Friday, January 17, 2020

அருள் இராயப்பன்- பலிக்குழி






அருள் இராயப்பன், நீங்களா! பாவ மன்னிப்பு கேக்கவா வந்துருக்கீங்க?” வியந்தார் தேவாலய பாவ மன்னிப்பு கூண்டில் இருக்கும் பாதர்.

"சாமியார்களும் பாவத்துக்கு அப்பாற்பட்டவங்க இல்லயே, ஒருவருக்கொருவர் பாவங்களை அறிக்கை செய்யச்சொல்லுதே வேதம்" என்றான் பாவமன்னிப்பு கேட்க வந்த அருள்.

திண்டுக்கல் கரூர் சாலையிலுள்ள இறையியல் கல்லூரியில் இறையியல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவன்தான் அருள் இராயப்பன். இந்த ஆண்டுடன் படிப்பு முடிந்து அடுத்து சில ஆண்டுகள் வேறு இடங்களில் இருக்கும் பள்ளி, கல்லூரி, கோயில்களிலோ வேலை செய்ய காத்துக்கொண்டிருக்கிறான் அருள். கல்லூரிக்குள் இருக்கும் தேவாலயத்தில் பாவ மன்னிப்புக் கேட்க முழங்காலில் நின்று கொண்டிருந்தான் அருள். 
 
சரி சொல்லுங்க அருள் இராயப்பன்.” 

போன வாரம் என் நண்பன் மணிமாறன் வௌவால் வேட்டைக்குப் போனான்.”   
 
"அருள், நீயும் போனியா? உனக்கு துப்பாக்கி சுடத் தெரியுமா?"
 
"இல்ல பாதர்! அவனுக்குத் தெரியும். அவன்தான் சுட்ட வௌவால்கள வீட்டுக்கு எடுத்துட்டுப்போய் சமைச்சிக் கொண்டு வந்தான்."
 
". வௌவால் கறி சாப்பிட்டியா?"
 
ஆமாம் பாதர்” என்றான் அருள்.
 
சிறிது நேரம்அங்கே நிலவிய அமைதியை அருள் உடைத்தான்.  

பழம் தின்னி வௌவால் தான் பாதர்! நான் சாப்பிடலாமா கூடாதான்னு எனக்கே குழப்பமா இருந்தபோது குழம்பப் பாத்ததும், நமக்காகத்தான எல்லாம் படைக்கப்பட்டிருக்குனு நல்லாச் சாப்பிட்டுட்டேன். பைபிள்படி வௌவால், கழுகு, ஆந்தையெல்லாம் சாப்பிடக்கூடாதுன்னு தெரியும். இருந்தாலும் அது யூத இனத்தவருக்குச் சொல்லப்பட்டதுதானே.
நான் செய்தது சரியா தவறான்னு எனக்குத் தெரியல பாதர்
சிறிது இடைவெளி விட்டு 

"தவறென்றால் மன்னிப்புக் கேட்க வந்திருக்கிறேன்.என்றான் அருள்.

தப்பா, சரியான்னு போவதற்கு முன்ன, ஒன்னு சொல்லணும் அருள். வௌவால் வாயில நிறைய பாக்டீரியா, வைரஸ் இருக்கும். அதக் கையாளும் போது, நிறைய நம்மைப் பாதிக்க வாய்ப்பிருக்கு. அடுத்த முறை போனா தடுப்பூசி போட்டுட்டுப் போகச் சொல்லு மணிமாறனை. உனக்காக கடவுளிடம் வேண்டுகிறேன் அருள்என்றார் பாதர்

----------------------------------------------------------------------
  "வாடா அருளு, சொன்ன மாதிரி வந்துட்ட. அம்மா வெளிய போயிருக்காங்க. இப்ப வந்துடுவாங்க. துப்பாக்கி ரவையெல்லாம் காலியாயிடுச்சி. குண்டு ரவை செய்யனும், இந்தா இதப்பிடி." மணிமாறன் ஒர் அடி விட்டம் உள்ள  தகர டப்பாவை அருளிடம் கொடுத்தான். மேலே டப்பா வாய் திறந்து இருந்தது. 


அருளிடம், ஒரு ஆணியும், சுத்தியலும் குடுத்து, ' இந்த டப்பா அடி பாகத்தில சின்ன சின்ன ஓட்டை போடு' என்றான் மணிமாறன்.
 
மணிமாறன் எழுந்து போய், ஒரு வாளியில் மாட்டுச் சாணியைக் கரைக்கத் துவங்கினான்.
 
