Wednesday, July 29, 2020

கொலையும் செய்வார் சாமியார்

கொலையும் செய்வார் சாமியார்.




அதிகாலை வேளை, மேற்குத் தொடர்ச்சி மலைகள் சூழ்ந்த அழகிய கான்சாபுரம் மெதுவாக விழித்துக்கொண்டிருந்தது. பெருமாள் கோயிலுக்கு அருகே இருக்கும் குறுகிய சந்தில் தமிழிலிலும் இந்தியிலும் பெயர்பலகையில் எழுதியிருந்த ‘ஸ்தாபித வருஷம்’ அந்த மடத்தின் பழைமையைப் பறைசாற்றியது. மடத்துக்குச் சொந்தமான எல்லாக் கோயில்களையும், பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் இங்கிருந்துதான் நிர்வாகம் செய்யப்படுகிறது. தன் அலுவலக அறையில் அமர்த்திருந்த மடத்தின் தலைவர் நரேந்திர சுவாமி அன்றைய தினநாளிதழிலில் அரசியல் செய்திகளை மேய்ந்து கொண்டிருந்தார்.

‘சுவாமி! உங்களப் பார்க்க நம்ம டிஸ்ரிட் எஸ்பி ஜெயச்சந்திரன் வந்திருக்கார்.’ என்றார் நரேந்திர சுவாமியின் உதவியாளர் சாரதி என்ற பார்த்தசாரதி.

‘யாரு? அந்த சீவலப்பேரிக்காரனா?’ என்றார் நரேந்திர சுவாமி.

‘ஆமாஞ்சாமி’ என்றான் சாரதி.

‘என்ன விஷயம்?’

‘உங்களப் பாக்கனும்னு சொன்னார்’ என இழுத்தான் சாரதி.

‘என்ன ஏதுன்னு கேட்கப்படாதா? சரி சரி இந்தச் சேர வெளிய எடுத்துப்போட்டுட்டு அவன உள்ள அனுப்பு’ எனக் கடிந்து கொண்டார் சுவாமி.

காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் காலில் பூட்ஸ் இல்லாமல், ஒரு கையில் தொப்பியும் மறு கையில் சிறு பழத்தாம்பாளத்துடன்  உள்ளே நுழைந்தார். ஆறடி உயரமும், ஒட்ட  வெட்டிய முடிவெட்டும்,  காக்கி மிடுக்கும் பார்ப்பவர்களைப் பணியவைக்கும் ஆற்றலுடைய ஜெயச்சந்திரன் மிகவும் பணிவாக பழத்தாம்பாளத்தைக் கீழே வைத்து சுவாமியின் காலருகே விழுந்து நமஸ்காரம் பண்ணினார்.

‘நல்லா இருக்கீங்களா ஜெயச்சந்திரன்?’ என்றார் நரேந்திர சுவாமி புன்னகையோடு.

‘நல்லா இருக்கேன் சாமி. ரொம்பநாளாப் பாக்க வரனும்னு நினைச்சிட்டு இருந்தேன் இன்னைக்குத்தான் நேரம் வந்திருக்கு.’ என்றார் பவ்யமாக.

நரேந்திர சுவாமியின் மனதில் ‘இவன் ப்ரொமோசனுக்கு நம்மிடம் வந்திருக்கானோ?’ என மனதில் பல மனக்கணக்குகள் ஓடிக்கொண்டிருந்தது.

இருவரும் நலங்களை விசாரித்த பின்பு ஜெயச்சந்திரன் தொடர்ந்தார். “நான் உளவுத்துறையையும் சேர்த்துக் கவனிக்கிறேன் சாமி. நேத்து ஒரு முக்கியமான தகவல் கிடைச்சுது அதையும் சொல்லிட்டுப் போலாம்னுதான் வந்தேன். உங்க மடத்தோட கட்டுப்பாட்டுல இருக்கிற பெருமாள் கோயில் நகைகளக் கொள்ளையடிக்க ஒரு வடநாட்டுக் கும்பல் ப்ளான் பண்ணிருக்கு. இன்னும் ஒரு மாசத்துக்குள்ள நடக்கலாம். உங்க கோயில் ஆட்கள அலர்ட் பண்ணுங்க. தேவையில்லாம நகைகள வெளிய எடுக்கவேண்டாம். இந்த வடநாட்டுக்கும்பல் கொலை செய்யவும் தயங்கமாட்டாங்க, அதனால கொஞ்சம் கூடுதல் எச்சரிக்கையா இருப்பது நல்லது. இதப் பத்தி எங்க டிபார்ட்மண்ட்ல இருந்து அபீசியலா உங்களுக்கு தகவல் வரும்.’ என்றார் ஜெயச்சந்திரன்.

