Thursday, March 3, 2011

அது ஒரு துன்பியல் சம்பவம்

மாலை வீடு திரும்பியதும் தான் என் அலைபேசியை கவனித்தேன். இரண்டு மிஸ்டு கால்கள் இருந்தது. ஊரிலிருந்து அம்மா அழைத்திருக்கிறார்கள். எதற்காக இருக்கும் என் நினைத்துக் கொண்டே அம்மாவை அழைத்தேன்.

"என்னம்மா கூப்பிட்டிருந்தீங்க, என்ன விஷயம்" என்றேன்.
"டேய் ! இன்று ஒருவன் நம் வீட்டிற்கு வந்திருந்தான், திண்டுக்கல்லில் உன் கூட பொறியியல் கல்லூரியில் படித்தவனாம் பெயர் சீனிவாச பாபு என்று சொன்னான். படிப்பு முடிந்து 20 ஆண்டுகள் ஆனதால் எல்லோரும் கல்லூரியில் ஒன்று கூடுகிறார்களாம். 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த முகவரியில் கடிதம் போட்டிருக்கிறான். ஏற்கனவே கடிதம் போட்டிருந்தேனே, ஏன் பதில் இல்லை என்றான். வீட்டு முகவரி தான் ஆண்டுக்கு ஒரு முறை மாறிக்கொண்டிருக்கிறதே.

உன்னைப் பற்றி விசாரித்தான். சென்னையில் இருப்பதாகக் கூறினேன். உன்னிடம் பேசவேண்டும் என்றதால் உன்னை இரண்டு முறை அழைத்தேன். உன்னைப் பிடிக்க முடியவில்லை. உன் மொபைல் நம்பரை கொடுத்திருக்கிறேன். அவனும் சென்னையில் தான் இருக்கிறானாம். உன்னிடம் பேசுவான். என்றார்கள்.

'சரிம்மா, பாபு அழைத்தால் நான் பேசிக்கொள்கிறேன் 'என்றேன்.

அலைபேசியை அணைத்துவிட்டு, தொலைகாட்சியை போட்டேன்.


கண்கள் தொலைக்காட்சியில் நிலைத்திருந்தது மனம் கல்லூரி நாட்களை அசை போட்டது. எல்லோரையும் போல பல கனவுகளுடன் கல்லூரிக்குச் சென்ற எனக்கு முதல் வருடத்தில் இருந்தே பிரச்சனை. சேர்ந்த அன்றே ராகிங் செய்தார்கள் சீனியர்கள். ஏற்கனவே இதை எதிர்பார்த்திருந்ததால் நானும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அந்தி மாலை சந்தி சாய, அந்த மாமுனிவர்கள் ...... தெரியாமல் இங்கு வந்து சேர்ந்தேனே முன்னோர்களே மூததோர்களே அடியேனை வாழ்த்துங்களேன் என சீனியர்களுக்கு சலாம் போட்டேன். எறும்பை வாக்கிங் நடத்திச் சென்றேன் ஒரு குச்சியோடு. "ஆயிரம் நிலவே வா, 999 நிலவே வா, என ஒன்று வரை பாடினேன்.

இதெல்லாம் கொஞ்ச நாட்களுக்குத்தான்.ஒரு நாள் இரவு நேரம், விடுதியில் (ஹாஸ்டலில்) சீனியர்களுக்கும் எங்களுக்கும் தகராறு. எப்படி ஆரம்பித்தது என தெரியவில்லை. வராந்தாவில் இருந்த விளக்குகளையெல்லாம் அடித்து உடைத்துவிட்டார்கள். உணவு விடுதியிலிருந்து திரும்பி வந்தபோது அடிதடி நடந்து கொண்டிருந்தது. நடந்ததை வேடிக்கைப் பார்த்ததைப் பார்த்தவன் போட்டுக் கொடுத்துவிட்டான், பிறகு நடந்த கல்லூரி விசாரணையில். கல்லூரியில் இருந்து இரண்டு வாரங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டேன் செய்யாத குற்றத்திற்காக. அன்றிலிருந்து - காவல் நிலையத்திலுள்ள ரவுடிகள் லிஸ்ட் இருப்பது போல் - கல்லூரிக்குள் எது நடந்தாலும் அழைத்து விசாரிக்க ஆரம்பித்தார்கள்.

ஒரு நாள் இரவு கல்லூரி மொட்ட மாடியில் (நான்காவது மாடிக்கு மேல்) திடீரென்று வெடி சத்தம். விடுதியில் இருந்த வார்டனும் சில அல்லக்கைகளும் (வார்டனுக்கென்று ஒரு மாணவர்கள் கூட்டம் உண்டு) மேலே சென்று பார்த்தார்கள். யாரோ அணுகுண்டு (சிவகாசி பட்டாசு) வெடித்திருக்கிறார்கள். சிறிது நேரம் கழித்து மீண்டும் வெடி சத்தம். திரும்பவும் சென்று பார்த்தார்கள். அதே பட்டாசு. வெடி வைத்தவர்கள் யாரென்று தெரியவில்லை. மறுபடியும் வெடி என்று நான்கு தடவை நான்கு மூலையில் வெடித்தது. யாரோ ஒரு குறும்புக்கார மாணவன், அகர்பத்தியில் வெடியை பொருத்தி (time bomb) நான்கு மூலையிலும் அடுத்தடுத்து வெடிக்கச் செய்திருக்கிறான். மறுநாள் என்னை கோழி அமுக்குவது போல் அமுக்கி, உன்னுடன் சுற்றித் திரியும் சிவகாசிகாரனிடம் நீ வெடி வாங்கி வரச் செய்து, நீதான் இதைச் செய்திருக்கிறாய், என திரைக்கதை, வசனம் எழுதி டைரக்ட் செய்து விட்டார் வார்டன், பிரின்ஸிபாலிடம். மீண்டும் சஸ்பெண்ட்.

உணவு விடுதியில் வாரம் ஒரு முறை தான் புரோட்டா போடுவார்கள் வெள்ளியன்று, அது ஒன்றுதான் நன்றாக இருக்கும். அதற்காகவே வயிற்றை காய போட்டு இரவு புரோட்டாவை வெளுத்துக் கட்டும் ஒரு மாணவர்கள் கூட்டம் உண்டு. ஒரு நாள் புரோட்டா போடவில்லை, எல்லோரும் அதிகமாக சாப்பிடுவதால் புரோட்டா போடுவதை நிறுத்தி விட்டதாக சொன்னார் மெஸ் நடத்தும் ஐயர். அடுத்து ஒரு மணி நேரத்தில் எல்லா மாணவர்களும் விடுதியை விட்டு வெளியேறி சாலை மறியலில் ஈடுபட்டனர், சீனியர், ஜுனியர் என்ற பேதமில்லை. காலவறையற்ற விடுமுறை விட்டது கல்லூரி நிர்வாகம் . எல்லோரோடும் சேர்ந்து நானும் வெளியே நின்றதால் மீண்டும் சஸ்பெண்ட். மேலும் கல்லூரி நிர்வாகம் என்னை விடுதியிலிருந்தும் வெளியேற்றிவிட்டது.

இம்மென்றால் என்கொயரி, ஏனென்றால் சஸ்பெண்ட் என போய்க்கொண்டிருந்தாலும் படிப்பில் குறைவைக்கவில்லை. Mr. Enquiry என்ற பட்ட பெயரே வந்து விட்டது.

' என்னங்க!! ரொம்ப களைப்பா? ஒரு மாதிரி இருக்கீங்க', என் மனைவியின் குரலைக் கேட்டு திடுக்கிட்டேன்.

'ஒன்றுமில்லை பழைய கல்லூரி நினைவுகள்', என்றேன்.


