Wednesday, November 28, 2018

குழல் இனிது - யாருக்கு?



“ப்பா ஈயாப்பர்”
“டேய் அது ஹெலிகாப்டர் டா மவனே, திருப்பி சொல்லுடா. “

“ஈயாப்பர்”  

"சரி எப்படியோ சொல்லிட்டு போ".

ஈயாப்பர், ஈயாப்பர் என மேலே பார்த்து கத்திக்கொண்டே சறுக்கில் விளையாட ஓடினான் என் மகன் எழில். நான் அருகில் இருக்கும் மர பெஞ்சில் அமர்ந்தேன்.

இந்த நவம்பர் வந்தால் நான் பென்டன்வில் (Bentonville, Arkansas, USA) வந்து ஒருவருடம் ஆகிறது.
பென்டன்வில், அமெரிக்காவில் "நடு சென்டரில்" இருக்கும் ஒரு சிறு நகரம். வால்மார்ட் கம்பெனியின் தலைமைச்செயலகம் இங்குதான் உள்ளது. ஊரில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்திலும் யாராவது ஒருவர் வால்மார்ட்டோடு சம்பந்தப்பட்டிருப்பர். வால்மார்ட் தகவல் துறையில் மேலாளராக பணியாற்றுகிறேன். இந்த ஊரில் இந்தியர்கள் மிக குறைவு, அதிலும் தமிழர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

தினமும் சாயந்திரம் சறுக்கில் விளையாட எழிலை அழைத்து வந்துவிடுவேன்.
ஊருக்கு நடுவில் இருக்கும் பெரிய பூங்கா. சைக்கிள் ஓட்ட / ஓட தனி பாதை. அதை விட்டு சற்று தள்ளி,  குழந்தைகள் விளையாடுமிடம்.  வயது, நிற பேதமில்லாமல் நிறைய குழந்தைகள் சறுக்கில் சறுக்கி விளையாடிக் கொண்டிருந்தார்கள். நம்ம ஊரிலும் இப்படித்தான். ஆனால் என்ன ஒன்னு, தன் பிள்ளைகள் எந்தக் குழந்தையோடு விளையாட வேண்டும் என்று அனேகமாக பெற்றோர்கள்தான் முடிவு செய்கிறார்கள். 

ஒரு தம்பதியினர் குழந்தையை விளையாட விட்டுட்டு, அவர்கள் கொஞ்சிக்கொண்டிருந்தார்கள்.

இது ஒரு வினோதமான நாடு. வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவைப் பார்ப்பதற்கும் அமெரிக்காவிற்குள்  இருந்து அமெரிக்காவை பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஊரிலிருந்து கிளம்பும்போது என் சொந்தக்காரர் என்னிடம் , பார்த்து சூதானமா இருப்பூ,  காமக்களியாட்டங்கள் நிறைந்த ஊர் என அறிவுரை கூறினார். பாவம், நிறைய ஆங்கில படங்கள் பார்த்திருப்பார் போல.


“ப்பா.. இதை லுக் அட் திஸ் காசு” , என்று ஒரு சென்ட் காசைக்  காண்பித்து, என்னிடம் கொடுத்து விட்டு ஓடி விட்டான் எழில், திரும்பவும் விளையாட. கீழே கிடைக்கும் ஒரு காசை பொறுக்காதடா ன்னு சொல்லியாச்சு. எங்கு பார்த்தாலும் பொறுக்கிவிடுவான், அதில் என்ன இருக்குமோ தெரியல. 

பூங்காவின் ஒருபுறம் கீழே விழுந்த இலைகளை தொழிலாளர் ஒருவர் காற்று ஊதும் கருவியை வைத்து சுத்தப்படுத்திக்கொண்டிருந்தார். ஒரு பக்கம் கொஞ்சம் பேர் நடந்து கொண்டிருந்தார்கள். சில பேர் நாய்களை நடத்திக் கூட்டிட்டு போய் கொண்டிருந்தார்கள். நாயுடன் இருந்த ஒரு வெள்ளைக்காரர் கீழே குனிந்து மணலை அள்ளித் தன் நாய் இருந்து வைத்த கக்கா  மேல் போட்டு கொட்டி, நாய் மலத்தை அள்ளிக்கொண்டிருந்தார், பிளாஸ்டிக் பையில்.

இதைப் பார்த்தபோது என் மனம் பழைய நினைவுகளை அசை  போடத் துவங்கியது.
அந்த காலத்தில் 80களில்  நிறைய பேர் வீடுகளில் எடுப்பு கக்கூஸ் என்று ஒன்று உண்டு. இப்போதிருப்பது மாதிரி பிலஷ் கக்கூஸ் கிடையாது. காலையில் மலத்தை அள்ள ஆட்கள் வருவார்கள். அனேகர் வீட்டில் விறகடுப்பு இருந்ததால் முதலில் வீட்டில் சாம்பல் கேட்டு வாங்கிச் செல்வார்கள், மலம் அள்ள  வந்தவர்கள். சாம்பலை மலத்திற்கு மேலே நிறைய தூவி, பின்னர் கையில் வைத்திருக்கும் ஒரு வகையான வளைவான கரண்டியை வைத்து உருட்டி அதை ஒரு சட்டியில் போட்டு எடுத்துச் செல்வார்கள். என் பாட்டியுடன் சில தடவை சென்றிருக்கிறேன். இன்றும் அடிக்கடி கனவில் வந்து பயமுறுத்தும், துர்நாற்றத்துடன்.

திடீரென்று எழில் அழுகைக் குரல் என்னை நிகழ்காலத்துக்கு இழுத்து வந்தது. கீழே விழுந்து அழுது கொண்டிருந்தான். விளையாடுமிடத்தில் உள்ள  தரையில் ரப்பர் தளம் போட்டிருப்பதால் கீழே விழுந்தாலும் அடியெதுவும் படவில்லை.

அவனைக் கூட்டிக் கொண்டு வீட்டிற்கு நடக்க ஆரம்பித்தேன்.
அருகில்தான் வீடு. அடுக்குமாடி குடியிருப்பில் முதலாவது தளம். நம்ம ஊருல தரைதளத்தை இங்கு முதலாவது தளம் என்பார்கள். இங்கு அடுக்குமாடி குடியிருப்பும் மரத்தால் கட்டியது. அதனால் எழில் வீட்டிற்குள் ஓடினால் கீழே இருக்கும் தளத்தில் சத்தம் அதிகமாக கேட்கும் என்பதால் முதல் தளத்தையே   வாடகைக்கு எடுத்தோம்.
அமெரிக்காவில் நல்ல பள்ளி மாவட்டம் என்றால் வீடு வாடகை/வீடு விலை  அதிகம்.  இங்கு பள்ளிக்  கட்டணம்  முற்றிலும் இலவசம் 12ம் வகுப்பு வரை. எழில், கடந்த மூன்று மாதங்களாக அருகிலுள்ள மழலைப்பள்ளிக்குச் செல்கிறான்.

"சரி. டேய் குளிக்கப் போடா."
“ஏக்கு”
"எதுக்கா? உன் பிரெண்ட் பரத்வாஜ் பர்த்டே பார்ட்டிக்கு போகவேணாமா. போ போய் குளி"

"நோ, ஐ  டோன்ட் வாண்ட் குளி!!" என கத்திக்கொண்டே படுக்கையறைக்குள் ஓடினான்

"டேய்!! ஒன்னு இங்கிலீஸ் ல பேசு, இல்லேன்னா தமிழ் ல பேசு. அது என்ன பாதி இங்கிலீஸ் பாதி தமிழ்."

"விடுங்க , சின்னப்புள்ள மழலைய ரசிங்க. குத்தம்கண்டுபிடிக்காதிங்க" என் மனைவி சொல்லிக்கொண்டே டீயுடன் உள்ளே இருந்து வெளிப்பட்டார்.

"மழலைதான் ஆனாலும் தமிழ் ல பேசணும்ல." என்றேன் நான்.

"வள்ளுவர் என்ன சொல்லிருக்கார் தெரியுமா? " என என் மனைவி ஆரம்பித்தாள்.

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்

"குழந்தையின் மழலையில் ராசாவின் புல்லாங்குழல் போன்ற இனிமை இல்லை, ரஹ்மான் இசையில் இருக்கும் கவர்ச்சி இல்லை . சொற்கள், உச்சரிப்பு  ஒலி, இவைகளை மீறியே உச்சரிக்கின்றன பிள்ளைகள். உளறிக் குழறும் அந்த சொற்களுக்கு எந்தப் பொருளும் கிடையாது. ஆனால் இவ்வளவு குறைபாடுகளும் நிறைந்த அந்த மழலை மொழிகள் பெற்றோர்க்கு மட்டும் அமிழ்தமாக இருக்குது. இது ஏன்? " என என் மனைவி கேட்ட கேள்விக்கு கொஞ்சம் யோசித்தேன்.

"தன் குழந்தைகள் மேல் பெற்றோருக்குள்ள அன்பும் பாசமும் தான்  பெரும்பான்மையான காரணம் தவிர, வேறில்லை" என்றேன்.

"தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள் தான் குழலோசை யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்றுக்கூறுவார்கள். இதைச்சொன்னது கலைஞர்." என்றார் என் மனைவி  

"சரி, சரி, விட்டா  புறநானூறு பாட்ட எடுத்துவிட்டு பேச ஆரம்பித்துவிடுவாய்",  என்று எழுந்தேன் சோபாவைவிட்டு .

