Sunday, May 19, 2019

ஒரு திருட்டுக் கதை


மனோகர் பலசரக்குக் கடை முன் பைக்கை சைடு ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினான். மனோகர் கொஞ்சம் சுமாரான உயரம், மிடுக்கான நடை, நேர்த்தியாக வாரப்பட்டத் தலைமுடி, எல்லோரிடமும் பணிவாகப் பேசுவான். அதே நேரத்தில் கண்டிப்பும் காட்டுவான்.
மனோகருக்கு தென்காசிக்கு அருகில் இருக்கும் சுந்தரபாண்டியபுரம் தான் சொந்த ஊர். திண்டுக்கல் பழனி ரோட்டில் இருக்கும் மருந்து கம்பெனியில் வேலை. ஊருக்குள் பேச்சலருக்கு வீடு கிடைப்பது கடினம் என்பதால் ஊரின் ஒதுக்குப்புரமான அரசாங்க காலனியில் வீடு வாடகை எடுத்துத் தங்கியுள்ளான்.

“தம்பி! இந்த லிஸ்ட்ல உள்ளதப் போட்டு வை, அரை மணி நேரத்தில திரும்பி வருவேன்” என்றான் மனோகர், கடைப்பையனிடம் சீட்டை நீட்டியபடி. 

“ரா மனோகர், பாக உன்னாரா? “எனத் தெலுங்கில் வினவினார் திருப்பதிசாமி கல்லாவில் இருந்தபடி.

  திருப்பதிசாமிக்கு பலசரக்குக் கடை தான் முதன்மைத் தொழில். ஊருக்கு வெளியே கடை இருப்பதால் அதிக வியாபாரம் ஆவதில்லை. அதனால் டீக்கடை, வீடு புரோக்கர், என்பது பகுதி நேரத் தொழில்.

“அண்ணே! நல்லா இருக்கேண்ணே வீட்டு வேலைக்கு ஆள் கேட்டிருந்தேனே” என்ற மனோகரை இடைமறித்து, 

“சொல்லியிருக்கேன் மனோகர், வேடசெந்தூருக்குப் பக்கத்ல இருக்கும் கிராமம்தான் பையனுக்கு. நம்ம ஆள்தான், மணவாடுதான். ரொம்ப ஏழைபட்டக் குடும்பம். ஏற்கனவே லெட்டர் போட்டிருந்தேன். இன்னைக்குக் காலேலதான்  அவனோட அம்மா கடைக்கு வந்திருந்தது. அவர்ட்ட  கொஞ்சம் அட்வாண்சும் கொடுத்தனுப்பிருக்கேன்.  ரெண்டு நாள்ள  வந்துடுவான். கவலைப்படாதே..”என்றார் திருப்பதிசாமி. 

“சம்பளம் என்னன்னு சொல்லீட்டீங்களா? “

“சொல்லிட்டேன் மனோகர்.” கொஞ்சம் இடைவெளி விட்டு “ நமக்குக் கொஞ்சம் பார்த்து செய்ங்க” என்று மெல்லிதாகச் சிரித்தார் திருப்பதிசாமி.

“மணவாடு, மணவாடு ன்னு சொல்லிகிட்டே காரியத்தில் கண்ணாருக்கிறார்” என்று தனக்குள் புலம்பிக்கொண்டே ஹொண்டா பைக்கை உதைத்துக் கிளம்பினான் மனோகர், வீட்டிற்கு.

திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் சாலையில் ரயில் தண்டவாளத்தை ஒட்டியபடி இருக்கும் குடியிருப்புகள். ரயில் தண்டவாள மறுபுறம் விவசாய நிலங்கள் மற்றும் தோப்புகள். தமிழக அரசு தன் ஊழியர்களுக்காக குறைந்த விலையில் கட்டிக் கொடுத்த வீடுகளில் இன்னும் பாதி வீடுகள் காலியாகவே இருந்தன. கல்லூரி மாணவர்களும், திருமணமான/ ஆகாத பேச்சிலர்களும் ஆங்காங்கே வீடு வாடகை எடுத்துத் தங்கியிருந்தனர். குடியிருப்புக்கு அருகில் இருக்கும் ஒரே டீக்கடை மற்றும் பலசரக்குக் கடை திருப்பதி சாமியோடது தான். அவர்தான் இங்கிருக்கும் பல பேசேலருக்கு கார்டியன்.

மனோகரின் வீடு ரயில் தண்டவாளத்தை ஒட்டி இருந்தது. இரண்டு அறைகள் கொண்ட வீடு. ஒரு சமையலறை. எல்லா பொருட்களும் எல்லா இடத்திலும் இருந்தன. பாட்டைச் சத்தமாக அலறவிட்டபடி கணக்குவழக்கு பார்த்துக் கொண்டிருந்தான் மனோகர். வாசலில் தட தடவென பைக் சத்தம் கூடவே செந்தில் சத்தம். 

“என்ன மனோகர், சீக்கிரம் வந்த மாதிரி தெரியுது?” செந்திலின் குரலில் உற்சாகம் தெறித்தது.
செந்திலுக்கு கோவை அருகிலுள்ள சூலூர் தான் சொந்த ஊர். ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் வியாபாரம். பலசரக்குக் கடை திருப்பதிசாமியால் மனோகருடன் கடந்த ஒரு வருடமாக ஒரே வீட்டில் வாசம். செந்தில் எதையும் திட்டமிட்டு நேர்த்தியாகச் செய்யும் விதம் மற்றும் பணத்தில் கறாராக இருப்பதால் மனோகருடன் அடிக்கடி உரசல் ஏற்படுவதுண்டு. 

“ஆமா! செந்தில், இன்னிக்கு வர வேண்டிய மருந்து லோடு வரல. கொஞ்சம் ப்ரீ தான் இன்னைக்கு” 

கொஞ்சம் இடைவெளி விட்டு

“புது படம் நாகா தியேட்டரில் வந்திருக்கு ரெண்டாவது ஆட்டம் (second show) போலாமா? என்ற மனோகரைக் கவனிக்காமல் கொஞ்சம் யோசித்துவிட்டு,

 “என் பைக்கில க்ளட்ச் சத்தம் ஏதோ வருது, உங்க பைக்ல போலாமா?” என்றான் செந்தில், மனோகரை பார்த்து.

