Sunday, May 19, 2019

ஒரு திருட்டுக் கதை


மனோகர் பலசரக்குக் கடை முன் பைக்கை சைடு ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினான். மனோகர் கொஞ்சம் சுமாரான உயரம், மிடுக்கான நடை, நேர்த்தியாக வாரப்பட்டத் தலைமுடி, எல்லோரிடமும் பணிவாகப் பேசுவான். அதே நேரத்தில் கண்டிப்பும் காட்டுவான்.
மனோகருக்கு தென்காசிக்கு அருகில் இருக்கும் சுந்தரபாண்டியபுரம் தான் சொந்த ஊர். திண்டுக்கல் பழனி ரோட்டில் இருக்கும் மருந்து கம்பெனியில் வேலை. ஊருக்குள் பேச்சலருக்கு வீடு கிடைப்பது கடினம் என்பதால் ஊரின் ஒதுக்குப்புரமான அரசாங்க காலனியில் வீடு வாடகை எடுத்துத் தங்கியுள்ளான்.

தம்பி! இந்த லிஸ்ட்ல உள்ளதப் போட்டு வை, அரை மணி நேரத்தில திரும்பி வருவேன்” என்றான் மனோகர், கடைப்பையனிடம் சீட்டை நீட்டியபடி. 

ரா மனோகர், பாக உன்னாரா? “எனத் தெலுங்கில் வினவினார் திருப்பதிசாமி கல்லாவில் இருந்தபடி.

  திருப்பதிசாமிக்கு பலசரக்குக் கடை தான் முதன்மைத் தொழில். ஊருக்கு வெளியே கடை இருப்பதால் அதிக வியாபாரம் ஆவதில்லை. அதனால் டீக்கடை, வீடு புரோக்கர், என்பது பகுதி நேரத் தொழில்.

அண்ணே! நல்லா இருக்கேண்ணே வீட்டு வேலைக்கு ஆள் கேட்டிருந்தேனே” என்ற மனோகரை இடைமறித்து

சொல்லியிருக்கேன் மனோகர், வேடசெந்தூருக்குப் பக்கத்ல இருக்கும் கிராமம்தான் பையனுக்கு. நம்ம ஆள்தான், மணவாடுதான். ரொம்ப ஏழைபட்டக் குடும்பம். ஏற்கனவே லெட்டர் போட்டிருந்தேன். இன்னைக்குக் காலேலதான்  அவனோட அம்மா கடைக்கு வந்திருந்தது. அவர்ட்ட  கொஞ்சம் அட்வாண்சும் கொடுத்தனுப்பிருக்கேன்.  ரெண்டு நாள்ள  வந்துடுவான். கவலைப்படாதே..”என்றார் திருப்பதிசாமி. 

சம்பளம் என்னன்னு சொல்லீட்டீங்களா? “

சொல்லிட்டேன் மனோகர்.” கொஞ்சம் இடைவெளி விட்டு “ நமக்குக் கொஞ்சம் பார்த்து செய்ங்க” என்று மெல்லிதாகச் சிரித்தார் திருப்பதிசாமி.

மணவாடு, மணவாடு ன்னு சொல்லிகிட்டே காரியத்தில் கண்ணாருக்கிறார்” என்று தனக்குள் புலம்பிக்கொண்டே ஹொண்டா பைக்கை உதைத்துக் கிளம்பினான் மனோகர், வீட்டிற்கு.

திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் சாலையில் ரயில் தண்டவாளத்தை ஒட்டியபடி இருக்கும் குடியிருப்புகள். ரயில் தண்டவாள மறுபுறம் விவசாய நிலங்கள் மற்றும் தோப்புகள். தமிழக அரசு தன் ஊழியர்களுக்காக குறைந்த விலையில் கட்டிக் கொடுத்த வீடுகளில் இன்னும் பாதி வீடுகள் காலியாகவே இருந்தன. கல்லூரி மாணவர்களும், திருமணமான/ ஆகாத பேச்சிலர்களும் ஆங்காங்கே வீடு வாடகை எடுத்துத் தங்கியிருந்தனர். குடியிருப்புக்கு அருகில் இருக்கும் ஒரே டீக்கடை மற்றும் பலசரக்குக் கடை திருப்பதி சாமியோடது தான். அவர்தான் இங்கிருக்கும் பல பேசேலருக்கு கார்டியன்.