"இன்னைக்கு எழில் பிரண்ட்,  பரத்வாஜ் பர்த்டே பார்ட்டி, கிபிட் ஏதாவது வாங்கி வச்சிருக்கியா?", என வினவினேன் 

"பிறந்தநாளுக்கு வந்த பரிசுப்பொருட்களையெல்லாம் எல்லாம் மற்றவர்கள்  பிறந்தநாள்களுக்கு கொடுத்தாச்சு. போகும்போது வால்மார்ட்டில் எதாவது டிரஸ் இல்லேன்னா கிப்ட் கார்டு வாங்கிட்டு போகலாம்", என என் மனைவி சொல்ல

"சரி சரி சீக்கிரம் கிளம்பு", என்றேன்

வால்மார்ட், எங்கள் வீட்டிலிருந்து   10  நிமிட கார் பயணம். பயணத்திலும் மழலைப் பேச்சு பற்றியே பேச்சு தொடர்ந்தது.

"எழில், ஸ்கூல் போகாதவரை நல்லா தமிழ் பேசினான். மூன்று மாதமாக ஸ்கூலுக்கு போக ஆரம்பித்ததிலிருந்து ஆங்கிலம் தான் வருது. தமிழை மறந்திடுவானோ ன்னு பயமா இருக்கு", என்றேன் நான்.

"பயப்படத்தேவையில்லை, சான் பிரான்சிஸ்கோ வில்  இருக்கும்  உங்க நண்பரின் பிள்ளைகள் எப்படி நல்ல தமிழ் பேசுராங்க? அவர்கள் வந்து 5 வருடங்கள் ஆகிவிட்டதே". என்கிறார் என் மனைவி ஆறுதலாக. 

என் நண்பன் சந்தித்த பிரச்சனைகளை சொல்ல ஆரம்பித்தேன். 

"அவர்களுக்கும் இதே போல் பிரச்னை. ஊரிலிருந்து வந்த கொஞ்ச நாள் தமிழ் பேசியிருக்கிறார்கள். ஸ்கூலுக்கு போக ஆரம்பித்தவுடன் தமிழ் பேசுவதில்லை. நாம் தமிழில் பேசினால் புரியும் ஆனால் ஆங்கிலத்தில் தான் பதில் கூறுவார்கள். கலிபோர்னியா தமிழ் அகாடமி நடத்தும் தமிழ் பள்ளிக்கு வாராவாரம் தமிழ் கிளாஸ்க்கு போனாலும் அவன் பிள்ளைகள் ஆங்கிலத்தில் தான் பேசுகிறார்கள்". கொஞ்சம் யோசித்து விட்டு தொடர்ந்தேன்.

"இதற்கு ஒரு தீர்வு அவனே கண்டுபிடித்திருக்கிறான். குழந்தைகள் ஆங்கிலத்தில் எதாவது கேட்டால் இவன் பதில் சொல்வதில்லை . திருப்பியும் கேட்டால், எனக்கு ஆங்கிலம் தெரியாது. என்று கூறி பதில் எதுவும் சொல்லாமல், தமிழில் கேள், பதில் சொல்கிறேன் என கொஞ்சநாள் சொல்லிக்கொண்டு  வந்திருக்கிறான். குழந்தைகளும் " என்னடா இது!! இந்த வீட்டில் தமிழ்ல பேசவில்லையென்றால்  ஒன்னும் நடக்காதுன்னு மெதுவா தமிழ் பேச ஆரம்பிச்சிட்டார்கள்"என்றேன்.

இதற்குள் வால்மார்ட் வந்துவிட்டது. காரை நிறுத்தும் இடத்தில் நிறுத்தி விட்டு நடந்தோம். 

"பிச்சைக்காரனுக்கு காசு கொடுக்காதீர்கள் என எத்தனை தடவை உங்களுக்குச் சொன்னாலும் உங்க தலைக்குள் ஏறவே மாட்டேங்குது", என சிடுசிடுத்த என் மனைவியின் பேச்சை உதாசீனப்படுத்தி விட்டு வால்மார்ட் உள்ளே சென்றோம்.

ஷாப்பிங் போனாலே நான்தான் குழந்தையை பாத்துக்கணும். என் மனைவி அவர்கள் விருப்பம் போல வாங்கி குவிப்பார்கள். இதுதான் எங்களுக்குள் எழுதப்படாத சட்டம்.
வால்மார்ட் உள்ளே என் மனைவி சரியான அளவாக சட்டை தேடிக்கொண்டிருந்தாள். எழில், தொங்கும் துணிகளை இழுத்து இழுத்து கீழே போட்டுக்கொண்டிருந்தான். நானும் போனை நோண்டிக்கொண்டே , "டேய், துணிகளை இழுக்கதேடா" என இரண்டு மூன்று தடவை சொல்லியும் கேட்கவில்லை. 

“டேய் மவனே இழுக்காதடா” என அதட்டி லேசாக கையில் கிள்ளினேன்.
'டோன்ட் கிள் மீ, அம்மா, அப்பா ட்ரயிங் டு கிள் மீ " என் கத்திக்கொண்டே ஓடினான், அம்மாவிடம் ஓடுவதாக நினைத்து எதிர்பக்கம் 'டோன்ட் கிள் மீ', 'டோன்ட் கிள் மீ' என கத்திக்கொண்டே ஓடினான், தொங்கிக்கொண்டிருக்கும் துணிகளுக்கிடையில்.

எல்லோர் தலைகளும் என்னை நோக்கித்திரும்பின. தர்மசங்கடமான சூழ்நிலை. என்னமோ நான் கொலைகாரன் மாதிரி என்னைப்பார்க்கிறார்கள். 

சுதாரிக்கும்முன், எழிலை காணோம். பகீரென்றது.

சத்தம் கேட்டு என் மனைவி என்னிடம் ஓடிவந்தாள். அவளது பார்வையை சந்திக்க திராணியில்லாமல் "கவலைப்படாதே வேறு எங்கும் போயிருக்க மாட்டான், இங்குதான் எங்கேயாவது இருப்பான்" என சொல்லிமுடிக்கும்முன் அழ ஆரம்பித்துவிட்டாள்.

மூன்று நிமிடங்கள் கடந்தன. என் மனைவி ‘எழில்’ என கத்துகிறாள், எங்கேயோ ஓடுகிறாள். ஏதோ சொல்கிறாள். ஒவ்வொரு நிமிடமும் ஒரு யுகமாய் கழிந்து கொண்டிருந்தன.  

911 கூப்பிடவேண்டியதுதான் என முடிவெடுத்த போது, ஸ்பீக்கரில் ஒரு அறிவிப்பு.
'இங்கு ஆரஞ்சு கலர் டிரௌசர் போட்ட பையன் இருக்கான், பெற்றோர்கள் வந்து அழைத்துச்செல்லவும்'. உயிர் போய் உயிர் வந்தது எனக்கு.

இரண்டுபேரும் ஓடினோம், அங்குள்ள அலுவலகத்திற்கு.

தூரத்திலே பார்த்துவிட்டேன், எழில் தான், அங்குள்ள பெஞ்சில் உட்கார்ந்திருந்தான். அவனுக்கு கீழே தரையில் ஒருகால் முழங்கால் போட்டு  ஒரு பெண் காவல் அதிகாரி அவனிடம் பேசிக்கொண்டிருந்தார். மற்றொருவர் நின்றுகொண்டு பேசிக்கொண்டிருந்தார்.

என் மனைவி எனக்குமுன் ஓடிச்சென்று அவனைத் தூக்கினாள்.
'ம் மா, ஐ யாம் லாஸ்ட் மா', மா , ஐ யாம் லாஸ்ட் மா' என புலம்பிகிட்டேயிருந்தான்.

காவல் அதிகாரி என்னிடம் வந்து, "நீங்கள்தான் அவன் அப்பாவா?" என்றார்.

"ஆம்"
, என்றேன்.

"நீங்கள் அவனை கொலை செய்யப்போவதாக சொல்கிறானே".

நான் குபீரென்று சிரித்து விட்டேன்.

சத்தம்போட்டுச் சொன்னேன்.
​
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்

இரண்டு காவலர்களும் ' ங ' என விழித்தார்கள்.







Thursday, March 3, 2011

அது ஒரு துன்பியல் சம்பவம்

மாலை வீடு திரும்பியதும் தான் என் அலைபேசியை கவனித்தேன். இரண்டு மிஸ்டு கால்கள் இருந்தது. ஊரிலிருந்து அம்மா அழைத்திருக்கிறார்கள். எதற்காக இருக்கும் என் நினைத்துக் கொண்டே அம்மாவை அழைத்தேன்.

"என்னம்மா கூப்பிட்டிருந்தீங்க, என்ன விஷயம்" என்றேன்.
"டேய் ! இன்று ஒருவன் நம் வீட்டிற்கு வந்திருந்தான், திண்டுக்கல்லில் உன் கூட பொறியியல் கல்லூரியில் படித்தவனாம் பெயர் சீனிவாச பாபு என்று சொன்னான். படிப்பு முடிந்து 20 ஆண்டுகள் ஆனதால் எல்லோரும் கல்லூரியில் ஒன்று கூடுகிறார்களாம். 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த முகவரியில் கடிதம் போட்டிருக்கிறான். ஏற்கனவே கடிதம் போட்டிருந்தேனே, ஏன் பதில் இல்லை என்றான். வீட்டு முகவரி தான் ஆண்டுக்கு ஒரு முறை மாறிக்கொண்டிருக்கிறதே.

