Thursday, April 11, 2019

கவனக் குறைபாடு


பத்து ஆண்டா ஏன் வேலைக்குப் போகல? interviewல கண்டிப்பா இந்தக் கேள்வியக் கேப்பாய்ங்க. இந்தக் கேள்விய எப்படி எதிர் கொள்வதுதான் மிகப்பெரிய கேள்விநேர்காணலுக்குப் புறப்பட்டுக்கொண்டே தன் கணவன் மாறனிடம் அங்கலாய்த்தாள் மலர்மதி.

மலர்மதி, மாறன் இணையர் அமெரிக்காவில் உள்ள கூபெர்டினோ நகரத்தில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தினர். இரண்டு குழந்தைகள், மூத்தவன் இளங்கோ, இளையவள் குழல். 

கூபெர்டினோ பள்ளி மாவட்ட அலுவலகத்தில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்திருக்கிறார். இன்று காலை ஒன்பது மணிக்கு நேர்காணலுக்கு அழைத்திருக்கிறார்கள். மலர்மதி சிங்கப்பூரில் வசிக்கும்போது வேலைபார்த்தார். பின்பு கடந்த பத்து ஆண்டுகளாக வேலைக்குப் போகவில்லை.

"அதுக்குத்தான் முதல்லயே சொன்னேன், உன் bio dataவில் பத்து வருசம் சிங்கைல வேல பாத்தா மாதிரி காமிக்கச் சொன்னேன். நீதான் அரிச்சந்திரனுக்குத் தங்கச்சியாச்சே", என்ற மாறன் ஒரு தகவல் தொழில்நுட்ப அலுவலகத்தில் வீட்டிலிருந்து வேலை பார்ப்பவன்.

நான் என்ன உங்கள மாதிரி ITலயா இருக்கேன்! fake resume போட.” முகத்தில் லேசாக சினத்தைக் காண்பித்து "சமாளிக்க வேண்டியதுதான்" எனத் தன்னைத் தானே ஆற்றிக்கொண்டு நேர்காணலுக்குக் கிளம்பினாள் மலர்மதி. 

"ஸ்கூல் பக்கத்துல parallel parkingதான் இருக்கும். உனக்குத்தான் அது வராதே. அதனால பக்கத்துலே இருக்கிற ஆப்பிள் ஆபீஸ்ல கார நிறுத்திட்டுப் போ. உனக்குலாம் எப்படி driving license கொடுத்தாய்ங்களோ" என்றவனைக் கொஞ்சமும் கண்டுக்காமல் காரைக் கிளப்பி போக்குவரத்தில் கலந்தாள்  மலர்மதி. 

இந்த நேர்காணல்ல என்னத்தப் பேசணும், அதுவும் இந்த பத்து ஆண்டுகள் வேலை செய்யாததை பற்றி என்ன சொல்லவேண்டும் என்பதைச் சிந்தித்துக்கொண்டே காரைச் செலுத்தினாள்.

அமெரிக்காவின் கூபெர்டினோ நகரம் சிறு பனிப்படலத்துடன் மெதுவாக விழித்துக்கொண்டிருந்தது. சிவகாசியில் பயர் ஒர்க்ஸ் பேருந்து பக்கத்துச் சிற்றூர்களிலிருந்தது ஆட்களை அதிகாலையில் அள்ளிக் கொண்டு வருவதைப்போல, பக்கத்து ஊர்களிலிருந்து ஆட்களை அள்ளிக்கொண்டு சென்று கொண்டிருந்தது ஒரு ஆப்பிள்  நிறுவனப் பேருந்து.

கூபெர்டினோ நகரம் சாண்டா கிளாரா (சிலிக்கன்) பள்ளத்தாக்கின் ஒரு பகுதி, இந்தியர்களின் சொர்க்க பூமி. இந்தியர்கள் குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழர்கள் அதிகமாக வாழும் ஊர். முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை நிலப்பரப்புகள் அருகருகே இருக்கும் இடம். கூகிள், பேஸ் புக், ஆப்பிள், ஈபே போன்ற உலகின் மிகப்பெரிய கம்பெனிகளின் இருப்பிடம். அமெரிக்காவின் மற்ற பகுதிகளில்  நடக்கும் பனி, மழை, சுழற்காற்று போன்ற  இயற்கைப் பேரழிவு எதுவும் இல்லாத ஒரு இடம். என்ன ஒன்று அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படும்.

