Wednesday, July 10, 2019

டியூப்லைட் ஆலை

Disclaimer: All characters, Incidents, Names, Places and corporations or establishments appearing in this document are fictitious. Any resemblance to real persons, living or dead, is purely coincidental.

டியூப்லைட் ஆலை

டியூப்லைட் தயாரிப்பில் இந்தியாவிலேயே முதன்மையாக இருக்கும் நாகை கடற்கரை அருகில் டியூப்லைட் ஆலை பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. ஒரு புறம் கண்ணாடி உருகிக்கொண்டிருந்தது. மற்றொரு இடத்தில் ஒரு இயந்திரம் பாஸ்பரஸைத் தேய்த்துக் கொண்டிருந்தது. மெர்க்குரி கையாளும் இடத்திற்கு அருகே மற்றொரு அலகு கட்டுமானம் நடந்து கொண்டிருந்தது.

நிர்வாக அலுவலகத்தின் சந்திப்பு அறையில் இயக்குனர் பரத்வாஜ் முதன்மை இருக்கையில் அமர்ந்திருந்தார். நிர்வாகத்தில் இருக்கும் பெருந்தலைகளும் அமர்ந்திருந்தனர்.

அறையில் இருந்த குளிரையும் மீறி லேசாக வியர்த்திருந்ததைக் கைக்குட்டையில் துடைத்தான் பாஸ்கர். பொறியாளராகப் பணியைத் துவங்கி இருபது ஆண்டுகளாக பல்வேறு பொறுப்பில் இருந்து தற்சமயம் புது அலகு கட்டுமானத்துக்கு மேலாளராகவும் இருக்கிறான்.

பரத்வாஜ் பேசத் துவங்கினார். 

போனமுறை முதல் யூனிட்ல இருந்து நாம வெளியேத்தின கழிவு, மக்கள் மத்தில போராட்டமா வெடிச்சி அத சரி பண்ணவே நமக்கு பெரும் போராட்டமா ஆயிடுச்சின்னு உங்களுக்கு நல்லாத் தெரியும்.  இப்போ ரெண்டாவது யூனிட் முடியிற நேரத்துல இருக்கு.  அதுக்கு முன்னாடி இன்சினரேசன் ப்ளாண்ட் திறக்கப் போறோம்.ஏன்னா! இந்த தடவை மெர்குரி, சயனைட் கழிவு, கேஸ் கழிவும் வரும். 'இதப்பாருங்க நாங்க சரியான முறைல கழிவ எரிக்கிறோம்' னு சொல்லி பொதுமக்களோட எதிர்ப்பு இல்லாம ரெண்டாவது யூனிட்ட திறக்கலாம். அதனாலே இன்சினரேசன் பிளாண்ட முதல்ல திறக்கணும்.

சென்ரல் மினிஸ்டர்ட்ட அடுத்த மாதம் 30ந்தேதி புது இன்சினரேசன் ப்ளாண்ட்டத்  திறக்க டேட்ஸ் வாங்கியிருக்கேன். அதுக்குள்ள முடிக்கனும். 

என்ன! பாஸ்கர் முடிச்சிடலாமா?“ என பாஸ்கரைப் பார்த்துக் கேட்டார் பரத்வாஜ்.

சார், பாய்லர முடிச்சிடலாம். ஆனா, இன்சினரேசன் ப்ளாண்ட்ட முடிக்க கோபால் கம்பெனி குடுத்துருக்க ப்ளான்படி இன்னும் ரெண்டு மாசமாகும்.” என்றான் பாஸ்கர் தணிந்த குரலில்.

“வாட்? ரெண்டு மாசமா? இத ஏன் இத்தனை நாளா என்கிட்ட சொல்லல? நீங்க என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ தெரியாது இன்னும் நாலு வாரத்துல மினிஸ்ட்டர் வருவாரு, பட்டன அழுத்துனா ப்ளாண்ட் ஸ்டார்ட் ஆகனும்.என்றார் பரத்வாஜ் குரலில் உறுதியாக.  

சார், இன்சினரேசன் ப்ளாண்ட் பண்ற கோபால் கம்பெனிக்கு இதுவர சொன்ன மாதிரி பணத்தக் குடுக்கல.பெண்டிங் இருக்கு” என இழுத்தான்.