“சரி. ஆனா எனக்கு டிச்கெட் நீங்க போடுங்க” என்றான் மனோகர் புன்முறுவலுடன். சில வினாடிகள் யோசித்துவிட்டு “போலாம்” என குளிக்கச் சென்றுவிட்டான் மனோகர்.
சிறிது நேரம் கழித்து இருவரும் கிளம்பினார்கள். 

“மனோகர் ஒரு கை பிடிங்க வண்டிய உள்ள எடுத்து வச்சிடலாம்” என்ற செந்திலுக்கு பலகையை எடுத்து படியில் வைத்து வண்டியை பின்னாலிருந்து தள்ளி வீட்டினுள்ளே தள்ளினான் மனோகர்.

இரண்டாம் ஆட்டம் சினிமா முடிய இரவு 12.30 ஆயிற்று. தியேட்டரைவிட்டு வெளியே வரும் போது மழைத் தூறியது. “அடடா! கொட எடுத்துட்டு வரலியே ” என்று வருத்தப்பட்ட செந்திலுக்கு “நம்மட்டதான் குடையே இல்லீயே” என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தான் மனோகர்.

மழை நச நசவென பெய்து கொண்டிருந்தது. தூறலுக்குப் பயந்து பல பேர் வாகன காப்பகத்திலே நின்று கொண்டிருக்க மனோகரும் செந்திலும் பைக்கில் கிளம்பினார்கள். வீட்டருகே வந்தபோது கோவை எக்ஸ்பிரஸ் கடந்து சென்றது. வாசலில் வண்டியை நிறுத்தும்போதுதான் இருவரும் வீடு திறந்து கிடைப்பதைக் கவனித்தார்கள்.

“என்ன மனோகர் வீட்டப்  பூட்டலியா?” என்றான் செந்தில்.

“இல்லையே பூட்னேனே” என்றபடி பைக்கை நிறுத்தினான் மனோகர்.

திறந்து கிடந்த வீட்டினுள் நுழைந்தார்கள். வீட்டினுள் வெளிச்சமில்லை. சுவிட்ச் போட்டதில் விளக்கு வெளிச்சம் வீட்டை நிரப்பியது. வீட்டினுள் ஒன்றுமில்லை. கிட்டதட்ட எல்லா பொருட்களுமே திருடு போய்விட்டது. இதை உணர்வதற்கு இரண்டு பேருக்கும் சில வினாடிகள் பிடித்தன.


சமையலறையில் சமையற் பாத்திரங்களைத் தவிர எல்லா பொருட்களையும் திருடிச்சென்றுவிட்டார்கள். கொடியில் இருந்த துணிகள் எதுவும் இல்லை. ஊருக்கு எடுத்துச் செல்லும் பெட்டிக்குள் உள்ளாடைகள் முதல் எலக்ரானிக்ஸ் பொருட்கள் வரை எல்லாவற்றையும் உள்ளே வைத்து எடுத்துச் சென்றுவிட்டார்கள். தொலைகாட்சி பெட்டி போன்ற பெரிய பொருட்கள் அப்படியே இருந்தன. முக்கியமாக செந்திலின் பைக்கும் திருடுபோய்விட்டது.

“மனோகர், வீடு திருடு போச்சு” என்ற செந்திலுக்கு எந்த வித ரியாக்சன் காட்டவில்லை மனோகர். சிறிது நேரம் அங்கே அமைதி நிலவியது. இருவரும் ஒருவரையொருவர் குற்றம் சொல்லவில்லை. இந்த நடுநிசியில் யாரைக் கூப்பிடுவது, எங்கு போய் யாரிடம் புகார் பண்ணுவது எனத் தெரியவில்லை.

“மனோகர் நீங்கள் திருப்பதிசாமிய பார்த்து போலீஸ்ல புகார் கொடுத்துட்டு வாங்க. நான் இங்கயே இருக்கிறேன்” என்றான் செந்தில்.

மனோகர் திருப்பதிசாமியைப் பார்க்க போய்விட்டான். செந்தில் அடுத்த வீட்டைத் தட்டினான். அடுத்த வீட்டில், அருகில் இருக்கும் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இரண்டு பேர் தங்கியிருந்தார்கள். செல்வின் கதவை திறந்து மலங்க மலங்க விழித்தான். 

“எதுவும் சத்தம் கேக்கலியே” என்று உள்ளிருந்துபதில் சொல்லிக்கொண்டே சுகுமார் தூக்கக் கலக்கத்துடன் வந்தான்.

மூன்று பேரும் வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்தார்கள். உடைந்த பூட்டு மட்டும் கிடைத்தது அருகில் இருந்த வாய்க்காலில். இரவு ரோந்து வரும் கூர்கா அல்லது போலீஸ் யாராவது வருகிறார்களா எனச் சுற்றி விட்டு வருகிறேன் என்று சைக்கிளில் கிளம்பி போனான் சுகுமார். என்ன செய்வதென்று அறியாமல் இருக்கும் போது, ஒரு பேனாவும் பேப்பரும் கொண்டுவந்து கொடுத்தான் செல்வின்.

என்னவெல்லாம் பெட்டியில் இருந்தது என மனக்கண்ணில் ஓட்டிப் பார்த்து திருடு போன பொருட்களை எழுத ஆரம்பித்தான் செந்தில்.

அடுத்து அரை மணி நேரத்தில் சுகுமார் திரும்பி வந்தான். பின்னால் இரண்டு போலீஸ்காரர்கள் சைக்கிளில். செந்தில் உற்சாகமானான். உள்ளே வந்து பார்த்தார்கள்.
செந்தில் கையில் இருந்தத் தாளை வாங்கிப் பார்த்தார் புலி வால் மீசை போலீஸ்காரர்.
“என்னப்பா சோப்பு, செருப்பையுமா திருடிட்டான்?”

“சார் அது ஒரு இத்துப்போன ரப்பர் செருப்பு. அதைக் கூட விட்டுவைக்கல” என அலுத்துக் கொண்டான் செந்தில்.

“ஒருவேளை தம்பியோட செருப்பு அளவுதான் திருட்டுபயலோட அளவோ. தம்பியோட சட்டை, பேன்ட் ஜட்டி கூட விட்டு வைக்கவில்லை. அதனால் தம்பி மாதிரி உடல் வாகு கொண்டவனாக இருக்கலாம்” என்றார் அருகில் இருந்த மீசையில்லா போலீஸ்காரர் பெருமையாக.