மனோகரின் வீடு ரயில் தண்டவாளத்தை ஒட்டி இருந்தது. இரண்டு அறைகள் கொண்ட வீடு. ஒரு சமையலறை. எல்லா பொருட்களும் எல்லா இடத்திலும் இருந்தன. பாட்டைச் சத்தமாக அலறவிட்டபடி கணக்குவழக்கு பார்த்துக் கொண்டிருந்தான் மனோகர். வாசலில் தட தடவென பைக் சத்தம் கூடவே செந்தில் சத்தம். 

என்ன மனோகர், சீக்கிரம் வந்த மாதிரி தெரியுது?” செந்திலின் குரலில் உற்சாகம் தெறித்தது.
செந்திலுக்கு கோவை அருகிலுள்ள சூலூர் தான் சொந்த ஊர். ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் வியாபாரம். பலசரக்குக் கடை திருப்பதிசாமியால் மனோகருடன் கடந்த ஒரு வருடமாக ஒரே வீட்டில் வாசம். செந்தில் எதையும் திட்டமிட்டு நேர்த்தியாகச் செய்யும் விதம் மற்றும் பணத்தில் கறாராக இருப்பதால் மனோகருடன் அடிக்கடி உரசல் ஏற்படுவதுண்டு. 

ஆமா! செந்தில், இன்னிக்கு வர வேண்டிய மருந்து லோடு வரல. கொஞ்சம் ப்ரீ தான் இன்னைக்கு” 

கொஞ்சம் இடைவெளி விட்டு

புது படம் நாகா தியேட்டரில் வந்திருக்கு ரெண்டாவது ஆட்டம் (second show) போலாமா? என்ற மனோகரைக் கவனிக்காமல் கொஞ்சம் யோசித்துவிட்டு,

 என் பைக்கில க்ளட்ச் சத்தம் ஏதோ வருது, உங்க பைக்ல போலாமா?” என்றான் செந்தில், மனோகரை பார்த்து.

சரி. ஆனா எனக்கு டிச்கெட் நீங்க போடுங்க” என்றான் மனோகர் புன்முறுவலுடன். சில வினாடிகள் யோசித்துவிட்டு “போலாம்” என குளிக்கச் சென்றுவிட்டான் மனோகர்.
சிறிது நேரம் கழித்து இருவரும் கிளம்பினார்கள். 

மனோகர் ஒரு கை பிடிங்க வண்டிய உள்ள எடுத்து வச்சிடலாம்” என்ற செந்திலுக்கு பலகையை எடுத்து படியில் வைத்து வண்டியை பின்னாலிருந்து தள்ளி வீட்டினுள்ளே தள்ளினான் மனோகர்.

இரண்டாம் ஆட்டம் சினிமா முடிய இரவு 12.30 ஆயிற்று. தியேட்டரைவிட்டு வெளியே வரும் போது மழைத் தூறியது. “அடடா! கொட எடுத்துட்டு வரலியே ” என்று வருத்தப்பட்ட செந்திலுக்கு “நம்மட்டதான் குடையே இல்லீயே” என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தான் மனோகர்.

மழை நச நசவென பெய்து கொண்டிருந்தது. தூறலுக்குப் பயந்து பல பேர் வாகன காப்பகத்திலே நின்று கொண்டிருக்க மனோகரும் செந்திலும் பைக்கில் கிளம்பினார்கள். வீட்டருகே வந்தபோது கோவை எக்ஸ்பிரஸ் கடந்து சென்றது. வாசலில் வண்டியை நிறுத்தும்போதுதான் இருவரும் வீடு திறந்து கிடைப்பதைக் கவனித்தார்கள்.

“என்ன மனோகர் வீட்டப்  பூட்டலியா?” என்றான் செந்தில்.

“இல்லையே பூட்னேனே” என்றபடி பைக்கை நிறுத்தினான் மனோகர்.

திறந்து கிடந்த வீட்டினுள் நுழைந்தார்கள். வீட்டினுள் வெளிச்சமில்லை. சுவிட்ச் போட்டதில் விளக்கு வெளிச்சம் வீட்டை நிரப்பியது. வீட்டினுள் ஒன்றுமில்லை. கிட்டதட்ட எல்லா பொருட்களுமே திருடு போய்விட்டது. இதை உணர்வதற்கு இரண்டு பேருக்கும் சில வினாடிகள் பிடித்தன.