அருளும் மணிமாறனும் சிறுவயது முதல் நண்பர்கள். மணிமாறன்
சென்னையில் பொறியியல் படித்து முடித்து வேலை தேடிக்கொண்டிருக்கிறான்
மாட்டுச் சாணியைக் கரைத்து முடித்து கையைக் கழுவியதும், அருள் தகர டப்பாவில் ஓட்டை போட்டு முடிப்பதற்கும் நேரம் சரியாக இருந்தது.
 
மணிமாறன், சிறிய சாக்குப்  பையிலிருந்து அடுப்புக்கரி எடுத்து டப்பாக்குள் போட்டு  தீ மூட்டத் துவங்கினான். நல்லா கங்கு கணன்று வந்தவுடன் அலுமினிய காகிதத் தகடுகள் (foil) மற்றும் அலுமினிய துண்டுகளை கங்கில் போட்டான். அலுமினியம் உருகி அடியில் இருக்கும் ஓட்டை வழியே சிறு சிறு குண்டுகளாக வெளியேறியது. கீழே சாணி கரைசலில் விழுந்தவுடன் குளிர்ந்து ரவையாக மாறியது.
 
இந்த ரவைகள் எல்லாம் உயிரப் பறிக்கத்தான?” என்றான் அருள் வருத்தத்துடன்.
 
டேய் மாப்ள! நீ சாமியாரா போனதுக்கப்புறம் ரொம்பப் பேசுறடா. சின்ன வயசுல நம்ம ஸ்கூலுக்குப் பின்னாடி அணிலப்  பிடிச்சி சுட்டுத் தின்னதெல்லாம் மறந்து போச்சா”
 
அது அறியாத வயசு. இப்போ அப்படியில்ல.”
 
கொன்னாப் பாவம் தின்னாப் போச்சு, ரொம்ப வருத்தப்படாத. நீதான அடிக்கடி சொல்லுவே, இந்த உலகத்துல படைக்கப்பட்டதெல்லாம் நமக்காக. பிறகென்ன சீன் போடுற. லூசுல விடு. நாள காலங்காத்தால, பூசை முடிஞ்சு ரெடியா இரு. போனதடவ சொன்ன மாதிரி, கடைசி நேரத்துல பாதர்  கூப்டாரு, ஆட்டுக்குட்டி கூப்டாருன்னு சொன்னா கெட்ட கோவம் வரும்.” எனச் சொல்லும் போதே மணிமாறனின் அம்மா வரும் அரவம் கேட்டது.
 
வாடா அருளு, ரொம்ப நாள் கழிச்சி வந்திருக்க, சாப்பிட வாடாஎன வீட்டுக்குள்ளே வரும் போதே வரவேற்றார் மணிமாறனின் அம்மா.
 
இல்லம்மா, சாயந்திர பூசைக்குள்ள போயிடனும்.” 
ஆமா, உங்க மதத்துலதான் சாமியாருங்க கண்ணாலம் பண்ணமாட்டாய்ங்களாமே. எப்படி உங்க வீட்டுல விட்டாங்க.என்றார் ஆர்வமாக
இல்லமா இது என்னோட விருப்பந்தான். வீட்டுக்கு ஒருவர், ஆணோ பொண்ணோ கடவுளுக்கு சேவை பண்ணப்போனா மகிழ்ச்சிதான், எங்க வீட்ல.என விளக்கினான் அருள்
மணிமாறன் சிரிப்பதை ஓரக்கண்ணால் பார்க்கத் தவறவில்லை அருள்.
 
“What so funny?“ என்றான் அருள்.
 
“You know what, God business is always profitable, in all religion” என சொல்லிச் சிரித்தான் மணிமாறன்.
 
அதை businessசா பாக்கிறவங்களுக்கு. நான் சேவையா பாக்குறேன். படிப்பு முடிந்ததும், வேறு இடத்திற்கு சேவை செய்யப் போகனும். நான் இன்னும் நாலு மாசத்துல பப்புவா நியூகினியா நாட்டுக்கு போகப் போறேன். இது மாதிரிதான் அன்னை தெரசா சின்னவயசுல இங்க வந்தது.என்றான் அருள்
டேய் என்னடா சொல்ற. எப்படா திரும்பி வருவ. வேற எங்கேயாவது பக்கத்துல போலாம்ல.”
 
இல்லடா.அது வந்து ..”
 
ஆமா, இந்த பப்புவா நியூகினியாலதான நம்ம சிவகாசிகாரர் கவர்னரா இருக்கார்? டேய் அருளுநீ அங்க போய் அரசியல்ல குதிக்கிற, அதிபர் ஆகுற. எனக்கு ரெண்டு காண்ராக்ட் குடுக்குற. எப்பூடி?” என உற்சாகமானான் மணிமாறன்.
 