“என்னையா சொல்ற? விக்ரமாதித்தனுக்கு வேதாளம் சொன்ன நூறாவது கதை மாதிரி இருந்துட்டா?”. என்ன கதை எனக் கேட்டவருக்கு கதை சொல்லிக்கொண்டிருந்தார் மீசைக்கார போலீஸ்காரர்.

வாசலில் வந்து அமர்ந்தான் செந்தில். வெளியே மறுபடியும் தூற ஆரம்பித்தது.
திடீரென்று செந்தில் துள்ளிக் குதித்தான், "சார் என்னோட பைக் சத்தம் கேட்கிறது பக்கத்துத் தெருவில்" என்றான் செந்தில்.

“தம்பி கொஞ்சம் நல்லாக் கேளுங்க, வெளியே தூறுது" என்றார் புலிவால் மீசை போலீஸ்காரர்.

“எனக்கு ரொம்ப நல்லாத் தெரியும் சார், என் வண்டில கிளட்ச் சத்தம் கொஞ்சம் கேட்கும்” என்று சொல்லிக் கொண்டே வெளியே ஓடி பக்கத்துத் தெருவுக்குள் மறைந்தான்.

சிறிது நேரம் கழித்து வந்தவனிடம் விசாரித்தார் மீசைக்காரர். செந்தில் உதட்டைப் பிதுக்கி
“கேட்டுச்சு சார், ஆனா கண்டுபிடிக்க முடியல” 

“சார் திரும்பவும் கேட்கிறது” என்று திரும்பவும் ஓடியவனை எல்லோரும் வினோதமாகப் பார்த்தார்கள்.

எல்லோரும் காதை தீட்டிக் கொண்டு கேட்டார்கள். எதுவும் கேட்கவில்லை. செந்தில் திரும்பி  வந்தான். எல்லோரும் அமைதியாக இருந்தார்கள்.

மீசைக்காரர் “தம்பி,திருட்டு கொடுத்தனால காதுக்குள்ள உங்க வண்டிச் சத்தம் கேக்குது, சரியாகிடும்” என்றார் ஆறுதலாக.

“இல்ல சார், எனக்குக் கேக்குது” என திரும்பவும் இருட்டில் ஓடி மறைந்தான் பக்கத்து தெருவில்.

சிறிது நேரம் கழித்து வந்தவனை பரிதாபமாக பார்த்தார்கள் எல்லோரும்.

தூறல் நின்று வெறித்தது. ரோட்டில் நின்று கொண்டு பேசிக்கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருக்கும் போதே குதித்து குதித்து கத்தினான் செந்தில்.

“தூரத்தில வருவது என் பைக் சார் “எனக் கத்தினான். 

தூரத்தில் தெரு விளக்கு வெளிச்சத்தில் இரண்டு பைக்குகள் முன்னும் பின்னும் வேகமாக வந்து கொண்டிருந்தது.

"தம்பி சரியா சொல்லுங்க. அது உங்களோட பைக் தானா? " என்றார் மீசைக்கார போலீஸ்காரர்.

“சத்தியமாக என்னோடதுதான் சார்.”

“பின்னால வருவது? “

“சரியாத் தெரியல” என்றான் செந்தில்.

“அண்ணே! கொஞ்சம் முன்னால போய் கை காட்டி நிறுத்துங்க” என்றார் மீசைக்காரர் தன் சக போலீஸ்காரரிடம்.

"தம்பி நீங்க எல்லோரும் ஓரமாக நில்லுங்க” என்றார். பக்கத்து வீட்டு சுகுமார், செல்வினும் ஓரமாகத் தள்ளி நின்றார்கள். செந்தில், மீசைக்கார போலீஸ்காரர் அருகில் நின்று கொண்டான்.

இப்போது பைக் கொஞ்சம் தெளிவாகத் தெரிந்தது. முன்னால் வந்து கொண்டிருந்த செந்திலோட பைக்கில் இரண்டு பேர். பின்னால் வந்து கொண்டிருந்த பைக்கில் இரண்டு பேர். மிக அருகில் வந்துவிட்டது. 

மீசையில்லா போலீஸ்காரர் லத்தியை ஆட்டியபடி நிறுத்தச் சொல்லி கத்தினார். பைக் வேகம் குறைந்தது மாதிரி தெரியவில்லை. படு வேகமாக வந்து கொண்டிருந்தது. வேகம் குறையாததைக் கண்டு மிரண்டு ஒதுங்கினார்  மீசையில்லா போலீஸ்காரர். படு பயங்கர வேகத்தில் பைக் முதல் போலீசைக் கடந்தது. 

இதை கவனித்த புலிவால் மீசை போலீஸ்காரர் மறு நொடியே தாமதிக்காமல் தன் சைக்கிளை ரோட்டிற்குள் தள்ளினார். மிக பெரிய சத்தத்துடன் பைக் சைக்கிளில் மோதி சிதறியது. செந்தில் கண் முன்னே வண்டியில் வந்த இருவரும் காற்றில் பறந்து அருகில் இருந்த புதருக்குள் விழுந்து எழுந்து ஓடினார்கள்.

அதே நேரத்தில் பின்னால் வந்த பைக் படு பயங்கர சத்தத்துடன் கிரீச்சிட்டு நின்றது. உடனே மீசைக்கார போலீஸ்காரர் லத்தியை சுழற்றிக் கொண்டு நின்ற பைக்கை நோக்கி ஓடினார்.
 “அடிக்காதீங்க” என்ற சத்தத்தைக் கேட்ட செந்தில் ஓடிச் சென்று போலீஸ்காரரை தடுத்து.
“ சார் என் ரூம் மேட்” என்று தடுத்தவுடன் பெருமூச்சு விட்டார் மீசைக்காரர்.

பைக்கிலிருந்து மனோகரும் திருப்பதிசாமியும் இறங்கினார்கள். திருடர்களைத் தேடி இருட்டிற்குள் செல்லலாம் என செந்தில் சொன்ன போது போலீஸ் அவர்களைத் தடுத்தார்கள்.

“வேணாம் தம்பி! அவனுக கையில என்ன வச்சிருப்பாங்களோ , யார் கண்டது. பொருள் தான் வந்துருச்சே” எனச் சிதறிக் கிடந்த பொருட்களைக் காண்பித்தார். அவர் சொல்வதும் சரிதான் எனப் பொருட்களை சேகரிக்க ஆரம்பித்தான் செந்தில். 

