Wednesday, June 19, 2019

நேர்காணல்



நேர்காணல்

பல ஆண்டுகள் ஒரு பன்னாட்டுப் பெருநிறுவனத்தில் மனித வள மேலாளராக பணிபுரிந்து தற்சமயம் ஒரு தனியார் வேலை வாய்ப்பு ஆலோசனை நிறுவனத்தை நிறுவி வெற்றிகரமாக நடத்திக்கொண்டு வருகிறாள் செல்வி.

வேலை தேடுபவர்களுக்கு ஆலோசனை வழங்க, தற்குறிப்பு மட்டும் தயார் செய்ய, வேலை தேடித் தர, நேர்காணலுக்குத் தயார் செய்ய எனத்  தனித்தனி திட்டங்கள்.

இந்த வாரம் நாம பாக்கப் போவது தற்குறிப்பும் நேர்காணலும்என்று அருகிலிருக்கும் வெள்ளைப் பலகையில் Resume and Interview என எழுதினாள் செல்வி.

இன்று நடந்து கொண்டிருப்பது வேலைவாய்ப்பு பயிற்சிப் பட்டறை. அந்தச் சிறிய அறையில் அய்ந்தாறுபேர் பல வயதுடையவர்கள் அமர்ந்து குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார்கள்.

டேய் வள்ளுவா, திரும்ப காலேஜ் வகுப்புக்கு வந்த மாதிரியே இருக்குடாஎன்று மெல்லிய சத்தத்தில் கூறினான் துரைசிங்கம். 

துரைசிங்கமும், வள்ளுவனும் கல்லூரியில் ஒரே வகுப்புத் தோழர்கள். ஐந்து ஆண்டுகள் பொறியியல் படித்துவிட்டு வேலை தேட செல்வியின் உதவியை நாடியிருக்கிறார்கள். செல்வி அவர்கள் பேசுவதைக் கவனித்துவிட்டுத் தொடர்ந்தாள்.

உங்கள நீங்களே சந்தைப்படுத்த தற்குறிப்பு அவசியம். 13ம் நூற்றாண்டிலே மன்னனிடம் வேலை வேண்டி தற்குறிப்பு எழுதினார் லியோ டாவின்சி. ஒரு தற்குறிப்பு பார்த்தவுடனே படிக்கணும்னு தோனணும். படிக்க எளிமையா இருக்கணும். வேலையில வெற்றிபெறத் தேவையான சரியான திறன் உங்ககிட்ட இருக்குங்கறத உங்க தற்குறிப்பு காட்ட வேண்டும்.
என்ன என்ன காரணங்களுக்கு ஒரு தற்குறிப்பை வாசிக்காமல் குப்பையில் போடுவார்கள்? யாராவது சொல்லுங்கள் என கேள்வியை முன்வைத்தாள் செல்வி.

தெளிவில்லாத ஜெனரல் சென்டென்ஸ் என்றார் வெள்ளைச்சட்டைக்காரர்.

ஆமா, சரியாச்சொன்னீங்க, அரசியல்வாதி பேச்சு மாதிரி நான் நல்லவன், வல்லவன், தனிப்பட்ட திறன்கள் இருக்குன்னு எழுதுவதை விட நீங்க நல்லவனா இருந்து என்ன செய்தீங்கன்னு தற்குறிப்புல இருக்கணும். வேற?”

நிறைய பக்கங்கள் இருந்தால்?” என்கிறார் கருப்புச்சட்டைக்காரர்.

ஆமா, ஒரு நல்ல தற்குறிப்பு இரண்டே பக்கங்களில் இருக்கனும். எழுத்துப்பிழைகள்  இருக்கக்கூடாது. அதேமாதிரி அதில நாம எதுவும் எழுதுவதைத் தவிர்க்கணும். அதனால தற்குறிப்பில இருக்கிற ஒவ்வொரு சொல்லும் தங்கத்துக்கு ஈடானது. பயனற்றச் சொல் எதுவும் தற்குறிப்புல இருக்கக்கூடாது.

'கண்டேன் சீதையை' ன்னு சொன்னதும் தங்கச்சொற்கள்தான்.

