Wednesday, January 23, 2019

மாட்டுங்கா மாமி

மும்பை மாட்டுங்கா ரயில் நிலையத்தில் செம்பூரில் இருந்து வந்த ரயில் புது மணஇணையரான கிருஷ்ணாவையும் கனியையும் 'தூ' எனத் துப்பிவிட்டுச் சென்றது. கூட்டத்துக்குள் நீந்தி வெளியே வந்து ஆர்ய சமாஜ் நோக்கி நடக்கத் தொடங்கினார்கள். மாட்டுங்கா, சயான், தாராவி இம்மூன்று இடமும் ஒட்டிய நிலப்பரப்பில் அதிக தமிழர்கள் வாழ்ந்தாலும், மாட்டுங்காவில் அதிக மேட்டுக்குடித் தமிழர்கள் வாழும் இடம்.

பத்து நிமிசந்தான். ஏதாவது கொடுத்தால் வாங்காதே. மணியனைப் பார்க்கிறோம், படத்துக்குக் கிளம்புறோம். சரியா?”, என்று  கறார் காட்டினான் கிருஷ்ணா.

"வீடு எங்கே இருக்கு?", கேட்டாள் கனி.

"ஆர்ய சமாஜ்க்கு பின்புறம். கனி, திரும்பவும் சொல்றேன் அந்த மாமிகிட்ட வளவளனு பேசாதே", என்றான் கிருஷ்ணா.

"ஏன், கடிச்சுக் கொதறிடுவாங்களா?" என்றதற்குச் சிரித்துக்கொண்டான் கிருஷ்ணா என்ற கிருஷ்ணகுமார்.

கிருஷ்ணாவுக்கும் கனிக்கும் திருமணம் முடிந்து 6 மாதங்கள் தான் ஆகியிருந்தது. கிருஷ்ணாவுக்குச் சொந்த ஊர் முதுகுளத்தூர், மும்பை வந்து 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.  கனிக்குச் சொந்த ஊர் கமுதி. கொஞ்சம் கொஞ்சமாக இந்தி கற்றுக்கொள்ளுகிறாள். இவர்கள் இருவரும், மாட்டுங்காவில் வசிக்கும் கோத்ரெஜ் மணியனைப்  பார்க்கப் போய்க்கொண்டிருக்கிறார்கள், இந்த மாதம் அவர் ஓய்வு பெறுவதால். அப்படியே சினிமாக்குப் போவதாகவும் திட்டம். 

மாட்டுங்காவில் வசிக்கும் வெள்ளை காலர் வேலையில் இருப்பவர்களை அவர்கள் வேலைபார்க்கும் கம்பெனி பெயரை  அடைமொழியாகப் போட்டு அடையாளப்படுத்துவதுண்டு. மணியன் கோத்ரெஜ் கம்பெனியில் வேலை பார்ப்பதால் கோத்ரெஜ் மணியன். இதைப்போல் பாண்ட்ஸ் பாண்டுரெங்கன், கிரோம்ப்டன்  கோபால்சாமி போன்றவர்களைக்  காணலாம்.
கோத்ரெஜ் மணியன் தம்பதியருக்கு  குழந்தை இல்லை. மணியன், செயலாளராக கோத்ரெஜ் கம்பெனியில் வேலை நேரம் போக செம்பூர் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டியில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக பகுதி நேர வேலை.

மாட்டுங்காவில் சில காலம் கிருஷ்ணா பேயிங் கெஸ்ட்டாக ஒரு வீட்டில் இருந்தபடியால், மாட்டுங்காவைப் பற்றியும் இங்கு வசிப்பவர்களைப் பற்றியும்  நன்கு அறிவான். அதுவும் மாட்டுங்கா மாமிகளைப் பற்றி மிக நன்கு அறிவான். 

மாமிகள் பலரகங்கள் இங்கு. அதில் ஒன்றுதான் NRI மாமிகள். நியூ ஜெர்சி, டெக்சாஸ், சான் பிரான்சிஸ்கோ என்று தெரியாமல் காதில் விழுமாறு பேசினால் முடிந்தது. மகன் இருக்கும் டல்லாஸ் நகரைப்பற்றியும் கொசுறாக, மகள் இருக்கும் சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பற்றியும் விலாவாரியாக விடாமல் பேசும் மாமிகள். ஹொட்மெயில் அக்கௌன்ட் இருக்கும் இந்த வகையான மாமிகளுக்கு ஆஸ்திரேலிய விசாவிலிருந்து அமெரிக்காவில் எப்படி கிரீன் கார்டு வாங்குவது வரை எல்லாமே அத்துப்படி.

மற்றொரு ரகம் James Bond மாமிகள். ஒருவர் பெயரைச் சொன்னால் போதும். அவர் எங்கு இருக்கிறார், எங்கு வேலை பார்க்கிறார். அவர் குடும்பம் மற்றும் அவர் மகள்  போனவாரம் ஒரு குஜராத்தி பையனுடன் சுத்துனதுவரை புட்டுப்புட்டு வைத்து விடும் ரகம்.

இன்னொரு வகை மாமி, படிப்பு மாமி. தெரியாம என் நண்பன் ஐஐடி ல படிக்கிறானு சொல்லிட்டா போதும். அந்த காலத்தில் அவள் மகன் JEE  எப்படி முதல் வகுப்பில் தேர்வானான், IIT போவாய் தவிர வேற IIT எதுவும் சரி கிடையாது என்று MIT முதல் ஹார்வர்ட் வரை அவள் சொந்தங்களைப்  பற்றி பெருமையாகப் பீற்றிக்கொள்ளும் மாமிகள்.