ஆப்பிள் தலைமைச் செயலகத்துக்குள் காரை நிறுத்திவிட்டு அருகில் இருக்கும் மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கு ஓட்டமும் நடையுமாக நடக்கத் துவங்கினாள்.  

வாழ்க்கை வேடிக்கையானது. சில நேரங்களில் கருணையே இல்லாமல் அடித்துத் துவைத்துப் போட்டுவிடுகிறது. 

வாழ்க்கையில் நிறைய சாதிக்க, பல வித கனவுகளுடன் முனைவர் பட்டம் முடித்தாள் மலர்மதி. திருமணமானபின்பு கணவனுக்கு சிங்கையில் வேலையென்பதால் சிங்கப்பூரில் குடிபுகுந்தாள். முதல் பையன் இளங்கோ பிறந்து ஒரு ஆண்டுக்குப்பின் தன் கனவைத் துரத்தத் துவங்கினாள், புது வேலையில்.

ஐந்தாறு ஆண்டுகள் உருண்டோடின. இளங்கோவிற்கு சிங்கையின் ஆங்கிலோ சைனீஸ்  பள்ளியில் இடம் கிடைத்ததால் அருகில் இருக்கும் தொடர்மாடிக் குடியிருப்பில் பத்தாவது மாடிக்குக்  குடிபெயர்ந்தார்கள். 

ஒருநாள் அலுவலகத்தில் இருக்கும்போது கைபேசியில்  அவசர அழைப்பு. பேசியது மாறன். 'இளங்கோ, வீட்டிலிருக்கும் கண்ணாடி டேபிள உடைச்சிட்டான், எப்படின்னு தெரியலே, கையெல்லாம் ரத்தம்'

அவசரமாக டாக்ஸி பிடித்து வீட்டிற்கு வந்தால், ஏற்கனேவே மருத்துவரிடம் அழைத்துச் சென்று மருந்து போட்டுத் திரும்பியிருந்தான் இளங்கோ, மாறனுடன். 

உங்களால கொஞ்ச நேரம் கூட இவன பாத்துக்க முடியலையா?” என மாறனுக்குத் திட்டு.

நான் என்ன பண்ணட்டும். இளங்கோ ஓவரா ஆட்டம் போடுறான், ஒரு எடத்துல நிக்கிறதில்லே. எப்பப் பாத்தாலும் ஓடுறான், சாடுறான். உக்காரச்சொன்னா உக்கார்றதில்ல, எப்பவும் தலைகீழதான் நிக்குறான். ஏன்டா உடைச்சன்னா  சீனத்துல பூ சி தாவ்கிறான் (எனக்குத் தெரியாது). உனக்குத்தான் இவனப் பத்தித் தெரியுமே.என்றான் மாறன்.

இவன் கெட்ட கேட்டுக்கு டப்பா டப்பாவா டாய்ஸ் வேற. அதுல விளையாட வேண்டியதுதானடா, டேபிள ஏன்டா உடைக்கிற. இவனுக்கு நிமிசத்துக்கு ஒரு விளையாட்டு சாமான் வேண்டியிருக்கு. மாத்திக்கிட்டே இருக்கான். ஓவர் சேட்டையா இருக்கு. டேய், வாலச் சுருட்டிட்டு இருக்கணும் இல்ல ஒட்ட நறுக்கிடுவேன்" எனக்  கண்ணை உருட்டி   மிரட்டினாள் மலர்மதி. 

சின்ன வயசுல சேட்ட பண்ணலைனா பின்ன எப்பப் பண்ணுவாய்ங்க போகப் போக எல்லாம் சரியாயிடும். விடு. இதெல்லாம் பெரிசு பண்ணாத " எனத் தடுத்து நிறுத்தினான் மாறன்.

முதல் முதலில் இளங்கோ பற்றின கவலை தொற்றிக்கொண்டது மலர்மதிக்கு.