சிலநேரத்துலே  பயனற்றச் சொல்லும் பயனுள்ள சொல்லா மாறும். யாராவது இதுக்கு எடுத்துக்காட்டு சொல்லுங்கஎன எல்லோரையும் பார்த்துக் கேட்டாள் செல்வி. அமைதி நிலவியது. பின்பு அவளே  தொடர்ந்தாள்.
காந்தி செத்த அன்னிக்கு அத உலகத்துக்கு அதிகாரபூர்வமா ஆல் இந்தியா ரேடியோவ்ல சொல்ல மவுண்ட்பேட்டன்ட்ட லெட்டர நீட்டுனாங்களாம். அதுல இருந்த சொற்கள்ல சில திருத்தம் செஞ்சாரு. என்ன திருத்தம் செஞ்சாரு தெரியுமா?

மகாத்மா காந்தி இன்று மதியம் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று இருந்ததோடு ‘அவரைக் கொன்றவன் ஒரு இந்து’ என்பதைச் சேர்த்தார். இந்த இடத்தில பயனில்லாதச் சொல் ‘கொலை செய்தவன் இந்து’ என்பது, ஆனா அதுதான் பல ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாத்தியது

என்னடா இது!  வரலாறு எடுத்துட்டு இருக்காங்க என வள்ளுவனிடம் அங்கலாய்த்தான் துரைசிங்கம். ஆர்வம் குறைந்ததால் செல்வி நடத்துவது எதுவும் அவன் காதில் விழவில்லை, வெற்றுத்தாளில் படம் வரையத் துவங்கினான். செல்வி தற்குறிப்பைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தாள்.

அடுத்த வாரம், அலுவலக அரசியலை எவ்வாறு கையாள்வது, புதிய வேலை வாய்ப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சிறந்த வழி வரை அனைத்தையும் பார்ப்போம் என முடித்தாள் செல்வி.

எல்லோரும் கலையத் துவங்கினார்கள்.

"துரை நீங்க என் கேபினுக்கு வாங்க" எனக் கூறி அவளது அறைக்குச் சென்றாள்.

என்ன துரை! உங்களுக்கு போர் அடிக்குதா?” என துரைசிங்கம் கண்களைப் பார்த்தாள்.

துரைசிங்கம் நெளிந்தான்.

"பரவாயில்ல, யு வில் அப்ரிஸியேட் லேட்டர், நான் இப்போ சொல்ற மாதிரி உங்க தற்குறிப்ப மாத்தி எழுதிக் கொண்டுவாங்க என மாற்றங்களைச் சொன்னாள் செல்வி.

ஒருமணி நேரத்தில் துரைசிங்கம் தற்குறிப்பைத் திருத்தி செல்வியிடம் கொடுத்தான். படித்துப்  பார்த்து விட்டு சிறு சிறு பிழையைச் சரி செய்தாள் செல்வி.

மேடம், ஏதாவது ஒபெனிங்ஸ் இருந்தா சொல்லுங்க என்றான் பணிவோடு.

உங்களுக்கு ஒரு நேர்காணல் ஏற்பாடு பண்ணியிருக்கேன். என்றாள் செல்வி.  

துரைசிங்கம் முகத்தில் வெளிச்சம் பாய்ந்த மாதிரி இருந்தது.

எச்ஆரிடம் பேசிட்டேன். அதனாலேதான் தற்குறிப்ப கொஞ்சம் மாற்றினேன். நேர்காணலுக்கு ஆயத்தமா இருக்கீங்களா?”  

டெக்னிகல் இன்டெர்வியூக்கு நான் ரெடியா இருக்கேன் மேடம். ஆனா இந்த எச்ஆர் இன்டெர்வியு தான் என இழுத்தான் துரைசிங்கம்.

அதெல்லாம் பெரிய விசயமில்ல, வழக்கமா ஒரு நாலு கேள்வி கேப்பாங்க. அத மட்டும் ஆயத்தம் பண்ணிக்கோங்க. இது எல்லா எச்சார் இன்டெர்வியூக்கும் பொருந்தும்.

உங்களப் பத்தி சொல்லுங்கன்னு தொடங்குவாங்க. அதுக்கு உங்கத் தனிப்பட்ட வாழ்க்கையைப் பத்திச் சொல்லக்கூடாது. எப்ப டிகிரி முடிச்சீங்க, என்ன ப்ராஜெக்ட் பண்ணுனீங்க, இப்ப இருக்கிற கம்பனியில  நீங்க செய்த சாதனை, இப்படி நீங்களே ஒரு கத சொல்லணும்.

அடுத்து, ஏன் இப்ப இருக்கிற வேலையே விடுறீங்கன்னு ஒரு மொக்க கேள்வி கேட்பாங்க. இருக்கிற கம்பனியைப் பத்தி எதிர்மறையா எதுவும் சொல்லாதீங்க. பணத்துக்காகன்னு சொல்லாதீங்க. புதுக்கம்பெனியில் வளர்ச்சி வாய்ப்பு அதிகம்னு சொல்லுங்க.