சமையலறையில் சமையற் பாத்திரங்களைத் தவிர எல்லா பொருட்களையும் திருடிச்சென்றுவிட்டார்கள். கொடியில் இருந்த துணிகள் எதுவும் இல்லை. ஊருக்கு எடுத்துச் செல்லும் பெட்டிக்குள் உள்ளாடைகள் முதல் எலக்ரானிக்ஸ் பொருட்கள் வரை எல்லாவற்றையும் உள்ளே வைத்து எடுத்துச் சென்றுவிட்டார்கள். தொலைகாட்சி பெட்டி போன்ற பெரிய பொருட்கள் அப்படியே இருந்தன. முக்கியமாக செந்திலின் பைக்கும் திருடுபோய்விட்டது.

மனோகர், வீடு திருடு போச்சு” என்ற செந்திலுக்கு எந்த வித ரியாக்சன் காட்டவில்லை மனோகர். சிறிது நேரம் அங்கே அமைதி நிலவியது. இருவரும் ஒருவரையொருவர் குற்றம் சொல்லவில்லை. இந்த நடுநிசியில் யாரைக் கூப்பிடுவது, எங்கு போய் யாரிடம் புகார் பண்ணுவது எனத் தெரியவில்லை.

மனோகர் நீங்கள் திருப்பதிசாமிய பார்த்து போலீஸ்ல புகார் கொடுத்துட்டு வாங்க. நான் இங்கயே இருக்கிறேன்” என்றான் செந்தில்.

மனோகர் திருப்பதிசாமியைப் பார்க்க போய்விட்டான். செந்தில் அடுத்த வீட்டைத் தட்டினான். அடுத்த வீட்டில், அருகில் இருக்கும் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இரண்டு பேர் தங்கியிருந்தார்கள். செல்வின் கதவை திறந்து மலங்க மலங்க விழித்தான். 

எதுவும் சத்தம் கேக்கலியே என்று உள்ளிருந்துபதில் சொல்லிக்கொண்டே சுகுமார் தூக்கக் கலக்கத்துடன் வந்தான்.

மூன்று பேரும் வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்தார்கள். உடைந்த பூட்டு மட்டும் கிடைத்தது அருகில் இருந்த வாய்க்காலில். இரவு ரோந்து வரும் கூர்கா அல்லது போலீஸ் யாராவது வருகிறார்களா எனச் சுற்றி விட்டு வருகிறேன் என்று சைக்கிளில் கிளம்பி போனான் சுகுமார். என்ன செய்வதென்று அறியாமல் இருக்கும் போது, ஒரு பேனாவும் பேப்பரும் கொண்டுவந்து கொடுத்தான் செல்வின்.

என்னவெல்லாம் பெட்டியில் இருந்தது என மனக்கண்ணில் ஓட்டிப் பார்த்து திருடு போன பொருட்களை எழுத ஆரம்பித்தான் செந்தில்.

அடுத்து அரை மணி நேரத்தில் சுகுமார் திரும்பி வந்தான். பின்னால் இரண்டு போலீஸ்காரர்கள் சைக்கிளில். செந்தில் உற்சாகமானான். உள்ளே வந்து பார்த்தார்கள்.
செந்தில் கையில் இருந்தத் தாளை வாங்கிப் பார்த்தார் புலி வால் மீசை போலீஸ்காரர்.
என்னப்பா சோப்பு, செருப்பையுமா திருடிட்டான்?”

சார் அது ஒரு இத்துப்போன ரப்பர் செருப்பு. அதைக் கூட விட்டுவைக்கல” என அலுத்துக் கொண்டான் செந்தில்.

ஒருவேளை தம்பியோட செருப்பு அளவுதான் திருட்டுபயலோட அளவோ. தம்பியோட சட்டை, பேன்ட் ஜட்டி கூட விட்டு வைக்கவில்லை. அதனால் தம்பி மாதிரி உடல் வாகு கொண்டவனாக இருக்கலாம்” என்றார் அருகில் இருந்த மீசையில்லா போலீஸ்காரர் பெருமையாக.