சுவாமியின் முகத்தில் லேசாகக் கவலை ரேகைகள் படர்ந்தன.

‘சரி! நான் பார்த்துக்கொள்கிறேன்’ என வழியனுப்பி வைத்தார் நரேந்திர சுவாமி.

ஜெயச்சந்திரன் வெளியேறினவுடன் அவசரமாக சாரதியை அழைத்தார் நரேந்திர சுவாமி.

‘டேய் சாரதி ! சிவகாசில இருக்கிற அக்கௌண்டன்ட் ஆனந்த் சர்மாவுக்கு மேனேஜர் ப்ரொமோஷன் குடுத்து பெருமாள் கோயிலுக்கு ட்ரான்ஸ்பர் பண்ணு. ஒரு வாரத்துல ஜாயின் பண்ணச் சொல்லி அர்ஜண்ட்டா உடனே ஒரு லெட்டர் டைப் பண்ணுடா. ‘ என்றார் நரேந்திர சுவாமி அவசரமாக.

‘சுவாமி! என்ன இது? ஆனந்த சர்மாவுக்கும் உங்களுக்கும் தீராத பகை. அவன் இதே பெருமாள் கோயில்ல இருக்கும்போது குடுக்காத குடைச்சலா. பணக்கையாடல்னு கோர்ட்டுக்கெல்லாம் போய் உங்கள அசிங்கப்படுத்திட்டான். அப்பவே அவனத் தட்டிவைக்காம அவன சிவகாசிக்கு மாத்துனீங்க. அவன் பெண்டாட்டி உங்கள வந்து பாத்து அழுது இங்க மாற்றல் கேட்டப்பக்கூட அவன இங்க மாத்தலையே. இப்ப, அவன மேனேஜர் ஆக்கி நம்ம பக்கத்துலேயே வைக்கணுமா?’ என்றான் கவலையுடன்.

‘சொன்னத மட்டும் செய்டா! அதிகப்பிரங்கித்தனமா எதுவும் சொல்லாத. அப்படியே கான்ராக்டர் குருமூர்த்திய இன்னைக்கே என்ன வந்து பாக்கச்சொல்லு’ என்றார் நரேந்திர சுவாமி.


ஒரு மாதம் உருண்டோடியது. அன்று இரவு ஜெயச்சந்திரனின் கைபேசி அலறியது. எடுத்துப் பேசியதும் குழப்பினார். உடனே பெருமாள் கோயிலுக்கு விரைந்தார் ஜெயச்சந்திரன். கோயில் வளாகத்துக்குள்ளே ஆனந்த் சர்மா கொலை செய்யப்பட்டுக் கிடந்தது அவரின் மன உறுதியை அசைத்துப் பார்த்தது. எப்படி நடந்திருக்கும்? இக்கொலையின் நோக்கம் என்னவாக இருக்கும்? இரண்டுநாட்களுக்கு முன்புதான்  வடநாட்டுக் கொள்ளையர்களை கைது செய்து விசாரித்துக் கொண்டிருக்கும் நேரம் இந்தக் கொலை எப்படி நடந்தது என்பதை உடனடியாக யூகிக்க முடியவில்லை. வேற கும்பல் சம்பவத்த நடந்திருச்சா? நிறைய கேள்விகள்.

விரைப்பாக சல்யூட் அடித்த ஆய்வாளரிடம், ‘கோயிலுக்குள்ள சம்பவம் நடந்ததால இது கண்டிப்பாக பெரிய பிரச்சனையாக வாய்ப்பிருக்கு. நாளை காலைல ரிபோர்ட்டோட என்னை வந்து பாருங்க’ என்றார் ஜெயச்சந்திரன்.

மறுநாள் எல்லா தினநாளிதழ்களின் முதல் பக்கத்தில் ஆனந்த் சர்மா பெருமாள் கோயிலுக்குள் கொலைசெய்யப்பட்டிக் கிடந்த காட்சியும் செய்தியும் வெளியானது சட்டசபை வரை சென்றது.

