Tuesday, February 25, 2020

அருள் இராயப்பன் - 2, மனிதக்கறி






அருள் இராயப்பன் - 2


மனிதக்கறி


திண்டுக்கல் இறையியல் கல்லூரியில் இறையியல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் அருள் இராயப்பனும், ரோனியும் மும்பை செல்வதற்காக திண்டுக்கல் ரயில் நிலையத்தின் முதலாம் நடைமேடையில் நின்று கொண்டிருந்தார்கள்.

பாதிரியார் பட்டப் படிப்பை முடிக்க பாப்புவா நியூ கினியாவிலிருந்து திண்டுக்கல் வந்திருக்கிறான் ரோனி. இன்னும் சிறிது நேரத்தில் ரயில் வந்து விடுவதற்கான அறிகுறி தென்பட்டது. ஒரு பாக்கெட் பிஸ்கட் எடுத்துப் பிரித்து ரோனியிடம் கொடுத்தான் அருள் இராயப்பன்.

"சைவ உணவுக்கு நீங்க மாறிட்டதால உங்களுக்குத்தான் இது அதிகம் வேணும்." என்றான் ரோனி நக்கலாக.

அதைப்  பொருட்படுத்தாமல், "ஆமாம் ரோனி, மணிமாறன் ஊர் திருவிழாவிலிருந்து சைவ உணவுக்கு மாறினதும் மாறினேன், இந்த மூனு வாரங்களா அதிகமாச் சாப்பிட வேண்டியிருக்கு" என்றான் அருள்.

"இருக்காதா பின்ன, ஒரு யானை ஒரு நாளைக்கு 18 மணி நேரம் சாப்பிடுது. அதே நேரம், ஒரு புலி 4 நாளைக்கு ஒரு முறைதான் சாப்பிடுது. இதுதான் சைவ உணவுக்கும் அசைவ உணவுக்கும் உள்ள வேறுபாடு. தினமும் நீங்க அதிக மரக்கறி சாப்பிடணும் அருள்" என்றான் ரோனி.

மும்பை செல்லும் ரயில் நடைமேடையில் வந்து நின்றது. சரியான பெட்டியைப் பார்த்து ஏறி இருக்கையில் அமர்ந்தார்கள் அருளும் ரோனியும்.

ரயில் பயணிகளையும் அவர்களை வழியனுப்ப வந்தவர்களையும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தான் ரோனி. பெட்டிகளை இருக்கைக்கு அடியில் வைத்து சங்கிலி போட்டு பூட்டுப் போட்டு நிமிர்ந்தான் அருள்.

ரயில் மெதுவாக நகர்ந்தது. எதிர் இருக்கையிலிருந்து ரயில் சத்தத்தையும் மீறி வீடியோ கேம் சத்தம் வந்துகொண்டிருந்தது. விளையாடிக் கொண்டிருந்தவன் யாரைப்பற்றியும் கவலைப்படாமல் சத்தத்துடன் விளையாடிக் கொண்டிருந்தான்.

ரோனிக்கு வீடியோ கேம் சத்தம் மிகுந்த எரிச்சலை உண்டாக்கியது.

“பொது இடத்துல இப்படிச் சத்தம் வைக்கலாமா? மற்றவர்களும் இந்த ரயிலில் பயணம் செய்கிறார்கள்னு நினைக்க மாட்டாங்களா? “ என்றான்  ரோனி சன்னமான குரலில்.

“என்ன ரோனி, தேவாலயத்தில் நீங்க பேசும்போது குழந்தை அழுதால், ஓடினால் என்ன செய்வீங்க. அதைப் பொருட்படுத்தாம பேசுவீங்கல்ல. அதுபோலத்தான். நாங்க எப்பவுமே noisy community” என்றான் அருள்.

வீடியோ கேம் விளையாடுபவன் அதில் மும்முரமாக விளையாடிக்கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் அங்கு சீருடை அணிந்து வந்தவன் “ சார்! நாளைக்கு ப்ரேக்பாஸ்ட்டும், லஞ்ச்சும் என்ன வேணும்? ஆர்டர் எடுக்க வந்திருக்கிறேன்.” என்றான்.

“என்ன இருக்கு?” எனக் கேட்ட அருளுக்கு மனப்பாடமாக வரிசையாகச் சொன்னது அவன் இந்தத் துறையில் பலகாலமாக இருப்பதை உணர்த்தியது.

“ எங்க ரெண்டு பேருக்கும் காலைல ப்ரட் ஆம்லெட். மத்தியானத்துக்கு எனக்கு தயிர்ச்சோறு, அவருக்கு சிக்கன் பிரியாணி” என்று கூறி, வந்தவனை வழியனுப்பிவைத்தான் அருள்.

