Tuesday, March 12, 2019

ஜாகிர் பாண்டே





"டேய்! இப்போல்லாம் வேலை வர்றதே கடினமா இருக்கு. இதுலே நீ வேற எக்ஸ்ட்ரா ஆயிரம் ரூபாய் கேக்குற?"  பைக்கை ஒரு கையில் பிடித்து ஓட்டிக்கொண்டே சொன்னார் பாபு. பாபுக்கு இராமநாதபுரம் பழைய பேருந்து நிலையம் அருகிலிருக்கும் புரோட்டாக் கடையில் வேலை. பகுதி நேர வேலையாக கிணற்றிற்கு உறை போடும் வேலை.

"மாமா! இந்த தடவ சேத்துக் குடுங்க. நல்ல செல்லு வாங்கணும். காசு சேத்துட்டு இருக்கேன். அடுத்த தடவ சேர்த்து பிடிச்சிக்கோங்க, குடுத்தா இன்னைக்கே புது செல்லு வாங்கிருவேன்" பைக்கின் பின்னாடி உட்கார்ந்திருந்த அப்துல் காற்றில் முடியைக் கோதிவிட்டுக்கொண்டே கூறினான்.

அப்துலுக்குச் சொந்த ஊர் ஆத்தங்கரை எனும் சிற்றூர். வைகை ஆறு, கடலில் கலக்கும் இடம்தான் ஆத்தங்கரை. ஒருபுறம் உப்புக்கரிக்கும் கடல்நீர், மறுபக்கம் நல்ல நீர், மீன் பிடித்தலும், உப்பு அறுவடையும் முதன்மைத் தொழில்கள். இராமநாதபுரத்தில் தாய் மாமா வீட்டில் தங்கி கீழக்கரை கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறான் அப்துல்.  விடுமுறை நாட்களில் மாமா பாபுவுடன் கிணற்றில் உறை போடும் வேலைக்குச் செல்வதுண்டு.

இராமநாதபுரம் பகுதியில் உறை கிணறுகள் அதிகம். மற்றப் பகுதிகளில் பாறைகள் இருப்பது போல இல்லாமல் மணல் அதிகம் இருக்கும் ஊர். வீட்டிற்கு ஒரு உறைகிணறு இருக்கும். ஐந்து அடி விட்டத்திலிருந்து இடத்திற்கேற்றார்போல் அதிக விட்டமிருக்கும். மணல் கிணற்றிற்குள் சரியாம இருப்பதற்கு உறை  அவசியம். சில இடங்களில் கிணற்றுக்கு அருகே கழிவறை  அல்லது சாக்கடை இருந்தால் மிக மிக அவசியம்.

இப்போதெல்லாம் குழாய் போடுவதாலும்  புதுக்  கிணறு வெட்டாததினாலும்  வேலை அதிகம் இருப்பதில்லை. இருக்கும் கிணற்றிலேயே பழுது பார்க்கும் வேலைதான் அதிகம்.  இந்தத் தொழிலில் வேலை ஆபத்து அதிகம். அதனால்தான் ஒத்தாசைக்கு அப்துலை அழைத்துச் செல்வது பாபுவின் வழக்கம்.

குடுக்கிறேன்டா, பொலம்பாத”, என்றார் பாபு சலிப்பாக. 

மாமா எவ்ளோ நாளைக்குத்தான் இந்த வேலையைப் பாக்கப் போறீங்க. முன்னே மாதிரி வேலையில்லையே. வேறே ஏதாவது தொழில் பாக்கலாமே?” என்றான் அப்துல் கரிசனையாக.

இதுக்கென்னடா குறைச்சல். மதுரப்  பக்கத்துல இருக்கும் கீழடியில தோண்டியதில பாத்தோமே!. ரெண்டாயிரத்து முன்னூறு வருசத்துக்கு முன்னாடியே நாம கேணி தோண்டி உறை  போட்டவைங்கடா. இந்த பகுதியில கேணி இருக்கிறவரை நமக்கு பொழப்பு ஓடும்டாஎன்றார் பாபு.

இல்லே மாமா, எல்லாத்துலயும் மாற்றம் நடக்கும், கவனிச்சுட்டே இருக்கணும், அந்த மாற்றத்த நாம உணரணும், அதுக்கேத்த மாதிரி நாம மாறணும். அப்பத்தான் நாம முன்னேற முடியும். இல்லைனா பழசாவே  இருப்போம்..