என்னையா சொல்ற? விக்ரமாதித்தனுக்கு வேதாளம் சொன்ன நூறாவது கதை மாதிரி இருந்துட்டா?”. என்ன கதை எனக் கேட்டவருக்கு கதை சொல்லிக்கொண்டிருந்தார் மீசைக்கார போலீஸ்காரர்.

வாசலில் வந்து அமர்ந்தான் செந்தில். வெளியே மறுபடியும் தூற ஆரம்பித்தது.
திடீரென்று செந்தில் துள்ளிக் குதித்தான், "சார் என்னோட பைக் சத்தம் கேட்கிறது பக்கத்துத் தெருவில்" என்றான் செந்தில்.

தம்பி கொஞ்சம் நல்லாக் கேளுங்க, வெளியே தூறுது" என்றார் புலிவால் மீசை போலீஸ்காரர்.

எனக்கு ரொம்ப நல்லாத் தெரியும் சார், என் வண்டில கிளட்ச் சத்தம் கொஞ்சம் கேட்கும்” என்று சொல்லிக் கொண்டே வெளியே ஓடி பக்கத்துத் தெருவுக்குள் மறைந்தான்.

சிறிது நேரம் கழித்து வந்தவனிடம் விசாரித்தார் மீசைக்காரர். செந்தில் உதட்டைப் பிதுக்கி
கேட்டுச்சு சார், ஆனா கண்டுபிடிக்க முடியல” 

சார் திரும்பவும் கேட்கிறது” என்று திரும்பவும் ஓடியவனை எல்லோரும் வினோதமாகப் பார்த்தார்கள்.

எல்லோரும் காதை தீட்டிக் கொண்டு கேட்டார்கள். எதுவும் கேட்கவில்லை. செந்தில் திரும்பி  வந்தான். எல்லோரும் அமைதியாக இருந்தார்கள்.

மீசைக்காரர் “தம்பி,திருட்டு கொடுத்தனால காதுக்குள்ள உங்க வண்டிச் சத்தம் கேக்குது, சரியாகிடும்” என்றார் ஆறுதலாக.

இல்ல சார், எனக்குக் கேக்குது” என திரும்பவும் இருட்டில் ஓடி மறைந்தான் பக்கத்து தெருவில்.

சிறிது நேரம் கழித்து வந்தவனை பரிதாபமாக பார்த்தார்கள் எல்லோரும்.

தூறல் நின்று வெறித்தது. ரோட்டில் நின்று கொண்டு பேசிக்கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருக்கும் போதே குதித்து குதித்து கத்தினான் செந்தில்.

தூரத்தில வருவது என் பைக் சார் “எனக் கத்தினான். 

தூரத்தில் தெரு விளக்கு வெளிச்சத்தில் இரண்டு பைக்குகள் முன்னும் பின்னும் வேகமாக வந்து கொண்டிருந்தது.

"தம்பி சரியா சொல்லுங்க. அது உங்களோட பைக் தானா? " என்றார் மீசைக்கார போலீஸ்காரர்.

சத்தியமாக என்னோடதுதான் சார்.”

பின்னால வருவது? “

சரியாத் தெரியல” என்றான் செந்தில்.

அண்ணே! கொஞ்சம் முன்னால போய் கை காட்டி நிறுத்துங்க என்றார் மீசைக்காரர் தன் சக போலீஸ்காரரிடம்.

"தம்பி நீங்க எல்லோரும் ஓரமாக நில்லுங்க என்றார். பக்கத்து வீட்டு சுகுமார், செல்வினும் ஓரமாகத் தள்ளி நின்றார்கள். செந்தில், மீசைக்கார போலீஸ்காரர் அருகில் நின்று கொண்டான்.

இப்போது பைக் கொஞ்சம் தெளிவாகத் தெரிந்தது. முன்னால் வந்து கொண்டிருந்த செந்திலோட பைக்கில் இரண்டு பேர். பின்னால் வந்து கொண்டிருந்த பைக்கில் இரண்டு பேர். மிக அருகில் வந்துவிட்டது. 

மீசையில்லா போலீஸ்காரர் லத்தியை ஆட்டியபடி நிறுத்தச் சொல்லி கத்தினார். பைக் வேகம் குறைந்தது மாதிரி தெரியவில்லை. படு வேகமாக வந்து கொண்டிருந்தது. வேகம் குறையாததைக் கண்டு மிரண்டு ஒதுங்கினார்  மீசையில்லா போலீஸ்காரர். படு பயங்கர வேகத்தில் பைக் முதல் போலீசைக் கடந்தது. 