“என்ன அருள்! நீங்க சைவத்துக்கு மாறினாலும் முட்டைய விடலியா?” என்று வினவிய ரோனிக்கு “முட்டை அசைவம் கிடையாதே.” என்று பதிலளித்தான் அருள்.

“இங்க சைவம் அசைவம்னு மக்கள் ரொம்ப கண்டிப்பா இருக்காங்க. அடிப்படையில மனிதன் இறைச்சி உண்ணும் பிராணிதானே. மனிதன் எல்லாத்தையும் தின்பவனே. வெட்டுக்கிளி, ஈசல், எலி, கௌதாரி என்று எதுகிடைத்தாலும் திம்பான். மலேசியால எண்ணெய் பனைமரத்துல இருக்கிற புழுவ விரும்பிச் சாப்பிடுவாங்க.” என்று மக்களின் சாப்பாட்டுச் சிக்கலைத் துவங்கி வைத்தான் ரோனி.

“சரிதான் ரோனி! ஆனாலும் இந்தச் சமூகத்துல இப்படிச் சாப்பிடுபவர்கள சரிநிகராவா நடத்துறாங்க. இல்லையே. மாட்டுக்கறி சாப்பிடுபவன் பன்றிக்கறி சாப்பிடுபவரைப் பாத்து முகஞ்சுழிக்கிறான். ஆட்டுக்கறி சாப்பிடுபவன், மாட்டுக்கறி சாப்பிடுபவர்களைப் பாத்து முகஞ்சுழிக்கிறான். சைவம் சாப்பிடுபவன், முட்டை சாப்பிடுபவர்களைப் பாத்து முகஞ்சுழிக்கிறான். நாம எல்லோரும் நாய், பூனை, பாம்பு, பல்லி, பூரானச் சாப்பிடுபவர்களைப்பாத்து முகஞ்சுழிக்கிறோம். இதுல எதைச் சாப்பிட்டாலும் எதுவுமே குத்தமுமில்ல. எது சாப்பிடணுங்கறது அவரவர்களுடைய விருப்பம். சாப்பிடுறவங்கள கீழாக பாக்கவேண்டியதில்ல. எல்லாமே கொழுப்பும் புரதமும்தானே.” என்றான் அருள்.

சிறிது நேரம் அங்கு அமைதி நிலவியது.

“சரி விடுங்க, எங்க ஊரு இப்படித்தான். நீங்க வந்து ஒரு மாசத்துக்கும் மேல ஆகிடுச்சி ரோனி. எங்க ஊர எப்படிப் பாக்குறீங்க. மணிமாறன் ஊரில் நடந்த மாடு பலி கொடுக்கும் திருவிழா போல உங்க ஊருல எதுவும் உண்டா ரோனி?” என்றான் அருள்.

“அந்தக்காலத்துப் பழங்குடி சமுதாயத்தில் விலங்கு பலியிடுதல், மனிதனைப் பலியிடுதல் எல்லாம் இயல்புதானே. அது மாதிரிதான் ” என்றான் ரோனி.

“பலியிட்டா ஒரு சடங்கோட முடிஞ்சிடும். பலி இட்டதச்  சாப்பிட்டா? பாப்புவா நியூகினியால மனிதக்கறி சாப்பிடுபவர்கள் இருந்திருக்கிறார்கள் என கேள்விப்பட்டருக்கிறேன். இன்னும் அந்த மாதிரி இருக்கா ரோனி?  இன்னும் இரண்டு மாதங்களில் நான் உங்க நாட்டுக்குப் போகணும். ” என்றான் அருள் சிறிய பயத்தோடு.


 “இப்போ கிடையாது ஆனா முன்னால இருந்துச்சி. ஏன், எல்லா நாட்டுலயும்தான் இருந்துச்சி. உலகத்துல நிறைய இடத்துல மனிதக்கறி சாப்பிடுபவர்கள் இருந்திருக்கிறார்கள். வளர்ந்த நாடுகள்னு சொல்ற அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மெக்சிகோ, காங்கோ என்று நிறைய எடுத்துக்காட்டு சொல்லலாம். ஆனா ஒவ்வொரு நாட்லயும் ஒரு மாதிரி.
சடங்குக்காக, நரபலிக்காக, தப்பிப்பிழைப்பதற்காக, பழிவாங்குவதற்காக.

உருகுவே விமான விபத்து நடந்தப்ப நடந்த நரமாமிச சம்பவம் தப்பிப்பிழைக்க நடந்த ஒரு எடுத்துக்காட்டு.

ஒரு 150 ஆண்டுகளுக்கு முன்ன, அடிக்கடி இரண்டு இனக்குழுக்கள் இடையே நடக்கும் சண்டையில் ஒரு குழுவினர் மற்றொரு குழுவில் இருப்பவர்களைப் பிடித்துக் கொண்டுபோய் சமைத்து சாப்பிடுவது வழக்கம். இது கோராய் இனக்குழுவில் இருக்கும் நாட்டுப்புறப் பாடல்மூலம் தெரிஞ்சிக்கலாம்.