நாளாக நாளாக இளங்கோவைக் கையாள்வதே கடினமாக இருந்தது மலர்மதிக்கு. சொன்ன பேச்சுக்  கேட்பதில்லை. சொல்லுகிற எதையும் பின்பற்றுவதில்லை. ஒன்பதாவது வயதில் அவன் சேட்டை அதிகமானது. பள்ளியிலிருந்து வரச்சொல்லியிருந்தார்கள்.

மலர்மதியையும் மாறனையும் ஒரு அறையில் அமரச் சொன்னார்கள். குற்றப்பத்திரிக்கை படிக்கத் துவங்கினார்கள் ஒவ்வொரு ஆசிரியர்கள். 

முதலில் வந்தது ஆங்கில ஆசிரியர். 

"இளங்கோ படிப்புல சரிகிடையாது. நேத்து ப்ரேயர் முடிந்து வகுப்புக்கு போகும் வழியில குதிச்சி  குதிச்சி மேலே சட்டத்தத் தொடப் பார்க்குறான். He has to keep his hands and feet within himself” 

இதை ஒரு பொருட்டாகவே மலர்மதி எடுக்கவில்லை. பிள்ளைகள் ஆடத்தான் செய்வார்கள் அவர்கள் என்ன ரோபோட்டா, அமைதியா இருன்னு சொன்னா அமைதியா இருக்க என நினைத்துக்கொண்டாள். 

அடுத்து கணக்கு ஆசிரியர் வந்தார். 

"இளங்கோ சில நேரம் கடினமான கணக்கக் கூட நல்லா போடுகிறான், சிலது புரியலைனா டெஸ்க்கு அடில படுத்துகிறான். இவனப்பாத்து  மத்தவங்களும் இப்படிச் செய்றாங்க."
புரியும்படி சொன்னா நல்லாப் போடப்போறான். பின்னே எதுக்கு இந்தக் குற்றச்சாட்டு என நினைத்துக்கொண்டாள். 

அடுத்து தமிழ் ஆசிரியர். 

"இளங்கோ நல்ல பையன்தான். மெதுவாகதான் கத்துக்கிறான். தமிழ்ல '' எழுத்தை மாத்தி எழுதுறான். வீட்ல கொஞ்சம் சொல்லிக்குடுங்க. தேர்வு வைச்சா கேள்வியை முழுசா படிக்காம பதில் எழுதத் தொடங்குறான். முதல்ல கேள்வியை உள்வாங்கணுமா இல்லையா?" 

இந்தக்  கேள்வி மலர்மதி தலைக்குள்ளே ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தது. இளங்கோவைக் கூடுதலாகக் கவனிக்கத் துவங்கினாள். தமிழ் ஆசிரியர் சொன்னது சரியாகத்தான் இருந்தது. இளங்கோ கேள்வியை முழுமையாகப்  படிக்கும் முன்னே பதிலை எழுதத் துவங்குகிறான். இவன் ஏன் கேள்வியை முழுசாகப்  படிப்பதில்லை? அப்படி என்ன அவசரம்.  

அடுத்து வரும் தேர்விலும் இதே சிக்கல். மலர்மதிக்குச் சினம் தலைக்கேறியதில் இளங்கோவைச் சாத்தி எடுத்து விட்டாள். வழக்கம்போல மாறன் வந்து தடுக்க வேண்டியதாகிவிட்டது.

மாறன், ஹி(he), ஷி(she), இட்(it) வந்தா டஸ்(does) வரும்னு ஆறு மாசமா சொல்லிக் குடுத்துட்டு வரேன். இவன் தலைக்குள்ளே ஏறமாட்டேங்குது. எந்த பாடத்திலும் இவன் மார்க் சரியில்லே. ஸ்கூலே இவன் மேல கம்ப்ளேன் பண்றாய்ங்க.  இவேன் என்னடான்னா கொஞ்சம் கூட அலட்டிக்காம கையிலே பேனாவ வச்சிட்டு ஆட்டிக்கிட்டே இருக்கான். வாத்தியார் புள்ளே மக்குனு சொல்லுற மாதிரி ஆகிடுமோ?” என ஓவென ஒப்பாரி வைத்தாள் மாறனிடம்.

புரியாதப்  புதிராகவே இருந்தான் இளங்கோ. வேலைப் பளுவில் அவனைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யாதவர்களாக இருந்தார்கள் மலர்மதியும், மாறனும்.