உன்னைப் பற்றி விசாரித்தான். சென்னையில் இருப்பதாகக் கூறினேன். உன்னிடம் பேசவேண்டும் என்றதால் உன்னை இரண்டு முறை அழைத்தேன். உன்னைப் பிடிக்க முடியவில்லை. உன் மொபைல் நம்பரை கொடுத்திருக்கிறேன். அவனும் சென்னையில் தான் இருக்கிறானாம். உன்னிடம் பேசுவான். என்றார்கள்.

'சரிம்மா, பாபு அழைத்தால் நான் பேசிக்கொள்கிறேன் 'என்றேன்.

அலைபேசியை அணைத்துவிட்டு, தொலைகாட்சியை போட்டேன்.


கண்கள் தொலைக்காட்சியில் நிலைத்திருந்தது மனம் கல்லூரி நாட்களை அசை போட்டது. எல்லோரையும் போல பல கனவுகளுடன் கல்லூரிக்குச் சென்ற எனக்கு முதல் வருடத்தில் இருந்தே பிரச்சனை. சேர்ந்த அன்றே ராகிங் செய்தார்கள் சீனியர்கள். ஏற்கனவே இதை எதிர்பார்த்திருந்ததால் நானும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அந்தி மாலை சந்தி சாய, அந்த மாமுனிவர்கள் ...... தெரியாமல் இங்கு வந்து சேர்ந்தேனே முன்னோர்களே மூததோர்களே அடியேனை வாழ்த்துங்களேன் என சீனியர்களுக்கு சலாம் போட்டேன். எறும்பை வாக்கிங் நடத்திச் சென்றேன் ஒரு குச்சியோடு. "ஆயிரம் நிலவே வா, 999 நிலவே வா, என ஒன்று வரை பாடினேன்.

இதெல்லாம் கொஞ்ச நாட்களுக்குத்தான்.ஒரு நாள் இரவு நேரம், விடுதியில் (ஹாஸ்டலில்) சீனியர்களுக்கும் எங்களுக்கும் தகராறு. எப்படி ஆரம்பித்தது என தெரியவில்லை. வராந்தாவில் இருந்த விளக்குகளையெல்லாம் அடித்து உடைத்துவிட்டார்கள். உணவு விடுதியிலிருந்து திரும்பி வந்தபோது அடிதடி நடந்து கொண்டிருந்தது. நடந்ததை வேடிக்கைப் பார்த்ததைப் பார்த்தவன் போட்டுக் கொடுத்துவிட்டான், பிறகு நடந்த கல்லூரி விசாரணையில். கல்லூரியில் இருந்து இரண்டு வாரங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டேன் செய்யாத குற்றத்திற்காக. அன்றிலிருந்து - காவல் நிலையத்திலுள்ள ரவுடிகள் லிஸ்ட் இருப்பது போல் - கல்லூரிக்குள் எது நடந்தாலும் அழைத்து விசாரிக்க ஆரம்பித்தார்கள்.

ஒரு நாள் இரவு கல்லூரி மொட்ட மாடியில் (நான்காவது மாடிக்கு மேல்) திடீரென்று வெடி சத்தம். விடுதியில் இருந்த வார்டனும் சில அல்லக்கைகளும் (வார்டனுக்கென்று ஒரு மாணவர்கள் கூட்டம் உண்டு) மேலே சென்று பார்த்தார்கள். யாரோ அணுகுண்டு (சிவகாசி பட்டாசு) வெடித்திருக்கிறார்கள். சிறிது நேரம் கழித்து மீண்டும் வெடி சத்தம். திரும்பவும் சென்று பார்த்தார்கள். அதே பட்டாசு. வெடி வைத்தவர்கள் யாரென்று தெரியவில்லை. மறுபடியும் வெடி என்று நான்கு தடவை நான்கு மூலையில் வெடித்தது. யாரோ ஒரு குறும்புக்கார மாணவன், அகர்பத்தியில் வெடியை பொருத்தி (time bomb) நான்கு மூலையிலும் அடுத்தடுத்து வெடிக்கச் செய்திருக்கிறான். மறுநாள் என்னை கோழி அமுக்குவது போல் அமுக்கி, உன்னுடன் சுற்றித் திரியும் சிவகாசிகாரனிடம் நீ வெடி வாங்கி வரச் செய்து, நீதான் இதைச் செய்திருக்கிறாய், என திரைக்கதை, வசனம் எழுதி டைரக்ட் செய்து விட்டார் வார்டன், பிரின்ஸிபாலிடம். மீண்டும் சஸ்பெண்ட்.

உணவு விடுதியில் வாரம் ஒரு முறை தான் புரோட்டா போடுவார்கள் வெள்ளியன்று, அது ஒன்றுதான் நன்றாக இருக்கும். அதற்காகவே வயிற்றை காய போட்டு இரவு புரோட்டாவை வெளுத்துக் கட்டும் ஒரு மாணவர்கள் கூட்டம் உண்டு. ஒரு நாள் புரோட்டா போடவில்லை, எல்லோரும் அதிகமாக சாப்பிடுவதால் புரோட்டா போடுவதை நிறுத்தி விட்டதாக சொன்னார் மெஸ் நடத்தும் ஐயர். அடுத்து ஒரு மணி நேரத்தில் எல்லா மாணவர்களும் விடுதியை விட்டு வெளியேறி சாலை மறியலில் ஈடுபட்டனர், சீனியர், ஜுனியர் என்ற பேதமில்லை. காலவறையற்ற விடுமுறை விட்டது கல்லூரி நிர்வாகம் . எல்லோரோடும் சேர்ந்து நானும் வெளியே நின்றதால் மீண்டும் சஸ்பெண்ட். மேலும் கல்லூரி நிர்வாகம் என்னை விடுதியிலிருந்தும் வெளியேற்றிவிட்டது.

இம்மென்றால் என்கொயரி, ஏனென்றால் சஸ்பெண்ட் என போய்க்கொண்டிருந்தாலும் படிப்பில் குறைவைக்கவில்லை. Mr. Enquiry என்ற பட்ட பெயரே வந்து விட்டது.

' என்னங்க!! ரொம்ப களைப்பா? ஒரு மாதிரி இருக்கீங்க', என் மனைவியின் குரலைக் கேட்டு திடுக்கிட்டேன்.

'ஒன்றுமில்லை பழைய கல்லூரி நினைவுகள்', என்றேன்.


இரண்டு நாட்கள் வேலை பளுவில் எல்லாம் மறந்திருந்த நேரம் பாபு போன் பண்ணினான். ரொம்ப மகிழ்ச்சியாக பேசினான், கல்லூரி நாட்களைப் பற்றி.
இணையத்தில் யாஹூ குரூப்ஸ் ல் நம் கூட படித்தவர்களுடன் ஒரு வருடங்களாக திட்டமிடுகிறோம். சில பேர்களுக்கு சில பொறுப்புகளைக் கொடுத்திருக்கிறான் தேனி மனோகர். அமெரிக்காவில் உள்ள நம் பேட்ச் மக்களிடம் பேசி அழைத்து வருவது, லலிதாவும் கல்லூரி மாடியில் வெடி வைத்த அனில் குமாரும். மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளவர்களை அழைத்து வருவது சரவணன் பொறுப்பு. சிவில் பேட்ச்க்கு சந்துரு, மெக்கானிக்கலுக்கு அரச பாஸ்கர். விழா ஏற்பாடு எல்லாம் அறிவழகனும், பழனிகுமாரும் பொறுப்பு.

வருகிற ஜூலை மாதம் 17ந் தேதி திண்டுக்கல்லில் ஒன்று கூடுகிறோம். இன்னும் ஒரு மாதம் தான் இருக்கிறது.சென்னையில் உள்ளவர்களை அழைத்து வருவது என்னோட பொறுப்பு. நீ உன் குடும்பத்துடன் கண்டிப்பாக திண்டுக்கல் வரவேண்டும் என்றான். மனதிற்குள் போராட்டம், போகலாமா, வேண்டாமா என்று. பார்க்கலாம் என்றேன். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு என் வீட்டிற்கு வர அழைப்பு வைத்தேன், அருகில் அவன் வீடு இருந்ததால்.

இரண்டு வாரங்கள் சென்ற பின் ஒரு சனிக்கிழமை வீட்டிற்கு வந்தான். விழாவிற்கு கல்லூரி நிர்வாகத்திலிருந்து யாரெல்லாம் வருகிறார்கள் என்பதைப் பற்றி பேசினான். கூட படித்தவர்களை கண்டு பிடித்ததைப் பற்றியும் தற்சமயம் ஒவ்வொருவரும் எப்படி இருக்கிறார்கள் என்பதைப் பற்றியும் விலாவாரியாக விவரித்தான்.

டேய் ! போன மாதம் ஜெஸியை சந்தித்தேன், என்றான் என்னைக் குறும்பு பார்வை பார்த்து சிரித்தபடி. "ஆண்ட்டி ஆகிட்டாடா " என கெக்கேபிக்கே என சிரித்தான். சொட்டையுடனும் தொப்பையுடனும் நாம் அங்கிள் ஆகும்போது அவள் ஆண்ட்டி ஆகமாட்டாளா என சிரித்துக் கொண்டேன்.