ஏ ஏ  சின்ன மச்சான்!
என்னபுள்ளே!
எங்க போற மச்சான்!
வேட்டைக்குப் போறேன் புள்ளே,
எனக்கு என்ன கொண்டு வருவ,
என்ன வேணும் சொல்லு புள்ள,
எனக்குக்  கொழுத்த "பெரிய பன்னி" வேணும் மச்சான்!
கண்டிப்பா "பெரிய பன்னி" கொண்டுவரேன் புள்ளே.
இரவும் பகலும் உரசிக்கொள்ளும்
அந்திப் பொழுதின் போது,
அலைகள் உரசும் கரையில் இருப்பேன்
"பெரிய பன்னிக்காக" என்று கடற்கரையில் நின்று பாடுகிறாள் காதலி.

இது பழிவாங்கும் நடவடிக்கைக்காக நடத்தப்படும் நரமாமிச சம்பவங்கள்.

அடுத்து சடங்கு சம்பிரதாயத்துக்காக நடத்துவது.

கோரோவாய் குழுவில் சாகும் தருவாயில் இருக்கும் வயது முதிர்ந்தவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். ஒரு முழுநிலவு நாளில், காட்டில் இருக்கும் உயர்ந்த மரத்தின் உச்சியில் அவர்களைக் கட்டி வைத்து விடுவார்கள். அதுவும் லூசாக. பின்பு மர அடிவாரத்தில் நள்ளிரவு வரை பூசை நடக்கும். பூசை முடிந்தவுடன்,

"பழம் பழுத்துருச்சி, விழப்போகுது..
பழம் பழுத்துருச்சி, விழப்போகுது.. "


என்று மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்து பாட்டுப்பாடி நடனமாடுவார்கள்.


பின்பு எல்லோரும் மரத்தைப் பிடித்து உலுப்புவார்கள். லேசாகக்  கட்டியிருக்கும் வயதானவர்கள், மேலிருந்து கீழே விழுந்து மரணிப்பார்கள்.


அவர்களை அங்குள்ள மக்கள் வெட்டிச் சமைத்துப் பரிமாறுவார்கள். அவர்களின் கறியைச் சாப்பிட்டால் அவர்களுடைய ஆற்றல் இவர்களுக்கு வரும் என நம்பிக்கை.

இது சடங்கு சம்பிரதாயத்துக்காக நடந்த நரமாமிசத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு.” என்று நீண்ட உரையை முடித்தான் ரோனி.

“ரோனி, இங்கேயும் அகோரின்னு சாதுக்கள் இருக்காங்க. அவர்களப் பொருத்தவர உயிரற்றவைகளச் சாப்பிடுவாங்க. கொன்னு சாப்பிடுவதில்ல. பழம்கூட மரத்திலிருந்து பழுத்து கீழவிழுந்தததான் சாப்பிடுவாங்க. அதேமாதிரி இறந்த மனித உடல்களச் சாப்பிடுவாங்க. அது இன்னும் நடக்குது. மனிதனைப் பலியிடுதல், மனிதக்கறி சாப்பிடுவது எல்லா மதங்களிலும் இருக்கிறது. சிவன் பிள்ளைக்கறி கேக்கலியா? இப்ராகிம் தன் மகனைப்  பலி கொடுக்கப் போகலையா? நம்ம பைபிள்ல பிள்ளைக்கறி சாப்பிட்ட கதைக இருக்குதே.” என்றான் அருள் இராயப்பன்.

இதைக் கேட்டதும் எதிரே இருந்தவன் மெல்லத் தலையை தூக்கிப் பார்த்தான் பின்பு வீடியோ கேம்சில் மூழ்கினான்.


“அருள், ஒரு உண்மையச் சொல்றேன். நான் கோரோவாய் இனக்குழுவைச் சேர்ந்தவன். எங்கள் இனக்குழுவினர் மனிதக்கறி உண்டக் குழுவினர். வரலாற்றில் கடைசியாகப் பதிவு செய்யப்பட்ட மனிதக்கறி உண்டது பாப்புவா நியூகினியால இருந்த எங்க இனக்குழுதான். நாங்கள் அதிகமாகச் சாப்பிட்டது பாதிரியார்களைத்தான். அதே இனக்குழுவில் இருந்துதான் நான் படித்துப் பாதிரியார் ஆகியிருக்கிறேன்.” எனச் சிரித்தான் ரோனி.

“இந்தமாதிரி மனநிலைல இருக்குற மனிதர்கள் எப்படி சமூக கட்டமைப்புல இருப்பாங்க ரோனி? பழக பயமா இருக்காதா?” என குழப்பத்துடன் வினவினான் அருள்.