அதிகாலையில் பள்ளிக்குச் செல்லும் பேருந்துக்காகக் காத்துக் கொண்டிருந்தான் இளங்கோ. அவனைப் பேருந்தில் ஏற்றிவிட்டு வேலைக்குச் செல்வதற்காக மலர்மதியும் காத்திருந்தாள். அப்போதுதான் கவனித்தாள், இளங்கோவிடம் சாப்பாடுப்  பை மட்டும் இருப்பதை.
"டேய் ஸ்கூல் பேக் எங்கடா?" எனக்  குரலை உயர்த்தினாள். 

அப்போதுதான் இளங்கோவும் கவனித்தான், தன்னிடம் பள்ளிக்கு எடுத்துச் செல்லும் புத்தகப்பை இல்லையென்பதை. 

"போ, சீக்கிரம் வீட்டுக்கு ஓடிப்போய் பேக் எடுத்துட்டு வா" என விரட்டி விட்டாள்.
சிறிது நேரத்தில் மூச்சிரைக்க வியர்க்க விறுவிறுக்க புத்தகப்பையோடு திரும்பிவந்தான் இளங்கோ. 

"ஏன்டா இப்படி மூச்சிரைக்குது, லிப்ட்லதான போன?" எனக் கரிசனையோடுக் கேட்டாள் மலர்மதி. 

இல்லை எனத் தலையாட்டினான். 

பத்து மாடி ஏறி, பத்து மாடி இறங்கி வந்திருக்கிறான் எனத் தெரிந்தவுடன் மலர்மதிக்கு பயங்கரக் குழப்பம். நம்முடன் மின்தூக்கியில் வரும்போது நம்முடன்தானே வருகிறான். சிலநேரம் இவனுடைய பேச்சுக்கேற்ப அப்பாவும் மகனும் பத்து மாடி ஏறிவருவார்கள் சில நேரம் இறங்கி வருவார்கள். ஆனால் இந்த அவசர நேரத்திலும் இவன் ஏன் மின்தூக்கியைப்  பயன்படுத்தாமல் படியில் ஏறிப் போய் வருகிறான்.

"ஏன்டா லிப்ட்ல போகல?", என்றதற்கு எந்தப் பதிலும் வரவில்லை இளங்கோவிடமிருந்து.

லிப்ட்ல யாராவது மூத்திரம் பெஞ்சு வச்சிருந்தாங்களா?”

இல்லை எனத் தலையாட்டினான்.

லிப்ட்ல யாராவது உன்கிட்ட தப்பா நடந்துக்கிட்டாங்களா?”

இல்லை எனத் தலையாட்டினான்.

சிரித்துக்கொண்டே "பயமா?" என்றதற்கு ஆம் என்றான் இளங்கோ. 

மலர்மதிக்கு தூக்கி வாரிப்  போட்டது. வெளியே காட்டிக்கொள்ளாமல் ஸ்கூல யாராவது லிப்ட் பேய் கதை  சொன்னார்களா?”

இல்லை எனத் தலையாட்டினான்.

பின்னே ஏன் பயப்படுற

பூ சி தாவ் என்றான் இளங்கோ, சீனத்தில்.

இளங்கோவைப்  பேருந்தில் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, வேலைக்குப் போகாமல் வீட்டுக்கு வந்து கணினியை உயிர்ப்பித்தாள்.

உயரம் போனால் ஏற்படும் பயம் இருக்குமோவென நினைத்து கூகுளில் தேடினாள். ‘மின்தூக்கிப் பயம் எனத் தேடும்போது 'பதட்டம் என்றால் என்ன?' என்பதைப் படித்தாள். அது கோளாறு பக்கத்தைப் படிக்கச் சொன்னது. கவனம், பற்றாக்குறை, மன இறுக்கம், மிகை திறன் எல்லாவற்றையும் படித்துக் குழம்பி மாறனையும் குழப்பினாள். இளங்கோவை மருத்துவரிடம் காண்பிக்கலாம் என முடிவு செய்து மருத்துவர் சாலினியை அணுகினார்கள்.