இப்போ நடந்த மக்கள் போராட்டத்துல பொல்யூஷன் கன்ரோல் போர்ட்ட சரிக்கட்டவே ரொம்ப செலவாயிடுச்சி. கோர்ட்டு, கேசு, சென்ரல்க்கு கட்சி நிதி, ஸ்டேட்க்கு, லோக்கல் சாதி க்ரூப்புக்கு, கவுன்சிலர் வர குடுத்துருக்கு. நானே கஷ்ட்ப்பட்டு மினிஸ்டர்ட்ட டேட்ஸ் வாங்கியிருக்கேன். முதல்ல வேலைய முடிக்கச்சொல்லுங்க, பணத்த பிறகு பாக்கலாம். நாம என்ன அந்தாளுக மாதிரி நாட்டை விட்டா ஓடிப்போகப்போறோம்?” என்றார் பரத்வாஜ்.

"இல்லே சார்! பணம் வரலேனா வேலையே நிறுத்திடுவோம்ன்னு ஏற்கனேவே ஒரு தடவ சொல்லியிருக்காங்க. பணம் செட்டில் பண்ணலேனா கண்டிப்பாக வேலை நடக்காது. வேற ஏதாவது தான் சார் யோசிக்கணும்"

"அப்படியா" என யோசித்து, "சரி என்ன பண்ணலாம்! இப்ப ஒடனே பணத்தக் கொடுக்காம வேலைய முடிக்கணும்"

சார், 5 கோடி ரூபா ப்ராஜக்ட். கிட்டத்தட்ட 98 பர்சன்ட் வேல முடிஞ்சமாதிரி. இதுவர மூனரை கோடி குடுத்திருக்கோம். உங்களால நேரத்துக்கு முடிக்க முடியலைன்னு சொல்லிட்டு நாமளே மிச்ச வேலைய முடிச்சித் திறந்திரலாம். இன்சினரேசன் பிளாண்ட் நம்ம பாய்லர் மாதிரி தான். அதனால, நம்ம இஞ்சினியர்கள வச்சி செய்ஞ்சிடலாம். ஒன்னரை கோடி பணம் மிச்சம். மினிஸ்டரும் திறக்கவரலாம். ஆனா ஒரே ஒரு பிரச்சனை, கோர்ட்டுக்குப் போனா.என இழுத்தான் பாஸ்கர்.

நல்ல யோசனையா இருக்கே. கோர்ட்டப்பத்தி கவலைப்படாத. வாய்தா போட்டு தீர்ப்பு வர 20 வருசமாக்கிடலாம். இல்லனா காலவரை இல்லாம ஒத்திவைக்கச் சொல்லிட்டு நம்ம வேலையப்பாக்கலாம். நமக்குத்தான் சென்ரல் சப்போட் இருக்கே.

ஆனா இந்த மாதிரி ஐடியாவுக்குத்தான் பாஸ்கர் வேணும்கிறது.

போன தடவை நீ வந்து ரெண்டு சாதிகளுக்குள்ள சண்டைய மூட்டிவிட்டதாலதான்
போராட்டத்த டிசால்வ் பண்ண முடிஞ்சது. ஆலைய மூடினா டியூப்லைட் தயாரிப்பு குறையும் இந்தியாவே இருள்ல மூழ்கும் அபாயம்னு  ஜிக்கி ஜீவானந்தா சாமியார அறிக்க விட வச்சது. உன்னமாதிரி தமிழ்காரன்கள வச்சித்தான் இந்தத் தமிழ்காரங்கள சமாளிக்க முடியும். எனச் சொன்னதில் பாஸ்கர் முகம் மலர்ந்தது.

கூட்டம் கலைந்தது.

**************************************************************************************************

இன்சினரேசன் (Incineration) என்றால் எரித்துச் சாம்பலாக்குதல் என்று பொருள். பெரிய இரசாயன ஆலைகளில் திரவ கழிவு, திடக்கழிவு, வாயு கழிவு வெளியேறும். அதைச் சரியான பாதுகாப்பான முறையில் அகற்றுவது ஒரு சவாலானச் செயல். நாங்கள் வடிவமைத்துள்ள எரிசூளை  / சாம்பலாக்கி, இரசாயனக் கழிவை ஒரு அறைக்குள் எரித்து அகற்றும், சுற்றுச்சூழலைப் பாதிக்காதவாறு.

ஏகாம்பரம் விற்பனைக் கையேட்டை மீண்டும் ஒரு முறைப் படித்தான். ஏகாம்பரம் திட்ட மேலாளராக கோபால் கம்பனியில் பணிபுரிகிறான். எதிரே இருந்த விற்பனை மேலாளர்இதில நம்ம டீசல் பர்னர சேக்கலாமா சார். நம்ம பர்னர்தான 5 அடி நீளத்துக்கு ப்ஃளேம் வரும்ல. அது நம்ம கம்பனியோட ஸ்பெஷல் தயாரிப்புத்தான.” 

