிலும் சொல்லாம இருந்தா எப்படி? பாபுவின் குரலைக் கேட்டு நினைவுக்கு வந்தேன்.

' நான் ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருக்கிறேன். பிறகு கூப்பிடுகிறேன்.' என்று போனை கட் பண்ணினேன். மனம் தெளிந்த நீரோடையைப் போல் அமைதியாக இருந்தது.

எல்லோருக்கும் கல்லூரி நாட்கள் மிக இனிமையானதொரு ராகமாக இருக்கும், ஆனால் என்னைப் பொறுத்தவரை அது ஒரு துன்பியல் சம்பவம்.





-----------------------------------------------------------------------------------------------------------------
Disclaimer: All characters, Incidents, Names, Places and corporations or establishments appearing in this document are fictitious. Any resemblance to real persons, living or dead, is purely coincidental.
-----------------------------------------------------------------------------------------------------------------