ஆளுயர டிபன் கேரியர்ல் அறுசுவை சாப்பாடு விற்கும் சாப்பாடு மாமிகள்.
அந்த பான் கடைல நீ சிகரெட் புடிச்சதப் பார்த்தேன். உன்கூட சுத்துனது அந்த கோவாகாரியா என நண்பர்கள் முன் விசாரிப்பது விசாரணை மாமிகள்.

அடுத்து கோவில் மாமி, எல்லா கோயில்களில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளும் தெரியும், பாய்ஸ் பட செந்தில் மாதிரி.  எந்த நிகழ்ச்சிக்குப்  போனாலும் திருமண வயதில் இருக்கும் ஆண் / பெண் விசாரிப்பது, தகவல் கொடுப்பது, மேட்ரிமோனி மாமி. எந்த கடையில் துணிகள் மலிவாக இருக்கும் என அடுக்கும் sale மாமிகளை அதிகமாக தாதர், பரேல் பகுதி கடைகளில் காணலாம்.

அது ஒரு பழைய தொடர்மாடிக் கட்டடம். இன்னைக்கோ நாளைக்கோ என கட்டடம் இருந்ததைக்கண்டு கனிக்கு பயம் மேலே ஏற. கிருஷ்ணா ஏறுவதைக் கண்டு பின்தொடர்ந்தாள் கனி. இரண்டாவது  மாடியில் வீடு,  அழைப்பு பொத்தானை அழுத்தினான் கிருஷ்ணா.

கோன் ஹை?”, என்ற மாமியின் சத்தத்தைத் தொடர்ந்து, கதவு துளையில் நிழல் வந்து மறைந்தது. மாமிதான் கதவைத்திறந்தாள்.

வாடா கிருஷ்ணா. எப்படி இருக்க?”,  என்ற மாமிக்குக் கனியை அறிமுகப்படுத்தினான்.

அதே நேரத்தில் கிருஷ்ணாவின் கைப்பேசி சிணுங்கவும் சரியாக இருந்தது.

என் நண்பன் பேசுறான், டிக்கெட் சொல்லியிருந்தேன். இதோ பேசிட்டு வந்திடுறேன்”, என்று பேசியபடி வெளியே சென்றான். 

உட்காரு...காபி?”, என்ற மாமிக்கு ஒரு சிறு புன்னகை மட்டும் உதிர்த்து விட்டு இருக்கையில் அமர்ந்தாள் கனி.   

புது இடம் எப்படி இருக்கு?”

சமாளிக்கிறேன் மாமி”, என்றாள் கனி.

இதற்கு மேல் என்ன பேசுவதென்றே தெரியாமல் வீட்டைச் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருந்தாள் கனி. கிருஷ்ணா வேற இந்த மாமிட்ட கொஞ்சம் கவனமாக இருக்கச் சொன்னான். இருந்தாலும் ஏதாவது பேசணுமே.

சார் வீட்டுல இல்லையா? “, என வினவினாள் கனி.

சாமி வெளியே போயிருக்கார், வந்திடுவார்”.  
மாமியே தொடர்ந்தாள். மேனேஜர் கூட சில பிரச்சனைன்னு சொல்லிக்கிட்டிருந்தானே, ப்ரோமோசன் கிடைச்சுதா?”

இல்லே மாமி”, என்று முகத்தில் சோகத்தைக்காட்டினாள் கனி.  

அவனுக்கு எப்பவுமே விவரம் பத்தாது. கோபம் அதிகம். மேனேஜரிடம் அப்படிச் சொல்லலாமா? We should not throw open challenge, you know. ஏ சப்  பீச்சே சுப் சாப் கர்னேகா. (இதெல்லாம் பின்புறம் அமைதியா பண்ணனும் )
அதுவும் கிருஷ்ணா ரொம்ப பாவம் பார்ப்பான். உஸ்கோ சம்ஜானா (அவனுக்குப் புரியவை). சில நேரங்களில் நம் கால் அடுத்தவர்கள் மேலே படுதேன்னு ரொம்ப பீல் பண்ணக்கூடாது. ஏறிப் போய்க்கிட்டே இருக்கணும்”.

இந்தநேரம் கிருஷ்ணா உள்ளே வர சரியாக இருந்தது.

மாமி நாங்க அரோரா தியேட்டர்ல படத்துக்குப் போறோம். மணியன் மாமா இந்த மாசம் ரிடையர்ட் ஆறதனால அப்படியே பாத்துட்டுப் போலாம்னு வந்தோம், வந்தா கேட்டதாகச் சொல்லுங்கோ. நேரமாச்சு, இன்னொரு நாள் வர்றோம் என்று விடைபெற்று, சாலைக்கு வந்து நடக்கத் துவங்கினார்கள்.

வெளியே வந்தவுடன் முதலில் கனி சொன்னது "இனி இந்த மாதிரி இடத்துக்கு என்னைக் கூட்டிட்டு வராதீங்க, எனக்கு இந்த மாமியப்  பிடிக்கல".

ஏன் என்னாச்சு”, எனப் பதறினான் கிருஷ்ணா.  

சார் எங்கேன்னு கேட்டா, சார் வெளியே போயிருக்கார்னு சொல்லணும். அது என்ன 'சாமி' வெளியே போயிருக்கார்?", என முகத்தில் இறுக்கம் காட்டினாள் கனி.