இரண்டு நாட்கள் வேலை பளுவில் எல்லாம் மறந்திருந்த நேரம் பாபு போன் பண்ணினான். ரொம்ப மகிழ்ச்சியாக பேசினான், கல்லூரி நாட்களைப் பற்றி.
இணையத்தில் யாஹூ குரூப்ஸ் ல் நம் கூட படித்தவர்களுடன் ஒரு வருடங்களாக திட்டமிடுகிறோம். சில பேர்களுக்கு சில பொறுப்புகளைக் கொடுத்திருக்கிறான் தேனி மனோகர். அமெரிக்காவில் உள்ள நம் பேட்ச் மக்களிடம் பேசி அழைத்து வருவது, லலிதாவும் கல்லூரி மாடியில் வெடி வைத்த அனில் குமாரும். மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளவர்களை அழைத்து வருவது சரவணன் பொறுப்பு. சிவில் பேட்ச்க்கு சந்துரு, மெக்கானிக்கலுக்கு அரச பாஸ்கர். விழா ஏற்பாடு எல்லாம் அறிவழகனும், பழனிகுமாரும் பொறுப்பு.

வருகிற ஜூலை மாதம் 17ந் தேதி திண்டுக்கல்லில் ஒன்று கூடுகிறோம். இன்னும் ஒரு மாதம் தான் இருக்கிறது.சென்னையில் உள்ளவர்களை அழைத்து வருவது என்னோட பொறுப்பு. நீ உன் குடும்பத்துடன் கண்டிப்பாக திண்டுக்கல் வரவேண்டும் என்றான். மனதிற்குள் போராட்டம், போகலாமா, வேண்டாமா என்று. பார்க்கலாம் என்றேன். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு என் வீட்டிற்கு வர அழைப்பு வைத்தேன், அருகில் அவன் வீடு இருந்ததால்.

இரண்டு வாரங்கள் சென்ற பின் ஒரு சனிக்கிழமை வீட்டிற்கு வந்தான். விழாவிற்கு கல்லூரி நிர்வாகத்திலிருந்து யாரெல்லாம் வருகிறார்கள் என்பதைப் பற்றி பேசினான். கூட படித்தவர்களை கண்டு பிடித்ததைப் பற்றியும் தற்சமயம் ஒவ்வொருவரும் எப்படி இருக்கிறார்கள் என்பதைப் பற்றியும் விலாவாரியாக விவரித்தான்.

டேய் ! போன மாதம் ஜெஸியை சந்தித்தேன், என்றான் என்னைக் குறும்பு பார்வை பார்த்து சிரித்தபடி. "ஆண்ட்டி ஆகிட்டாடா " என கெக்கேபிக்கே என சிரித்தான். சொட்டையுடனும் தொப்பையுடனும் நாம் அங்கிள் ஆகும்போது அவள் ஆண்ட்டி ஆகமாட்டாளா என சிரித்துக் கொண்டேன்.

கிளம்பும்முன் நான் எதிர்பார்த்த கேள்வியை கேட்டான் பாபு. " ஆமா ! கடைசி வருடத்தில் உன் அப்பா இறந்தவுடன் நீ ஆறு மாதங்கள் லீவில் போய் விட்டு வந்து படித்தாயே, எப்போ டிகிரி முடித்தாய்" என்றான்.

மறு வருடத்திலேயே முடித்துவிட்டேன் என்றேன் எந்தவித சலனமில்லாமல்.

பாபுவை வழியனுப்பிவிட்டு வந்து இருக்கையில் சரிந்தேன். அப்பாவின் அகால மரணம் குடும்பச் சூழ்நிலையை தலைகீழாக புரட்டிப் போட்டுவிட்டது. அப்பா நடத்திவந்த கடையை நான் கவனிப்பதற்காக கல்லூரி முதல்வரிடம் மன்றாடி ஆறு மாதங்கள் லீவ் வாங்கினோம். ஆறு மாதத்தில் என் அண்ணன் படிப்பு முடிந்து அவன் கடையை ஏற்று நடத்துவான், நான் திரும்பவும் கல்லூரிக்கு வந்து கடைசி ஆறு மாத படிப்பை முடிப்பதாகத் திட்டம். கடவுள் எப்போது புன்னகைப்பார்? நம் திட்டத்தை அவரிடம் கூறும்போது.

ஆறு மாதங்கள் கழித்து திரும்ப கல்லூரிக்கு வந்தேன். பழைய வகுப்பறை நண்பர்கள் எல்லோரும் கல்லூரியை முடித்து வெளியேறி விட்டார்கள் வெகு சிலரைத் தவிர. கல்லூரி வாழ்க்கையில் கொடுமையானது ஜுனியர்களுடன் ஒரே வகுப்பில் படிப்பது. அதைவிட கொடுமையானது நம்முடன் படித்தவனே நமக்கு வாத்தியாராக வருவது. பொறியியல் கல்லூரியில் நன்றாக படித்து முடித்து அதே கல்லூரியில் வேலை பார்ப்பது என்பது சகஜம். அப்படி எனக்கு வாத்தியாராக வந்தவன்தான் மாரீசன், 'Refrigeration and Airconditioning' என்றொரு பாடத்திற்காக.

"டேய் மாரீசா, உன் வகுப்பறைக்கு நான் வரமாட்டேன், ஆனால் உன் பாடத்தில் கட்டாயம் பாஸ் பண்ணி விடுவேன்" என்ற வாக்குறுதிக்கிணங்க எனக்கு அட்டென்டென்ஸ் போட்டான். வகுப்பறைக்குச் செல்லாமலே, அதே பாட பரிட்சையில் நான் தான் கல்லூரியில் இரண்டாம் இடம். முதல் இடம், பாடத்தை நான் சொல்லிக்கொடுத்து பரிட்சை எழுதிய மாலவன், என் ஜூனியர்.

அடுத்து வந்த நாட்களில் அடிக்கடி பாபு போன் பண்னினான். அவனுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை விழாவில் கலந்துகொள்வதைப் பற்றி.
என்னாலும் முடிவெடுக்க முடியவில்லை. விழாவிற்கு போனால் பழைய நண்பர்களைப் பார்க்கலாம் பழைய கதைகளைக் கேட்கலாம். ஏன், பழைய கல்லூரி முதல்வரையும் பார்க்கலாம். இன்னும் என்னை ஞாபகம் வைத்திருப்பாரா? பழைய நண்பர்களையும் இடங்களையும் பார்க்கணும் என ஆசைதான் ஆனால் பழைய கசப்பான அனுபவங்கள் தடுத்தன, விழாவிற்குச் செல்ல.

விழா நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் பாபுவிடமிருந்து போன். ' என்னடா ! கிளம்புகிறாயா? வருவேன், மாட்டேன் என எந்த பதிலும் உன்னிடமிருந்து வரவில்லை. விழாவிற்கு நீ மட்டுமாவது வாடா' என மன்றாடினான். சில பல சாக்குப் போக்குகள் சொல்லிப் பார்த்தேன். எல்லாவற்றிற்கும் தயாராக பதில் சொல்லி என்னை வரவழைப்பதில் உடும்புப் பிடியாக இருந்தான்.

கடைசி இரண்டு பரிட்சைகள் தான் இருக்கிறது, முடிந்தால் கல்லூரிப் படிப்பும் முடிந்து விடும், டிகிரியும் கிடைத்துவிடும். பரிட்சை நேரங்களில் நண்பர்களுடன் விடிய விடிய படிப்பதென்பது வாடிக்கை. அதிகாலை மூன்று மணிக்கு சூடாக இட்லி சாப்பிட விளக்கில்லா பைக்கை ஓட்டிச் சென்று முன்னால் போய் கொண்டிருந்த மாட்டு வண்டியில் மோதியதில் நான் மயக்கமானேன். உயிர் காப்பான் தோழன் என்பதற்கேற்ப, என்னுடன் வந்த ஜாக்ஸன் என்னைக் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தான். கண்விழித்தபோது முக தாடையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருந்தார்கள், கை கால்கள் எல்லாம் கட்டுக்கள். எழுந்து நடமாட ஆறு மாதங்கள் ஆயின. என் அன்னைக்கு என் படிப்பை விட என் உயிர் முக்கியமாகப் பட்டதால் என்னை கடைசி இரண்டு பரிட்சையை எழுத அனுமதிக்கவில்லை. நான் பொறியியல் பட்டப்படிப்பை முடிக்கவில்லை.

என்னடா நான்பாட்டுக்கு பேசிட்டே இருக்கிறேன், எந்தவித பதிலும் சொல்லாம இருந்தா எப்படி? பாபுவின் குரலைக் கேட்டு நினைவுக்கு வந்தேன்.