அடுத்து, உங்களோட வலிமை, குறை பத்தி சொல்லுங்கன்னு நமக்கேத் தெரியாத ஒரு கேள்வி கேப்பாங்க.
உங்க வலிமையப் பத்தி நீங்க நிறையச் சொல்லலாம், ஆனா குறையப் பத்திச் சொல்லும்போது கொஞ்சம் கவனமா இருக்கணும். 'எனது குறை உண்மையில் எனது வலிமை!' அப்படீங்கிறதுதான் நீங்க சொல்லப்போற பதிலா இருக்கணும். எடுத்துக்காட்டா, 'நான் ஒரு வேலைய தொடங்கிட்டேன்னா முடிக்காம அந்த நாள முடிக்கமாட்டேன்'. இதுதான் என் குறைனு சொன்னா, அது உங்க வலிமையக்  காண்பிக்கும்.என்று பெரிய சொற்பொழிவு ஆற்றி முடித்தாள் செல்வி.

சரி மேடம்எனத் தலையாட்டினான் துரைசிங்கம்.

இந்த வாரம் உங்களுக்கு இன்டெர்வியூ கடிதம் வரும், அடுத்த வாரம் நேர்காணல் இருக்கும் ஆயத்தமா இருங்க.

எந்தக் கம்பெனினு சொல்லேவேயில்லே மேடம் என்றான் துரைசிங்கம். 

ஆதித்யா க்ரூப் என்றாள் செல்வி. துரைசிங்கம் முகம் இன்னும் மலர்ச்சியானது.

மேடம், ஆதித்யா க்ரூப் எம்டி இஸ் மை கம்யூனிட்டி.

ஐ ஆம் சாரி, என்ன சொன்னீங்க துரை?” என வினவினாள் செல்வி, ஐயமுடன்.

ஆதித்யா க்ரூப் எம்டி என்னோட சமூகத்தச் சேர்ந்தவர்.

சமூகம்னா சாதியச் சொல்றீங்களா?” செல்வி முகம் இறுக்கமானது.

ஆமாம் மேடம்

சாதிய சாதின்னு சொல்லுங்க அதுக்கு ஏன் வேற பேர்ல சொல்றீங்க.” என்றாள், சினத்தை வெளிக்காட்டாதவாறு.

அது வந்து, என்னோட ரெஸ்யூம்ல என்னோட சாதியப் போட்டா எனக்கு வேல கிடைக்க வாய்ப்பு அதிகம்.

இல்ல துரை இது தேவையில்லாத ஒரு ஆணி எனப் புன்னகைத்தாள் செல்வி.

அதெப்படி மேடம் தப்பாகும். அரசாங்க வேலைக்குப் போக சாதியும் சாதிச் சான்றிதழும் அவசியமில்லையா? அது மாதிரிதான்.

காட்டுக்குள்ளார இருக்கிற உயிரினங்கள கணக்கெடுத்தாத்தான் எது அரிய உயிரினம், யாருக்கு உதவி தேவைங்கிறத கண்டறிய முடியும். அதுமாதிரி சாதிச்சான்றிதழ் கண்டிப்பா வேணும். இது தனியார் கார்ப்பரேட் கம்பெனி. சாதிலாம் போட்டா நம்ம மேலே backfire ஆக அதிக வாய்ப்பிருக்கு. அதனால வேணாமே

அரைகுறை மனதோடு தலையாட்டினான் துரைசிங்கம்.

எப்பவும் நேர்காணல் எடுக்கிறவங்க உங்க தற்குறிப்ப வச்சிருப்பாங்க, இருந்தாலும் உங்க தற்குறிப்பு நகல் ஒன்னு கைல வச்சிக்கோங்க. ஆல் தி பெஸ்ட் என கைகுலுக்கி வழியனுப்பும்போது "உங்க நண்பர் வள்ளுவனை என்ன வந்து பாக்கச் சொல்றீங்களா துரை?" என்றாள் செல்வி.

செல்வி சொன்னமாதிரி ஒருவாரத்தில் நேர்காணல் கடிதம் வந்தது. துரைசிங்கம் வேலைக்குரிய தேவைகளை நன்கு உணர்ந்து அதற்கேற்ற மாதிரி தன்னை ஆயத்தப்படுத்திக்  கொண்டான்.

