Thursday, August 2, 2007

சவுதி ஆட்டம் - 3

ஒட்டக மேய்ப்பர், தமிழில் பேசியது எனக்கு பயங்கர ஆச்சரியம். என்னை மலையாளியென நினைத்து விட்டார். ஒட்டக மேய்ப்பருக்கு 20 வயது இருக்கும். சவுதி வாழ்க்கையைப் பற்றி கேட்டேன். மடை திறந்த வெள்ளம் போல் பேசினார். புதுக்கோட்டை அருகில் ஒரு கிராமம்தான் அவருடைய பூர்வீகம். சவுதி வந்து 5 வருடங்கள் ஆகிவிட்டது. முதலில் வரும்போது "விவசாய வேலை" என்று சொல்லித்தான் agent அனுப்பியுள்ளார் ஒரு கும்பலுடன். ஆனால் கொடுத்ததோ ஒட்டகம் மேய்க்கும் வேலை. இவருடைய நண்பர்களுக்கு ஜெட்டா (Jeddah) துறைமுகத்தில் பளு தூக்கும் வேலை. அதற்கு ஒட்டகம் மேய்ப்பது பரவாயில்லையென அவருக்கு அவரே சமாதானப்படுத்திக் கொண்டார்.


அவருடைய அரபி முதலாளிக்கு சுமார் 100 ஒட்டகம். பாலைவனம் உள்ளே கூடாரம் போட்டு தங்கி ஒட்டகம் மேய்க்க வேண்டும். வாரம் ஒரு நாள் அரபி சாப்பாட்டுக்கு தேவையான அரிசி, உப்பு, புளி........ கடிதம், குடிதண்ணீர் கொண்டுவந்து கொடுத்து விடுவாராம். மாதம் ஒரு தடவை மருத்துவர் ஒட்டகங்களுக்கு ஊசி போட வருவார். சில தடவை குடும்பத்துடன் வந்து கூடாரம் போட்டு தங்கி செல்வதுண்டு. வாரம் ஒருமுறை ஒட்டகங்களை வேறு இடங்களுக்கு மேயவிட வேண்டும். அப்போது கூடாரத்தை கழற்றி ஒட்டகத்தில் வைத்து எடுத்துச் செல்ல வேண்டும். அப்படி போகும் போது அருகில் இருக்கும் கிராமங்களில் உள்ள உணவகத்தில் சாப்பிடுவது அவருக்கு பெரிய சந்தோஷம். ஒரு மலையாளியை சந்தித்து தமிழில் பேசினால் மிக பெரிய சந்தோஷம். அவருடைய அரபி முதலாளியைப் பற்றி உயர்வாக சொன்னார். அவருக்கு இருக்கும் தலையாய பிரச்சனை " பாலைவன புயலும் பம்பாய் விமான நிலைய அதிகாரிகளும்" தான்.

பாலைவன புயலைப் பற்றி கதை கதையாக சொன்னார். பம்பாய் விமான நிலைய அதிகாரிகள் இவரிடம் ரூ 2000 வசூலித்ததை (கொள்ளையடித்ததை) கூறி மிகவும் வருத்தப் பட்டார். நானும் பாலைவன புயலையும் பம்பாய் விமான நிலைய அதிகாரிகளையும் சந்தித்தேன்.


பின்பு அவரிடம் விடைபெற்று பயணத்தை தொடர்ந்தேன். மதினா அருகே வரும்போது சாலையில் வழிகாட்டி பலகையில் 'Muslims', ' Non-Muslims' என போட்டிருந்தது. முஸ்லிம் அல்லாதவர்கள் மதினா ஊருக்குள் நுழையமுடியாது. எங்கள் பேருந்து வெளிச் சாலையிலேயே மதினாவை கடந்தது.


சாயங்காலம் யான்புக்கு வெளியே உள்ள சிமெண்ட் கம்பெனிக்கு சென்றடைந்தோம். செங்கடல் கடற்கரை ஓரத்தில் பாலைவனத்தில் பழைய சிமெண்ட் ஆலைக்கு அருகில் புதிய சிமெண்ட் ஆலை கட்டிக் கொண்டிருந்தார்கள். அருகிலேயே camp. ஜுபைல் (Jubail) வேலையை விட இங்கு பரவாயில்லை. ஒரே மாதத்தில் எல்லோருடனும் நன்றாக பழகிவிட்டேன். பழைய சிமெண்ட் ஆலையில் வேலை பார்க்கும் ஒரு அதிகாரியுடன் 2 வாரம் பழக்கம். பெரிய post ல் இருந்தார். அடிக்கடி என் கட்டுமான இடத்திற்கு (construction site) வருவார். தமிழ் காரர்தான் ஆனால் தமிழில் பேசவில்லை. சிமெண்ட் ஆலையில் பொறியாளர் வேலை வாங்கித் தருகிறேன் என அவராகவே கூறினார். ஒரு நாள் என் தோளில் கை போட்டு பேசினார். மறுநாளில் இருந்து என்னுடன் பேசுவதையே நிறுத்தி விட்டார். ஏன் என்பதை உங்கள் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன்.