' நான் ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருக்கிறேன். பிறகு கூப்பிடுகிறேன்.' என்று போனை கட் பண்ணினேன். மனம் தெளிந்த நீரோடையைப் போல் அமைதியாக இருந்தது.

எல்லோருக்கும் கல்லூரி நாட்கள் மிக இனிமையானதொரு ராகமாக இருக்கும், ஆனால் என்னைப் பொறுத்தவரை அது ஒரு துன்பியல் சம்பவம்.





-----------------------------------------------------------------------------------------------------------------
Disclaimer: All characters, Incidents, Names, Places and corporations or establishments appearing in this document are fictitious. Any resemblance to real persons, living or dead, is purely coincidental.
----------------------------------------------------------------------------------------------------------------- 

Friday, September 19, 2008

பஹ்ரைன் காவல் நிலையம்

பஹ்ரைன் போலீஸை பார்த்ததும் தூக்க கலக்கத்திலிருந்த எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. நான் முழிப்பதைப் பார்த்து இந்தியில் கூறினார்கள். எனக்கு மேலும் குழப்பம். எப்படி பஹ்ரைன் போலீஸ் இந்தி பேசுவார்கள்? பின்பு தான் தெரிந்தது பஹ்ரைன் காவல் துறையில் பாதிபேர் பச்சைகள் ( பச்சை என்றால் பாகிஸ்தான் நாட்டவர்).

' குச் ப்ராப்ளம் நஹி, ஹம்கோ சாத் ஆஜாவ்' என்றார்கள். ( எதுவும் பிரச்சனை இல்லை, எங்களுடன் வா)
நானும் பாஸ்கரும் இரண்டு போலீஸ்காரர்களுடன் அருகில் இருந்த காவல் நிலையத்திற்குச் சென்றோம். வெளியே நண்பர் சசியும் மற்றொரு போலீஸும் இருந்தார்கள். வெளியே உட்கார்ந்திருந்த போலீஸ் நம்ம ஊர் ஏட்டையா மாதிரி இருந்தார் பெருத்த தொப்பையுடன்.

" ஹாத் மிலாவ், ஹாத் மிலாவ்" என்று எங்களைப் பார்த்து இந்தியில் கூறினார். கை கொடுத்துக் கொள்ளுங்கள் எல்லோரும் ஒரே நாட்டவர்கள். ஏன் அடித்துக் கொள்ள வேண்டும். சமாதானமாய் போய்விடுங்கள். கை கொடுத்துக் கொள்ளுங்கள் என்றார். ' நீங்கள் அரபிகாரனை அடித்திருந்தால் தான் பிரச்சனை ( அது என்ன கணக்கோ !!!!!!) உங்களுக்குள் என்றால் ஒன்றுமில்லை. என்றார். நானும் பாஸ்கரும் அமைதியாக இருந்தோம். சசி " முடியாது, வழக்கு பதிவு பண்ணியே தீருவேன்" என்றான்.

ஏட்டையா பஞ்சாயத்து பண்ண முயன்றார். பிராது கொடுத்தவன் (சசி) ஒத்து வரவில்லை என்றதால் எங்களை காவல் நிலையத்த்ற்குள்ளே அனுப்பினார்.
உள்ளே காவல் துறை ஆய்வாளர் , சூடான் நாட்டவர், கறுப்பர், மெலிவாக இருந்தார். வேறொருவருடன் பேசிக் கொண்டிருந்தவர் எங்களைப் பார்த்ததும் , அருகில் இருந்த அறையை காண்பித்து " அமர்ந்து பேசி முடித்துக் கொள்ளுங்கள்" என்றார்.

அது ஒரு கூடி விவாதிக்கும் அறை ( conference hall). சசியும் நாங்களும் எதிரெதிரே அமர்ந்தோம். நான் தான் முத்லில் பேச ஆரம்பித்தேன். விட்டுக் கொடுக்காமல் பேசினேன். " இதோ பார் சசி, வழக்கு பதிவு செய்தால், உன்னையும் சேர்த்துதான் ஊருக்கு அனுப்பி விடுவார்கள். எனக்கு ஒன்றுமில்லை, இது எனக்கு மூன்றாவது நாடு, ஏழாவது வேலை (company). நான் உடனே வேலை தேடிக் கொள்வேன். உன்னைப் பற்றி நினைத்துக் கொள். வழக்கு பதிவு பண்ணவா வேண்டாமா என்று நீயே முடிவு பண்ணிக் கொள்" என்றேன்.

பாஸ்கர் கொஞ்சம் இறங்கி வந்து பேசினான். (Good cop, Bad cop)
எதற்கும் சசி ஒத்து வரவில்லை. " வழக்கு பதிவு பண்ணியே தீருவேன் ' என்று பிடிவாதமாய் இருந்ததினால் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையும் முறிந்தது.

மூவரும் ஆய்வாளரிடம் சென்றோம். அவருடைய பஞ்சாயத்தும் எடுபடவில்லை. வேறு வழியின்றி வழக்கு பதிவு பண்ண ஆரம்பித்தார். அப்போதுதான் எங்களைப் பற்றி விசாரித்தார். எந்த நாடு என்றார். கூறினோம். எந்த ஊர் என்றார். கூறினோம். " நீங்கள் விடுதலை புலிகள் இல்லீயே" என்றார். சிரித்துக் கொண்டோம். கொஞ்சம் அறிவுரை கூறினார். மூன்று பேரும் படித்தவர்கள், பொறியாளர்கள், ஒரே இடத்தைச் சேர்ந்தவர்கள், ஒரே இனம், ஒரே மொழி, பின்பு ஏன் அடித்துக் கொள்கிறீர்கள். என்றார்.

நம்ம யாரு, சேர, சோழ, பாண்டிய வம்சமாயிற்றே, அவருக்கென்ன தெரியும் தமிழர்கள் அவர்களுக்குள்ளே அடித்துக் கொள்வார்கள் என்று.

ஒரு வழியாக காலை 5 மணிக்கு ரிஃபா (Rifa) காவல் நிலையத்தில் எங்கள் மேல் வழக்கு பதிவு செய்து விட்டார்கள்.

காலை 9 மணிக்கு மனாமா (பஹ்ரைன் தலை நகர்) நீதிமன்றத்தில் ஆஜராகுங்கள் என்றார் காவல் துறை ஆய்வாளர்.

ஆட்டம் தொடரும்......

Wednesday, September 10, 2008

பஹ்ரைன் ஆட்டம்

பஹ்ரைனிலும் ஒரு ஆட்டம்

சிவகாசியில் ஒரு மாதம் தங்கி விட்டு விக்ரமாதித்தனாக மறுபடியும் மும்பை வந்தேன் வேலை தேட. மும்பையில் வேலை செய்ய / வேலை தேட முயற்சிக்க வில்லை. வெளிநாட்டு மோகத்தின் வடு ஆறாமல் இருந்தது, விரலிலிருந்த காயமும்தான். நான்கு மாதம் மும்பையில் தங்கி வேலை தேடினேன். இடையில் செம்பூரில் நடந்த S.V. சேகர் நாடகம் பார்க்கச் சென்ற இடத்தில் என் பழைய பாஸ் பழைய வேலைக்கு அழைத்தார். பிடிவாதமாக மறுத்து விட்டேன். ஒரு வழியாக பஹ்ரைனில் வேலை கிடைத்தது. மாதம் 300 தினார் சம்பளம். சவுதியைவிட இருமடங்கு. உடனே ஒத்துக்கொண்டேன். ஒரு நாள் சாயங்காலம் நண்பர்கள் புடைசூழ என்னை வழியனுப்பி வைத்தார்கள். மனாமா விமான நிலையத்திற்கு வந்தடைந்தேன். கடவுச்சீட்டு சோதனை பண்ணும் இடத்தில் என்னை தடுத்து நிறுத்திவிட்டார்கள். என் விசா அவர்களுடைய கனிணியில் இல்லையாம். என் கடவுச்சீட்டில் இருக்கிறதே என்றேன். நான் வேலை பார்க்க போகும் கம்பெனி என் விசா எண்ணை அவர்களுக்கு தெரியப்படுத்தனுமாம். மனித வள மேலாளருடன் தொலைபேசியில் பேசினேன். விமான நிலையத்தில் இரவு தங்குங்கள், காலையில் வெளியே கொண்டுவருகிறேன் என்றார். என்னைப் போலவே பிரதாப் என்பவரும் இருந்தார். இருவரும் ஒரே கம்பெனியில் வேலைக்கு வந்திருந்தோம்.