இதிலென்ன இருக்கு, அந்த மாமிக்கு மணியன் சாமியா இருக்கும்.”

! லூசு கணவா! 'சாமி' வெளியே போயிருக்கார்னு சொன்னா, அடுத்த தடவ 'சாமி!' எங்கனு கேளுடான்னு சொல்லாம சொல்றா. இதெல்லாம் தெரியாத  உன் கூட எப்படி குப்பை கொட்டப்  போறேனோ?”

கிருஷ்ணா அமைதியாக இருந்தான். கனி தொடர்ந்தாள்.

கிருஷ்ணா ப்ரோமோசன் என்ன ஆச்சுன்னு கேட்டாள், இன்னும் வரலனு சொன்னேன். 'நாலு பேர் மேல ஏறி மிதிச்சி மேலே வந்தாலும் ஓகே தான். அதெல்லாம் பார்த்தா முடியாது', அப்படிங்கிறா. இதப்பாரு கிருஷ்ணா, 
நாலு பேர மிதிச்சிக் கிடைக்கும் எந்த வெற்றியும் நமக்குத் தேவையில்ல. இதுல்லாம் அறமில்லாத செயல். இவர்களுடன் சேர்ந்தால் நமக்கு நல்லதில்ல.”எனச் சீறினாள் கனி. 

"எனக்குத் தெரியும் கனி. இதுமாதிரி நிறைய நடந்திருக்கு. அதனால தான் இந்த மாமிட்ட கவனமா இருன்னு சொன்னேன்". 

"என்ன நடந்திருக்கு?", வியப்புடன் கேட்க ஆயத்தமானாள் கனி.  

"ஒருமுறை என் அப்பாவும் அம்மாவும் இங்கு வந்திருந்தாங்க. இவர்களைப்பார்க்க அழைத்து வந்திருந்தேன். கெளம்பும்போது ஊறுகா, வடாம், அப்பளம் எல்லாம் கொடுத்துவிட்டுச்சி மாமி. எனக்கு பயங்கர மகிழ்ச்சி. ஒரே வாரத்தில் எனக்கு போன் பண்ணி ஊறுகா அப்பளத்துக்குரிய காசை வாங்கிட்டா மாமி. 

இதுமாதிரி, கைமாத்து வாங்கிய பணத்துக்கு வட்டி வாங்கியது, அவள் சொந்த காரன் ஒருவன் ஏஜென்சி எடுத்ததால தனியார் கம்பெனியில் பிக்சட் டெபாசிட் போட்டது. அதுலே இரண்டு பேர்கள் ஓடிட்டாய்ங்க. நான் 50 ஆயிரம் இழந்ததுதான் மிச்சம்.

ஒருமுறை சென்னையிலிருந்து வந்த அவர்களின் சொந்தக்காரன் பேயிங் கெஸ்ட்டா கொஞ்ச மாசமா  இருந்தான். அவன் இருந்த போது, பலகணி சுவரில் தெரியாமல் உட்கார்ந்ததில் சுவர் உடைஞ்சி கீழே விழுந்துட்டான். அவன் கை உடைஞ்சாலும் அவனிடம் பலகணி சுவரை சரிசெய்ய காசு வாங்கிடுச்சு அந்த மாமி. ஆர்ய சமாஜ் க்கு சொந்தமான இந்த வீட்டுக்கு இவர்கள் கொடுக்கும் வாடகையே ரொம்ப குறைவு, அதுவும் பலகணி உடைந்தால், சொசைட்டி தான் செலவு பண்ணும். யாருக்குச் சேர்த்துவைக்கிறாங்களோ? இதை என்னிடமே சொல்லி என்னையே பேயிங் கெஸ்ட்டா வரச்சொன்னபோது, மாட்டுங்காவிலிருந்து என் வீடுவரை பின்னங்கால் பிடரில பட ஓடிட்டேன்", என நீண்ட உரை நடத்தியிருந்தான்.  

"இவ்வளவு நடந்திருக்குல, பின்னே எதுக்கு இந்த மாதிரியான ஆட்களுடன் இன்னும் சகவாசம்.", எனக்கேட்ட கனியை ஒரு பார்வை பார்த்தான். ஒரு பெருமூச்சு விட்டுத் தொடர்ந்தான். 

"ஒரு பிளாஷ்பேக் சொல்றேன் கேள். அது ஒரு பெரிய கதை, 10 வருசத்துக்கு முன்னே எனக்கு மும்பைலே நேர்காணல். முதன்முதல்ல தமிழ்நாட்ட விட்டு வெளிய போறேன். காலைலே சென்னை சென்ட்ரல் நிலையத்தில் மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறிட்டேன். என்னோட பெட்டியை சங்கிலி போட்டு இருக்கையோட இணைத்து பூட்டுப்  போட்டு சாவியை என் பர்சில் வைத்திருந்தேன். வழியனுப்ப வந்த சரவணனும் கிளம்பிப்போய்ட்டான். வண்டி கிளம்புவதற்கு முன்னால, கழிவறைக்குப் போனபோது பர்ஸ் கீழே விழுந்துடக்கூடாதுன்னு கண்ணாடி முன் வச்சிட்டு, வேலைய முடிச்சிட்டு எழுந்து வரும்போது கழிவறையிலே பர்ஸை மறந்து வச்சிட்டு வந்துட்டேன்.