கிளம்பும்முன் நான் எதிர்பார்த்த கேள்வியை கேட்டான் பாபு. " ஆமா ! கடைசி வருடத்தில் உன் அப்பா இறந்தவுடன் நீ ஆறு மாதங்கள் லீவில் போய் விட்டு வந்து படித்தாயே, எப்போ டிகிரி முடித்தாய்" என்றான்.

மறு வருடத்திலேயே முடித்துவிட்டேன் என்றேன் எந்தவித சலனமில்லாமல்.

பாபுவை வழியனுப்பிவிட்டு வந்து இருக்கையில் சரிந்தேன். அப்பாவின் அகால மரணம் குடும்பச் சூழ்நிலையை தலைகீழாக புரட்டிப் போட்டுவிட்டது. அப்பா நடத்திவந்த கடையை நான் கவனிப்பதற்காக கல்லூரி முதல்வரிடம் மன்றாடி ஆறு மாதங்கள் லீவ் வாங்கினோம். ஆறு மாதத்தில் என் அண்ணன் படிப்பு முடிந்து அவன் கடையை ஏற்று நடத்துவான், நான் திரும்பவும் கல்லூரிக்கு வந்து கடைசி ஆறு மாத படிப்பை முடிப்பதாகத் திட்டம். கடவுள் எப்போது புன்னகைப்பார்? நம் திட்டத்தை அவரிடம் கூறும்போது.

ஆறு மாதங்கள் கழித்து திரும்ப கல்லூரிக்கு வந்தேன். பழைய வகுப்பறை நண்பர்கள் எல்லோரும் கல்லூரியை முடித்து வெளியேறி விட்டார்கள் வெகு சிலரைத் தவிர. கல்லூரி வாழ்க்கையில் கொடுமையானது ஜுனியர்களுடன் ஒரே வகுப்பில் படிப்பது. அதைவிட கொடுமையானது நம்முடன் படித்தவனே நமக்கு வாத்தியாராக வருவது. பொறியியல் கல்லூரியில் நன்றாக படித்து முடித்து அதே கல்லூரியில் வேலை பார்ப்பது என்பது சகஜம். அப்படி எனக்கு வாத்தியாராக வந்தவன்தான் மாரீசன், 'Refrigeration and Airconditioning' என்றொரு பாடத்திற்காக.

"டேய் மாரீசா, உன் வகுப்பறைக்கு நான் வரமாட்டேன், ஆனால் உன் பாடத்தில் கட்டாயம் பாஸ் பண்ணி விடுவேன்" என்ற வாக்குறுதிக்கிணங்க எனக்கு அட்டென்டென்ஸ் போட்டான். வகுப்பறைக்குச் செல்லாமலே, அதே பாட பரிட்சையில் நான் தான் கல்லூரியில் இரண்டாம் இடம். முதல் இடம், பாடத்தை நான் சொல்லிக்கொடுத்து பரிட்சை எழுதிய மாலவன், என் ஜூனியர்.

அடுத்து வந்த நாட்களில் அடிக்கடி பாபு போன் பண்னினான். அவனுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை விழாவில் கலந்துகொள்வதைப் பற்றி.
என்னாலும் முடிவெடுக்க முடியவில்லை. விழாவிற்கு போனால் பழைய நண்பர்களைப் பார்க்கலாம் பழைய கதைகளைக் கேட்கலாம். ஏன், பழைய கல்லூரி முதல்வரையும் பார்க்கலாம். இன்னும் என்னை ஞாபகம் வைத்திருப்பாரா? பழைய நண்பர்களையும் இடங்களையும் பார்க்கணும் என ஆசைதான் ஆனால் பழைய கசப்பான அனுபவங்கள் தடுத்தன, விழாவிற்குச் செல்ல.

விழா நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் பாபுவிடமிருந்து போன். ' என்னடா ! கிளம்புகிறாயா? வருவேன், மாட்டேன் என எந்த பதிலும் உன்னிடமிருந்து வரவில்லை. விழாவிற்கு நீ மட்டுமாவது வாடா' என மன்றாடினான். சில பல சாக்குப் போக்குகள் சொல்லிப் பார்த்தேன். எல்லாவற்றிற்கும் தயாராக பதில் சொல்லி என்னை வரவழைப்பதில் உடும்புப் பிடியாக இருந்தான்.

கடைசி இரண்டு பரிட்சைகள் தான் இருக்கிறது, முடிந்தால் கல்லூரிப் படிப்பும் முடிந்து விடும், டிகிரியும் கிடைத்துவிடும். பரிட்சை நேரங்களில் நண்பர்களுடன் விடிய விடிய படிப்பதென்பது வாடிக்கை. அதிகாலை மூன்று மணிக்கு சூடாக இட்லி சாப்பிட விளக்கில்லா பைக்கை ஓட்டிச் சென்று முன்னால் போய் கொண்டிருந்த மாட்டு வண்டியில் மோதியதில் நான் மயக்கமானேன். உயிர் காப்பான் தோழன் என்பதற்கேற்ப, என்னுடன் வந்த ஜாக்ஸன் என்னைக் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தான். கண்விழித்தபோது முக தாடையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருந்தார்கள், கை கால்கள் எல்லாம் கட்டுக்கள். எழுந்து நடமாட ஆறு மாதங்கள் ஆயின. என் அன்னைக்கு என் படிப்பை விட என் உயிர் முக்கியமாகப் பட்டதால் என்னை கடைசி இரண்டு பரிட்சையை எழுத அனுமதிக்கவில்லை. நான் பொறியியல் பட்டப்படிப்பை முடிக்கவில்லை.

என்னடா நான்பாட்டுக்கு பேசிட்டே இருக்கிறேன், எந்தவித பதிலும் சொல்லாம இருந்தா எப்படி? பாபுவின் குரலைக் கேட்டு நினைவுக்கு வந்தேன்.

' நான் ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருக்கிறேன். பிறகு கூப்பிடுகிறேன்.' என்று போனை கட் பண்ணினேன். மனம் தெளிந்த நீரோடையைப் போல் அமைதியாக இருந்தது.

எல்லோருக்கும் கல்லூரி நாட்கள் மிக இனிமையானதொரு ராகமாக இருக்கும், ஆனால் என்னைப் பொறுத்தவரை அது ஒரு துன்பியல் சம்பவம்.





-----------------------------------------------------------------------------------------------------------------
Disclaimer: All characters, Incidents, Names, Places and corporations or establishments appearing in this document are fictitious. Any resemblance to real persons, living or dead, is purely coincidental.
----------------------------------------------------------------------------------------------------------------- 

Friday, September 19, 2008

பஹ்ரைன் காவல் நிலையம்

பஹ்ரைன் போலீஸை பார்த்ததும் தூக்க கலக்கத்திலிருந்த எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. நான் முழிப்பதைப் பார்த்து இந்தியில் கூறினார்கள். எனக்கு மேலும் குழப்பம். எப்படி பஹ்ரைன் போலீஸ் இந்தி பேசுவார்கள்? பின்பு தான் தெரிந்தது பஹ்ரைன் காவல் துறையில் பாதிபேர் பச்சைகள் ( பச்சை என்றால் பாகிஸ்தான் நாட்டவர்).

' குச் ப்ராப்ளம் நஹி, ஹம்கோ சாத் ஆஜாவ்' என்றார்கள். ( எதுவும் பிரச்சனை இல்லை, எங்களுடன் வா)
நானும் பாஸ்கரும் இரண்டு போலீஸ்காரர்களுடன் அருகில் இருந்த காவல் நிலையத்திற்குச் சென்றோம். வெளியே நண்பர் சசியும் மற்றொரு போலீஸும் இருந்தார்கள். வெளியே உட்கார்ந்திருந்த போலீஸ் நம்ம ஊர் ஏட்டையா மாதிரி இருந்தார் பெருத்த தொப்பையுடன்.

" ஹாத் மிலாவ், ஹாத் மிலாவ்" என்று எங்களைப் பார்த்து இந்தியில் கூறினார். கை கொடுத்துக் கொள்ளுங்கள் எல்லோரும் ஒரே நாட்டவர்கள். ஏன் அடித்துக் கொள்ள வேண்டும். சமாதானமாய் போய்விடுங்கள். கை கொடுத்துக் கொள்ளுங்கள் என்றார். ' நீங்கள் அரபிகாரனை அடித்திருந்தால் தான் பிரச்சனை ( அது என்ன கணக்கோ !!!!!!) உங்களுக்குள் என்றால் ஒன்றுமில்லை. என்றார். நானும் பாஸ்கரும் அமைதியாக இருந்தோம். சசி " முடியாது, வழக்கு பதிவு பண்ணியே தீருவேன்" என்றான்.

ஏட்டையா பஞ்சாயத்து பண்ண முயன்றார். பிராது கொடுத்தவன் (சசி) ஒத்து வரவில்லை என்றதால் எங்களை காவல் நிலையத்த்ற்குள்ளே அனுப்பினார்.
உள்ளே காவல் துறை ஆய்வாளர் , சூடான் நாட்டவர், கறுப்பர், மெலிவாக இருந்தார். வேறொருவருடன் பேசிக் கொண்டிருந்தவர் எங்களைப் பார்த்ததும் , அருகில் இருந்த அறையை காண்பித்து " அமர்ந்து பேசி முடித்துக் கொள்ளுங்கள்" என்றார்.