விமான நிலையத்திற்குள் உள்ள தங்கும் விடுதியில் மணிக்கணக்கில் தான் வாடகை, நாள் கணக்கு அல்ல. ஆறுமணி நேரம் தங்கினோம். காலை மனித வள மேலாளர் எங்களை வெளியே கொண்டுவந்தார். வேலை பிடித்திருந்தது. ஒரே மாதத்தில் என் நண்பன் பாஸ்கரை நான் வேலை செய்யும் கம்பெனியில் கொண்டு வந்தேன் ( மனித வள மேலாளருக்கு கொஞ்சம் பரிசு பொருட்கள் கொடுக்க வேண்டியிருந்தது). வாழ்க்கை பயணம் நன்றாக போய்கொண்டிருந்தது. நான் தங்கியிருந்த வீட்டில் நான், பாஸ்கர், ப்ரதாப் மற்றும் சசி. ப்ரதாப் மிக நன்றாக சமைப்பார். அவருக்கு நான் தான் எடுபிடி. அவரிடம் தான் நான் சமையல் கற்றுக்கொண்டேன். கல்லூரியில் இருந்த பாஸ்கருக்கும், தற்சம பாஸ்கருக்கும் நிறைய மாற்றங்கள். எப்போதும் தியானம் தான். சசிக்கும் எனக்கும் கொஞ்சம் ஒத்துப்போகவில்லை. பேசுவதையே நிறுத்தியிருந்தேன். இவ்வாறாக வாழ்க்கை போய்க் கொண்டிருந்த ஒரு நாள், வீட்டில் பார்ட்டி. படுக்க போகும் போது மணி 1. சொந்தகாரர் வீட்டிற்கு சென்று விட்டார் ப்ரதாப். வெளியே சென்ற் சசி அதுவரை வீடு திரும்பவில்லை. நான் தெரியாமல் கதவில் உள் தாழ்ப்பாள் போட்டு விட்டு தூங்கிவிட்டேன். நண்பர் சசி இரவு 2 மணிக்கு வீடு திரும்பியிருக்கிறார். வீடு பூட்டியிருக்கிறது. தட்டியிருக்கிறார் பலமாக. பக்கத்து அரபிகாரன் விழித்தெழுந்து சசியுடன் சேர்ந்து தட்டியிருக்கிறார்கள். நாங்கள்தான் நன்றாக தூங்கிவிடோமே!!!

கடைசியில் இரண்டுபேரும் சேர்ந்து பலமாக கதவில் மோதி தாழ்ப்பாளை உடைத்து உள்ளே வந்துவிட்டார்கள். ஆத்திரத்தில் உள்ளே வந்த சசி, பாஸ்கர் அறைக்குச் சென்று தூக்கத்தில் இருந்தவனின் பனியனை பிடித்துத் தூக்கி உலுப்பி " ஏம்லே வீட்டைப் பூட்டினாய்" என் திட்டியிருக்கிறான். பாஸ்கருக்கு ஒன்றும் புரியவில்லை. இந்த களேபரத்தில் என் தூக்கம் கலைந்து அறையை விட்டு வெளியே வந்தேன். எனக்கும் ஒன்றும் புரியவில்லை.சசி கோபத்தில் கத்திக்கொண்டிருக்கிறான், அருகில் அரபிகாரன்.

" நீயாலே பூட்டினது" என்றான்.
"ஆமாம்" என்றேன்.

கெட்ட வார்த்தையில் திட்டினான். நான் அமைதியாயிருந்ததைப் பார்த்து, கோபத்தில் திட்டிக்கொண்டே கையிலிருந்த உடைந்த தாழ்ப்பாளை என் மேல் விட்டெரிந்தான். உடைந்த தாழ்ப்பாள் என் வயிற்றை பதம் பார்த்தது. சுலபமாக கோபப்படாத என்னை அவன் செயல் கோபப் படுத்தியது. ஒரு உதை விட்டேன். Washing machine மேல் சென்று விழுந்தான். அரபிகாரன் தலை தெறிக்க ஓடி விட்டான். விழுந்து எழுந்தவனை பிரித்து மேய்ந்து விட்டோம் நானும் பாஸ்கரும். வீட்டிற்கு வெளியே ஓடினவனை விரட்டிச் சென்று அடித்த பாஸ்கரை நான் தான் கட்டுப்படுத்தி வீட்டிற்குள் இழுத்து வர வேண்டியிருந்தது. எல்லா களேபரங்களும் முடிந்து அவரவர் அறைக்கு தூங்க சென்றோம். எனக்கோ தூக்கம் வரவில்லை. ஏன் இவ்வாறு நடந்து கொண்டேன்? என்னை நினைத்து எனக்கே வெறுப்பாக இருந்தது. சாதாரணமாக எனக்கு கோபம் வராது. மனிதனை மனிதனாக மதிப்புக் கொடுக்க வேண்டும் என்பதில் அக்கறை உள்ளவன். இதே போன்ற ஒரு சம்பவம் மும்பையில் இருந்த போதும் நடந்தது.

என் நண்பன் மூர்த்தி, திருப்பதியை சேர்ந்தவன். பத்து வரை படிப்பு. மும்பை கிழக்கு முலூண்ட் வாசம். வெளிநாட்டு பொருட்கள் crawford market ல் இருந்து வாங்கி வாடிக்கையாளர்களுக்கு விற்பது தான் தொழில். அதற்கு முன் என் அக்காவுடைய "Dorai Classes"ல் assistant வேலை. அதிலிருந்து எனக்கு மட்டுமல்ல என்னுடன் இருந்த கல்லூரி நண்பர்கள் ( மாலவன், ஜாக்ஸன், பாஸ், பூஸ், கஞ்சா சரவணன், பூபதி, .........) எல்லோருக்கும் நண்பன். தெலுங்கு, தமிழ், இந்தி, ஆங்கிலம அத்துப்படி. கொஞ்சம் மராட்டியும். மூர்த்தியுடன் ஒரு மாலை பொழுது அடிக்கடி செல்லும் தேநீர் விடுதியில் தேநீர் அருந்திக்கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த ஒருவன் மூர்த்தியிடம்
" க்யா மூர்த்தி மேரா திமாக் கராப் கர்த்தா ஹய்" என்றான். ( என்ன மூர்த்தி என்னை கோபப்படுதுகிறாய்)
அதற்கு மூர்த்தி பதில் சொல்லிக் கொண்டிருந்தான். பிரச்சனை இது தான்.

வந்தவன் ஓட்டுநர் உரிமம் வாங்கிக் கொடுக்கும் தரகர். மூர்த்திக்கு உரிமம் வந்துவிட்டது. ஆனால் ரூ 50 பாக்கி தரகருக்கு மூர்த்தி கொடுக்க வேண்டும். தரகர் வரும் போது மூர்த்தியிடம் பணம் இல்லை. மூர்த்தியிடம் பணம் இருக்கும் போது தரகரை பிடிக்க முடியவில்லை. ( கல்லை கண்டால் நாயை காணோம் கதை தான்)
இதை தான் மூர்த்தி விளக்கிக் கொண்டிருந்தான். நான் எதையும் கவனிக்காமல் வேறு ஏதோ சிந்தனையில் இருந்தேன்.