 “எங்களுக்கும் காதல் உண்டு, காமம் உண்டு, வெறுப்பு உண்டு, கோபம் உண்டு, சோகம் உண்டு. தலைமைப்பண்பு வளர்த்து தலைமைப் பொறுப்பு ஏற்பதுண்டு. நாங்களும் சராசரி மனிதர்கள்தான் அருள். பாப்புவா நியூகினியா ஒரு தீவுக்கூட்டமானதால எங்களுக்கு மற்ற மக்களின் நாகரீகம் தெரிய வாய்ப்பில்லாமல் போச்சி. மழைக்காடுகள் நிறைந்த பாப்புவா மற்ற உலகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்படாமல் இருந்திருந்தால் நாங்களும் உங்களமாதிரிதான் இருந்திருப்போம்.” என்றான் ரோனி கம்மிய குரலில்.

“உண்மைதான் ரோனி, எங்களுக்கு அரேபியர்கள் அல்ஜீப்ரா கொண்டு வரும்வரை அல்ஜீப்ரா என்றால் என்னன்னே தெரியாது. அதுமாதிரிதான் பட்டு. சீனர்கள்ட்ட இருந்துதான் கத்துகிட்டோம். இது மாதிரி நிறைய கண்டுபிடிப்புக்கள், நாகரீகங்கள் வரலாறு முழுவதும் பரவிக்கொண்டே இருந்தன” என்றான் அருள் இராயப்பன்.


எவ்வளவு நேரம் தூங்கினான் எனத் தெரியாமல் மறுநாள் காலை ரோனியின் சத்தம் கேட்டு மெதுவாகக் கண்களைத் திறந்தான் அருள். காலைச்சிற்றுண்டி பரிமாறிக் கொண்டிருந்தவருடன் ரோனி ஆங்கிலத்தில் எதோ சொல்லிப் புரியவைக்கப் போராடிக்கொண்டிருந்தான்.

எழுந்த அருள், “என்ன வேணும் ரோனி” என்றான்.


“இன்னைக்கு மதிய சாப்பாட்டுக்கு சிக்கன் பிரியாணி ஆர்டர் பண்ணியிருந்தேன். அத மாத்தணும்.” என்றான் ரோனி.


பொழுதும் கறி சாப்பிடுபவன் எதுக்கு இப்படி கேட்கிறான் என நினைத்துக் கொண்டே, “சரி, என்ன வேணும்?” என வினவினான் அருள்.


“தயிர்ச்சோறு” என்றான் ரோனி முகமலர்ச்சியாக.

வந்தவரிடம் தமிழில் விளக்கி மாத்தினான் அருள். அப்பொழுது ரோனியின் அருகே புதிதாக இருந்த நூலைக் கவனிக்கத் தவறவில்லை.

“Thirukkural - English Translation and commentary”

“இந்த புக் வாங்கியிருந்தீங்களா ரோனி?”

“இல்ல, இத நேத்து நைட்டு நமக்கு எதிர்ல உக்காந்து வீடியோ கேம்ஸ் விளையாடிட்டு இருந்தானே அவன் குடுத்தது. நாம உணவப் பத்தி பேசுவத கேட்டிருப்பான் போல. நான் பாதிரியார்னு தெரிஞ்சவுடனே இதக் குடுத்து துறவுப் பகுதியப் படிக்கச் சொன்னான். இப்படி ஒரு பொக்கிசத்த இதுவரை நான் படித்ததில்லை. ஒரு இரவிவுல படிக்கிற புக்கா இது. அவன் சேலத்துல இறங்கும்போது இத எனக்கு கிப்ட்டா குடுத்துட்டுப் போனான்.” என்றான் ரோனி.

“ஓ. அதுதான் நீங்க சிக்கன் பிரியாணி ஆர்டரை கேன்சல் பண்ண ரகசியமா? “ எனச் சிரித்தான் அருள்.


“ஆமாம். துறவற இயலில் புலான்மறுத்தல் மட்டும்தான் படித்தேன். அதுக்கே இப்படின்னா? “ என வியந்தான் ரோனி.


“ஒருவர் சைவ உணவுக்கு மாற சில காரணங்கள்தான் இருக்கு. உயிரைக் கொல்லுவதைப் பார்த்து மாறுவது, மருத்துவக்  காரணங்களுக்கு, மற்றவர்களின் அறிவுரை. இதுல நீங்க மூனாவது.” என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே திருக்குறளின் அட்டையை விலக்கி முதல் பக்கத்தைப் புரட்டி பெயரைப் பார்த்தான் அருள். “மூங்கில்”னு ஒரு பெயரா என வியந்தான் அருள் இராயப்பன்.


செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.


மாசற்ற மதியுடையோர், ஓர் உயிரைப் பிரித்து அதன் ஊனை உண்ண மாட்டார்கள்.



=========================================================================