5 நிமிசத்துக்கப்புறந்தான் உணர்ந்து போய் பார்த்தால், பர்ஸக் காணோம். திகைச்சுப்போய் இருந்தேன். என் இருக்கைக்கு எதிர்ல இருந்த மணியன் தான், வரும் வழியில் பூட்டு சரிபண்றவனப்  பார்த்தேன், வண்டி கிளம்ப 15 நிமிடம்தான் இருக்கு. போய்  அழைச்சுட்டு வா. வண்டி கிளம்பிடுச்சினா மும்பை வரை எதுவும் பண்ண முடியாதுன்னு சொன்னார். 

ஓடிப்போய் பூட்டு உடைப்பவரைக்கூட்டு வந்து பூட்ட உடைச்சி , பெரிய வேலையாகிப்போச்சி. என்னிடம் காசு  இல்லாததால் மணியன் தான் பணம் குடுத்து உதவினார். புது ஊர், தெரியாத மொழி, திருட்டுப்  பிரச்னை, அந்த நேரத்தில் அவர் செய்த உதவியை என்றும் மறக்க மாட்டேன்.

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்

ஒருவர் செய்யும் மிகக்கடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால் அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது.

இந்தக்  குறள்  எனக்கு என் அம்மா கற்றுத் தந்தது. வாழ்வில் மறக்க முடியாத/ மறக்கக்கூடாத குறள். அதனால் தான் இவர்களோடு தாமரை இலைத்   தண்ணீர் போல இருக்கேன்." 

தொலைவில் அரோரா தியேட்டர்முன் இருந்த கட்டவுட் தெரிந்தது.



Wednesday, January 9, 2019

ஜோசப் எனும் திருநங்கை

திண்டுக்கல் புனித மரியன்னை பழைய மாணவர்கள் 25 வருடங்கள் கழித்து இன்று அதே பள்ளியில் அதே உணர்வுகளுடன்பழைய நினைவுகளுடன் கூடும் விழா நடந்துகொண்டிருந்தது.

அப்பா எங்க போறீங்க?நானும் வருகிறேன்”, என்றாள் என் மகள்.

இல்லம்மாஅப்பா படிச்ச பழைய வகுப்பைப் பார்க்கப் போறேன்.

அதைத்தானே மதியம் பார்த்தீங்கஇருட்டில் எதுக்கு திரும்ப பார்க்கப் போகிறீங்க?, சரிசரிசீக்கிரம் வந்துருங்க என்னோட ப்ரோக்ராம்  இருக்கு.” என்ற என் மகளிடம்

இல்லநான் 11ம் வகுப்பு படித்த வகுப்புக்குப் போகிறேன். நீ தம்பிகளைப் பார்த்துக்கோ.” என்றபடி நடந்து கொண்டிருக்கும் விழா மண்டபத்தை விட்டு வெளியே வந்தேன்.
மாலை மணியாக இருந்தாலும்கரு மேகங்கள் அதை இரவாகக் காட்டின.
மதியம் சாப்பாட்டுடன் ஆரம்பித்த விழாபின்பு நாங்கள் படித்த 12ம் வகுப்பில்மாணவர்களாக நாங்கள்ஆசிரியர்களாக பழைய ஆசிரியர்கள் வகுப்பெடுத்தது பழைய நினைவுகளைத் தட்டியெழுப்பியது. இருந்தாலும் என் மனம் 11ம் வகுப்பைப் பார்க்கணும் என அலை மோதியது. என் வாழ் நாளில் திருப்புமுனை ஏற்படுத்திய அந்த இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

கவலையின் சுவடரியாக் காலமாய் கண்முன் வருவது எங்கள் பள்ளி பருவம்!
கடந்து வந்த ஒவ்வொரு நாளும்ஒவ்வொரு மணித்துளியும் சொர்க்கம் என்று இப்போதும் உள்ளுக்குள் உணர்கிறோம் நாங்கள்!” என்று யாரோ ஒருவர் எழுதியதை சிறு குழந்தை ஒன்று விழா மேடையில் வாசிப்பது மெலிதாக காற்றில் கரைந்து போய்க்கொண்டிருந்தது.

சார்அந்தப்பக்கம் வழி இல்லை.”, குரலைக் கேட்டுத் திரும்பினேன்.

நின்றுகொண்டிருந்தவனை அவன் போட்டிருந்த சீருடையும்குச்சியும்வாட்ச்மேன் என்று பறைசாற்றியது. நான் அவனைப் பார்த்தேன். என் கோட் சூட்டைப் பார்த்து என்ன நினைத்தானோ தெரியவில்லை, "எங்க போணும்னு சொன்னா, வழி சொல்றேன்" என்றான். 

ஆள் பாதி ஆடை பாதி என சும்மாவா சொன்னார்கள். இருபது வருடமாக வெயிலோ மழையோ  கோட்டு சூட்டு போட்டுட்டுதான் சுற்றுகிறேன்.

என்னப்பா! உன் பெயரென்னஎப்போதிருந்து இங்கே வேலை பார்க்கிற?”, என வினவினேன்.

யாகப்பன் சார். 6 மாசமா வேலை பார்க்கிறேன்”, என்றான்.

போக வேண்டிய இடத்தைச் சொல்ல எத்தனிக்கும் போது தான் கவனித்தேன் எனக்குப்  பாடம் எடுத்த அறிவியல் வாத்தியார்சாமி நடந்து வருவது தெரிந்தது. பல வசதிகள் இருந்தும் ஆசிரியர் தொழிலையும்வேளாண்மையையும் இரு கண்களாகக் கருதுபவர். அந்த காலத்தில் ராசுக்குட்டி பட ஸ்டைலில் புல்லட்டில் பள்ளிக்கு வரும் அறிவியல் ஆசான் அவர்.