திடீரென்று தரகர் மூர்த்தியின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான். மறுநொடியில் நான் எழுந்து அவனுடைய வயிற்றில் ஒரு குத்து விட்டேன். கடைக்குள்ளே மல்லாந்து கீழே விழுந்தான். அப்பொழுது தான் கவனித்தேன் அவனுடன் மேலும் இரண்டு பேர் வந்துருந்தார்கள். ஆனால் ஒதுங்கினார்கள். சமாளித்துவிடலாம் என் எண்ணி அடுத்த அடி அடிப்பதற்குள் கடை முதலாளி " அந்தர் நஹி.. பார் ஜாவோ.." (உள்ளே கூடாது.. வெளியே போ) என எல்லோரையும் விரட்டினார். வெளியே வந்தால் மூர்த்திக்கு கோபமாகி திருப்பி அடிக்க ஆரம்பித்தான். நான் அவர்களை விலக்கும் சாக்கில் தரகரை கெட்டியாக பிடித்துக் கொண்டேன். மூர்த்தி அடி பின்னிவிட்டான். அவனே அவனை அடித்துக் கொண்டான் தெரியாமல்.

தரகர் என்னிடம் " உஸ்கோ பக்கடோ.. மேற்கோ க்யூம் பக்கட்த்தாஹ" ( அவனை பிடி, என்னை ஏன் பிடிக்கிறாய்) என்றான். ஒரு வழியாய் விலக்கிவிட்டு அனுப்பியாயிற்று.
மூர்த்தியின் நண்பர்கள், ' அடி வாங்கியவன் கோலி (kohli) பெரிய பிரச்சனை வரும் என்றார்கள். உடனே அருகில் இருந்த காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை செய்த ரசீதும் வாங்கி விட்டோம். மறுநாள் சமாதானத்திற்கு வந்து விட்டார்கள். அதோடு பிரச்சனை முடிவுக்கு வந்தது.
சண்டையில் எதிராளியை பிடித்துக் கொள்வதும், காவல் நிலையத்தில் முதலில் புகார் கொடுப்பதும் கல்லூரி நாட்களில் கிடைத்த அனுபவங்கள்.

இவ்வாறாக பழைய நினைவுகளை அசைபோட்டுக்கொண்டே இருந்ததில் எப்போது தூங்கினேன் என தெரியவில்லை. அதிகாலை நான்கு மணி இருக்கும், தூங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பினார்கள் இரண்டு பேர். " We are Police " என்றார்கள்.

பஹ்ரைன் ஆட்டம் தொடரும்.........

Sunday, February 17, 2008

சவுதியில் திருடினேன்

நான் தங்கியிருந்த அறையில் என்னுடன் ஜோசப் என்று ஒரு நண்பர் தங்கியிருந்தார். பம்பாயை சேர்ந்தவர். 32 வயது. திருமணமான கொஞ்ச காலதிற்குள் சவுதி வந்தவர். அது கோடைகாலமானதால் அறை குளிரூட்டப்பட்டிருந்தது. வெளியே அதிக வெப்பம், உள்ளே அதிக குளிர். ஒரு நாள் சாயங்காலம் ஜோசப்புடன் தேநீர் அருந்தி கொண்டிருந்தேன். அப்பொழுது அவர் வாயின் இடது பக்கத்திலிருந்து தேநீர் வழிந்தது. அதைச் சுட்டிக்காட்டினேன். துடைத்தார். மறுபடியும் வழிந்தது. சுட்டிக்காட்டினேன்.


அப்பொழுதுதான் அவர் உணர்ந்தார், அவருக்கு இடது பக்கம் உணர்வில்லை என்று. அவரால் ஒரு கண்ணை மூட முடியவில்லை. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவரோ அரண்டு நடுங்கிக் கொண்டிருந்தார், நானும்தான். உடனே அவரை அருகிலுள்ள முதலுதவி அறைக்கு அழைத்துச் சென்றேன். அங்கு பிலிப்பினோ நர்ஸ் இருந்தார் ( ஆண் நர்ஸ் ). சவுதியில் ஆண்களுக்கு ஆண் நர்ஸ் தான். சிறிது நேரத்தில் அருகிலுள்ள யான்பு நகரத்திற்கு அழைத்துச் சென்றோம்.


எகிப்து மருத்துவர் சோதித்துவிட்டு, பயப்பட தேவையில்லை என்றார்.அவருக்கு வந்தது முக வாதம் (facial paralysis). இடது பக்க முகத்தில் மட்டும் வாதம். இடது கண்னை மூடினால் திறக்க முடியாது, திறந்தால் மூட முடியாது. சிரித்தால் இடது பக்க முகம் முழுவதும் அசையாது. எதனாலென்றால் இரவு தூங்கும்போது, வெளியே 45 டிகிரி
செல்சிய்ஸ், அறையினுள்ளே 16 டிகிரி செல்சிய்ஸ். மேலும் குளிர்சாதனத்திலிருந்து நேரே முகத்தில் குளிர்ந்த காற்று அடித்ததினால் உடம்பும் முகமும் வேறு வேறு டெம்பெரேச்சரில் இருந்திருக்கிறது தினமும். அதனால் இந்த முக வாதம். சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்ததினால் 1 மாததில் சரியாகிவிட்டது. ஆனால் இந்த சம்பவத்திலிருந்து பல பேர் பாடம் கற்றுக்கொண்டோம். அன்றிலிருந்து குளிர்காற்று என் மேலே படாதவாறு பார்த்துக் கொள்வேன், வீட்டிலேயும் காரிலேயும்.


இவ்வாறாக 2 மாதங்கள் ஓடிவிட்டது. வேலை இடத்தில் எனக்கு ஏற்பட்ட விபத்தில் என் சுண்டு விரலில் 8 தையல்கள். எனக்கு வேலை பிடிக்கவில்லை , சவுதியில் இருக்கவும் பிடிக்கவில்லை. வேலையிடத்தில் எல்லா பிலிப்பினோக்களும் சக பிலிப்பினோக்களுக்கு சாதகமாகவே நடந்து கொண்டார்கள்(இயல்புதானே) . என் ராஜினாமா கடிதத்தை தயாரித்து(8 பக்கங்கள்)அனுப்பினேன். ஒரு மாததில் வீடு திரும்பலாம் என கூறினார்கள். சவுதியை விட்டு வெளியே போவதற்கும் விசா வாங்க வேண்டும் (Exit Visa).


என் மனதில் சவுதி வந்ததிலிருந்து ஒரு ஆசை இருந்தது. " மாட்டிக் கொள்ளாமல் திருட வேண்டும்". சிறு வயதில் பல தடவை வீட்டில் திருடியிருக்கிறேன். எல்லாம் சில்லறைகள். அதிக பட்சம் 10 ரூபாய். வீட்டில் திருடி பல தடவை பிடிபட்டு நிறைய அடி வாங்கியிருக்கிறேன் அம்மாவிடம். ஆனால் இந்த முறை வெளியே திருட வேண்டும் அதுவும் மாட்டிக் கொள்ளாமல். ஒரு மாதம் முயற்சி செய்தேன், முடியவில்லை. கடைசி நாள், யான்புவில் ஒரு கடையில் Rexona Roll on perfume ஆட்டையை போட்டேன். சிறியதாக இருந்ததால் சுட முடிந்தது. ஏதோ பெரிய காரியத்தை சாதித்து முடித்தது போல் இருந்தது. எனக்கு நானே பெருமை பட்டுக் கொண்டேன். மாட்டியிருந்தால் கையை இழந்திருப்பேன்.
எதை செய்யாதே என்று கடுமையாக கூறுகிறோமோ அதைத் தான் மனம் செய்யத் தூண்டுகிறது.


24 மணி நேரம் பேரூந்தில் பயணம் செய்து திரும்பவும் தமாம் வந்தேன். அங்கிருந்து மும்பை வந்தடைந்தேன். இரண்டு நாட்கள் அக்கா வீட்டில் இருந்து விட்டு சிவகாசி வந்தடைந்தேன். சிவகாசி நண்பர்கள் எல்லோரும் சிறு வயது முதல் பழக்கம். சேர்ந்து செய்யாத சேட்டைகள் கிடையாது. அதைப்பற்றி தனியாக " சிவகாசி ஆட்டம்" எழுதலாம். வந்த மறுநாள், ராஜபாளையம் அருகில் இருக்கும் அய்யனார் அருவிக்கு சிவகாசி நண்பர்களுடன் செல்வதாக திட்டம்.