இந்த வயசுலே நான் புதுசா ஏதாவது கத்துக்கிட்டு புதுத் தொழில் தொடங்குறதா?” வியப்புடன் கூறினார் பாபு.

மனச திறந்து வைங்க மாமா. வர்ற எந்த வேலையா இருந்தாலும் கத்துக்கனும்

நீ காலேஜுக்குப் போனப் பிறகு நிறைய மாற்றம் இருக்குடா. ஏதாவது புது சிநேகமா?”  என்றார் பாபு சிரித்துக்கொண்டே.  

காலேஜ்ன உடனே எனக்கு ஞாபகம் வருது. எங்க காலேஜில நாளைக்கு ஜாகிர் பாண்டேனு ஒருத்தரு 'ஆறுவது சினம்' ங்கற தலைப்புல பேச வர்றாரு. ஆர்வமுடன் சொன்னான் அப்துல்.

என்னடா பேரு இது? ஜாகிர் பாண்டே, வட நாடா? இங்கே என்ன பண்றான்?” எரிச்சலுடன் கேட்டார் பாபு.

பொறந்தது பீகார்ல, ஆனா இவரு வளர்ந்ததெல்லாம் திருவில்லிப்புத்தூர்ல. இவரு  மட்டும்தான் முஸ்லிமா மாறியிருக்காரு. சாதி பெயர அப்படியே வச்சிக்கிட்டாரு. இவரு பேச்சக்  கேட்டீங்கன்னா அப்படியே சொக்கிப்போய்டுவீங்க. சயின்ஸ்ஐயும் குரானையும் கலந்து அடிச்சுக்குடுப்பாரு மாமா. என பாண்டே புராணம் பாடினான்.

குரான் ஒன்னும் சயின்ஸ் புத்தகம் இல்லையே. பார்த்துடா ! இந்த மாதிரி ஆளுங்ககிட்டதான் கவனமா இருக்கணும். இவிங்களுக்கு மறைமுக நோக்கம் இருக்கும்.” என்கிறார் பாபு. 

சரி அவரு பேர விடுங்க.. மாமா, உங்களுக்கு ஏன் பாபுனு பேர் வச்சாங்க.
கேட்ட அப்துலுக்குக் கதை சொல்லத் தொடங்கினார் பாபு. 

எங்க காலத்தில நிறைய பேரு முஸ்லீம் பெயர வைக்க மாட்டாங்க. அதிகமா ராஜா, ரவி, பாபு. அப்பிடியே வச்சாலும், வீட்டில ஒரு பெயரு, வெளியே கூப்பிட பொதுவான பெயரு வைப்பாங்க. அதனால முஸ்லிம்கள் மற்ற மக்களுடன் கலப்பதற்கு ஏதுவாக இருந்தது. இப்போ அப்படியா? வாய்க்குள்ள நுழையாத பெயரா வைக்கிறாங்க. அதனால நல்லதும் இருக்கு, கெட்டதும் இருக்கு. பெயரைக்  கேக்காதவரை நல்லாப் பேசிட்டு இருப்பாங்க, முழுப் பெயரைக் கேட்டதும் அவர்கள் பேச்சு வேறமாதிரி இருக்கும். இதெல்லாம் பார்த்து கோவப்படாம பேசணும் புரியுதா?” பாபுவின் அறிவுரைக்கு அப்துல் தலையாட்டினான்.

வண்டி வண்டிக்காரத்தெருவில் நுழைந்தது.

கல்லூரி மாணவர்களின் பலத்த கைதட்டல்களுக்கிடையே மேடைக்குப் பேச எழுந்து வந்தார் பாண்டே.

சினம்னா என்னனு நமக்கு நன்றாகத் தெரியும். சினம் எழும்போது மாறுதல்கள் உடலிலும், உள்ளத்திலும் உண்டாகின்றன. குருதி அழுத்தம் ஏற்பட்டு கண்கள் சிவக்கின்றன. நரம்புகளில் படபடப்பு ஏற்பட்டு அவை பலவீனமடைகின்றன. இதன் விளைவாக உடலிலே பல தொடர் நோய்கள் உண்டாகின்றன.

சினமானது தன் உடலையும், தன் மனத்தையும் கேடுறச் செய்கிறது.
பயபக்தியுடன் இருப்பதன் மூலம் நாம் சினத்தை அடக்க முயற்சிக்கலாம்.
பயபக்தியுடையோர் இன்பமான  நிலையிலும்,  துன்பமான நிலையிலும் இறைவனின் பாதையில் செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கிக்  கொள்வார்கள்; மனிதர்களை மன்னிப்போராய் இருப்பார்கள்; இவ்வாறு நன்மை செய்வோரையே அல்லா நேசிக்கின்றான்.