மீசைக்கார போலீஸ் திருப்பதிசாமியை விசாரணை நடத்திக் கொண்டிருந்தார். திருப்பதிசாமி பேச ஆரம்பித்தார்.

“சார்! மனோகர் தம்பி வந்து விவரத்தைச் சொன்னதும் கரூர் ரோட்டு மேல இருக்கிற  எஸ் பி  ஆபீசுல புகார் கொடுத்துட்டு வந்துட்டுருந்தோம். நம்ம காலனிக்குள்ள நுழைஞ்ச போது எங்களுக்கு முன்னால செந்தில் வண்டியில இரண்டு பேர் போய்ட்டு இருந்தாய்ங்க. அவனுகளைத் துரத்த ஆரம்பிச்சோம். கிட்டதட்ட அரை மணி நேரமாக இந்த காலனிக்குள்ளார துரத்திக் கொண்டிருந்தோம். மழை வேற பெஞ்சுட்டு இருந்ததால எங்களால வேகமா வண்டிய ஓட்டவும் முடியல, அவனுகளைச் சரியா பாக்க முடியவுமில்லை. இந்தத் திருட்டுப் பசங்க  இந்தக் காலனிக்கு புதுசுன்னு நினைக்கிறேன். கடைசியில நம்ம வீட்டுக்கு முன்னால உள்ள ரோட்டுக்கே வந்துட்டாய்ங்க.” என்றார் திருப்பதிசாமி.

சிதறிக்கிடந்த பொருட்களை பொறுக்கிக்கொண்டிருந்த செந்தில் “சார் பாதி பொருட்கள் எங்களோடது  இல்ல” என்று செந்தில் கத்தினான்.

“ஒரு வேளை இன்னொரு வீட்டிலேயும் திருடியிருப்பாய்ங்களோ?” என்றார் மீசையில்லா போலீஸ்காரர் ஐயமாக.

“இருக்கலாம், கால நேரம் ஒத்து வருதே. ரெண்டு பேரும் முதல்ல இங்க வந்து திருடிட்டு இதே காலனிக்குள்ளார வேறு ஒரு வீட்டிலும் திருடிட்டுப் போம்போது  மனோகரும், திருப்பதிசாமியும் பார்த்திருக்கிறாங்க. அதுக்கப்புறம்  நம்மட்ட மாட்டிட்டாய்ங்க.” என்றார் மீசைக்கார போலீஸ்.

அடுத்து ஒரு மணி நேரத்தில் அங்கு  வந்த உயர் போலீஸ் அதிகாரி சைலேந்திரபாபு, போலீஸ்காரர்களை மிகவும் பாராட்டினார், சமயோசிதமாக முடிவெடுத்துப் பொருட்களை மீட்டதற்கு. திருடு போன பொருட்களை உடனே மனோகரிடமும் செந்திலிடமும் கொடுக்க உத்தரவிட்டார்.

“அண்ணே! ரொம்ப நன்றி,  உங்களுக்கு புது சைக்கிள் அடுத்த வாரம் வாங்கிக் குடுத்துடுறோம்” என்றான் செந்தில். 

 இரண்டு போலீசுக்கும் மிகுந்த மகிழ்ச்சி.  சிறிது நேரம் கழித்து போலீஸ்காரர்கள் கிளம்பிப் போய்விட்டார்கள். திருப்பதிசாமியும் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

“மனோகர் நீங்க அவனுகளைப் பாக்கலைனா என் வண்டி எனக்குக் கிடைச்சிருக்காது, ஒரு கை பிடிங்க வண்டியை தூக்கி உள்ளே வச்சிடலாம் “எனச் சொன்ன செந்திலுக்கு

“யாரும் இதைத் திருட மாட்டாங்க செந்தில்” என்றான் மனோகர் சிரித்தபடி.

வண்டி முன் பகுதி மிகுந்த சேதமடைந்திருந்தது. பூட்டில்லாத கதவை சாத்தி விட்டு வீட்டிற்குள் இரண்டு பேரும் பையிலிருந்த துணிகளை யாருடையது என பிரித்துக் கொண்டிருந்தார்கள்.
“மனோகர் இது உங்க சட்டையா?” என்ற செந்திலிடம் 

“ஒரு வேளை வேற வீட்டில திருடியதா இருக்கும்னு நினைக்கிறேன்" என்று மனோகர் சட்டையை வாங்கிப் பார்த்தான்.

"செந்தில் இது திருடனோட சட்டைன்னு நினைக்கிறேன், வண்டி பின்னால உட்கார்ந்திருந்தவன் உங்க சட்டையப் போட்டிருந்தான். அப்ப இது அவனோடதுதான்" என சட்டையை தூக்கி வீசினான் மனோகர்.

வீசியபோது ஒரு தாள் கீழே விழுந்தது.

நான்காக மடிக்கப்பட்டத் தாள். கடிதம் மாதிரி இருந்தது. பிரித்துப் படிக்க ஆரம்பித்தான் மனோகர்.

அன்புள்ள அக்கா, 

நலம். நலமறிய ஆவல். உன் மகனைப் பற்றிய கவலை என்னையும் மிகவும் வேதனை அடைய வைக்கிறது. இந்த வாரம் பாளையம்கோட்டையிலிருந்து வீட்டிற்கு வந்து விடுவான் எனச் சொன்னதை வைத்து, உன் மகனுக்கு ஒரு வேலை பார்த்து வைத்திருக்கிறேன்.

மாதச் சம்பளத்தை அவனிடம் கொடுக்க போவதில்லை. மாதக் கடைசியில் நீ வந்து வாங்கிக்கொள். தினமும் வீட்டைச் சுத்தப்படுத்தி, துணி துவைத்து, சமையல் பண்ணி வைக்க வேண்டும்.  அவனைப் பற்றி கவலைப்படாதே. இனி நல்லவனாக இருப்பான், வாழ்க்கையில் வெற்றி பெறுவான் என நம்புவோம். வீட்டு முகவரியை இணைத்துள்ளேன்.

இக்கடிதம் கண்டவுடன் அவனிடம் நல்லவிதமாக எடுத்துக் கூறி வேலைக்கு அனுப்பவும்.