நாம பேட்டன்ட் பண்ணது பர்னரோட நாசில் (nozzle). அதப்பத்தி கொஞ்சம் எழுதலாம்.என்றான் ஏகாம்பரம்.

பர்னர் நாசில பத்தி சொல்லுங்க ஏகாம்பரம். கிளையன்ட் கிட்ட பேச வசதியாயிருக்கும். என்றார் கேட்கும் ஆவலில்.  

ஒரு பர்னர்ல ரெண்டு பைப் இருக்கும், ஒன்னுக்குள்ள ஒன்னு. வெளிய இருக்கிற பைப்ல இருந்து காத்து வரும். உள்ளுக்குள்ள இருக்கிற பைப்ல  இருந்து டீசல் வரும். ரெண்டு பைப்பும் சேரும் இடம் நாசில். அதுதான் காத்தையும் டீசலையும் கலந்து ஸ்ப்ரே பண்ணும். காபி போடத்தெரியாத
பொண்டாட்டியோட காபிய குடிச்சிட்டு துப்பினமாதிரின்னு வைச்சிக்கோங்களேன். என்று கூறி மேசையிலிருந்த பெட்டியைப் பிரித்தான் ஏகாம்பரம்.

இதப் பாருங்க. இதுதான் நாஞ்சொன்ன நாசில். ட்யூப்லைட் ப்ராஜக்ட்க்கு உரியது.”எனச் செயல் முறை விளக்கம் காண்பித்தான் ஏகாம்பரம் .

மேசையிலிருந்த தொலைபேசி சிணுங்கியது. அழைத்தது கோபால்.
எம்டி அவசர மீட்டிங்க்கு கூப்பிடுறார், இதப்பத்தி வந்து பேசலாம்எனக்கூறி அருகில் இருந்த மேசை அறையில் நாசிலை வைத்துப் பூட்டினான் ஏகாம்பரம்.

சந்திப்பு அறையில் எல்லோர் மனநிலையும் மிக இறுக்கமாக இருந்தது.
டியூப்லைட் ஆலையிலிருந்து வந்த மின்னஞ்சலைக் காண்பித்தார் கோபால்.  

“நம்ம கான்ட்ராக்டை கேன்சல் பண்ணிட்டு அவங்களே வேலையப்
பண்ணப்போறாங்களாம். என்ன பண்ணலாம்?”
பேச்சைத் துவக்கிவைத்தார் கோபால்.

சார்! இந்த ப்ரோஜக்ட் எடுக்க வேணாம்னு முதல்லயே ப்ளானிங் டிபார்ட்மென்ட்ல சொன்னோம். டியூப்லைட் கம்பெனி பணத்த செட்டில் பண்ணுவதில்லன்னு கிரெடிட் பீரோல இருந்து ரிப்போர்ட் வந்துச்சி.சொன்னப் பெருந்தலையைப் சற்றுநேரம் பார்த்தார் கோபால்.

அதெல்லாம் பழைய கத. நாகப்பட்டினத்தைச் சுத்தி ஏகப்பட்ட கெமிக்கல்
ஃபேக்டரி இருக்கு. அங்க எல்லாம்
ப்ராஜெக்ட் பிடிக்க எடுத்த முடிவு என அந்த வாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கோபால்.

இன்னும் எவ்வள வேல பென்டிங் இருக்கு ஏகாம்பரம்.”  கோபாலின் சொற்களில் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் இருந்தது.

சார்! இது வரை 90 பர்சன்ட் வேல முடிஞ்சிருச்சி. இதுதான் நம்ம பஞ்ச் லிஸ்ட். கண்டிப்பா மினிமம் ரெண்டு மாசமாகும். என ஒரு தாள்கட்டை எடுத்து மேசையில் போட்டான் ஏகாம்பரம்.

ஏன் நாம 4 வாரத்துல முடிக்கமுடியாது? “

சார்! பிரிக் லைனிங்க்கு பீகார்ல இருந்து வந்த பசங்க லோக்கல்ல தங்கியிருந்த இடத்துல ஏதோ பிரச்சன பண்ணதால ரெண்டு வாரம் டிலே ஆச்சு. அதையும் சமாளிச்சித்தான் நம்ம திட்டப்படி முடிச்சிடலாம்னு டியூப்லைட் பாஸ்கர்ட்ட சொன்னேன். இன்னும் நிறைய ஆட்களப்போட்டு ஓவர்டைம் பண்ணிடலாம், ஆனா பணத்த செட்டில் பண்ணுவாங்களா? தெரியாது.திட்ட நிலவரத்தைச் சொன்னான் ஏகாம்பரம்.