தன் வலிமையால் எதிரியை வீழ்த்துபவன் வலிமையானவன் அல்ல. மாறாக சினம் வந்த சமயம் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே வலிமையானவன். சினத்திற்கான காரணம் சொல்லத் தேவையில்ல. சிலபேர் எல்லாவற்றுக்கும் சினம்கொள்வார்கள்.

ஒரு மனிதர் நபிகளிடம் வந்து, ‘எனக்கு அறிவுரை செய்யுங்கள்’ என்றார். அதற்கு அவர் , ‘நீங்கள் சினம் கொள்ளாதீர்கள்’ என்று கூறினார்.
மீண்டும் அந்த மனிதர் , ‘எனக்கு அறிவுரை செய்யுங்கள்’ என்றார். அதற்கு அவர், ‘நீங்கள் சினம் கொள்ளாதீர்கள்’’ என்றார்.

இது மாதிரி மூன்று முறை கேட்டார் அவர். இவரும்  அதே அறிவுரையைக் கூறினார்.

அறிவுரை கேட்டுவந்த அந்த மனிதருக்கு மூன்று தடவையும் சினம் கொள்ளாதே என்பதையே அறிவுரையாகக் கேட்டதே அவரைச் சினம் கொள்ள வைத்தது.


கைதட்டல் நிற்க பல மணித்துளிகள் ஆனது. பேசி முடித்தவுடனே கிளம்பிவிட்டார் ஜாகிர் பாண்டே. திடீரென்று அப்துலுக்கு யோசனைத் தோன்றியது, புது செல்லில் ஜாகிர் பாண்டேவுடன் செல்பி எடுத்தால் என்ன? உடனே செயலில் இறங்கினான். ஜாகிர் பாண்டே நடந்து போவதைப் பார்த்து முன்னால் சென்று கதவருகில் காத்திருந்தான் அப்துல். முதலில் கேமராமேன் வருவது தெரிந்தது தொடர்ந்து பாண்டே வருவதும் தெரிந்தது. 

கைப்பேசியில் இருக்கும் கேமராவை உயிர்ப்பித்தான். கைப்பேசியுடன்  கையை உயர்த்தி, தன் முகம் வருவதாகப்  பார்த்துக்கொண்டு பாண்டே வருகையை எதிர்நோக்கினான். அருகில் வந்ததும் கைப்பேசி கேமராவில் படம் எடுக்க ஆரம்பித்தான்.

ஜாகிர் பாண்டே அருகில் வர வர அப்துல் நன்றாக சிரித்துக்கொண்டே படம் எடுத்துக்கொண்டிருந்தான் . திடீரென்று செல்லைப்  பிடித்துக்கொண்டிருந்த கையில் யாரோ பலமாக அடிக்கவும், கையிலிருந்த புது செல் பறந்து சென்று சிமெண்ட் தரையில் விழுந்து உடைந்தது. என்ன ஏதென்று உணர்ந்து திரும்பினால், அருகில் ஜாகிர் பாண்டே கண்ணில் சினத்துடன். 'பளார்! என அப்துலுக்கு ஒரு அறை விட்டார். மறுநொடியே  வாசலுக்குச் சென்று மறைந்தார். அப்துலுக்குப்  பொறி கலங்கியது. சுர்ரென்று சினம் தலைக்கேறியது. ஆனால் மறு நொடியே "நான் வலிமையானவன்" என மனதிற்குள் சொல்லிக்கொண்டான் அப்துல்.

மொத்தக் கூட்டமும் பாண்டே பின்னால் சென்றது. அப்துல் கீழே உடைந்து கிடந்த செல்போன் பாகங்களைப் பொறுக்கி எடுத்து மறுவாசல் வழியாக வெளியேறினான், கனத்த இதயத்துடன். 

அண்ணாந்து சூரியனைப் பார்த்தான். அவனுக்காகவே காத்திருந்தது போலத் தெரிந்தது. புன்னகைத்துக் கொண்ட அப்துல் தெளிவாய் நடை போட்டான், அவனுடைய பாதையில்.  

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து

கற்பவை கற்றுச், சினம் காத்து, அடக்கமெனும் பண்பு கொண்டவரை அடைந்திட அறமானது வழிபார்த்துக் காத்திருக்கும்.