சார்வணக்கம். என்னைத் தெரியுதா?”

தெரியலையே” என்றார் நெத்தியைச் சுருக்கியபடி.

நான்தான் சார்ஜோசப்டேவிட் பாஸ்டரோட மகன்.

நல்லா இருக்கியாஅப்பா தவறிட்டதா கேள்விப்பட்டேன்நீ எங்க இருக்கிறே?.

ஆமா சார்இப்ப நான் சென்னையில் ஒரு கம்பெனி நடத்துறேன்”, என்றேன்.

நல்லாருப்பா., எங்க கெளம்பிட்ட அதுக்குள்ள?

"லேப் பக்கம் இருந்த பழைய 11ம் வகுப்ப பார்க்கப் போறேன்".

ஆய்வகம்னு சொல்லுப்பா”, என்றார் புன்முறுவலுடன்.

அப்போதுதான் எனக்கு உரைத்ததுஅடடாஇவர் நல்லதமிழ் பேசச்சொல்லுபவராச்சே. அதுவும் கோவக்காரராச்சேகவனமா பேசணுமே.
சார்! தெரியாம ஆங்கில வார்த்தை வந்திருச்சு”.

"வார்த்தை என்பது ஒட்டுண்ணி. தமிழ்ல  நல்ல இனிய சொற்கள் இருக்கும்போது எதுக்குப்பா?".

என் மனம் 11ம் வகுப்பைப் பார்க்கப்போவதிலேயே நிலை கொண்டிருந்ததால் இவரிடமிருந்து தப்பித்தால் போதும் என “சார்” என ஆரம்பிக்கும் போதுஇடையில் புகுந்த யாகப்பன்,

பயங்கர ஆச்சரியம் சார்இவரை நல்லா ஞாபகத்துல வச்சிருக்கீங்க?”, என்றான்

ஆச்சரியம் இல்லே தம்பிவியப்பு”, எனத் தமிழ் வகுப்பு எடுக்கத் துவங்கினார்.
இதுதான் சரியான சமயம் என அவரிடம் சொல்லிவிட்டு நழுவி நடக்கத் துவங்கினேன் ஆய்வகக் கட்டடத்தை நோக்கி.

என் அப்பா டேவிட் C.S.I கிறிஸ்தவ பாதிரியார்.  வீட்டில் தினமும் பைபிள் வாசிக்க வேண்டும். எல்லாப் பிரச்சனைகளுக்கும் பைபிளில் இருந்தே மேற்கோள் காட்டிப் பேசுவார். அதனால் எனக்கும் எல்லா நேரங்களிலும் என் அப்பாவுடன் விவாதம் ஏற்படும். என் வீட்டில் இரண்டு அக்காக்களுக்குப் பிறகு நான் தான் கடைக்குட்டிஒரே பையன். அப்பா மிகவும் கண்டிப்பானவர்அதே சமயம் அன்பானவர். எது சொன்னாலும் காது குடுத்துக் கேட்பார்.

10ம் வகுப்பு படிக்கும்போது அக்காவின் உடைகளைப் போட்டு வீட்டிற்குள் சுற்றிக்கொண்டிருந்ததைப் பார்த்து விட்டு பிரம்பை எடுத்து இரண்டு சாத்து சாத்தினார்..
ஆண்கள் உடைகளைப் பெண்கள் அணியக்கூடாது. பெண்கள் உடைகளை  ஆண்கள் அணியக்கூடாது. இது கடவுளுக்கு அருவருப்பானதுன்னு பைபிளில் போட்டிருக்கிறது தெரியாதா?” என்றார் கண்ணில் கோபம் கொப்பளிக்க.

நீங்கள் அணியும் துணிகளை விட உங்க உடம்புதான் முக்கியம்,” இதுவும் பைபிளில்தான் இருக்கு. “கடவுள் அன்பானவர்பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள் அப்படித்தானே கடவுள் சொல்றார். நீங்க ஏன் என்னை அடிக்கிறீர்கள்”, அழுதுகொண்டே அப்பாவிடம் சொன்னது இன்னும் பசுமையாக இருக்கின்றது.

அப்பாவிற்கு ஒரு நொடி என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நிதானத்துக்கு வந்து,
அதில்லேப்பாஇது தப்புபிரம்பால அடிச்சி எதுக்கு ஒழுக்கப்படுத்துறேன்நீ நல்ல பையனா வளர்வதற்குஎல்லாம் உன் நல்லதுக்குத்தான்." சொற்பொழிவாற்றி முடித்தார். ஆனாலும் எனக்குள்  பெண்கள் உடைகளை அணியவேண்டும் என்றே உள்ளிருந்து உந்தித் தள்ளியது.