காலையில் 10 மணிக்கு சிவகாசியிலிருனந்து கிளம்பினோம். ராஜபாளையத்தில் வாங்க வேண்டியதை வாங்கி கொண்டு மேற்கு மலை தொடருக்குள் சென்றடைந்தோம்.
மலையினுள்ளே 2 கிலோமீட்டர் நடந்து ஒரு அருவியை அடைந்தோம். ரம்யமான இடம். அருவி, தடாகம், நடுவில் ஒரு பெரிய பாறை. சாப்பிடவும் குடிக்கவும் சுற்றி வைத்துக்கொண்டு, அருவியில் குளியல், தடாகத்தில் ஒரு நீச்சல், ஒரு ரவுண்டு ஊத்துதல். அந்த ரம்யமான நேரத்தில் நண்பன் இளங்கோ , டேய் மாப்ளே.. சவுதி எப்படி இருந்தது என்றான்.

அதற்கு நான், சொர்க்கம் இங்குதான்டா இருக்கிறது. சவுதி வாழ்க்கை என்பது " Parrot in a golden cage".



சவுதி ஆட்டம் முடிந்தது.....

Sunday, September 2, 2007

சவுதியில் நாய் கறி - சவுதி ஆட்டம்-4

யான்பு பாலைவனத்தில் கோடையில் மிகவும் கடுமையான வெயில். சிவகாசிகாரனுக்கு வெயில் ஒன்றுமில்லைதான். ஆனால் வெயிலுடன் சில நேரம் பாலைவன புயல் அடிக்கும் போதுதான் மரண வேதனை. பகல் வேளையில் முன்னால் பத்தடி தூரம் தான் தெரியும். எங்கும் Brown கலர் மணல் மயம். உடம்பில் ஒரு இடம் கூட வெளியே தெரியாது. கண்ணுக்கு கண்ணாடி. தலை, காது, கழுத்துக்கு அரபியர்கள் அணியும் 'கேஃபியா' ( Keffiyah - head scarf ) வை சுற்றியிருந்தாலும் வாயில் மண் நறநறக்கும். மூக்கு, காதுக்குள் இருக்கும் மண்ணை வைத்து வீடு கட்டிவிடலாம். இந்த இயற்கை சீற்றத்தை சமாளிக்க ஏற்ற உடையைதான் அரபியர்கள் அணிகிறார்கள் என்பது என் எண்ணம். மேலிருந்து கீழே வரை பட்டன் இல்லாத ஒற்றை ஆடை. தலைக்கு ஒரு துணி. அதை தலையோடு பிடித்து வைக்க ஒரு வட்டு. தொழுகைக்கு செல்லுமுன் காது, மூக்கு கழுவுவது பாலைவன புயலால்தான் என்பது என் எண்ணம்.

நிறைய பிலிப்பினோ மக்கள் பழக்கமானார்கள். வார விடுமுறை நாளில் ஒரு நாள் என்னிடம் வந்து ' சீனி, கடலில் மீன் பிடிக்க போகிறோம் வருகிறாயா? ' என்றார்கள். எனக்கு கடலில் மீன் பிடிக்கத் தெரியாதே!! என்றேன்.சும்மா வா! கடலில் குளிக்கலாம், சாயங்காலம் camp fire இருக்கும், நல்ல வேடிக்கையாக இருக்கும் என்றார்கள். நானும் அவர்களுடன் கடலுக்குச் சென்றேன்.

எனக்கு தெரிந்த கடல், ராமேஸ்வரம் கடல் மட்டுமே। கல்லூரி நாட்களில் ஒரு தடவை "பாடு" க்கு சாவக்கட்டி என்ற அந்தோணியுடன் சென்றிருக்கிறேன். சாவக்கட்டி மீனவராக வாழ்க்கையை ஆரம்பித்தார். பின்பு கடத்தல் தொழிலில் ஈடுபட்டு 'உள்ளே வெளியே' என்றிருந்தார். பின்பு திருந்தி வாழ்ந்து ஒரு சாலை விபத்தில் இறந்துவிட்டார் சமீபத்தில். அவருடன் ஒரு இரவை கடலில் கழித்ததில் புதிய அனுபவம். எங்கு பார்த்தாலும் இருட்டு. தூரத்தில் சில வெளிச்ச புள்ளிகளை காண்பித்து ' அதுதான் இலங்கை' என்றார். வலையை கடலில் போட்டு மணிக்கணக்காக கடலை அரித்து எடுப்பார்கள். அது ஒரு பாடு. ஆக மொத்தம் ஒரு இரவுக்கு இரண்டு பாடுதான். பிடித்த மீனை சூடாக உள்ள எஞ்சின் exhaust குழாயில் வேக வைத்து உப்பு, மிளகாய் பொடி போட்டு சாப்பிட்டது நல்ல அனுபவம்.


பிலிப்பினோக்கள் எட்டு பேர், நானும் என் அறை நண்பர் ஜோசப் மற்றும் ஒரு கொழு கொழு நாய்.முதன் முதலில் வித்தியாசமான தூண்டில்களைப் பார்த்தேன். நான் எதிர்பார்த்த கடற்கரை அல்ல. நிழலில் ஒதுங்க இடம் கிடையாது. கண்ணுக்கெட்டியவரை யாரும் இல்லை. வெயில் 45 டிகிரி செல்சியஸ். மீன் பிடித்து எதுவும் சேர்காமல் சுட்டு ' சாப்பிடு, சாப்பிடு' என்றார்கள். ஏண்டா வந்தோம் என்றாகிவிட்டது. சாயங்காலம் ஆனது. ஆட்டம் ஆரம்பமானது.

முதலில் விறகு போட்டு தீ மூட்டினார்கள். ஒரு கூட்டம் தனியாக ஒதுங்கியது. இன்னொரு கூட்டத்தில் நான். Campல் தயாரித்த சாராயத்தைக் பெப்சியில் கலந்து கொண்டு வந்திருந்தார்கள். இதை நான் எதிர்பார்க்கவில்லை. தெரிந்திருந்தால் வந்திருக்கவே மாட்டேன். பெப்சி குடித்துக் கொண்டே தீ மூட்டினார்கள். ஒரு மணி நேரம் கழித்து தனியாக போன கூட்டம் திரும்பியது. கையில் ஒரு கோணிப்பை. முதலில் எதுவும் புரியவில்லை. அவர்களுக்குள் தகாலுவில்(பிலிப்பினோ மொழி) பேசி சிரித்துக்கொண்டார்கள். கோணியை திறந்து தோல் உரித்த நாயை வெளியே எடுத்து போட்டார்கள்.

அதன்பிறகு நடந்தது என் வயிற்றைப் பிறட்டியது. நாயின் நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதி வெற்றிடத்தில் அரிசியை போட்டு அடைத்து நூல் போட்டு தைத்து விட்டார்கள். தலையில்லாத நாயை camp fireல் சுட ஆரம்பித்தார்கள். என் வயிற்றை சரி செய்ய நானும் கொஞ்சம் 'பெப்சி' குடித்துக் கொண்டேன். கொழுப்புடன் சேர்ந்து அரிசி வெந்து சோறாக மாறியதை எல்லோரும் சாப்பிட ஆரம்பித்தார்கள். நாய் கறி ரெடி. நானும் கொஞ்சம் ருசி பார்த்தேன். தண்ணி உள்ளே போன பின்பு நாயாவது பேயாவது.. நன்றாக இருந்தது. சவுதியில் நாய் சாப்பிட்ட அனுபவம் பின்பு கொரியாவில் இருந்தபோது கை கொடுத்தது.சவுதியில் alcohol , நாய் சாப்பிடுவது "ஹராம்" (பாவம்). பிடித்தால் கடுமையான தண்டனை. செய்யக் கூடாததை செய்து பார்ப்பதுதான் thrill.. (மாட்டாதவரை).


சவுதி ஆட்டம் தொடரும்....