மனோகர்
M 209, RM காலனி
திண்டுக்கல்

இப்படிக்கு
திருப்பதிசாமி


===============================================================
இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு

விளைவுகளைப் பற்றி நினைக்காமல் பிறர் பொருளைக் கவர்ந்து கொள்ள விரும்பினால் அழிவும் அத்தகைய விருப்பம் கொள்ளாதிருந்தால் வாழ்க்கையில் வெற்றியும் கிட்டும்.
=================================================================

Thursday, April 11, 2019

கவனக் குறைபாடு


“பத்து ஆண்டா ஏன் வேலைக்குப் போகல? interviewல கண்டிப்பா இந்தக் கேள்வியக் கேப்பாய்ங்க. இந்தக் கேள்விய எப்படி எதிர் கொள்வதுதான் மிகப்பெரிய கேள்வி” நேர்காணலுக்குப் புறப்பட்டுக்கொண்டே தன் கணவன் மாறனிடம் அங்கலாய்த்தாள் மலர்மதி.

மலர்மதி, மாறன் இணையர் அமெரிக்காவில் உள்ள கூபெர்டினோ நகரத்தில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தினர். இரண்டு குழந்தைகள், மூத்தவன் இளங்கோ, இளையவள் குழல். 

கூபெர்டினோ பள்ளி மாவட்ட அலுவலகத்தில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்திருக்கிறார். இன்று காலை ஒன்பது மணிக்கு நேர்காணலுக்கு அழைத்திருக்கிறார்கள். மலர்மதி சிங்கப்பூரில் வசிக்கும்போது வேலைபார்த்தார். பின்பு கடந்த பத்து ஆண்டுகளாக வேலைக்குப் போகவில்லை.

"அதுக்குத்தான் முதல்லயே சொன்னேன், உன் bio dataவில் பத்து வருசம் சிங்கைல வேல பாத்தா மாதிரி காமிக்கச் சொன்னேன். நீதான் அரிச்சந்திரனுக்குத் தங்கச்சியாச்சே", என்ற மாறன் ஒரு தகவல் தொழில்நுட்ப அலுவலகத்தில் வீட்டிலிருந்து வேலை பார்ப்பவன்.

“நான் என்ன உங்கள மாதிரி ITலயா இருக்கேன்! fake resume போட.” முகத்தில் லேசாக சினத்தைக் காண்பித்து "சமாளிக்க வேண்டியதுதான்" எனத் தன்னைத் தானே ஆற்றிக்கொண்டு நேர்காணலுக்குக் கிளம்பினாள் மலர்மதி. 

"ஸ்கூல் பக்கத்துல parallel parkingதான் இருக்கும். உனக்குத்தான் அது வராதே. அதனால பக்கத்துலே இருக்கிற ஆப்பிள் ஆபீஸ்ல கார நிறுத்திட்டுப் போ. உனக்குலாம் எப்படி driving license கொடுத்தாய்ங்களோ" என்றவனைக் கொஞ்சமும் கண்டுக்காமல் காரைக் கிளப்பி போக்குவரத்தில் கலந்தாள்  மலர்மதி. 

இந்த நேர்காணல்ல என்னத்தப் பேசணும், அதுவும் இந்த பத்து ஆண்டுகள் வேலை செய்யாததை பற்றி என்ன சொல்லவேண்டும் என்பதைச் சிந்தித்துக்கொண்டே காரைச் செலுத்தினாள்.

அமெரிக்காவின் கூபெர்டினோ நகரம் சிறு பனிப்படலத்துடன் மெதுவாக விழித்துக்கொண்டிருந்தது. சிவகாசியில் பயர் ஒர்க்ஸ் பேருந்து பக்கத்துச் சிற்றூர்களிலிருந்தது ஆட்களை அதிகாலையில் அள்ளிக் கொண்டு வருவதைப்போல, பக்கத்து ஊர்களிலிருந்து ஆட்களை அள்ளிக்கொண்டு சென்று கொண்டிருந்தது ஒரு ஆப்பிள்  நிறுவனப் பேருந்து.

கூபெர்டினோ நகரம் சாண்டா கிளாரா (சிலிக்கன்) பள்ளத்தாக்கின் ஒரு பகுதி, இந்தியர்களின் சொர்க்க பூமி. இந்தியர்கள் குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழர்கள் அதிகமாக வாழும் ஊர். முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை நிலப்பரப்புகள் அருகருகே இருக்கும் இடம். கூகிள், பேஸ் புக், ஆப்பிள், ஈபே போன்ற உலகின் மிகப்பெரிய கம்பெனிகளின் இருப்பிடம். அமெரிக்காவின் மற்ற பகுதிகளில்  நடக்கும் பனி, மழை, சுழற்காற்று போன்ற  இயற்கைப் பேரழிவு எதுவும் இல்லாத ஒரு இடம். என்ன ஒன்று அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படும்.

ஆப்பிள் தலைமைச் செயலகத்துக்குள் காரை நிறுத்திவிட்டு அருகில் இருக்கும் மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கு ஓட்டமும் நடையுமாக நடக்கத் துவங்கினாள்.  

வாழ்க்கை வேடிக்கையானது. சில நேரங்களில் கருணையே இல்லாமல் அடித்துத் துவைத்துப் போட்டுவிடுகிறது. 

வாழ்க்கையில் நிறைய சாதிக்க, பல வித கனவுகளுடன் முனைவர் பட்டம் முடித்தாள் மலர்மதி. திருமணமானபின்பு கணவனுக்கு சிங்கையில் வேலையென்பதால் சிங்கப்பூரில் குடிபுகுந்தாள். முதல் பையன் இளங்கோ பிறந்து ஒரு ஆண்டுக்குப்பின் தன் கனவைத் துரத்தத் துவங்கினாள், புது வேலையில்.

ஐந்தாறு ஆண்டுகள் உருண்டோடின. இளங்கோவிற்கு சிங்கையின் ஆங்கிலோ சைனீஸ்  பள்ளியில் இடம் கிடைத்ததால் அருகில் இருக்கும் தொடர்மாடிக் குடியிருப்பில் பத்தாவது மாடிக்குக்  குடிபெயர்ந்தார்கள். 

ஒருநாள் அலுவலகத்தில் இருக்கும்போது கைபேசியில்  அவசர அழைப்பு. பேசியது மாறன். 'இளங்கோ, வீட்டிலிருக்கும் கண்ணாடி டேபிள உடைச்சிட்டான், எப்படின்னு தெரியலே, கையெல்லாம் ரத்தம்'

அவசரமாக டாக்ஸி பிடித்து வீட்டிற்கு வந்தால், ஏற்கனேவே மருத்துவரிடம் அழைத்துச் சென்று மருந்து போட்டுத் திரும்பியிருந்தான் இளங்கோ, மாறனுடன். 