அது ஒரு கூடி விவாதிக்கும் அறை ( conference hall). சசியும் நாங்களும் எதிரெதிரே அமர்ந்தோம். நான் தான் முத்லில் பேச ஆரம்பித்தேன். விட்டுக் கொடுக்காமல் பேசினேன். " இதோ பார் சசி, வழக்கு பதிவு செய்தால், உன்னையும் சேர்த்துதான் ஊருக்கு அனுப்பி விடுவார்கள். எனக்கு ஒன்றுமில்லை, இது எனக்கு மூன்றாவது நாடு, ஏழாவது வேலை (company). நான் உடனே வேலை தேடிக் கொள்வேன். உன்னைப் பற்றி நினைத்துக் கொள். வழக்கு பதிவு பண்ணவா வேண்டாமா என்று நீயே முடிவு பண்ணிக் கொள்" என்றேன்.

பாஸ்கர் கொஞ்சம் இறங்கி வந்து பேசினான். (Good cop, Bad cop)
எதற்கும் சசி ஒத்து வரவில்லை. " வழக்கு பதிவு பண்ணியே தீருவேன் ' என்று பிடிவாதமாய் இருந்ததினால் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையும் முறிந்தது.

மூவரும் ஆய்வாளரிடம் சென்றோம். அவருடைய பஞ்சாயத்தும் எடுபடவில்லை. வேறு வழியின்றி வழக்கு பதிவு பண்ண ஆரம்பித்தார். அப்போதுதான் எங்களைப் பற்றி விசாரித்தார். எந்த நாடு என்றார். கூறினோம். எந்த ஊர் என்றார். கூறினோம். " நீங்கள் விடுதலை புலிகள் இல்லீயே" என்றார். சிரித்துக் கொண்டோம். கொஞ்சம் அறிவுரை கூறினார். மூன்று பேரும் படித்தவர்கள், பொறியாளர்கள், ஒரே இடத்தைச் சேர்ந்தவர்கள், ஒரே இனம், ஒரே மொழி, பின்பு ஏன் அடித்துக் கொள்கிறீர்கள். என்றார்.

நம்ம யாரு, சேர, சோழ, பாண்டிய வம்சமாயிற்றே, அவருக்கென்ன தெரியும் தமிழர்கள் அவர்களுக்குள்ளே அடித்துக் கொள்வார்கள் என்று.

ஒரு வழியாக காலை 5 மணிக்கு ரிஃபா (Rifa) காவல் நிலையத்தில் எங்கள் மேல் வழக்கு பதிவு செய்து விட்டார்கள்.

காலை 9 மணிக்கு மனாமா (பஹ்ரைன் தலை நகர்) நீதிமன்றத்தில் ஆஜராகுங்கள் என்றார் காவல் துறை ஆய்வாளர்.

ஆட்டம் தொடரும்......

Wednesday, September 10, 2008

பஹ்ரைன் ஆட்டம்

பஹ்ரைனிலும் ஒரு ஆட்டம்

சிவகாசியில் ஒரு மாதம் தங்கி விட்டு விக்ரமாதித்தனாக மறுபடியும் மும்பை வந்தேன் வேலை தேட. மும்பையில் வேலை செய்ய / வேலை தேட முயற்சிக்க வில்லை. வெளிநாட்டு மோகத்தின் வடு ஆறாமல் இருந்தது, விரலிலிருந்த காயமும்தான். நான்கு மாதம் மும்பையில் தங்கி வேலை தேடினேன். இடையில் செம்பூரில் நடந்த S.V. சேகர் நாடகம் பார்க்கச் சென்ற இடத்தில் என் பழைய பாஸ் பழைய வேலைக்கு அழைத்தார். பிடிவாதமாக மறுத்து விட்டேன். ஒரு வழியாக பஹ்ரைனில் வேலை கிடைத்தது. மாதம் 300 தினார் சம்பளம். சவுதியைவிட இருமடங்கு. உடனே ஒத்துக்கொண்டேன். ஒரு நாள் சாயங்காலம் நண்பர்கள் புடைசூழ என்னை வழியனுப்பி வைத்தார்கள். மனாமா விமான நிலையத்திற்கு வந்தடைந்தேன். கடவுச்சீட்டு சோதனை பண்ணும் இடத்தில் என்னை தடுத்து நிறுத்திவிட்டார்கள். என் விசா அவர்களுடைய கனிணியில் இல்லையாம். என் கடவுச்சீட்டில் இருக்கிறதே என்றேன். நான் வேலை பார்க்க போகும் கம்பெனி என் விசா எண்ணை அவர்களுக்கு தெரியப்படுத்தனுமாம். மனித வள மேலாளருடன் தொலைபேசியில் பேசினேன். விமான நிலையத்தில் இரவு தங்குங்கள், காலையில் வெளியே கொண்டுவருகிறேன் என்றார். என்னைப் போலவே பிரதாப் என்பவரும் இருந்தார். இருவரும் ஒரே கம்பெனியில் வேலைக்கு வந்திருந்தோம்.

விமான நிலையத்திற்குள் உள்ள தங்கும் விடுதியில் மணிக்கணக்கில் தான் வாடகை, நாள் கணக்கு அல்ல. ஆறுமணி நேரம் தங்கினோம். காலை மனித வள மேலாளர் எங்களை வெளியே கொண்டுவந்தார். வேலை பிடித்திருந்தது. ஒரே மாதத்தில் என் நண்பன் பாஸ்கரை நான் வேலை செய்யும் கம்பெனியில் கொண்டு வந்தேன் ( மனித வள மேலாளருக்கு கொஞ்சம் பரிசு பொருட்கள் கொடுக்க வேண்டியிருந்தது). வாழ்க்கை பயணம் நன்றாக போய்கொண்டிருந்தது. நான் தங்கியிருந்த வீட்டில் நான், பாஸ்கர், ப்ரதாப் மற்றும் சசி. ப்ரதாப் மிக நன்றாக சமைப்பார். அவருக்கு நான் தான் எடுபிடி. அவரிடம் தான் நான் சமையல் கற்றுக்கொண்டேன். கல்லூரியில் இருந்த பாஸ்கருக்கும், தற்சம பாஸ்கருக்கும் நிறைய மாற்றங்கள். எப்போதும் தியானம் தான். சசிக்கும் எனக்கும் கொஞ்சம் ஒத்துப்போகவில்லை. பேசுவதையே நிறுத்தியிருந்தேன். இவ்வாறாக வாழ்க்கை போய்க் கொண்டிருந்த ஒரு நாள், வீட்டில் பார்ட்டி. படுக்க போகும் போது மணி 1. சொந்தகாரர் வீட்டிற்கு சென்று விட்டார் ப்ரதாப். வெளியே சென்ற் சசி அதுவரை வீடு திரும்பவில்லை. நான் தெரியாமல் கதவில் உள் தாழ்ப்பாள் போட்டு விட்டு தூங்கிவிட்டேன். நண்பர் சசி இரவு 2 மணிக்கு வீடு திரும்பியிருக்கிறார். வீடு பூட்டியிருக்கிறது. தட்டியிருக்கிறார் பலமாக. பக்கத்து அரபிகாரன் விழித்தெழுந்து சசியுடன் சேர்ந்து தட்டியிருக்கிறார்கள். நாங்கள்தான் நன்றாக தூங்கிவிடோமே!!!

கடைசியில் இரண்டுபேரும் சேர்ந்து பலமாக கதவில் மோதி தாழ்ப்பாளை உடைத்து உள்ளே வந்துவிட்டார்கள். ஆத்திரத்தில் உள்ளே வந்த சசி, பாஸ்கர் அறைக்குச் சென்று தூக்கத்தில் இருந்தவனின் பனியனை பிடித்துத் தூக்கி உலுப்பி " ஏம்லே வீட்டைப் பூட்டினாய்" என் திட்டியிருக்கிறான். பாஸ்கருக்கு ஒன்றும் புரியவில்லை. இந்த களேபரத்தில் என் தூக்கம் கலைந்து அறையை விட்டு வெளியே வந்தேன். எனக்கும் ஒன்றும் புரியவில்லை.சசி கோபத்தில் கத்திக்கொண்டிருக்கிறான், அருகில் அரபிகாரன்.

" நீயாலே பூட்டினது" என்றான்.
"ஆமாம்" என்றேன்.

கெட்ட வார்த்தையில் திட்டினான். நான் அமைதியாயிருந்ததைப் பார்த்து, கோபத்தில் திட்டிக்கொண்டே கையிலிருந்த உடைந்த தாழ்ப்பாளை என் மேல் விட்டெரிந்தான். உடைந்த தாழ்ப்பாள் என் வயிற்றை பதம் பார்த்தது. சுலபமாக கோபப்படாத என்னை அவன் செயல் கோபப் படுத்தியது. ஒரு உதை விட்டேன். Washing machine மேல் சென்று விழுந்தான். அரபிகாரன் தலை தெறிக்க ஓடி விட்டான். விழுந்து எழுந்தவனை பிரித்து மேய்ந்து விட்டோம் நானும் பாஸ்கரும். வீட்டிற்கு வெளியே ஓடினவனை விரட்டிச் சென்று அடித்த பாஸ்கரை நான் தான் கட்டுப்படுத்தி வீட்டிற்குள் இழுத்து வர வேண்டியிருந்தது. எல்லா களேபரங்களும் முடிந்து அவரவர் அறைக்கு தூங்க சென்றோம். எனக்கோ தூக்கம் வரவில்லை. ஏன் இவ்வாறு நடந்து கொண்டேன்? என்னை நினைத்து எனக்கே வெறுப்பாக இருந்தது. சாதாரணமாக எனக்கு கோபம் வராது. மனிதனை மனிதனாக மதிப்புக் கொடுக்க வேண்டும் என்பதில் அக்கறை உள்ளவன். இதே போன்ற ஒரு சம்பவம் மும்பையில் இருந்த போதும் நடந்தது.