ஈமெயில பாத்தா அவங்க ஒரு முடிவு எடுத்துட்டுத்தான் நம்மகிட்ட ப்ராஜக்ட்ட கேன்சல் பண்ணுவது மாதிரி எழுதியிருக்கிறாங்க. இதுவரை ப்ராஜக்ட்ல எவ்வளவு காஸ்ட் ஆப் குட்ஸ் சோல்டு?" என வினவினார் கோபால்.

அஞ்சு கோடி ரூபாய் ப்ராஜெக்ட்ல, இதுவரை நாலுகோடி செலவு பண்ணியிருக்கிறோம். வரவு வந்தது மூனரைக் கோடி. இதுவரைக்குமே
அம்பது லட்சம் நஷ்டம் தான் சார். இப்போ மீதி இருக்க வேலையையும்
சேத்தா எழுபது லட்சம் ஆயிடும்.
நிதி அதிகாரி திட்ட அறிக்கையைக் கொடுத்தார்.

ஒரு நிமிடம் அறையே அமைதியாக இருந்ததை கோபால் உடைத்தார்.

‘Stop loss strategy. ஆக இரண்டு மாசத்துல வேலைய முடிக்க கண்டிப்பா 20 லட்சம் செலவாகும். அவனுக பணத்தையும் குடுக்க மாட்டாங்க. இதோட நிறுத்தினா இந்த 20 லட்சத்தைக் காப்பாத்தலாம் இல்லையா? ஓகே. ட்யூப்லைட் கம்பனிக்கு ஆஃபீஸியலா ப்ரொஜெக்ட நிறுத்துறோம், கோர்ட்டுல பார்த்துக்கலாம்னு சொல்லிடுங்க. என்றார் கோபால் வருத்தத்துடன். 

******************************************************************************************************

மிச்சமிருந்த சிறு சிறு வேலைகளையெல்லாம் ஒரே வாரத்தில் முடித்துவிட்டு சாம்பலாக்கியை துவக்கிப்பார்க்க பொறியாளர்களை வரவழைத்தான் பாஸ்கர். எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்தவர்கள், எரிசூளையில் இருந்த மூன்று டீசல் பர்னர்களில் நாசில்கள் இல்லாததைக் கவனிக்கவில்லை.

முதலில் கட்டுப்பாட்டுப் அறையில் மின்சாரம் இணைப்புக்கொடுத்து சோதித்தான். மின்காப்பு உருக்கி (fuse) செயலிழந்ததைச் சரிசெய்தான். 

குழாயில் டீசல் வருகிறதா என சோதித்துப் பார்த்தான். வந்தது. 
டீசல் பம்ப் இயக்கிப்பார்த்தான். இயங்கியது.
பேன்களை  இயக்கிப்பார்த்தான். இயங்கியது.
சரியான அழுத்தத்தில் டீலும் காற்றும் வருகிறதா என சோதித்தான். சரியாக இருந்தது.

எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தான், பாஸ்கர். 

பின்பு பர்னரை இயக்கினான். கருப்பு புகையுடன் மூன்றடி நீளத்துக்கு தீ நாக்குடன் இயங்கியது. 

"இந்தச் சேம்பேர் 1000 டிகிரி செல்சியஸ் வந்தவுடன் கழிவை உள்ளே அனுப்பனும். அதுவரை டீசல் பர்னரை ஓடவிடுங்க" என்றான் அருகிலிருந்த பொறியாளரிடம்.

நாசில் இல்லாததால் சரியான விகிதத்தில் டீசல் காற்று கலவை கிடைக்கவில்லை. நிறைய டீசல், எரிசூளைக்குள் விழுந்தது. தீ நின்று எரிய முடியவில்லை என்பதால் சிறிது நேரத்தில் எரிந்துகொண்டிருந்த பர்னர் அணைந்துவிட்டது.

எரிசூளையின் வெப்பம் 100 டிகிரி என வெப்பமானி காண்பித்தது.

எல்லாம் வேலை செய்கிறது. இந்த பர்னர் மட்டும் மக்கர் பண்ணுது. ஏன் தீ அணைந்தது எனக் குழம்பினான் பாஸ்கர்.