“உங்களால கொஞ்ச நேரம் கூட இவன பாத்துக்க முடியலையா?” என மாறனுக்குத் திட்டு.

“நான் என்ன பண்ணட்டும். இளங்கோ ஓவரா ஆட்டம் போடுறான், ஒரு எடத்துல நிக்கிறதில்லே. எப்பப் பாத்தாலும் ஓடுறான், சாடுறான். உக்காரச்சொன்னா உக்கார்றதில்ல, எப்பவும் தலைகீழதான் நிக்குறான். ஏன்டா உடைச்சன்னா  சீனத்துல ‘பூ சி தாவ்’கிறான் (எனக்குத் தெரியாது). உனக்குத்தான் இவனப் பத்தித் தெரியுமே.” என்றான் மாறன்.

“இவன் கெட்ட கேட்டுக்கு டப்பா டப்பாவா டாய்ஸ் வேற. அதுல விளையாட வேண்டியதுதானடா, டேபிள ஏன்டா உடைக்கிற. இவனுக்கு நிமிசத்துக்கு ஒரு விளையாட்டு சாமான் வேண்டியிருக்கு. மாத்திக்கிட்டே இருக்கான். ஓவர் சேட்டையா இருக்கு. டேய், வாலச் சுருட்டிட்டு இருக்கணும் இல்ல ஒட்ட நறுக்கிடுவேன்" எனக்  கண்ணை உருட்டி   மிரட்டினாள் மலர்மதி. 

“சின்ன வயசுல சேட்ட பண்ணலைனா பின்ன எப்பப் பண்ணுவாய்ங்க போகப் போக எல்லாம் சரியாயிடும். விடு. இதெல்லாம் பெரிசு பண்ணாத " எனத் தடுத்து நிறுத்தினான் மாறன்.

முதல் முதலில் இளங்கோ பற்றின கவலை தொற்றிக்கொண்டது மலர்மதிக்கு.

நாளாக நாளாக இளங்கோவைக் கையாள்வதே கடினமாக இருந்தது மலர்மதிக்கு. சொன்ன பேச்சுக்  கேட்பதில்லை. சொல்லுகிற எதையும் பின்பற்றுவதில்லை. ஒன்பதாவது வயதில் அவன் சேட்டை அதிகமானது. பள்ளியிலிருந்து வரச்சொல்லியிருந்தார்கள்.

மலர்மதியையும் மாறனையும் ஒரு அறையில் அமரச் சொன்னார்கள். குற்றப்பத்திரிக்கை படிக்கத் துவங்கினார்கள் ஒவ்வொரு ஆசிரியர்கள். 

முதலில் வந்தது ஆங்கில ஆசிரியர். 

"இளங்கோ படிப்புல சரிகிடையாது. நேத்து ப்ரேயர் முடிந்து வகுப்புக்கு போகும் வழியில குதிச்சி  குதிச்சி மேலே சட்டத்தத் தொடப் பார்க்குறான். He has to keep his hands and feet within himself” 

இதை ஒரு பொருட்டாகவே மலர்மதி எடுக்கவில்லை. ‘பிள்ளைகள் ஆடத்தான் செய்வார்கள் அவர்கள் என்ன ரோபோட்டா, அமைதியா இருன்னு சொன்னா அமைதியா இருக்க’ என நினைத்துக்கொண்டாள். 

அடுத்து கணக்கு ஆசிரியர் வந்தார். 

"இளங்கோ சில நேரம் கடினமான கணக்கக் கூட நல்லா போடுகிறான், சிலது புரியலைனா டெஸ்க்கு அடில படுத்துகிறான். இவனப்பாத்து  மத்தவங்களும் இப்படிச் செய்றாங்க."
‘புரியும்படி சொன்னா நல்லாப் போடப்போறான். பின்னே எதுக்கு இந்தக் குற்றச்சாட்டு’ என நினைத்துக்கொண்டாள். 

அடுத்து தமிழ் ஆசிரியர். 

"இளங்கோ நல்ல பையன்தான். மெதுவாகதான் கத்துக்கிறான். தமிழ்ல 'ஈ' எழுத்தை மாத்தி எழுதுறான். வீட்ல கொஞ்சம் சொல்லிக்குடுங்க. தேர்வு வைச்சா கேள்வியை முழுசா படிக்காம பதில் எழுதத் தொடங்குறான். முதல்ல கேள்வியை உள்வாங்கணுமா இல்லையா?" 

இந்தக்  கேள்வி மலர்மதி தலைக்குள்ளே ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தது. இளங்கோவைக் கூடுதலாகக் கவனிக்கத் துவங்கினாள். தமிழ் ஆசிரியர் சொன்னது சரியாகத்தான் இருந்தது. இளங்கோ கேள்வியை முழுமையாகப்  படிக்கும் முன்னே பதிலை எழுதத் துவங்குகிறான். இவன் ஏன் கேள்வியை முழுசாகப்  படிப்பதில்லை? அப்படி என்ன அவசரம்.  

அடுத்து வரும் தேர்விலும் இதே சிக்கல். மலர்மதிக்குச் சினம் தலைக்கேறியதில் இளங்கோவைச் சாத்தி எடுத்து விட்டாள். வழக்கம்போல மாறன் வந்து தடுக்க வேண்டியதாகிவிட்டது.

“மாறன், ஹி(he), ஷி(she), இட்(it) வந்தா டஸ்(does) வரும்னு ஆறு மாசமா சொல்லிக் குடுத்துட்டு வரேன். இவன் தலைக்குள்ளே ஏறமாட்டேங்குது. எந்த பாடத்திலும் இவன் மார்க் சரியில்லே. ஸ்கூலே இவன் மேல கம்ப்ளேன் பண்றாய்ங்க.  இவேன் என்னடான்னா கொஞ்சம் கூட அலட்டிக்காம கையிலே பேனாவ வச்சிட்டு ஆட்டிக்கிட்டே இருக்கான். வாத்தியார் புள்ளே மக்குனு சொல்லுற மாதிரி ஆகிடுமோ?” என ஓவென ஒப்பாரி வைத்தாள் மாறனிடம்.