நிறைய தமிழ் மக்கள் பழக்கமானார்கள். வாரம் ஒரு நாள் (வியாழக்கிழமை) சிற்றுந்தில் அருகில் இருக்கும் யான்புவுக்கு அழைத்துச் செல்வார்கள். அந்த நேரம் தான் shopping மற்றும் ஹோட்டல் சாப்பாடு. சாயந்திரம் இரண்டு தொழுகை இருப்பதால் நிறைய நேரம் சும்மா தான் உட்கார்ந்திருக்க வேண்டும்.

ஐந்து வேளை தொழுகை நேரத்தில் எல்லா கடைகளும் பூட்ட பட வேண்டும். சாப்பிடும்போது, முடிவெட்டும் போது தொழுகை நேரத்தில் மாட்டினால், பாதியிலேயே வெளியே அனுப்பிவிடுவார்கள். பெரிய கடைகளை அடிக்கடி மூடி திறக்க முடியாதென்பதால் திறந்தே போட்டுச் செல்வார்கள். மத தலைவர் கம்புடன் காரில் வலம் வருவார். முஸ்லிம்கள் கண்டிப்பாக தொழுகைக்குச் செல்ல வேண்டும் இல்லையென்றால் பின்புறத்தில் ரெண்டு அடி கிடைக்கும்.

முஸ்லிம் அல்லாதவர்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனால் தொழுகை நேரத்தில் அமைதியாக ஓரத்தில் அமர்ந்திருக்க வேண்டும். தண்ணீர் குடிப்பதோ, புத்தகம் படிப்பதோ, தொலைபேசியில் பேசுவதோ கூடாது. ஒரு தடவை என் அறை நண்பர் ஜோசப் பொது தொலைபேசியில் பேசும் போது பிடித்து சென்று விட்டார்கள். நண்பர் ஆங்கிலத்தில் பேச, மத தலைவர் அரபியில் பேச இரண்டு பேருக்கும் ஒன்றும் புரியாமல், கடைசியில் தொழுகை முடியும் வரை இருக்க வைத்து எச்சரித்து அனுப்பி விட்டார். ( மத தலைவர் தொழுகைக்குச் செல்லவில்லை என்பது வேறு விஷயம்) அதிலிருந்து கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்தோம்.

நேரம் சரியில்லையென்றால் எங்கு ஏறினாலும் நாய் கடிக்கும். மின்சார கம்பத்தில் மேலே ஏறி உட்கார்ந்திருந்தாலும் அங்கும் வந்து கடிக்கும். ஒரு நாள் நான், மற்றும் இரண்டு மலையாள நண்பர்கள் இதே போல் யான்புவுக்குச் சென்றோம். தொழுகை நேரம் ஒரு ஓரமாக ஒரு திண்டில் அமர்ந்தோம். அருகில் சில வீடுகள், சிறு பையன்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அமர்ந்திருந்தபோது ஒரு அரபி எங்களிடம் வந்தான்.

" ஸலா, ஸலா' என்றான். ( "தொழுகை நேரம்" என்றான்). என்னுடன் வந்த மலையாள நண்பர் ரஞ்சித்

" மாஃபி ஸலா" (தொழுகை இல்லை/கிடையாது) என்று அரைகுறை அரபியில் கூறினார்.

கேட்டு போனவன் அருகில் விளையாடிக் கொண்டிருந்த பையன்களிடம் ஏதோ அரபியில் கூறினான். சிறிது நேரத்தில் 4-5 பையன்கள் எங்களிடம் வந்தார்கள். ஒருவன் தண்ணீர் விளையாட்டுத் துப்பாக்கி வைத்து "புஸ் புஸ் " என்று என் முகத்தில் தண்ணீர் பீய்ச்சி அடித்தான். மற்றொருவன் நண்பரை சிறு கயறு வைத்து அடித்தான். நாங்கள் எழுந்து நடக்க ஆரம்பித்தோம். அரபியில் கத்திக் கொண்டு என்னைப் பின் தொடர்ந்து வந்து தண்ணீர் அடித்தான். எனக்கோ பயங்கர கோபம். ஆனால் அரபி/அரபி பையன்களை அடித்தால் நாம்தான் கம்பி எண்ண வேண்டும். அடிக்கடி திரும்பி அடிப்பது போல் கை ஓங்கினதினால் கொஞ்சம் பயந்து பின் வாங்கினான். இருந்தாலும் என் சட்டை பாதி நனைந்துவிட்டது.



'நான் ஆட வேண்டிய மைதானம் இதுவல்ல' என்ற முதல் விதை மனதில் விழுந்தது.



சவுதி ஆட்டம் தொடரும்....