ஆய்வகத்துக்கு அருகில் வந்திருந்தேன். கொஞ்சம் இருட்டாக இருந்தது. மேலே முதல் மாடியை நோக்கிப் படியேறினேன். இதே படிகளில் எத்தனைபேர்கள்  என்னைக்  கடந்துபோகும் போது கத்துவதும்என் இடுப்பைக் கிள்ளுவதும்... தொண்டைக்குழி அடைத்தது. 11ம் வகுப்பு வந்தபோது தான் என் உடம்பில் சில மாற்றங்களை உணர்ந்தேன். இடுப்பில் யாராவது கை  வைத்தால் என்னை அறியாமலே, 'ஆ!என சத்தம் வந்தது என் வாயில். இதையே சக மாணவர்கள் வேண்டுமென்றே இடுப்பில் கை  வைப்பதும்கிள்ளுவதும் நடந்தது. நான் போடும் சத்தத்தை ரசிப்பதும் அவர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு.
படிப்பு எனக்கு நன்றாக வந்ததால், 11ம் வகுப்பில் முதல் குரூப். மற்ற பிரிவிலிருந்தும்பள்ளியிலிருந்தும் நிறைய பேர் வந்ததால் பெரிய வகுப்பு. பார்க்காத முகங்கள் பல. முழுக் காற்சட்டைக்கு மாறியிருந்தேன்.

நேருஜி நகரிலிருந்து வரும் சீனி வேறு பள்ளியிலிருந்து மாற்றலாகி வந்தவன். அவன் அப்பா அரிசிக்கடை வைத்திருந்ததாலும்வகுப்பில்  மேலும் இரண்டு சீனி இருந்ததாலும் எல்லோரும் அவனை அரிசிக்கடை சீனி என்றே அழைத்தார்கள். வந்தது முதலே என்னைச் சீண்டிக்கொண்டிருந்தான். அடிக்கடி என் இடுப்பைக் கிள்ளுவதுஎன் பின்புறத்தை தடவுவதுமாக நிறைய சீண்டல்கள்.

எல்லைமீறுவது மாதிரி எனக்குத் தெரிந்ததால் என் அப்பாவிடம் புகாரளித்தேன்.
ஒருவரின் சம்மதமில்லாமல் அவர்களின் உடம்பில் அத்துமீறுவது குத்தம்னு தெரியாதா உனக்கு. நாலு அறை விடவேண்டியதுதானே” என்றார்.

என்னப்பா! ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டணும்னு இயேசு சொன்னார்னு  நீங்கதானே சொல்லிகுடுத்தது”, என்றேன் பரிதாபமாக.

அதே இயேசுதான்சாட்டையடி கொடுத்து கோயிலில்ல கடை போட்டிருந்தவர்களை அடிச்சி விரட்டியது. யார்ட்ட நம்ம கன்னத்தைக் காட்ட வேண்டும் யார்ட்ட நம் வீரத்தைக்  காட்ட வேண்டும் என்று இருக்கிறது ஜோசப். காந்தி உண்ணாவிரதம் இருந்தபோதுஆங்கில அரசாங்கம் பதறியது. அதே உண்ணாவிரதம் ஈழத்தில் என்னாச்சின்னு உனக்குத் தெரியும். சிலரிடம் அவர்கள் புரியும் விதத்தில் அவர்கள் மொழியில் சொன்னால்தான் புரியும்.” என்றார் விபரீதம் புரியாமலே.

மூடியிருந்த  11ம் வகுப்புக்குள் சன்னல் வழியாக எட்டிப்பார்த்தேன். அதே பழைய மர  இருக்கைகள் மாறவேயில்லை. இதே கதவுக்கு அருகில்தான் சீனியுடன் சண்டை. இதே கதவை அடித்துதான் என் கையில் உண்டான தழும்பு.  இதே வகுப்பில்,

அறிவியல் பாட நேரத்தில்தேர்வுத் தாள்களைக்  கொடுத்துஅடியும் கொடுத்ததால்வகுப்பு மயான அமைதியாக இருந்த போதுசாமி வாத்தியார் கரும்பலகையில் எழுதிப் போட்டுக்கொண்டிருந்தார். அப்போதுஎன் பின் பெஞ்சில் இருந்த அரிசிக்கடை சீனிவேண்டுமென்றே என் இடுப்பில் கை  வைத்த போது 'ஆ!என்று பலமாகக்  கத்திட்டேன். என் சத்தத்தைக்  கேட்டு வகுப்பில் இருந்த அனைவரும் சிரித்துவிட்டனர். எனக்கு அழுகையே வந்துவிட்டது. ஏற்கனேவே  கோபத்தில் இருந்த சாமி வாத்தியார் என்மேல் சாமி ஆடிவிட்டார்என்ன? ஏது? என்று விசாரிக்காமலே. அவர் அடிக்கும் போதுஅழுகையை விட  இடுப்பைத் தொடுவதை எவ்வாறு தடுப்பது என மனதிற்குள் ஓடிக்கொண்டேயிருந்தது.

கடைசி வகுப்பு முடிந்து கிளம்பும்போதுஎல்லோரும் பார்க்கும் போதேஎல்லா பலத்தையும் கையிற்குக் கொண்டுவந்து ஓங்கி சீனி முகத்தில் ஒரு குத்து விட்டேன். அடுத்து 5 நிமிடங்கள் யார் அருகில் வந்தாலும் தாக்குதல் நடத்தினேன். எத்தனை அடி அவன் மேல் விழுந்தது எத்தனை என்மேல் விழுந்தது எதுவும் தெரியாது. எங்கிருந்து இந்தத் துணிவு வந்ததோ தெரியவில்லை. ஒருவேளை அப்பா குடுத்ததோ?

கூடப் படிக்கும் இளங்கோதான் என்னைத் தடுத்து நிறுத்தியது. பின்புதான் தெரிந்ததுசீனி முகத்தில் இரத்தம்என் கையில்காலில் இரத்தம். பெரிய கூட்டம் கூடிவிட்டது. வீட்டிலிருந்து அப்பாவை அழைத்து வரச்சொன்னார்கள்.