நேர்காணல் நாளும் வந்தது. செல்வி அறிவுறுத்தின மாதிரி கண்களை உறுத்தாத வண்ணத்தில் உடைகளை அணிந்துகொண்டு புறப்பட்டான். 15 நிமிடம் முன்பே நிறுவனத்தின் வரவேற்பறையில் இருந்தான். வரவேற்பறையில் ஆதித்யா நிறுவனத்தின் தலைமை அதிகாரி  சுவரில் குடியரசு தலைவருடன் சிரித்துக் கொண்டு இருந்தார். நம் சாதியில் பிறந்தவர் இந்தியாவின் பணக்காரர்களில் ஒருவர் என மனதிற்குள் மெய்சிலிர்த்துக் கொண்டான். நாம் ஏன் நம் சாதியை நம் தற்குறிப்பில் போடக்கூடாது எனத் திரும்பத் திரும்ப மனதில் ஒரு கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தது. சாதியைக்  குறிப்பிட்டால் அவனுக்கு நன்மை பயக்கும் என மனம் சொல்லிக்கொண்டே இருந்தது.

"சார், இந்த அப்ளிகேசனை நிரப்பி உங்க பயோ டேட்டாவை இணைத்துக் குடுங்க" என்றார் வரவேற்பறையில் இருந்த பெண்.

படிவத்தை நிரப்பி தற்குறிப்பை இணைத்தான். பின்பு முடிவெடுத்தவனாக பேனாவை எடுத்து "கம்யூனிட்டி: ********** " என தன் சாதிப் பெயரைக்  குறிப்பிட்டான் துரைசிங்கம்.

அரைமணி நேரத்தில் துரைசிங்கத்தை நேர்காணலுக்கு அழைத்தார் மேலாளர். கதவைத் தட்டிவிட்டு உள்ளே சென்றான். கொஞ்சம் இறுக்கமாக மேலாளரின் கையைக் குலுக்கினான் துரைசிங்கம். உட்காரச் சொன்னார்.
செல்வி சொல்லிக்கொடுத்தது போல் இருக்கையில் நன்கு அமர்ந்து தோள்களை இறக்கி மேலாளரின் கண்களை நேராகப் பார்த்து அமைதியாக புன்னகை செய்தான்.


ஒருவாரம் உருண்டோடியது. எந்தவிதத் தகவலும் வரவில்லை. துரைசிங்கத்துக்கு இருப்புக்கொள்ளவில்லை. செல்வியை செல்பேசியில் அழைத்து பின்னூட்டம் ஏதாவது தகவல் உண்டா என விசாரித்தான். இதுவரை இல்லை, முடிந்தால் மனிதவள மேலாளர்டம் அழைத்து விசாரிப்பதாகக் கூறினாள் செல்வி.

மறுநாள் காலை செல்வியின் அலுவலகத்திற்கு தொலைபேசி அழைப்பு வந்தது. பேசியவர் ஆதித்யா நிறுவனத்தின் மனித வள மேலாளர்.

"சொல்லுங்க சார்" என்றாள் செல்வி.

"மேடம், நீங்க அனுப்பி வைத்த கேண்டிடேட் துரைசிங்கம் நல்ல கேண்டிடேட்டா இருக்காரு. டெக்னிக்கல் ரவுண்டு நல்லா க்ளியர் பண்ணினார். எச் ஆர் இன்டெர்வியூவும் நல்லாப் பண்ணினார். ஆனா ஒரு சின்னச் சிக்கல். அவரு அப்ளிகேசன்ல சாதிய போட்டிருக்காரு. இதப்பாத்துட்டு மேனேஜ்மென்ட்ல வேற மாதிரி நினைக்குறாங்க. பழைமைவாதியா இருப்பாரோன்னு நினைக்குறாங்க. ஒருவேளை இவர வேலைக்கு எடுத்தா தன் சாதி மக்களுக்கு ஒருதலைப்பட்சமாக நடந்துக்குவாரோன்னு நினைக்குறாங்க. ஒருவேளை தன் சாதி மக்களைச் சேர்த்து கூட்டம் சேர்ப்பாரோன்னு நினைக்குறாங்க. அதனால, ஐ அம் சாரி மேடம். வேற கேண்டிடேட் அவரை மாதிரியே நல்ல கேண்டிடேட் இருந்தா அனுப்புங்க மேடம்."

மேசையின் மேலே இருந்த வள்ளுவனின் தற்குறிப்பைக் கையில் எடுத்தாள் செல்வி.
************************************************************************
பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்

பயனற்றவைகளைச் சொல்லிப்  பயன் பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்.
**************************************************************************