நண்பகலுக்குப் பின் வந்த ஆய்வாளரிடம் பேசியதில் கொலைக்குப் பயன்படுத்துன ஆயுதங்கள் எல்லாமே கட்டுமானத்துக்குரிய கருவிகள், மண்வெட்டிக் கம்பு, இரும்புக் கம்பி. ஒரு மாதமாக கோயிலுக்குள்ள கட்டுமானம் நடந்திருக்கு. முக்கியமாக நகைகள் எதுவும் திருடு போகவில்லை.


முதலமைச்சர் இருந்ததால், காலையில் சென்னை கோட்டை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது, முதலமைச்சர் அறைக்கு வெளியே காத்துக்கொண்டிருக்கும் ஜெயச்சந்திரனை அணுகியவர் ‘சிஎம் கூப்பிடுறாங்க சார்’ என்று கூறி முதலமைச்சர் அறைக் கதவைத் தொறந்துவிட்டார்.

‘வாங்க ஜெயச்சந்திரன்! ஹவ் ஆர் யூ?’ என வரவேற்றார் முதலமைச்சர்.

விரைப்புடன் சல்யூட் அடித்து, ‘நல்லாருக்கேன்‘ என்றார் ஜெயச்சந்திரன்.

‘அவசரமாப் பாக்கனும்னு அப்பாய்ண்ட்மெண்ட் கேட்டிருக்கிறீங்க. என்ன விஷயம்?’ என்றார் நிதானமாக.

‘இந்த ஆனந்த சர்மா கொலை கேஸ் விஷயமா பேசனும்’ என்றார் பவ்யமாக.

‘சொல்லுங்க, Already my secretary briefed me about the case. குற்றவாளிய நெருங்கிட்டீங்களா?’ என்று உடனே நேரே சேதிக்கு வந்தார்.

‘அதப்பத்திதான் பேச வந்திருக்கேன். சம்பவம் நடப்பதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னே நரேந்திர சுவாமியப் பாத்து வார்ன் பண்ணினேன். அவரும் எச்சரிக்கையா இருப்பதாகச் சொன்னார். சம்பவம் நடக்கறதுக்கு ரெண்டு நாளுக்கு முன்ன நாங்க அந்த வட நாட்டுக் கும்பல அரெஸ்ட் பண்ணிட்டோம். அப்படி இருந்தும் சம்பவம் நடந்திருச்சி. சம்பவம் நடந்த அன்று எந்த நகைகளும் காணாமப் போகல. விசாரிச்சா, கோயிலுக்குள்ளே கட்டுமானம் நடந்துட்டு இருந்திருக்கு. அங்க விசாரிச்சா,  கோயில்ல இருந்த சிவில் வேலை பண்றவங்கதான் கொலை செஞ்சதுன்னு தெரிஞ்சுது. மோட்டிவ் என்னன்னு பாத்தா அவனுக காண்ராக்ட்டர் குருமூர்த்தியக் கைகாமிக்கிறாங்க. ஆனந்த் சர்மாவ கொல்ல அனுப்பியது காண்ராக்டர் குருமூர்த்தி. அவனப் பிடிச்சி விசாரிச்சா, அவன் நரேந்திர சாமிய கைகாமிக்கிறான்.

‘இஸ் இட்?’என வியந்தார் முதலமைச்சர்.

‘ஆமாம்! மடத்துக்குரிய ஸ்கூல், கோயில் இதுல நடக்குற construction வேலைய பாத்துகிட்ட குருமூர்த்தி, நரேந்திர சாமிக்கு எப்பவும் சின்ன சின்ன அடிதடி வேலைகளையும் செஞ்சிருக்கிறான். நான் ஏற்கனவே கொள்ளைச் சம்பவம் நடக்கப்போகுதுன்னு தெரிஞ்சவுடனே நரேந்திர சாமி கணக்குப் போட்டுட்டார்.

ஏற்கனவே ஆனந்த் சர்மாக்கும் நரேந்திர சாமிக்கும் பகை இருந்திருக்கு. இருந்தும் அவருக்கு மேனேஜர் ப்ரோமோஷன் குடுத்து இங்க வரவச்சுட்டாரு. இப்போ ஆனந்த் சர்மாவையும் குருமூர்த்தியையும் ஒரே புள்ளியில இணைச்சுட்டார் நரேந்திர சுவாமி.

ஒரே கல்லுல இரண்டு மாங்கா. நகைகளைப் பாதுகாக்கணும் அதேநேரத்தில ஆனந்த் சர்மாவையும் தட்டிவைக்கணும்.