மறுநாள் காலை பாதர் பெலிக்ஸ் அறையில் நான்என் அப்பாஅரிசிக்கடை சீனியும் அவன் அப்பாவும் இன்னும் பல ஆசிரியர்கள். அப்போதுதான்  எனக்குத் தெரிந்ததுசீனிக்கு முன் பல் உடைந்த சேதி.

என்ன பாஸ்டர்உங்க மகனே இப்படி பண்ணலாமாவிவிலியம் சொல்லிகுடுத்து வளர்க்கலையா?”, என என் அப்பாவைச்சாடினார். என் அப்பா பொறுமையாகப் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.

சீனியின் அப்பாவோ குரலை உயர்த்தி பேசிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அரிசிக்கடை சீனியின் அப்பா "சார்! உங்க பையன்பொம்பள பிள்ளை மாதிரி ஆட்டி ஆட்டி நடந்தா பசங்க சீண்டத்தான் செய்வார்கள் அதில் என்ன தப்பு" என்றார் தெனாவெட்டாக.

"என்ன பேசுறீங்கதெரிந்து தான் பேசுறீங்களா. உங்க மகள் ஆட்டி ஆட்டி நடக்கும் போது கைய பிடிச்சு இழுத்தா சும்மா விட்டுடுவீங்களாநான் போலீஸ் போனேன்னா ஸ்கூல் பேர் நாறிடும். நானும் பொறுமையா பேசி தீர்த்துக்கலாம்னு பேசினா ரொம்பத்தான் அதிகமா பேசுறீங்க" என்று ஆடித்தீர்த்துவிட்டார்.

கடைசியில் சமாதானம் பேசிஇனி சீனி என் பக்கம் வரக்கூடாது என முடிவானது.

வீட்டிலும்  வெளியிலும்  இப்போது அரசல் புரசலாகத் தெரிய வந்ததுஇவன் அவன் இல்லை என.

ஏற்கனேவே வீட்டில், "இவன் போக்கு சரியில்லைஇவனுக்காக வேண்டுதல் செய்யணும்" என்று  நிறையபேர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தார் என் அம்மா. ஆனால் என் அப்பாவுக்கு என்னைப்பற்றி நன்கு தெரிந்துவிட்டது.

வீட்டிற்குச் சென்றவுடன் தனியாக மொட்டை மாடிக்கு அழைத்துச்சென்று அறிவுரை கொடுக்க ஆரம்பித்தார்.

எல்லாப் பெண்களிடமும் பெண்மை கலந்த ஆண்மை இருக்கும். அதே சமயம் எல்லா ஆண்களிடமும் ஆண்மை கலந்த பெண்மை இருக்கும். சிலரிடம் அது அதிகமாக இருக்கும். இதெல்லாம் மனசுக்குள் வச்சிக்காதே . நீ நீயாக இருடா ஜோசப்..” என ஆறுதலாகத் துவங்கினார்.

என்னைப்புரிந்து எனக்கு ஆறுதலாக அணுகியதால் வெடித்து அழுதுவிட்டேன்.

நான் மட்டும் ஏன்பா இப்படி இருக்கிறேன்கடவுள் என்ன மட்டும் ஏன் இப்படி படைச்சார்கடவுள் ஆணும் பெண்ணுமாக படைச்சார்னாஇரண்டு பாலினம் மட்டும்தான் படைச்சாரா?“ 

இல்லைடா ஜோசப்கடவுள் ஆதியும் அந்தமுமாக இருக்கிறார் என்றால் முதலும் கடைசியும் மட்டும் இல்லை. இடைப்பட்ட எல்லாமுமாக இருக்கிறார். அதுபோல ஆணும் பெண்ணும் படைக்கல. இடைப்பட்ட மற்ற பாலினத்தையும் படைத்தார்.” சற்று இடைவெளி விட்டு.

இந்த மாதிரி தினமும் ஒருத்தன அடிப்பியாஇப்படி ஒவ்வொரு நாளும் அடித்தாலும் எத்தன பேரஎத்தன நாள்தான் அடிப்ப. உன்னை நீயே உயர்ந்த இடத்துக்கு கொண்டு போனால் தான் உன்னை மதிப்பார்கள். இல்லையென்றால் இப்போ வகுப்பில் நடந்த மாதிரி நாளை வெளியிலும் நடக்கும். அதற்கு ஒரே வழிபடிப்பு” என்றார் முடிவாக.

இந்தச் சம்பவத்துக்குப் பின் யாரும் நெருங்கவுமில்லை. யாரையும் நெருங்கவும்விடவில்லை. என்னைச் சுற்றி நானே ஒரு வேலி அமைத்துக்கொண்டேன். இளங்கோ தவிர வேறு யாரிடமும் அவசியமின்றிப் பேசுவதில்லை. பையன்கள் போகும் கழிவறைக்குப் போகப் பிடிக்காததால் எல்லோரும் போன பின்புதான் அங்கு செல்வேன். வெறித்தனமாகப் படிக்க ஆரம்பித்தேன் தளர்வாகநீளமாக மேல் சட்டையைத் தைத்துப் போட்டுக்கொண்டேன்மற்றவர்களுக்கு நான் நடப்பது உறுத்தாதவாறு. என்னை நானே தனிமைப்படுத்திக்கொண்டேன். நூல்கள் மட்டுமே என் துணையாக இருந்தன. சோர்ந்து போகும்போதெல்லாம் என் அப்பாத்தான் எதாவது சொல்லி ஆறுதல் படுத்தினார்.