இதை கவனித்த புலிவால் மீசை போலீஸ்காரர் மறு நொடியே தாமதிக்காமல் தன் சைக்கிளை ரோட்டிற்குள் தள்ளினார். மிக பெரிய சத்தத்துடன் பைக் சைக்கிளில் மோதி சிதறியது. செந்தில் கண் முன்னே வண்டியில் வந்த இருவரும் காற்றில் பறந்து அருகில் இருந்த புதருக்குள் விழுந்து எழுந்து ஓடினார்கள்.

அதே நேரத்தில் பின்னால் வந்த பைக் படு பயங்கர சத்தத்துடன் கிரீச்சிட்டு நின்றது. உடனே மீசைக்கார போலீஸ்காரர் லத்தியை சுழற்றிக் கொண்டு நின்ற பைக்கை நோக்கி ஓடினார்.
 அடிக்காதீங்க” என்ற சத்தத்தைக் கேட்ட செந்தில் ஓடிச் சென்று போலீஸ்காரரை தடுத்து.
சார் என் ரூம் மேட்” என்று தடுத்தவுடன் பெருமூச்சு விட்டார் மீசைக்காரர்.

பைக்கிலிருந்து மனோகரும் திருப்பதிசாமியும் இறங்கினார்கள். திருடர்களைத் தேடி இருட்டிற்குள் செல்லலாம் என செந்தில் சொன்ன போது போலீஸ் அவர்களைத் தடுத்தார்கள்.

வேணாம் தம்பி! அவனுக கையில என்ன வச்சிருப்பாங்களோ , யார் கண்டது. பொருள் தான் வந்துருச்சே” எனச் சிதறிக் கிடந்த பொருட்களைக் காண்பித்தார். அவர் சொல்வதும் சரிதான் எனப் பொருட்களை சேகரிக்க ஆரம்பித்தான் செந்தில். 

மீசைக்கார போலீஸ் திருப்பதிசாமியை விசாரணை நடத்திக் கொண்டிருந்தார். திருப்பதிசாமி பேச ஆரம்பித்தார்.

சார்! மனோகர் தம்பி வந்து விவரத்தைச் சொன்னதும் கரூர் ரோட்டு மேல இருக்கிற  எஸ் பி  ஆபீசுல புகார் கொடுத்துட்டு வந்துட்டுருந்தோம். நம்ம காலனிக்குள்ள நுழைஞ்ச போது எங்களுக்கு முன்னால செந்தில் வண்டியில இரண்டு பேர் போய்ட்டு இருந்தாய்ங்க. அவனுகளைத் துரத்த ஆரம்பிச்சோம். கிட்டதட்ட அரை மணி நேரமாக இந்த காலனிக்குள்ளார துரத்திக் கொண்டிருந்தோம். மழை வேற பெஞ்சுட்டு இருந்ததால எங்களால வேகமா வண்டிய ஓட்டவும் முடியல, அவனுகளைச் சரியா பாக்க முடியவுமில்லை. இந்தத் திருட்டுப் பசங்க  இந்தக் காலனிக்கு புதுசுன்னு நினைக்கிறேன். கடைசியில நம்ம வீட்டுக்கு முன்னால உள்ள ரோட்டுக்கே வந்துட்டாய்ங்க.” என்றார் திருப்பதிசாமி.

சிதறிக்கிடந்த பொருட்களை பொறுக்கிக்கொண்டிருந்த செந்தில் “சார் பாதி பொருட்கள் எங்களோடது  இல்ல” என்று செந்தில் கத்தினான்.

ஒரு வேளை இன்னொரு வீட்டிலேயும் திருடியிருப்பாய்ங்களோ?” என்றார் மீசையில்லா போலீஸ்காரர் ஐயமாக.

இருக்கலாம், கால நேரம் ஒத்து வருதே. ரெண்டு பேரும் முதல்ல இங்க வந்து திருடிட்டு இதே காலனிக்குள்ளார வேறு ஒரு வீட்டிலும் திருடிட்டுப் போம்போது  மனோகரும், திருப்பதிசாமியும் பார்த்திருக்கிறாங்க. அதுக்கப்புறம்  நம்மட்ட மாட்டிட்டாய்ங்க.” என்றார் மீசைக்கார போலீஸ்.