என் நண்பன் மூர்த்தி, திருப்பதியை சேர்ந்தவன். பத்து வரை படிப்பு. மும்பை கிழக்கு முலூண்ட் வாசம். வெளிநாட்டு பொருட்கள் crawford market ல் இருந்து வாங்கி வாடிக்கையாளர்களுக்கு விற்பது தான் தொழில். அதற்கு முன் என் அக்காவுடைய "Dorai Classes"ல் assistant வேலை. அதிலிருந்து எனக்கு மட்டுமல்ல என்னுடன் இருந்த கல்லூரி நண்பர்கள் ( மாலவன், ஜாக்ஸன், பாஸ், பூஸ், கஞ்சா சரவணன், பூபதி, .........) எல்லோருக்கும் நண்பன். தெலுங்கு, தமிழ், இந்தி, ஆங்கிலம அத்துப்படி. கொஞ்சம் மராட்டியும். மூர்த்தியுடன் ஒரு மாலை பொழுது அடிக்கடி செல்லும் தேநீர் விடுதியில் தேநீர் அருந்திக்கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த ஒருவன் மூர்த்தியிடம்
" க்யா மூர்த்தி மேரா திமாக் கராப் கர்த்தா ஹய்" என்றான். ( என்ன மூர்த்தி என்னை கோபப்படுதுகிறாய்)
அதற்கு மூர்த்தி பதில் சொல்லிக் கொண்டிருந்தான். பிரச்சனை இது தான்.

வந்தவன் ஓட்டுநர் உரிமம் வாங்கிக் கொடுக்கும் தரகர். மூர்த்திக்கு உரிமம் வந்துவிட்டது. ஆனால் ரூ 50 பாக்கி தரகருக்கு மூர்த்தி கொடுக்க வேண்டும். தரகர் வரும் போது மூர்த்தியிடம் பணம் இல்லை. மூர்த்தியிடம் பணம் இருக்கும் போது தரகரை பிடிக்க முடியவில்லை. ( கல்லை கண்டால் நாயை காணோம் கதை தான்)
இதை தான் மூர்த்தி விளக்கிக் கொண்டிருந்தான். நான் எதையும் கவனிக்காமல் வேறு ஏதோ சிந்தனையில் இருந்தேன்.

திடீரென்று தரகர் மூர்த்தியின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான். மறுநொடியில் நான் எழுந்து அவனுடைய வயிற்றில் ஒரு குத்து விட்டேன். கடைக்குள்ளே மல்லாந்து கீழே விழுந்தான். அப்பொழுது தான் கவனித்தேன் அவனுடன் மேலும் இரண்டு பேர் வந்துருந்தார்கள். ஆனால் ஒதுங்கினார்கள். சமாளித்துவிடலாம் என் எண்ணி அடுத்த அடி அடிப்பதற்குள் கடை முதலாளி " அந்தர் நஹி.. பார் ஜாவோ.." (உள்ளே கூடாது.. வெளியே போ) என எல்லோரையும் விரட்டினார். வெளியே வந்தால் மூர்த்திக்கு கோபமாகி திருப்பி அடிக்க ஆரம்பித்தான். நான் அவர்களை விலக்கும் சாக்கில் தரகரை கெட்டியாக பிடித்துக் கொண்டேன். மூர்த்தி அடி பின்னிவிட்டான். அவனே அவனை அடித்துக் கொண்டான் தெரியாமல்.

தரகர் என்னிடம் " உஸ்கோ பக்கடோ.. மேற்கோ க்யூம் பக்கட்த்தாஹ" ( அவனை பிடி, என்னை ஏன் பிடிக்கிறாய்) என்றான். ஒரு வழியாய் விலக்கிவிட்டு அனுப்பியாயிற்று.
மூர்த்தியின் நண்பர்கள், ' அடி வாங்கியவன் கோலி (kohli) பெரிய பிரச்சனை வரும் என்றார்கள். உடனே அருகில் இருந்த காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை செய்த ரசீதும் வாங்கி விட்டோம். மறுநாள் சமாதானத்திற்கு வந்து விட்டார்கள். அதோடு பிரச்சனை முடிவுக்கு வந்தது.
சண்டையில் எதிராளியை பிடித்துக் கொள்வதும், காவல் நிலையத்தில் முதலில் புகார் கொடுப்பதும் கல்லூரி நாட்களில் கிடைத்த அனுபவங்கள்.

இவ்வாறாக பழைய நினைவுகளை அசைபோட்டுக்கொண்டே இருந்ததில் எப்போது தூங்கினேன் என தெரியவில்லை. அதிகாலை நான்கு மணி இருக்கும், தூங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பினார்கள் இரண்டு பேர். " We are Police " என்றார்கள்.

பஹ்ரைன் ஆட்டம் தொடரும்.........

Sunday, February 17, 2008

சவுதியில் திருடினேன்

நான் தங்கியிருந்த அறையில் என்னுடன் ஜோசப் என்று ஒரு நண்பர் தங்கியிருந்தார். பம்பாயை சேர்ந்தவர். 32 வயது. திருமணமான கொஞ்ச காலதிற்குள் சவுதி வந்தவர். அது கோடைகாலமானதால் அறை குளிரூட்டப்பட்டிருந்தது. வெளியே அதிக வெப்பம், உள்ளே அதிக குளிர். ஒரு நாள் சாயங்காலம் ஜோசப்புடன் தேநீர் அருந்தி கொண்டிருந்தேன். அப்பொழுது அவர் வாயின் இடது பக்கத்திலிருந்து தேநீர் வழிந்தது. அதைச் சுட்டிக்காட்டினேன். துடைத்தார். மறுபடியும் வழிந்தது. சுட்டிக்காட்டினேன்.


அப்பொழுதுதான் அவர் உணர்ந்தார், அவருக்கு இடது பக்கம் உணர்வில்லை என்று. அவரால் ஒரு கண்ணை மூட முடியவில்லை. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவரோ அரண்டு நடுங்கிக் கொண்டிருந்தார், நானும்தான். உடனே அவரை அருகிலுள்ள முதலுதவி அறைக்கு அழைத்துச் சென்றேன். அங்கு பிலிப்பினோ நர்ஸ் இருந்தார் ( ஆண் நர்ஸ் ). சவுதியில் ஆண்களுக்கு ஆண் நர்ஸ் தான். சிறிது நேரத்தில் அருகிலுள்ள யான்பு நகரத்திற்கு அழைத்துச் சென்றோம்.


எகிப்து மருத்துவர் சோதித்துவிட்டு, பயப்பட தேவையில்லை என்றார்.அவருக்கு வந்தது முக வாதம் (facial paralysis). இடது பக்க முகத்தில் மட்டும் வாதம். இடது கண்னை மூடினால் திறக்க முடியாது, திறந்தால் மூட முடியாது. சிரித்தால் இடது பக்க முகம் முழுவதும் அசையாது. எதனாலென்றால் இரவு தூங்கும்போது, வெளியே 45 டிகிரி
செல்சிய்ஸ், அறையினுள்ளே 16 டிகிரி செல்சிய்ஸ். மேலும் குளிர்சாதனத்திலிருந்து நேரே முகத்தில் குளிர்ந்த காற்று அடித்ததினால் உடம்பும் முகமும் வேறு வேறு டெம்பெரேச்சரில் இருந்திருக்கிறது தினமும். அதனால் இந்த முக வாதம். சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்ததினால் 1 மாததில் சரியாகிவிட்டது. ஆனால் இந்த சம்பவத்திலிருந்து பல பேர் பாடம் கற்றுக்கொண்டோம். அன்றிலிருந்து குளிர்காற்று என் மேலே படாதவாறு பார்த்துக் கொள்வேன், வீட்டிலேயும் காரிலேயும்.


இவ்வாறாக 2 மாதங்கள் ஓடிவிட்டது. வேலை இடத்தில் எனக்கு ஏற்பட்ட விபத்தில் என் சுண்டு விரலில் 8 தையல்கள். எனக்கு வேலை பிடிக்கவில்லை , சவுதியில் இருக்கவும் பிடிக்கவில்லை. வேலையிடத்தில் எல்லா பிலிப்பினோக்களும் சக பிலிப்பினோக்களுக்கு சாதகமாகவே நடந்து கொண்டார்கள்(இயல்புதானே) . என் ராஜினாமா கடிதத்தை தயாரித்து(8 பக்கங்கள்)அனுப்பினேன். ஒரு மாததில் வீடு திரும்பலாம் என கூறினார்கள். சவுதியை விட்டு வெளியே போவதற்கும் விசா வாங்க வேண்டும் (Exit Visa).


என் மனதில் சவுதி வந்ததிலிருந்து ஒரு ஆசை இருந்தது. " மாட்டிக் கொள்ளாமல் திருட வேண்டும்". சிறு வயதில் பல தடவை வீட்டில் திருடியிருக்கிறேன். எல்லாம் சில்லறைகள். அதிக பட்சம் 10 ரூபாய். வீட்டில் திருடி பல தடவை பிடிபட்டு நிறைய அடி வாங்கியிருக்கிறேன் அம்மாவிடம். ஆனால் இந்த முறை வெளியே திருட வேண்டும் அதுவும் மாட்டிக் கொள்ளாமல். ஒரு மாதம் முயற்சி செய்தேன், முடியவில்லை. கடைசி நாள், யான்புவில் ஒரு கடையில் Rexona Roll on perfume ஆட்டையை போட்டேன். சிறியதாக இருந்ததால் சுட முடிந்தது. ஏதோ பெரிய காரியத்தை சாதித்து முடித்தது போல் இருந்தது. எனக்கு நானே பெருமை பட்டுக் கொண்டேன். மாட்டியிருந்தால் கையை இழந்திருப்பேன்.
எதை செய்யாதே என்று கடுமையாக கூறுகிறோமோ அதைத் தான் மனம் செய்யத் தூண்டுகிறது.