புரியாதப்  புதிராகவே இருந்தான் இளங்கோ. வேலைப் பளுவில் அவனைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யாதவர்களாக இருந்தார்கள் மலர்மதியும், மாறனும்.

அதிகாலையில் பள்ளிக்குச் செல்லும் பேருந்துக்காகக் காத்துக் கொண்டிருந்தான் இளங்கோ. அவனைப் பேருந்தில் ஏற்றிவிட்டு வேலைக்குச் செல்வதற்காக மலர்மதியும் காத்திருந்தாள். அப்போதுதான் கவனித்தாள், இளங்கோவிடம் சாப்பாடுப்  பை மட்டும் இருப்பதை.
"டேய் ஸ்கூல் பேக் எங்கடா?" எனக்  குரலை உயர்த்தினாள். 

அப்போதுதான் இளங்கோவும் கவனித்தான், தன்னிடம் பள்ளிக்கு எடுத்துச் செல்லும் புத்தகப்பை இல்லையென்பதை. 

"போ, சீக்கிரம் வீட்டுக்கு ஓடிப்போய் பேக் எடுத்துட்டு வா" என விரட்டி விட்டாள்.
சிறிது நேரத்தில் மூச்சிரைக்க வியர்க்க விறுவிறுக்க புத்தகப்பையோடு திரும்பிவந்தான் இளங்கோ. 

"ஏன்டா இப்படி மூச்சிரைக்குது, லிப்ட்லதான போன?" எனக் கரிசனையோடுக் கேட்டாள் மலர்மதி. 

இல்லை எனத் தலையாட்டினான். 

பத்து மாடி ஏறி, பத்து மாடி இறங்கி வந்திருக்கிறான் எனத் தெரிந்தவுடன் மலர்மதிக்கு பயங்கரக் குழப்பம். நம்முடன் மின்தூக்கியில் வரும்போது நம்முடன்தானே வருகிறான். சிலநேரம் இவனுடைய பேச்சுக்கேற்ப அப்பாவும் மகனும் பத்து மாடி ஏறிவருவார்கள் சில நேரம் இறங்கி வருவார்கள். ஆனால் இந்த அவசர நேரத்திலும் இவன் ஏன் மின்தூக்கியைப்  பயன்படுத்தாமல் படியில் ஏறிப் போய் வருகிறான்.

"ஏன்டா லிப்ட்ல போகல?", என்றதற்கு எந்தப் பதிலும் வரவில்லை இளங்கோவிடமிருந்து.

“லிப்ட்ல யாராவது மூத்திரம் பெஞ்சு வச்சிருந்தாங்களா?”

இல்லை எனத் தலையாட்டினான்.

“லிப்ட்ல யாராவது உன்கிட்ட தப்பா நடந்துக்கிட்டாங்களா?”

இல்லை எனத் தலையாட்டினான்.

சிரித்துக்கொண்டே "பயமா?" என்றதற்கு ஆம் என்றான் இளங்கோ. 

மலர்மதிக்கு தூக்கி வாரிப்  போட்டது. வெளியே காட்டிக்கொள்ளாமல் “ஸ்கூல யாராவது லிப்ட் பேய் கதை  சொன்னார்களா?”

இல்லை எனத் தலையாட்டினான்.

“பின்னே ஏன் பயப்படுற”

“பூ சி தாவ்” என்றான் இளங்கோ, சீனத்தில்.

இளங்கோவைப்  பேருந்தில் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, வேலைக்குப் போகாமல் வீட்டுக்கு வந்து கணினியை உயிர்ப்பித்தாள்.

உயரம் போனால் ஏற்படும் பயம் இருக்குமோவென நினைத்து கூகுளில் தேடினாள். ‘மின்தூக்கிப் பயம்’ எனத் தேடும்போது 'பதட்டம் என்றால் என்ன?' என்பதைப் படித்தாள். அது கோளாறு பக்கத்தைப் படிக்கச் சொன்னது. கவனம், பற்றாக்குறை, மன இறுக்கம், மிகை திறன் எல்லாவற்றையும் படித்துக் குழம்பி மாறனையும் குழப்பினாள். இளங்கோவை மருத்துவரிடம் காண்பிக்கலாம் என முடிவு செய்து மருத்துவர் சாலினியை அணுகினார்கள்.

மருத்துவர் இளங்கோவைப்பற்றி எல்லாச் சம்பவங்களையும் கேட்டறிந்தார். மருத்துவர் இளங்கோவைச் சோதித்துவிட்டுச் சொன்னார் "இளங்கோவுக்கு இருப்பது கவனக் குறைபாடும் மிகைத் திறனும், (Attention Deficit and Hyper Activity) சுருக்கமாக ADHD"

“எதனாலே இது வருதுன்னு இன்னும் கண்டுபிடிக்கல. இது அதிகமாப் பையன்களுக்குத்தான் வரும். வகுப்பறைல தொந்தரவு செய்வதால் முதல்ல வகுப்பறைலதான் கண்டுபிடிப்பார்கள். ஆசிரியர்கள் முதலில் கண்டுபிடிப்பது குழந்தையின் அதிகப்படியான ஆற்றலைத்தான். கவனக் குறைபாடை கவனிக்கத் தவறிவிடுகிறார்கள்.

பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதம் ரொம்ப அதிகம். பெற்றோர் ஆசிரியர் இடையே நம்பிக்கை வரணும் முதல்ல. அப்பத்தான் குழந்தைகளுக்கு என்ன குறைபாடு, சிக்கல் இருக்குன்னு கண்டுபிடிக்க முடியும்.

மிகைத்திறன் இருக்கும் குழந்தைகளுக்கு பரந்து விரிந்த இடத்தில் விளையாட ஆசைப்படுவார்கள். லிப்ட் மாதிரி மூடப்பட்ட இடத்துல இருக்க விரும்பமாட்டார்கள். சில நேரம் பயப்படுவார்கள்.

இது பத்து சதவீத குழந்தைகளுக்கு மிகைத் திறன் இருக்கு. இதுக்கு எந்த சிகிச்சையும் கிடையாது. நாளாக நாளாகக் குறையலாம். ஆனா சிக்கல், இந்தக் கவனக்  குறைபாடுதான். 