மறுபடியும் பொத்தானை அழுத்தி பர்னரைத் துவங்கினான் பாஸ்கர். இரண்டாவது முறையாக பர்னர் கொழுந்து விட்டு எரிந்தது. 

எரிசூளையின் வெப்பம் 150 டிகிரி என வெப்பமானி காண்பித்தது.

சிறிது நேரத்தில் மறுபடியும் பர்னர் அணைந்தது.

பர்னர் வழியாக டீசல் எரியாமல் சொட்டியதைக் கவனிக்கவில்லை பாஸ்கர். ஏற்கனேவே எரிசூளை 150 டிகிரி செல்சியசில் இருந்ததால் எரிசூளையில் விழுந்த டீசல் ஆவியாகிக்கொண்டிருந்தது. எரிசூளை ஒரு அழிவை நோக்கிப் போய்க்கொண்டிருப்பதைக் கவனிக்கத் தவறிக் கொண்டிருந்தார்கள்.

"சார்! பக்கத்துல இருக்கிற பாய்லர் பைப்ப எக்ஸ்ரே எடுத்துட்டு இருக்காங்க. அந்த எக்ஸ்ரே நம்ம பர்னரோட பிளேம் ஸ்கேனர்  (flame scanner) வேல செய்யவிடாமத் தடுக்குதுன்னு நினைக்கிறன். நாம பர்னர் பிளேம் ஸ்கேனர அணைச்சுட்டு பர்னர ஆரம்பிப்போம்" என்றார் அருகில் இருந்த போர்மேன்.

" சரி நீங்க கண்ட்ரோல் ரூம்ல போய் பிளேம் ஸ்கேனர அணைச்சுடுங்க." எனக் கூறி சிறிது நேரத்தில் மறுபடியும் பர்னரைத் துவங்கினான் பாஸ்கர்.

ஏற்கனேவே எரிசூளை  முழுதும் டீசல் ஆவி நிறைந்திருந்தது. திடீரென பர்னரில் தீப்பிடித்தவுடன், முழு அறையில் இருந்த டீசல் ஒரு வெடிகுண்டுக்கு நிகராக "டமால்" என எரிசூளை காதைக் கிழிக்கும் பெருஞ்சத்தத்துடன் வெடித்தது.

****************************************************************************************************
அதிகாலையில் கோபாலின் செல்பேசி அலறியது. பேசியது பரத்வாஜ்.

“ “ஹலோ! எப்படி இருக்கீங்க கோபால்?”

நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க?” என்றார் கோபால், அமைதியாக. 

எங்க நல்லாயிருக்க விடுறாங்க? நேத்து இன்சினரேசன் பிளாண்ட்ல ஒரு ஆக்சிடன்ட் ஆகிடுச்சு. ஒரு உயிரிழப்பு வேறே. அதக்கூட பணத்தைக் குடுத்து சரிக் கட்டிடுவேன். ஒரு பாஸ்கர் போனா இன்னொரு பாஸ்கர். ஆளா கிடைக்க மாட்டாங்க. ஆனா, வேலைதான் அப்படியே நின்னிடுச்சி. இப்போ வேறக்  கம்பனிக்கும் போக முடியாது. 

சிறிது இடைவெளி விட்டு,

உங்க எல்லா பெண்டிங் அமௌன்ட்ட  ரிலீஸ் பண்ணிடச் சொல்லிட்டேன். உங்க லீகல் செலவு எல்லாத்தையும் செட்டில் பண்ணிடுறேன். இன்னும் ரெண்டு வாரத்துல வேலைய முடிச்சுக் கொடுத்துடுங்க. சுற்றுச் சூழல் அமைச்சர் சென்ட்ரல்ல இருந்து திறந்து வைக்க வர்றார்." குரல் கம்மியது.

மறுபுறம் கோபாலின் அமைதி ஒரு பெரும்புயலுக்கு முன்னோட்டமாகத்தெரிந்தது, பரத்வாஜ்க்கு.

உங்க கான்ட்ராக்ட்ட கான்செல் பண்ணியிருக்கக் கூடாதுதான். இன்னைக்கு உங்க என்ஜினீயர அனுப்பி எவ்வளவு டேமேஜ் ஆகியிருக்குனு பாத்து ஒரு எஸ்டிமேஷன் குடுங்க. கண்டிப்பா உங்க முழு வேலைக்குரிய முன் பணத்தை ரிலீஸ் பண்ணிடுறேன். நீங்கதான் பாத்து செய்யனும்.

மறுமுனையில் அமைதி.

===================================================================

அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.

வழித்தவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்காதவர்க்கு எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க.

===================================================================