கொள்ளையத் தடுக்க குருமூர்த்திட்டச் சொல்லி அவனோட ஆட்கள கோயில்ல ஒரு மாசம் இருக்க வைச்சிருக்காரு. குருமூர்த்திக்கு கோயில்ல ஒரு சின்ன காண்ட்ராக்ட் வேலை குடுத்து அவனோட ஆட்கள அங்கயே படுக்கச் சொல்லிருக்கார், காவல் காக்க. அதோட அவனுகளுக்கு ஒரு அசைன்மெண்ட், கொள்ளைக்காரங்க வரும்போது ஆனந்த் சர்மா இருந்து, கொள்ளையர்களுடன் போராடினா ஆனந்த் சர்மாவுக்கு உதவக் கூடாது, நகைகள் மட்டும் திருடுபோகாமல் தடுக்க வேண்டும்.

ஆனா கடைசிவரை கொள்ளையர்கள் வரவே இல்ல. அதனால நரேந்திர சுவாமி
ஆனந்த் சர்மாவைத் தட்டி வைச்சிட்டு இடத்த காலி பண்ணச்  சொல்லியிருக்கிறார். ஆனா அடிதாங்காம செத்துப் போய்ட்டார் ஆனந்த் சர்மா.

தன்னை நல்லவராக காட்டிக்கவும் சந்தேகம் வராம பாத்துக்கவும் ஆனந்த் சர்மாக்கு மேனேஜர் ப்ரோமோஷன் குடுத்து கொள்ளை அடிக்கப் போகிறார்கள்னு தெரிஞ்சே அவர இங்க போஸ்ட்டிங் போட்டிருக்கிறார்.‘  எனச் சொல்லி முடித்தார் ஜெயச்சந்திரன்.


‘Oh. Very clever. He put him in the front line intentionally. அரசர்கள் போர் சமயத்துல தனக்கு வேண்டாத தளபதி இல்ல கிளர்ச்சி பண்ணும் வீரர்களை இந்த மாதிரி படைகளுக்கு முன்னே அனுப்பி எதிரி தாக்கும்போது மற்ற வீரர்களைப் பின்வாங்கச் சொல்லிருவாங்க. எதிரிட்ட சிக்கவைத்து கிளர்ச்சி பண்ணும் தளபதிகளைக் காலி பண்ணும் ஒரு strategy. He used the same strategy.
ம். How strong is the case? இதஅரசியல் பழிவாங்கல்ன்னு மாத்த வாய்ப்பிருக்கு.’ என்றார் ஆர்வமாக.

‘கேஸ் ரொம்ப ஸ்ராங்க். வெளிய வரமுடியாத செக்‌ஷன்லதான் போட்டிருக்கு. குருமூர்த்தி அப்ரூவர் ஆகிட்டான். அவனுடைய வாக்குமூலம் எல்லாம் ரெடி. நரேந்திர சுவாமிக்கு அரெஸ்ட் வாரண்ட்டும் வாங்கியாச்சி. உங்ககிட்ட சொல்லி அப்ரூவல் வாங்க. அவரும் நீங்களும் ஒரே ஜா....’ என இழுக்க.

‘Stop it, ஜெயச்சந்திரன். சட்டம் தன் கடமையச் செய்யட்டும். யு கேன் கோ’
என்றார் கடுகடுப்புடன்.

அன்று இரவு, ஆறடி உயரமும், ஒட்ட  வெட்டிய முடிவெட்டும் மிடுக்கும் பார்ப்பவர்களைப் பணியவைக்கும் ஆற்றல் உடைய ஜெயச்சந்திரன் கான்சாபுரம் மடத்திற்குள் தலையில் தொப்பியுடன், பூட்ஸ் காலுடன் நுழைந்தார், நரேந்திர சுவாமியைக் கைது செய்ய.

நெஞ்சில் துறவார் துறந்தாற்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.


உண்மையிலேயே மனதாரப் பற்றுகளைத் துறக்காமல் துறந்தவரைப்போல் வாழ்கின்ற வஞ்சகர்களைவிட இரக்கமற்றவர் யாருமில்லை.
====================================================================================
Disclaimer: All characters, Incidents, Names, Places and corporations or establishments appearing in this document are fictitious. Any resemblance to real persons, living or dead, is purely coincidental.
========================================================================