மருத்துவர் இளங்கோவைப்பற்றி எல்லாச் சம்பவங்களையும் கேட்டறிந்தார். மருத்துவர் இளங்கோவைச் சோதித்துவிட்டுச் சொன்னார் "இளங்கோவுக்கு இருப்பது கவனக் குறைபாடும் மிகைத் திறனும், (Attention Deficit and Hyper Activity) சுருக்கமாக ADHD"

எதனாலே இது வருதுன்னு இன்னும் கண்டுபிடிக்கல. இது அதிகமாப் பையன்களுக்குத்தான் வரும். வகுப்பறைல தொந்தரவு செய்வதால் முதல்ல வகுப்பறைலதான் கண்டுபிடிப்பார்கள். ஆசிரியர்கள் முதலில் கண்டுபிடிப்பது குழந்தையின் அதிகப்படியான ஆற்றலைத்தான். கவனக் குறைபாடை கவனிக்கத் தவறிவிடுகிறார்கள்.

பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதம் ரொம்ப அதிகம். பெற்றோர் ஆசிரியர் இடையே நம்பிக்கை வரணும் முதல்ல. அப்பத்தான் குழந்தைகளுக்கு என்ன குறைபாடு, சிக்கல் இருக்குன்னு கண்டுபிடிக்க முடியும்.

மிகைத்திறன் இருக்கும் குழந்தைகளுக்கு பரந்து விரிந்த இடத்தில் விளையாட ஆசைப்படுவார்கள். லிப்ட் மாதிரி மூடப்பட்ட இடத்துல இருக்க விரும்பமாட்டார்கள். சில நேரம் பயப்படுவார்கள்.

இது பத்து சதவீத குழந்தைகளுக்கு மிகைத் திறன் இருக்கு. இதுக்கு எந்த சிகிச்சையும் கிடையாது. நாளாக நாளாகக் குறையலாம். ஆனா சிக்கல், இந்தக் கவனக்  குறைபாடுதான். 

கவனக்குறைபாடுதான் குழந்தைகளை மக்கு போல காட்டும். குடுக்குற இன்ஸ்ட்ரெக்சன பாலோவ் பண்ண மாட்டாங்க. படிச்சிருந்தாலும் கவனக் குறைபாடால கேர்லஸ் மிஸ்டேக்  பண்ணுவதால் மார்க் குறைவா வாங்குவாங்க. இதுக்கு ஒரே வழி, பொறுமையா சொல்லிக்கொடுக்கிறததுதான்.

சேட்டை பண்ணுனா மிரட்டுறது, கத்துறது, அடிக்கிறது இத எல்லாத்தையும் விட்டுட்டு, முதலில இவனுக்கு இருக்கிற குறைப்பாட்ட ஏத்துக்கிட்டு அவனோட சேர்ந்து அவனுக்கு உதவுங்க.

இளங்கோவுக்கு உங்கள் உதவி தேவை.என்று பெரிய விரிவுரை ஆற்றி முடித்தார் மருத்துவர்.

மாறனிடம் கலந்து பேசி தான் வகித்து வந்த வேலையைத் துறந்தார். வாழ்வின் முழு நேரமும் இளங்கோவுக்கே அர்ப்பணித்தார். இந்நிலையில் மாறனுக்கு சிங்கையிலிருந்த வேலை அமெரிக்காவுக்கு மாற்றலாகி அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார்கள். இது ஒருவகையில் மலர்மதிக்கும் இளங்கோவுக்கும்  வசதியாகிப் போனது, பள்ளியின் அழுத்தம் இல்லாததால்.
கவனம்  ஒரு இடத்தில் குவியாமல் சிதறுவதால் எந்த ஒரு வேலையையும் முழுமையாகச் செய்யமுடிவதில்லை இளங்கோவால். இனிப்பு சாப்பிட்டால் இளங்கோவைத் தூங்க வைக்க சிரமமானதால் சாக்லட், இனிப்பு வகைகளைக் குறைத்து விட்டாள், எல்லோருக்கும்.

முயற்சி மற்றும் பிழை சோதனை மூலம் அவனுடைய கவனச் சிதறல்களைச் சரி செய்ய முற்பட்டாள் மலர்மதி. 