24 மணி நேரம் பேரூந்தில் பயணம் செய்து திரும்பவும் தமாம் வந்தேன். அங்கிருந்து மும்பை வந்தடைந்தேன். இரண்டு நாட்கள் அக்கா வீட்டில் இருந்து விட்டு சிவகாசி வந்தடைந்தேன். சிவகாசி நண்பர்கள் எல்லோரும் சிறு வயது முதல் பழக்கம். சேர்ந்து செய்யாத சேட்டைகள் கிடையாது. அதைப்பற்றி தனியாக " சிவகாசி ஆட்டம்" எழுதலாம். வந்த மறுநாள், ராஜபாளையம் அருகில் இருக்கும் அய்யனார் அருவிக்கு சிவகாசி நண்பர்களுடன் செல்வதாக திட்டம்.


காலையில் 10 மணிக்கு சிவகாசியிலிருனந்து கிளம்பினோம். ராஜபாளையத்தில் வாங்க வேண்டியதை வாங்கி கொண்டு மேற்கு மலை தொடருக்குள் சென்றடைந்தோம்.
மலையினுள்ளே 2 கிலோமீட்டர் நடந்து ஒரு அருவியை அடைந்தோம். ரம்யமான இடம். அருவி, தடாகம், நடுவில் ஒரு பெரிய பாறை. சாப்பிடவும் குடிக்கவும் சுற்றி வைத்துக்கொண்டு, அருவியில் குளியல், தடாகத்தில் ஒரு நீச்சல், ஒரு ரவுண்டு ஊத்துதல். அந்த ரம்யமான நேரத்தில் நண்பன் இளங்கோ , டேய் மாப்ளே.. சவுதி எப்படி இருந்தது என்றான்.

அதற்கு நான், சொர்க்கம் இங்குதான்டா இருக்கிறது. சவுதி வாழ்க்கை என்பது " Parrot in a golden cage".



சவுதி ஆட்டம் முடிந்தது.....

Sunday, September 2, 2007

சவுதியில் நாய் கறி - சவுதி ஆட்டம்-4

யான்பு பாலைவனத்தில் கோடையில் மிகவும் கடுமையான வெயில். சிவகாசிகாரனுக்கு வெயில் ஒன்றுமில்லைதான். ஆனால் வெயிலுடன் சில நேரம் பாலைவன புயல் அடிக்கும் போதுதான் மரண வேதனை. பகல் வேளையில் முன்னால் பத்தடி தூரம் தான் தெரியும். எங்கும் Brown கலர் மணல் மயம். உடம்பில் ஒரு இடம் கூட வெளியே தெரியாது. கண்ணுக்கு கண்ணாடி. தலை, காது, கழுத்துக்கு அரபியர்கள் அணியும் 'கேஃபியா' ( Keffiyah - head scarf ) வை சுற்றியிருந்தாலும் வாயில் மண் நறநறக்கும். மூக்கு, காதுக்குள் இருக்கும் மண்ணை வைத்து வீடு கட்டிவிடலாம். இந்த இயற்கை சீற்றத்தை சமாளிக்க ஏற்ற உடையைதான் அரபியர்கள் அணிகிறார்கள் என்பது என் எண்ணம். மேலிருந்து கீழே வரை பட்டன் இல்லாத ஒற்றை ஆடை. தலைக்கு ஒரு துணி. அதை தலையோடு பிடித்து வைக்க ஒரு வட்டு. தொழுகைக்கு செல்லுமுன் காது, மூக்கு கழுவுவது பாலைவன புயலால்தான் என்பது என் எண்ணம்.

நிறைய பிலிப்பினோ மக்கள் பழக்கமானார்கள். வார விடுமுறை நாளில் ஒரு நாள் என்னிடம் வந்து ' சீனி, கடலில் மீன் பிடிக்க போகிறோம் வருகிறாயா? ' என்றார்கள். எனக்கு கடலில் மீன் பிடிக்கத் தெரியாதே!! என்றேன்.சும்மா வா! கடலில் குளிக்கலாம், சாயங்காலம் camp fire இருக்கும், நல்ல வேடிக்கையாக இருக்கும் என்றார்கள். நானும் அவர்களுடன் கடலுக்குச் சென்றேன்.

எனக்கு தெரிந்த கடல், ராமேஸ்வரம் கடல் மட்டுமே। கல்லூரி நாட்களில் ஒரு தடவை "பாடு" க்கு சாவக்கட்டி என்ற அந்தோணியுடன் சென்றிருக்கிறேன். சாவக்கட்டி மீனவராக வாழ்க்கையை ஆரம்பித்தார். பின்பு கடத்தல் தொழிலில் ஈடுபட்டு 'உள்ளே வெளியே' என்றிருந்தார். பின்பு திருந்தி வாழ்ந்து ஒரு சாலை விபத்தில் இறந்துவிட்டார் சமீபத்தில். அவருடன் ஒரு இரவை கடலில் கழித்ததில் புதிய அனுபவம். எங்கு பார்த்தாலும் இருட்டு. தூரத்தில் சில வெளிச்ச புள்ளிகளை காண்பித்து ' அதுதான் இலங்கை' என்றார். வலையை கடலில் போட்டு மணிக்கணக்காக கடலை அரித்து எடுப்பார்கள். அது ஒரு பாடு. ஆக மொத்தம் ஒரு இரவுக்கு இரண்டு பாடுதான். பிடித்த மீனை சூடாக உள்ள எஞ்சின் exhaust குழாயில் வேக வைத்து உப்பு, மிளகாய் பொடி போட்டு சாப்பிட்டது நல்ல அனுபவம்.


பிலிப்பினோக்கள் எட்டு பேர், நானும் என் அறை நண்பர் ஜோசப் மற்றும் ஒரு கொழு கொழு நாய்.முதன் முதலில் வித்தியாசமான தூண்டில்களைப் பார்த்தேன். நான் எதிர்பார்த்த கடற்கரை அல்ல. நிழலில் ஒதுங்க இடம் கிடையாது. கண்ணுக்கெட்டியவரை யாரும் இல்லை. வெயில் 45 டிகிரி செல்சியஸ். மீன் பிடித்து எதுவும் சேர்காமல் சுட்டு ' சாப்பிடு, சாப்பிடு' என்றார்கள். ஏண்டா வந்தோம் என்றாகிவிட்டது. சாயங்காலம் ஆனது. ஆட்டம் ஆரம்பமானது.

முதலில் விறகு போட்டு தீ மூட்டினார்கள். ஒரு கூட்டம் தனியாக ஒதுங்கியது. இன்னொரு கூட்டத்தில் நான். Campல் தயாரித்த சாராயத்தைக் பெப்சியில் கலந்து கொண்டு வந்திருந்தார்கள். இதை நான் எதிர்பார்க்கவில்லை. தெரிந்திருந்தால் வந்திருக்கவே மாட்டேன். பெப்சி குடித்துக் கொண்டே தீ மூட்டினார்கள். ஒரு மணி நேரம் கழித்து தனியாக போன கூட்டம் திரும்பியது. கையில் ஒரு கோணிப்பை. முதலில் எதுவும் புரியவில்லை. அவர்களுக்குள் தகாலுவில்(பிலிப்பினோ மொழி) பேசி சிரித்துக்கொண்டார்கள். கோணியை திறந்து தோல் உரித்த நாயை வெளியே எடுத்து போட்டார்கள்.

அதன்பிறகு நடந்தது என் வயிற்றைப் பிறட்டியது. நாயின் நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதி வெற்றிடத்தில் அரிசியை போட்டு அடைத்து நூல் போட்டு தைத்து விட்டார்கள். தலையில்லாத நாயை camp fireல் சுட ஆரம்பித்தார்கள். என் வயிற்றை சரி செய்ய நானும் கொஞ்சம் 'பெப்சி' குடித்துக் கொண்டேன். கொழுப்புடன் சேர்ந்து அரிசி வெந்து சோறாக மாறியதை எல்லோரும் சாப்பிட ஆரம்பித்தார்கள். நாய் கறி ரெடி. நானும் கொஞ்சம் ருசி பார்த்தேன். தண்ணி உள்ளே போன பின்பு நாயாவது பேயாவது.. நன்றாக இருந்தது. சவுதியில் நாய் சாப்பிட்ட அனுபவம் பின்பு கொரியாவில் இருந்தபோது கை கொடுத்தது.சவுதியில் alcohol , நாய் சாப்பிடுவது "ஹராம்" (பாவம்). பிடித்தால் கடுமையான தண்டனை. செய்யக் கூடாததை செய்து பார்ப்பதுதான் thrill.. (மாட்டாதவரை).


சவுதி ஆட்டம் தொடரும்....