கவனக்குறைபாடுதான் குழந்தைகளை மக்கு போல காட்டும். குடுக்குற இன்ஸ்ட்ரெக்சன பாலோவ் பண்ண மாட்டாங்க. படிச்சிருந்தாலும் கவனக் குறைபாடால கேர்லஸ் மிஸ்டேக்  பண்ணுவதால் மார்க் குறைவா வாங்குவாங்க. இதுக்கு ஒரே வழி, பொறுமையா சொல்லிக்கொடுக்கிறததுதான்.

சேட்டை பண்ணுனா மிரட்டுறது, கத்துறது, அடிக்கிறது இத எல்லாத்தையும் விட்டுட்டு, முதலில இவனுக்கு இருக்கிற குறைப்பாட்ட ஏத்துக்கிட்டு அவனோட சேர்ந்து அவனுக்கு உதவுங்க.

இளங்கோவுக்கு உங்கள் உதவி தேவை.” என்று பெரிய விரிவுரை ஆற்றி முடித்தார் மருத்துவர்.

மாறனிடம் கலந்து பேசி தான் வகித்து வந்த வேலையைத் துறந்தார். வாழ்வின் முழு நேரமும் இளங்கோவுக்கே அர்ப்பணித்தார். இந்நிலையில் மாறனுக்கு சிங்கையிலிருந்த வேலை அமெரிக்காவுக்கு மாற்றலாகி அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார்கள். இது ஒருவகையில் மலர்மதிக்கும் இளங்கோவுக்கும்  வசதியாகிப் போனது, பள்ளியின் அழுத்தம் இல்லாததால்.
கவனம்  ஒரு இடத்தில் குவியாமல் சிதறுவதால் எந்த ஒரு வேலையையும் முழுமையாகச் செய்யமுடிவதில்லை இளங்கோவால். இனிப்பு சாப்பிட்டால் இளங்கோவைத் தூங்க வைக்க சிரமமானதால் சாக்லட், இனிப்பு வகைகளைக் குறைத்து விட்டாள், எல்லோருக்கும்.

முயற்சி மற்றும் பிழை சோதனை மூலம் அவனுடைய கவனச் சிதறல்களைச் சரி செய்ய முற்பட்டாள் மலர்மதி. 

இவனுடைய ஆற்றலை வேறு ஏதாவது ஒரு செயலில் திருப்ப எண்ணினாள் மலர்மதி.
அப்படியென்றால் எந்தச் செயல் அதிகமான நேரம் கவனம் சிதறாமல் செய்கிறான் எனக் கவனித்தாள். பியானோ, செஸ் பழக தனி வகுப்பில் போட்டால் அவனை ஒரு இடத்தில் அமர வைக்க முடியவில்லை. அதைக் கைவிட்டுவிட்டு, வெளியே விளையாடும் விளையாட்டுக்களை ஊக்குவித்தாள். நன்கு விளையாடத் துவங்கினான். மேலும் ஊக்குவிக்க கராத்தே வகுப்பில் போட்டாள். யாருமே எதிர்பார்க்காத அளவு இளங்கோவின் திறமை வெளியே தெரிந்தது. தினமும் கராத்தே செய்து அவனுடைய ஆற்றல் முழுவதும் அதிலே செலவழிந்ததால் வீட்டிற்கு வந்த பின்பு அமைதியாக ஒரு இடத்தில் இருந்து பாடங்களை படிக்கத் துவங்கினான். ஐந்தே ஆண்டில் கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கினான்.
கத்தாமல், மிரட்டாமல், அடிக்காமல் மிகப் பொறுமையாக இளங்கோவைக் கையாண்டாள். ஒரே சேதியைத் திருப்பி திருப்பி சொல்லிக்கொடுத்தாள், எரிச்சல் படாமல். படிப்பில் சுமாராக இருந்தாலும் மற்றவற்றில் நன்றாகக் கற்றுக்கொண்டான் இளங்கோ. இவ்வாறாக பத்து ஆண்டுகள் இப்படியே உருண்டோடியது.


சரியான நேரத்தில் மாவட்டக் கல்வி அலுவலகத்தை அடைந்தாள். வரவேற்பறையில் இருந்த ஆணிடம் தான் வந்த நோக்கத்தைச் சொன்னாள் மலர்மதி. அருகில் இருக்கும் இருக்கையில் காத்திருக்கச் சொன்னார். சிறிது நேரத்தில் நேர்காணல் அறைக்கு அழைத்தார்கள்.
“முனைவர் பட்டம் பெற்றுள்ள நீங்கள் நடுநிலைப் பள்ளி ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறீர்கள் அதுவும் சிறப்புத் தேவையுள்ள மாணவர்களுக்கான வகுப்புக்கு. Interesting. 

நம் கூப்பர்டினோ பள்ளி மாவட்டத்தில் சிறப்புத் தேவை உள்ள மாணவர்களுக்குத் தனிப் பள்ளி கிடையாது. பொது பள்ளிகளில் தனி வகுப்பு மட்டுமே. அதில் மன  இறுக்கம் (Autism) உள்ள குழந்தைகளை மூன்று பிரிவுகளாக, குறைவு, நடுத்தரம் மற்றும் அதிக இறுக்கம் உள்ளவர்கள் என பிரித்திருக்கிறோம். நீங்கள் போகும் பள்ளியில் எந்தப் பிரிவும் இருக்கலாம். அதிக இறுக்கம் உடையவர்கள் உங்களைத் தாக்க வாய்ப்பிருக்கு. இதன் மாதிரியான சூழ்நிலையில் மாணவர்களைக் கையாள உங்களுக்கு என்ன தகுதி இருக்குன்னு நினைக்கிறீங்க திருமதி மாறன்?“ என ஆங்கிலத்தில் வினவினார் நேர்காணல் எடுப்பவர்.


“பொறுமை”


=================================================================
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை
போற்றி யொழுகப் படும்
பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும்.
==================================================================

பின்குறிப்பு:
1. கூபெர்டினோ பள்ளிகளில் இருக்கும் சிறப்புத் தேவை வகுப்பில் தினமும் மலர்மதியைக் காணலாம்.
2. இளங்கோ கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்துக்கொண்டே கராத்தேயில் நான்காம் டிகிரி பிளாக் பெல்ட்க்கு பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்.

பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது. சிறப்புத் தேவையுள்ள குழந்தைகளுக்காகத் தங்கள் வாழ்நாளைச் செலவிடுவோர்களுக்கு இக்கதை ஒப்படைப்பு.