12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் வாங்கி அதே திண்டுக்கல்லில் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தேன். இடையிடையில் இந்த உடம்பும் எனக்கு வேணாம் எனத் தோன்றியது.

“ அப்பா! நான் அறுவை சிகிச்சை பண்ணப்போறேன். எனக்கு இது வேணாம்”, என்று ஒருநாள் ஆரம்பித்தேன்.

இல்லப்பாபைபிளில இந்த மாதிரி பண்ணக்கூடாதுனு போட்டிருக்குஇதைப் பண்ண வேணாமேஎனக்காக" என்று தடுத்ததால் அந்த முயற்சியைக் கைவிட்டேன்.

என் அப்பாவின்  திடீர் மரணத்திற்குப்பின் வாழ்க்கையில் வெறுமை.
குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கலாம் என விசாரித்த போது தான் தெரிந்ததுதிருமணமாகாத ஆண்கள் தத்து எடுக்க முடியாதென்று. கடைசியில் அருட்கொடையாக, வந்த சுயமரியாதை திருமண நிலைய உதவியால், வந்த முத்துக்கள் மூன்று.

சிறிது நேரம் பூட்டியிருந்த கதவருகில் நின்றுவிட்டு பெருமூச்சுடன் திரும்பி மண்டபத்தை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.  மண்டபம் அருகில் வரும்போது வாசலுக்கருகில் சாமி வாத்தியார் நின்றுகொண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடன் "என்ன தம்பி போனீங்களா?", என்றார்.

"பார்த்தேன் சார்", என்று பதிலளித்து விட்டு படிக்கும் போது கேட்க நினைத்த கேள்வியை அவரிடம் கேட்டேன்."ஏன் சார் நீங்க நல்லதமிழ்ல பேசச் சொல்றீங்கநல்ல ஆங்கிலமும் பேசச் சொல்றீங்கவடமொழிச்சொல் இருந்தா திருத்துறீங்க. புரிஞ்சிக்கவே முடியல சார். "

சிறிய முறுவலுடன் "தம்பி! உன் வீட்டில் உன் முன்னோர்கள் வச்ச ஒரு மரம் இருக்குதுன்னு வச்சுக்குவோம். அந்த மரத்தில் நிறைய ஒட்டுண்ணி இருக்குதுஅதனால மரத்தோட இலைகள் வெள்ளையாக இருக்கு. ஒட்டுண்ணின்னா உனக்குத் தெரியும்ல. மரத்திலிருந்து சத்தையெல்லாம் உறிஞ்சி அது வளரும். நீ என்ன செய்வே?

சாமி வாத்தியார்ஒட்டுண்ணி என எதைச் சொல்கிறார் என தெரிந்தது. பொதுவாக ஒரு பதிலை சொல்லலாம் என, "முன்னோர்கள் ஒன்னும் முட்டாள்களில்லை சார்ஏதாவது இருக்கும்" என்றேன்.

அதையே வேறு மாதிரி கேட்டார், “சரிப்பாஉன் முன்னோர்கள் எதுவும் செய்யமுடியாமல் அந்த ஒட்டுண்ணிகளுடனே மரத்தை வளர்த்தார்கள். அதனால எல்லோரும் இலைகள் வெள்ளைதான் என நினைச்சிக்கிட்டாங்க.  இலைகள் பச்சை வண்ணம் தான்னு உனக்குத் தெரிஞ்சிபோச்சி. மேலே படர்ந்திருக்கும் வெள்ளை,  ஒட்டுண்ணினும் தெரிஞ்சிபோச்சி. அதை ஒழிக்க என்ன செய்யணும்னு தெரியும்.. இருந்தும் 'என் முன்னோர்கள் இந்த ஒட்டுண்ணியுடன் வாழ்ந்தவர்கள்அவர்கள் ஒன்றும் முட்டாள்களில்லை’ அப்படினு சொல்வாயா இல்ல மருந்தை அடித்துஒட்டுண்ணியை விரட்டி விட்டு மரத்தை நன்கு வளர்ப்பாயா?” என்று சொல்லிக்கொண்டிருக்கும் வேளை

திடீரென்று மண்டபத்துக்குள்  இருந்து சினிமாப்  பாட்டு சத்தமும் அதைத் தொடர்ந்து அனைவர்களது உற்சாகக்குரல்களும் விண்ணைப்பிளந்தன.

சாமி வாத்தியார் வியப்புடன் என்னைப் பார்த்தார். “என்னப்பா நடக்குது?".

அதே நேரத்தில் யாகப்பன் மண்டபத்திலிருந்து வெளியே வந்தான்.

தம்பி என்னப்பா நடக்குது?“, என்றார் சாமி வாத்தியார்.

டான்ஸ் சார்அதுவும் ஒரு ஒம்போது சூப்பரா டான்ஸ் ஆடுது சார்போய் பாருங்க சார்

மறு  நொடியே கன்னத்தில் பளார் என அறை  விழுந்தது யாகப்பனுக்கு.

சாமி வாத்தியார்படு கோவத்தில் “திருநங்கைனு அழகான சொல் இருக்கும்போது நீ ஏன்டா சுடு சொல் சொல்ற”.

இன் சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது 

இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ்சொற்களைப்  பயன் படுத்தவேண்டும்?

என் அப்பாவைப் பார்த்த உணர்வு. அந்த இடத்தைவிட்டு உடனே நகர்ந்தேன்மேடையில் நடனமாடும் என் மகளைக் காண.

========================================================================