Thursday, August 2, 2007

சவுதி ஆட்டம் - 3

ஒட்டக மேய்ப்பர், தமிழில் பேசியது எனக்கு பயங்கர ஆச்சரியம். என்னை மலையாளியென நினைத்து விட்டார். ஒட்டக மேய்ப்பருக்கு 20 வயது இருக்கும். சவுதி வாழ்க்கையைப் பற்றி கேட்டேன். மடை திறந்த வெள்ளம் போல் பேசினார். புதுக்கோட்டை அருகில் ஒரு கிராமம்தான் அவருடைய பூர்வீகம். சவுதி வந்து 5 வருடங்கள் ஆகிவிட்டது. முதலில் வரும்போது "விவசாய வேலை" என்று சொல்லித்தான் agent அனுப்பியுள்ளார் ஒரு கும்பலுடன். ஆனால் கொடுத்ததோ ஒட்டகம் மேய்க்கும் வேலை. இவருடைய நண்பர்களுக்கு ஜெட்டா (Jeddah) துறைமுகத்தில் பளு தூக்கும் வேலை. அதற்கு ஒட்டகம் மேய்ப்பது பரவாயில்லையென அவருக்கு அவரே சமாதானப்படுத்திக் கொண்டார்.


அவருடைய அரபி முதலாளிக்கு சுமார் 100 ஒட்டகம். பாலைவனம் உள்ளே கூடாரம் போட்டு தங்கி ஒட்டகம் மேய்க்க வேண்டும். வாரம் ஒரு நாள் அரபி சாப்பாட்டுக்கு தேவையான அரிசி, உப்பு, புளி........ கடிதம், குடிதண்ணீர் கொண்டுவந்து கொடுத்து விடுவாராம். மாதம் ஒரு தடவை மருத்துவர் ஒட்டகங்களுக்கு ஊசி போட வருவார். சில தடவை குடும்பத்துடன் வந்து கூடாரம் போட்டு தங்கி செல்வதுண்டு. வாரம் ஒருமுறை ஒட்டகங்களை வேறு இடங்களுக்கு மேயவிட வேண்டும். அப்போது கூடாரத்தை கழற்றி ஒட்டகத்தில் வைத்து எடுத்துச் செல்ல வேண்டும். அப்படி போகும் போது அருகில் இருக்கும் கிராமங்களில் உள்ள உணவகத்தில் சாப்பிடுவது அவருக்கு பெரிய சந்தோஷம். ஒரு மலையாளியை சந்தித்து தமிழில் பேசினால் மிக பெரிய சந்தோஷம். அவருடைய அரபி முதலாளியைப் பற்றி உயர்வாக சொன்னார். அவருக்கு இருக்கும் தலையாய பிரச்சனை " பாலைவன புயலும் பம்பாய் விமான நிலைய அதிகாரிகளும்" தான்.

பாலைவன புயலைப் பற்றி கதை கதையாக சொன்னார். பம்பாய் விமான நிலைய அதிகாரிகள் இவரிடம் ரூ 2000 வசூலித்ததை (கொள்ளையடித்ததை) கூறி மிகவும் வருத்தப் பட்டார். நானும் பாலைவன புயலையும் பம்பாய் விமான நிலைய அதிகாரிகளையும் சந்தித்தேன்.


பின்பு அவரிடம் விடைபெற்று பயணத்தை தொடர்ந்தேன். மதினா அருகே வரும்போது சாலையில் வழிகாட்டி பலகையில் 'Muslims', ' Non-Muslims' என போட்டிருந்தது. முஸ்லிம் அல்லாதவர்கள் மதினா ஊருக்குள் நுழையமுடியாது. எங்கள் பேருந்து வெளிச் சாலையிலேயே மதினாவை கடந்தது.


சாயங்காலம் யான்புக்கு வெளியே உள்ள சிமெண்ட் கம்பெனிக்கு சென்றடைந்தோம். செங்கடல் கடற்கரை ஓரத்தில் பாலைவனத்தில் பழைய சிமெண்ட் ஆலைக்கு அருகில் புதிய சிமெண்ட் ஆலை கட்டிக் கொண்டிருந்தார்கள். அருகிலேயே camp. ஜுபைல் (Jubail) வேலையை விட இங்கு பரவாயில்லை. ஒரே மாதத்தில் எல்லோருடனும் நன்றாக பழகிவிட்டேன். பழைய சிமெண்ட் ஆலையில் வேலை பார்க்கும் ஒரு அதிகாரியுடன் 2 வாரம் பழக்கம். பெரிய post ல் இருந்தார். அடிக்கடி என் கட்டுமான இடத்திற்கு (construction site) வருவார். தமிழ் காரர்தான் ஆனால் தமிழில் பேசவில்லை. சிமெண்ட் ஆலையில் பொறியாளர் வேலை வாங்கித் தருகிறேன் என அவராகவே கூறினார். ஒரு நாள் என் தோளில் கை போட்டு பேசினார். மறுநாளில் இருந்து என்னுடன் பேசுவதையே நிறுத்தி விட்டார். ஏன் என்பதை உங்கள் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன்.


நிறைய தமிழ் மக்கள் பழக்கமானார்கள். வாரம் ஒரு நாள் (வியாழக்கிழமை) சிற்றுந்தில் அருகில் இருக்கும் யான்புவுக்கு அழைத்துச் செல்வார்கள். அந்த நேரம் தான் shopping மற்றும் ஹோட்டல் சாப்பாடு. சாயந்திரம் இரண்டு தொழுகை இருப்பதால் நிறைய நேரம் சும்மா தான் உட்கார்ந்திருக்க வேண்டும்.

ஐந்து வேளை தொழுகை நேரத்தில் எல்லா கடைகளும் பூட்ட பட வேண்டும். சாப்பிடும்போது, முடிவெட்டும் போது தொழுகை நேரத்தில் மாட்டினால், பாதியிலேயே வெளியே அனுப்பிவிடுவார்கள். பெரிய கடைகளை அடிக்கடி மூடி திறக்க முடியாதென்பதால் திறந்தே போட்டுச் செல்வார்கள். மத தலைவர் கம்புடன் காரில் வலம் வருவார். முஸ்லிம்கள் கண்டிப்பாக தொழுகைக்குச் செல்ல வேண்டும் இல்லையென்றால் பின்புறத்தில் ரெண்டு அடி கிடைக்கும்.

முஸ்லிம் அல்லாதவர்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனால் தொழுகை நேரத்தில் அமைதியாக ஓரத்தில் அமர்ந்திருக்க வேண்டும். தண்ணீர் குடிப்பதோ, புத்தகம் படிப்பதோ, தொலைபேசியில் பேசுவதோ கூடாது. ஒரு தடவை என் அறை நண்பர் ஜோசப் பொது தொலைபேசியில் பேசும் போது பிடித்து சென்று விட்டார்கள். நண்பர் ஆங்கிலத்தில் பேச, மத தலைவர் அரபியில் பேச இரண்டு பேருக்கும் ஒன்றும் புரியாமல், கடைசியில் தொழுகை முடியும் வரை இருக்க வைத்து எச்சரித்து அனுப்பி விட்டார். ( மத தலைவர் தொழுகைக்குச் செல்லவில்லை என்பது வேறு விஷயம்) அதிலிருந்து கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்தோம்.

நேரம் சரியில்லையென்றால் எங்கு ஏறினாலும் நாய் கடிக்கும். மின்சார கம்பத்தில் மேலே ஏறி உட்கார்ந்திருந்தாலும் அங்கும் வந்து கடிக்கும். ஒரு நாள் நான், மற்றும் இரண்டு மலையாள நண்பர்கள் இதே போல் யான்புவுக்குச் சென்றோம். தொழுகை நேரம் ஒரு ஓரமாக ஒரு திண்டில் அமர்ந்தோம். அருகில் சில வீடுகள், சிறு பையன்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அமர்ந்திருந்தபோது ஒரு அரபி எங்களிடம் வந்தான்.

" ஸலா, ஸலா' என்றான். ( "தொழுகை நேரம்" என்றான்). என்னுடன் வந்த மலையாள நண்பர் ரஞ்சித்

" மாஃபி ஸலா" (தொழுகை இல்லை/கிடையாது) என்று அரைகுறை அரபியில் கூறினார்.