Thursday, August 2, 2007

சவுதி ஆட்டம் - 3

ஒட்டக மேய்ப்பர், தமிழில் பேசியது எனக்கு பயங்கர ஆச்சரியம். என்னை மலையாளியென நினைத்து விட்டார். ஒட்டக மேய்ப்பருக்கு 20 வயது இருக்கும். சவுதி வாழ்க்கையைப் பற்றி கேட்டேன். மடை திறந்த வெள்ளம் போல் பேசினார். புதுக்கோட்டை அருகில் ஒரு கிராமம்தான் அவருடைய பூர்வீகம். சவுதி வந்து 5 வருடங்கள் ஆகிவிட்டது. முதலில் வரும்போது "விவசாய வேலை" என்று சொல்லித்தான் agent அனுப்பியுள்ளார் ஒரு கும்பலுடன். ஆனால் கொடுத்ததோ ஒட்டகம் மேய்க்கும் வேலை. இவருடைய நண்பர்களுக்கு ஜெட்டா (Jeddah) துறைமுகத்தில் பளு தூக்கும் வேலை. அதற்கு ஒட்டகம் மேய்ப்பது பரவாயில்லையென அவருக்கு அவரே சமாதானப்படுத்திக் கொண்டார்.


அவருடைய அரபி முதலாளிக்கு சுமார் 100 ஒட்டகம். பாலைவனம் உள்ளே கூடாரம் போட்டு தங்கி ஒட்டகம் மேய்க்க வேண்டும். வாரம் ஒரு நாள் அரபி சாப்பாட்டுக்கு தேவையான அரிசி, உப்பு, புளி........ கடிதம், குடிதண்ணீர் கொண்டுவந்து கொடுத்து விடுவாராம். மாதம் ஒரு தடவை மருத்துவர் ஒட்டகங்களுக்கு ஊசி போட வருவார். சில தடவை குடும்பத்துடன் வந்து கூடாரம் போட்டு தங்கி செல்வதுண்டு. வாரம் ஒருமுறை ஒட்டகங்களை வேறு இடங்களுக்கு மேயவிட வேண்டும். அப்போது கூடாரத்தை கழற்றி ஒட்டகத்தில் வைத்து எடுத்துச் செல்ல வேண்டும். அப்படி போகும் போது அருகில் இருக்கும் கிராமங்களில் உள்ள உணவகத்தில் சாப்பிடுவது அவருக்கு பெரிய சந்தோஷம். ஒரு மலையாளியை சந்தித்து தமிழில் பேசினால் மிக பெரிய சந்தோஷம். அவருடைய அரபி முதலாளியைப் பற்றி உயர்வாக சொன்னார். அவருக்கு இருக்கும் தலையாய பிரச்சனை " பாலைவன புயலும் பம்பாய் விமான நிலைய அதிகாரிகளும்" தான்.

பாலைவன புயலைப் பற்றி கதை கதையாக சொன்னார். பம்பாய் விமான நிலைய அதிகாரிகள் இவரிடம் ரூ 2000 வசூலித்ததை (கொள்ளையடித்ததை) கூறி மிகவும் வருத்தப் பட்டார். நானும் பாலைவன புயலையும் பம்பாய் விமான நிலைய அதிகாரிகளையும் சந்தித்தேன்.


பின்பு அவரிடம் விடைபெற்று பயணத்தை தொடர்ந்தேன். மதினா அருகே வரும்போது சாலையில் வழிகாட்டி பலகையில் 'Muslims', ' Non-Muslims' என போட்டிருந்தது. முஸ்லிம் அல்லாதவர்கள் மதினா ஊருக்குள் நுழையமுடியாது. எங்கள் பேருந்து வெளிச் சாலையிலேயே மதினாவை கடந்தது.


சாயங்காலம் யான்புக்கு வெளியே உள்ள சிமெண்ட் கம்பெனிக்கு சென்றடைந்தோம். செங்கடல் கடற்கரை ஓரத்தில் பாலைவனத்தில் பழைய சிமெண்ட் ஆலைக்கு அருகில் புதிய சிமெண்ட் ஆலை கட்டிக் கொண்டிருந்தார்கள். அருகிலேயே camp. ஜுபைல் (Jubail) வேலையை விட இங்கு பரவாயில்லை. ஒரே மாதத்தில் எல்லோருடனும் நன்றாக பழகிவிட்டேன். பழைய சிமெண்ட் ஆலையில் வேலை பார்க்கும் ஒரு அதிகாரியுடன் 2 வாரம் பழக்கம். பெரிய post ல் இருந்தார். அடிக்கடி என் கட்டுமான இடத்திற்கு (construction site) வருவார். தமிழ் காரர்தான் ஆனால் தமிழில் பேசவில்லை. சிமெண்ட் ஆலையில் பொறியாளர் வேலை வாங்கித் தருகிறேன் என அவராகவே கூறினார். ஒரு நாள் என் தோளில் கை போட்டு பேசினார். மறுநாளில் இருந்து என்னுடன் பேசுவதையே நிறுத்தி விட்டார். ஏன் என்பதை உங்கள் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன்.


நிறைய தமிழ் மக்கள் பழக்கமானார்கள். வாரம் ஒரு நாள் (வியாழக்கிழமை) சிற்றுந்தில் அருகில் இருக்கும் யான்புவுக்கு அழைத்துச் செல்வார்கள். அந்த நேரம் தான் shopping மற்றும் ஹோட்டல் சாப்பாடு. சாயந்திரம் இரண்டு தொழுகை இருப்பதால் நிறைய நேரம் சும்மா தான் உட்கார்ந்திருக்க வேண்டும்.

ஐந்து வேளை தொழுகை நேரத்தில் எல்லா கடைகளும் பூட்ட பட வேண்டும். சாப்பிடும்போது, முடிவெட்டும் போது தொழுகை நேரத்தில் மாட்டினால், பாதியிலேயே வெளியே அனுப்பிவிடுவார்கள். பெரிய கடைகளை அடிக்கடி மூடி திறக்க முடியாதென்பதால் திறந்தே போட்டுச் செல்வார்கள். மத தலைவர் கம்புடன் காரில் வலம் வருவார். முஸ்லிம்கள் கண்டிப்பாக தொழுகைக்குச் செல்ல வேண்டும் இல்லையென்றால் பின்புறத்தில் ரெண்டு அடி கிடைக்கும்.

முஸ்லிம் அல்லாதவர்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனால் தொழுகை நேரத்தில் அமைதியாக ஓரத்தில் அமர்ந்திருக்க வேண்டும். தண்ணீர் குடிப்பதோ, புத்தகம் படிப்பதோ, தொலைபேசியில் பேசுவதோ கூடாது. ஒரு தடவை என் அறை நண்பர் ஜோசப் பொது தொலைபேசியில் பேசும் போது பிடித்து சென்று விட்டார்கள். நண்பர் ஆங்கிலத்தில் பேச, மத தலைவர் அரபியில் பேச இரண்டு பேருக்கும் ஒன்றும் புரியாமல், கடைசியில் தொழுகை முடியும் வரை இருக்க வைத்து எச்சரித்து அனுப்பி விட்டார். ( மத தலைவர் தொழுகைக்குச் செல்லவில்லை என்பது வேறு விஷயம்) அதிலிருந்து கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்தோம்.

நேரம் சரியில்லையென்றால் எங்கு ஏறினாலும் நாய் கடிக்கும். மின்சார கம்பத்தில் மேலே ஏறி உட்கார்ந்திருந்தாலும் அங்கும் வந்து கடிக்கும். ஒரு நாள் நான், மற்றும் இரண்டு மலையாள நண்பர்கள் இதே போல் யான்புவுக்குச் சென்றோம். தொழுகை நேரம் ஒரு ஓரமாக ஒரு திண்டில் அமர்ந்தோம். அருகில் சில வீடுகள், சிறு பையன்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அமர்ந்திருந்தபோது ஒரு அரபி எங்களிடம் வந்தான்.

" ஸலா, ஸலா' என்றான். ( "தொழுகை நேரம்" என்றான்). என்னுடன் வந்த மலையாள நண்பர் ரஞ்சித்

" மாஃபி ஸலா" (தொழுகை இல்லை/கிடையாது) என்று அரைகுறை அரபியில் கூறினார்.

கேட்டு போனவன் அருகில் விளையாடிக் கொண்டிருந்த பையன்களிடம் ஏதோ அரபியில் கூறினான். சிறிது நேரத்தில் 4-5 பையன்கள் எங்களிடம் வந்தார்கள். ஒருவன் தண்ணீர் விளையாட்டுத் துப்பாக்கி வைத்து "புஸ் புஸ் " என்று என் முகத்தில் தண்ணீர் பீய்ச்சி அடித்தான். மற்றொருவன் நண்பரை சிறு கயறு வைத்து அடித்தான். நாங்கள் எழுந்து நடக்க ஆரம்பித்தோம். அரபியில் கத்திக் கொண்டு என்னைப் பின் தொடர்ந்து வந்து தண்ணீர் அடித்தான். எனக்கோ பயங்கர கோபம். ஆனால் அரபி/அரபி பையன்களை அடித்தால் நாம்தான் கம்பி எண்ண வேண்டும். அடிக்கடி திரும்பி அடிப்பது போல் கை ஓங்கினதினால் கொஞ்சம் பயந்து பின் வாங்கினான். இருந்தாலும் என் சட்டை பாதி நனைந்துவிட்டது.



'நான் ஆட வேண்டிய மைதானம் இதுவல்ல' என்ற முதல் விதை மனதில் விழுந்தது.



சவுதி ஆட்டம் தொடரும்....