அடுத்து ஒரு மணி நேரத்தில் அங்கு  வந்த உயர் போலீஸ் அதிகாரி சைலேந்திரபாபு, போலீஸ்காரர்களை மிகவும் பாராட்டினார், சமயோசிதமாக முடிவெடுத்துப் பொருட்களை மீட்டதற்கு. திருடு போன பொருட்களை உடனே மனோகரிடமும் செந்திலிடமும் கொடுக்க உத்தரவிட்டார்.

அண்ணே! ரொம்ப நன்றி,  உங்களுக்கு புது சைக்கிள் அடுத்த வாரம் வாங்கிக் குடுத்துடுறோம்” என்றான் செந்தில். 

 இரண்டு போலீசுக்கும் மிகுந்த மகிழ்ச்சி.  சிறிது நேரம் கழித்து போலீஸ்காரர்கள் கிளம்பிப் போய்விட்டார்கள். திருப்பதிசாமியும் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

மனோகர் நீங்க அவனுகளைப் பாக்கலைனா என் வண்டி எனக்குக் கிடைச்சிருக்காது, ஒரு கை பிடிங்க வண்டியை தூக்கி உள்ளே வச்சிடலாம் “எனச் சொன்ன செந்திலுக்கு

யாரும் இதைத் திருட மாட்டாங்க செந்தில்” என்றான் மனோகர் சிரித்தபடி.

வண்டி முன் பகுதி மிகுந்த சேதமடைந்திருந்தது. பூட்டில்லாத கதவை சாத்தி விட்டு வீட்டிற்குள் இரண்டு பேரும் பையிலிருந்த துணிகளை யாருடையது என பிரித்துக் கொண்டிருந்தார்கள்.
மனோகர் இது உங்க சட்டையா?” என்ற செந்திலிடம் 

ஒரு வேளை வேற வீட்டில திருடியதா இருக்கும்னு நினைக்கிறேன்" என்று மனோகர் சட்டையை வாங்கிப் பார்த்தான்.

"செந்தில் இது திருடனோட சட்டைன்னு நினைக்கிறேன், வண்டி பின்னால உட்கார்ந்திருந்தவன் உங்க சட்டையப் போட்டிருந்தான். அப்ப இது அவனோடதுதான்" என சட்டையை தூக்கி வீசினான் மனோகர்.

வீசியபோது ஒரு தாள் கீழே விழுந்தது.

நான்காக மடிக்கப்பட்டத் தாள். கடிதம் மாதிரி இருந்தது. பிரித்துப் படிக்க ஆரம்பித்தான் மனோகர்.

அன்புள்ள அக்கா

நலம். நலமறிய ஆவல். உன் மகனைப் பற்றிய கவலை என்னையும் மிகவும் வேதனை அடைய வைக்கிறது. இந்த வாரம் பாளையம்கோட்டையிலிருந்து வீட்டிற்கு வந்து விடுவான் எனச் சொன்னதை வைத்து, உன் மகனுக்கு ஒரு வேலை பார்த்து வைத்திருக்கிறேன்.

மாதச் சம்பளத்தை அவனிடம் கொடுக்க போவதில்லை. மாதக் கடைசியில் நீ வந்து வாங்கிக்கொள். தினமும் வீட்டைச் சுத்தப்படுத்தி, துணி துவைத்து, சமையல் பண்ணி வைக்க வேண்டும்.  அவனைப் பற்றி கவலைப்படாதே. இனி நல்லவனாக இருப்பான், வாழ்க்கையில் வெற்றி பெறுவான் என நம்புவோம். வீட்டு முகவரியை இணைத்துள்ளேன்.

இக்கடிதம் கண்டவுடன் அவனிடம் நல்லவிதமாக எடுத்துக் கூறி வேலைக்கு அனுப்பவும்.

மனோகர்
M 209, RM காலனி
திண்டுக்கல்

இப்படிக்கு
திருப்பதிசாமி


===============================================================
இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு

விளைவுகளைப் பற்றி நினைக்காமல் பிறர் பொருளைக் கவர்ந்து கொள்ள விரும்பினால் அழிவும் அத்தகைய விருப்பம் கொள்ளாதிருந்தால் வாழ்க்கையில் வெற்றியும் கிட்டும்.
=================================================================