கேட்டு போனவன் அருகில் விளையாடிக் கொண்டிருந்த பையன்களிடம் ஏதோ அரபியில் கூறினான். சிறிது நேரத்தில் 4-5 பையன்கள் எங்களிடம் வந்தார்கள். ஒருவன் தண்ணீர் விளையாட்டுத் துப்பாக்கி வைத்து "புஸ் புஸ் " என்று என் முகத்தில் தண்ணீர் பீய்ச்சி அடித்தான். மற்றொருவன் நண்பரை சிறு கயறு வைத்து அடித்தான். நாங்கள் எழுந்து நடக்க ஆரம்பித்தோம். அரபியில் கத்திக் கொண்டு என்னைப் பின் தொடர்ந்து வந்து தண்ணீர் அடித்தான். எனக்கோ பயங்கர கோபம். ஆனால் அரபி/அரபி பையன்களை அடித்தால் நாம்தான் கம்பி எண்ண வேண்டும். அடிக்கடி திரும்பி அடிப்பது போல் கை ஓங்கினதினால் கொஞ்சம் பயந்து பின் வாங்கினான். இருந்தாலும் என் சட்டை பாதி நனைந்துவிட்டது.



'நான் ஆட வேண்டிய மைதானம் இதுவல்ல' என்ற முதல் விதை மனதில் விழுந்தது.



சவுதி ஆட்டம் தொடரும்....

Sunday, July 8, 2007

சவுதி ஆட்டம் - 2

தமாம் விமான நிலையத்திலிருந்து அலுவலக பேருந்தில் பயணம். பிலிப்பினோ ஓட்டுநரிடம் எங்கு செல்கிறோம் என வினவினேன். Company camp க்கு செல்கிறோம் என்றான். Camp என்றவுடன் Mandapam Camp தான் நினைவுக்கு வந்தது.


அடிக்கடி மண்டபம் முகாமிற்கு சென்று வந்திருக்கிறேன்.சிறு வயதில் மண்டபம் முகாமிலிருக்கும் மீன்காட்சியகத்தில் கடற்பசு பார்த்தது, அருகில் உள்ள குருசடி தீவு க்கு சென்றது, நிழலாடியது.
ஒரு முறை சிறிய திமிங்கலம் மண்டபம் கடற்கரையில் உயிருடன் ஒதுங்கியது. உயிருள்ள திமிங்கலம் மேலே ஏறி விளையாண்டது இன்னும் பசுமையான நினைவுகள். இதில் சோகம் என்னவென்றால் திமிங்கலத்தை காப்பாற்ற அரசு/மக்கள் எதுவும் செய்யவில்லை. தற்சமயம் மண்டபம் முகாமில் நிறைய மாற்றம் இலங்கை அகதிகள் தவிர.


அலுவலக முகாமில் தங்கவைக்கப்பட்டேன். இரண்டு நாட்கள் கழித்து வேறு முகாமிற்கு மாற்றி விட்டார்கள். எதுவுமே பிடிக்கவில்லை. பேசுவதற்கு 1 ரியால் நாணயமாக தொலைபேசி பெட்டியில் போடவேண்டும். 10 ரியால் கொடுத்தால் 9 ரியால் கொடுப்பார்கள். தொலைபேசியில் என் அண்ணன் ' என்னடா! தமாமில் இன்று குண்டு வெடித்ததாமே? அங்கு எதுவும் பிரச்சனையா?'.என்றான். மறுநாள் பேப்பரை புரட்டினால் 'மூச்'. சவுதி மன்னர் பக்கத்து நாட்டு மன்னருடன் சிரித்துக் கொண்டிருந்தார். பத்திரிகை தணிக்கை.

'Jubail Petrochemya' வில் வேலை சுத்தமாக பிடிக்கவில்லை/தெரியவில்லை. வேலை இடத்தில் எங்கும் பிலிப்பினோ அதிகாரம்தான். மீட்டிங்கில் தகாலுதான் (பிலிப்பினோ மொழி) பேசுவார்கள், ஏனென்றால் மீட்டிங்கில் நான் மட்டும்தான் பிலிப்பினோ அல்லாதவன். எனக்கு கொடுத்த இந்திய தொழிலாளர்களோ சுத்தம். நானே ஒன்றும் தெரியாத கப்பி. எனக்கு வாய்த்தவர்களோ என்னை விட பெரிய கப்பிகள். 1 மாதம் வேடிக்கை பார்த்தேன் வேலையையும் மீட்டிங்கையும். என் ராஜினாமா கடிதத்தை அனுப்பினேன்.


மனிதவள மேளாளர் எனக்கு புத்திமதி கூறி 'பிலிப்பினோ கூட்டத்தை குறைப்பதற்குத்தான் நான் இந்த பொறுப்பை ஏற்றிருக்கிறேன். கொஞ்ச நாள் வேறு projectல் வேலை செய், பிறகு முடிவு செய்' என்றார். எனக்கும் நல்லதாக பட்டது. இரண்டொரு நாளில் ' Yanbu' செல்ல ஏற்பாடாயிற்று. தமாமிலுருந்து யான்பு செல்ல 24 மணி நேர (ரியாத், மதினா வழியாக) பேரூந்து பயணம். மிக இனிமையான பயணம்.


பேரூந்தில் மூன்றே பேர்தான், நான், பிலிப்பினொ ஓட்டுநர், ஒரு மலையாள நண்பர்.சாலை இருபுறமும் sand dunes பார்க்க கண் கொள்ளா காட்சி. சாலையின் ஒரு புறத்திலிருந்து மறுபுறம் மணல் தண்ணீர் மாதிரி ஓடுவது அழகு. சில இடங்களில் மணல் சாலைக்கு வந்தால் ஒதுக்குவதற்கு புல்டோசர். சாயந்திரம் ரியாத்திற்கு வெளியே ஒரு சாலையோர உணவு விடுதியில் இரவு உணவு. வித்தியாசமான மோட்டல். கீழே உட்கார்ந்து சாப்பிடவேண்டும். சாப்பிட்டவுடன் ஹுக்கா & தலையணை இலவசம். அதன்பின் கொஞ்ச நேரம் தூங்கி எழுந்து செல்லலாம். எங்கள் அருகே ஐந்து பேர் ஒரே தட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். தட்டில் அரை ஆடு சமைத்து வைத்திருந்தது. நான் சாப்பிட்ட வான் கோழி பிரியாணி. துருக்கி நாட்டு style. மசாலா/எண்ணெய் மிக குறைவு. திண்டுக்கல் தலைப்பாகட்டி பிரியாணியில் மசாலா கொஞ்சம் தூக்கலாக இருக்கும். ஹதராபாத் paradise பிரியாணி காரம்/மணம் அதிகம். பங்களாதேஷ் பக்ருதின் பிரியாணியில் மசாலா இருக்காது. ஆனால் சுவை அதிகம். ஒவ்வொரு பிரியாணியும் தனி ரகம் & தனி சுவை.


இரவு முழுவதும் பேரூந்து பயணம், அதிகாலை ஆள் அரவமில்லாத ஒரு சிறிய சாலையில் நின்றது. 2 மணி நேரம் ஓய்வு என்று ஓட்டுநர் கூறி அருகில் இருந்த சிறிய மணல் மேட்டில் படுத்து உறங்கிவிட்டான். பேரூந்துக்கு வெளியே வந்தேன். ஒரு பக்கம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒன்றுமில்லை வெறும் கட்டாந்தரைதான். மறுபக்கம் தூரத்தில் மலைகள். மலையில் ஒரு செடி கூட கிடையாது. மலை என்று கூறுவதைவிட கற் குவியல் என்றுதான் சொல்லவேண்டும். சிறிய கற்களை அழகாக அடுக்கி வைத்த மாதிரி. அடியில் உள்ள ஒரு கல்லை உருவினால் போதும் மொத்த மலையும் சரிந்து விழுமோ என்ற ஐயம்.



சிறிது நேரத்தில் ஒட்டகக் கூட்டம் தென்பட்டது. சிறியதும் பெரியதுமாக வித விதமாக ஒட்டகங்கள். சின்ன முட்களை சாப்பிட்டது. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த போது ஒட்டக மேய்ப்பாளர் எங்களை நோக்கி வந்தார்.

கையில் பெரிய கம்பு. கருப்பு போர்வை போன்று உடை. முகத்தை மறைத்திருந்தார். அருகில் வந்தவர் முகத்திலிருந்த துணியை விலக்கி என்னிடம் தமிழில் பேச ஆரம்பித்தார்.



சவுதி ஆட்டம் தொடரும்.....