இவனுடைய ஆற்றலை வேறு ஏதாவது ஒரு செயலில் திருப்ப எண்ணினாள் மலர்மதி.
அப்படியென்றால் எந்தச் செயல் அதிகமான நேரம் கவனம் சிதறாமல் செய்கிறான் எனக் கவனித்தாள். பியானோ, செஸ் பழக தனி வகுப்பில் போட்டால் அவனை ஒரு இடத்தில் அமர வைக்க முடியவில்லை. அதைக் கைவிட்டுவிட்டு, வெளியே விளையாடும் விளையாட்டுக்களை ஊக்குவித்தாள். நன்கு விளையாடத் துவங்கினான். மேலும் ஊக்குவிக்க கராத்தே வகுப்பில் போட்டாள். யாருமே எதிர்பார்க்காத அளவு இளங்கோவின் திறமை வெளியே தெரிந்தது. தினமும் கராத்தே செய்து அவனுடைய ஆற்றல் முழுவதும் அதிலே செலவழிந்ததால் வீட்டிற்கு வந்த பின்பு அமைதியாக ஒரு இடத்தில் இருந்து பாடங்களை படிக்கத் துவங்கினான். ஐந்தே ஆண்டில் கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கினான்.
கத்தாமல், மிரட்டாமல், அடிக்காமல் மிகப் பொறுமையாக இளங்கோவைக் கையாண்டாள். ஒரே சேதியைத் திருப்பி திருப்பி சொல்லிக்கொடுத்தாள், எரிச்சல் படாமல். படிப்பில் சுமாராக இருந்தாலும் மற்றவற்றில் நன்றாகக் கற்றுக்கொண்டான் இளங்கோ. இவ்வாறாக பத்து ஆண்டுகள் இப்படியே உருண்டோடியது.


சரியான நேரத்தில் மாவட்டக் கல்வி அலுவலகத்தை அடைந்தாள். வரவேற்பறையில் இருந்த ஆணிடம் தான் வந்த நோக்கத்தைச் சொன்னாள் மலர்மதி. அருகில் இருக்கும் இருக்கையில் காத்திருக்கச் சொன்னார். சிறிது நேரத்தில் நேர்காணல் அறைக்கு அழைத்தார்கள்.
முனைவர் பட்டம் பெற்றுள்ள நீங்கள் நடுநிலைப் பள்ளி ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறீர்கள் அதுவும் சிறப்புத் தேவையுள்ள மாணவர்களுக்கான வகுப்புக்கு. Interesting. 

நம் கூப்பர்டினோ பள்ளி மாவட்டத்தில் சிறப்புத் தேவை உள்ள மாணவர்களுக்குத் தனிப் பள்ளி கிடையாது. பொது பள்ளிகளில் தனி வகுப்பு மட்டுமே. அதில் மன  இறுக்கம் (Autism) உள்ள குழந்தைகளை மூன்று பிரிவுகளாக, குறைவு, நடுத்தரம் மற்றும் அதிக இறுக்கம் உள்ளவர்கள் என பிரித்திருக்கிறோம். நீங்கள் போகும் பள்ளியில் எந்தப் பிரிவும் இருக்கலாம். அதிக இறுக்கம் உடையவர்கள் உங்களைத் தாக்க வாய்ப்பிருக்கு. இதன் மாதிரியான சூழ்நிலையில் மாணவர்களைக் கையாள உங்களுக்கு என்ன தகுதி இருக்குன்னு நினைக்கிறீங்க திருமதி மாறன்?“ என ஆங்கிலத்தில் வினவினார் நேர்காணல் எடுப்பவர்.


பொறுமை


=================================================================
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை
போற்றி யொழுகப் படும்
பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும்.
==================================================================

பின்குறிப்பு:
1. கூபெர்டினோ பள்ளிகளில் இருக்கும் சிறப்புத் தேவை வகுப்பில் தினமும் மலர்மதியைக் காணலாம்.
2. இளங்கோ கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்துக்கொண்டே கராத்தேயில் நான்காம் டிகிரி பிளாக் பெல்ட்க்கு பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்.

பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது. சிறப்புத் தேவையுள்ள குழந்தைகளுக்காகத் தங்கள் வாழ்நாளைச் செலவிடுவோர்களுக்கு இக்கதை ஒப்படைப்பு.