மணிமாறனின் அம்மா குறுக்கிட்டு,
டேய் மாறா சும்மா இர்ரா, அருளு அடுத்த வாரம் நம்ம ஊர் கோயில்ல அம்மன் கொடை. கண்டிப்பா நீயும் வரனும். இந்த தடவ நடக்குற கொடை ரொம்ப விசேசம். புது வீடு கட்னதுக்கு நாங்க ஒரு கடா நேந்து விட்டிருக்கிறோம். ஏழு வருசத்துக்கு ஒரு முறை நடக்கிற கொடை. போன தடவ நீங்கெல்லாம் சின்னப் பய. அதனால கூட்டிட்டுப் போகல. கண்டிப்பா வரணும்டா. கடா பிரியாணி கண்டிப்பா இருக்கும்.” 
சரிம்மா கண்டிப்பா வர்றேன். பப்புவா நியூகினியால இருந்து ஒருவர் இங்கு வந்திருக்கார். நான் அவருக்கு நம்ம நாட்டப் பத்தி பாடம் எடுக்கணும், அவர் அங்குள்ள மொழி, இனம், உணவு, கலாச்சாரம், பண்பாடு பத்தி எனக்கு பாடம் எடுப்பார். ஒருவேளை அவரையும் கூட்டிட்டு வருவேன், பரவாயில்லையா?” எனக் கூறி பதிலை எதிர்பார்த்தான் அருள்.
 
கண்டிப்பா கூட்டிட்டு வா” என்றார் அம்மா.
 
வா வா, வரும்போது மப்டில வா. இந்த மாதிரி வெள்ளப் பாவாடைல வந்துறாத” என்றான் மணிமாறன்.
 
----------------------------------------------------------------------
 
மணிமாறன் காரை ஓட்டிக்கொண்டிருந்தான். அருகில் அருள். பின் இருக்கையில் பப்புவா நியூகினியாவிலிருந்து வந்திருந்த புது சாமியார் ரோனி.
 
டேய் அருள், நீ சாமியாராப் போனதும் போன, நாம டாப் அடிக்கிற இடத்துக்கெல்லாம் வர்ரதில்ல. ஒரே ஒரு தடவ திராட்சரசம் கொண்டு வந்த. அதக்கூட இப்பக் கண்ல காட்றதில்ல. டேய் அருளு, நான் பேசிட்டே இருக்கேன், நீ என்ன நினைப்புல இருக்க.” என முழங்கையை வைத்து லேசாக இடித்தான்.
 
போடா! முன்னாடிப் பாத்து ஓட்டுஎன்று கூறி ரோனியிடம் இங்குள்ள மக்களைப் பற்றி விவரிக்கத் துவங்கினான் அருள்.
 
செல்லமந்தாடி பாலத்தைக் கடந்து போய்கொண்டிருந்த வண்டி வலதுபுறம் சிறிய சாலையில் இறங்கியது. மக்கள் நடந்தும் வண்டியில் போவதுமாக இருந்தார்கள்.
 
சிலபேர், சின்னக் குழுவாக தலையில் முளைப்பாரியுடன் நடந்து போய்க்கொண்டிருந்தார்கள். சிலர் தீச்சட்டி எடுத்துக்கொண்டு போய் கொண்டிருந்தார்கள். அடிக்கடி குலவை சத்தம் கொடுத்துக்கொண்டே நடந்தது அருகில் திருவிழா நடப்பதைப் பறை சாற்றியது.
 
இனி வண்டில போகமுடியாது, நடைதான்.எனக் கூறிய மணிமாறன் வண்டியை ஓரமாக நிறுத்தினான். மூவரும் இறங்கி நடக்கத் துவங்கினார்கள். காரின் பின்னால் இருந்து மூன்று பைகளை எடுத்து, ஆளுக்கொரு பையை கையில் கொடுத்தான் மணிமாறன். அவர்கள் இது என்ன என்று கேட்கும் முன்னே "இதுலே உப்பு இருக்கு, கோயிலுக்கு போனதும் நீங்களே தெரிஞ்சுக்குவீங்க” என்றான்.
 
மணிமாறன் ரோனியிடம் திருவிழாவைப் பற்றி சொல்லிக்கொண்டு வந்தான்.
 
ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்தத் திருவிழா நாலு நாட்கள் நடக்கும். ஒவ்வொருநாள் இரவும் ஆடல்கள், பாடல்கள், சிலம்பு ஆட்டம் நடக்கும். எருமை கிடா வெட்டுதலும், சேவல் சண்டையும் ரொம்பச் சிறப்பு. தெய்வத்தின் பெயர், மண்டு காளியம்மன். வரலாறுன்னு ஒன்னுமில்ல. சுமார் 200 வருடங்களுக்கு முன்பு இருந்தே இந்த பழக்கம் இருக்கிறதுன்னு சொல்றாங்க. நினைத்தது நடந்து விட்டாலோ, இல்ல, வேண்டுதலாகவோ காளியம்மனுக்கு எருமை கிடாவை நேர்த்தி கடனாக கோவிலுக்கு முன்பு கொண்டு வந்து குளிப்பாட்டி, மாலையிட்டு அவிழ்த்து விட்டு விடுவாங்க. அந்த மாதிரியான எருமை கன்று குட்டிகள் சுமார் 50 முதல் 80 வரை சேர்ந்துடும். குளம், காடு, தோட்டங்களில் அவை கிடைச்சத சாப்ட்டுக் கிடக்கும். திருவிழா சமயத்தில அதனை ஊர்மக்கள் ஒன்னு எருமை கிடாக்களை பிடிச்சிட்டு வந்து சாமிக்கு பலி கொடுப்பாங்க. தெய்வம் மிகவும் சக்தி வாய்ந்ததுன்னு இந்தப்பகுதி மக்களோட திடமான நம்பிக்கை. எங்களுக்கும்தான்.என ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டே நடந்தான்
 
உங்க நாட்டுல இது மாதிரி பலி கொடுக்குறது இருக்கா
சிறிய புன்முறுவலுடன், “ஆதிக்குடிகள் இருக்கும் எல்லாக் கலாச்சாரத்திலும் பலியிடுதல் இருக்கும்.என்று அளந்துப் பேசினான் ரோனி.
 
சின்னஞ்சிறு இணையர்கள் கைகோர்த்து போவதைப்  பார்த்த அருள், மணிமாறனைப் பார்க்க, “கண்டிப்பா ஊருக்குள்ள ஒன்றிரண்டு காதல் ஜோடிகள் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்வதும் நடக்கும். பாவம்டா நீ! ஒரு பொண்ணு பிடிச்சுருந்தாலும் உன்னால ஒன்னும் செய்ய முடியாது. என்னமோ போடாஎன அலுத்துக்கொண்டான் மணிமாறன்.
 
இந்த சமய துறவ விட்டு வெளியே வந்துட்டு கல்யாணம் பண்ணலாம். அதுக்குலாம் வசதி பண்ணி கொடுத்திருக்காங்கஎன்றான் அருள் சிரித்தபடி.
 
பார்றா, இப்படியும் உனக்கு ஆச இருக்கா?” எனக்  கிண்டலடித்தான் மணிமாறன்.
 
ஊரை நெருங்க நெருங்க, துர்நாற்றம் அடிக்கத் துவங்கியது. ரோனியும், அருளும் முகம் சுளித்தார்கள். இதைக் கவனித்த மணிமாறன் "போகப் போக சரியாகிடும்" என்றான்.
 
சொன்ன மாதிரி துர்நாற்றம் பழகியது. அருகிலுள்ள மைதானத்தில் ஒயிலாட்டம் ஆடிக்கொண்டிருந்ததை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று கோயிலில் இருந்த ஒலிபெருக்கி கடாவெட்டு துவங்கப் போவதாக அலறியது.
 
முதல் கடா "சக்தி கடா" எங்க அப்பாதான் பிடிச்சிக் குடுக்கணும், சீக்கிரம் போவோம்” என அவசரப்படுத்தினான் மணிமாறன்.  
கோயிலை நோக்கி நடந்தார்கள் மூவரும். கோயிலின் முன்பாக முப்பதுக்கு முப்பது அடி அளவுல பெரிய குழி. எப்படியும் அந்தக் குழி இருபது அடி ஆழம் இருக்கும். வெளியிலிருந்து குழிக்குள் சிலபேர் உப்பைக்  கொட்டிக்கொண்டிருந்தார்கள்.
 
இது என்னக்  குழி?” என்ற ரோனிக்கு விளக்கம் கூறினான் மணிமாறன். 

எருமை மாட்டை பலி கொடுத்து இந்தக் குழிலதான் போட்டு மூடுவாங்க. போனத் திருவிழால பலிகொடுத்து மூடிய குழிய இந்தத்
திருவிழாவுக்குத் தோண்டியிருகிறாங்க.

 ஏன் ஊர் முழுவதும் துர்நாற்றம் அடிக்குதென்று இப்போ விளங்கியது இருவருக்கும். கூட்ட நெரிசலில் மணிமாறன், அருளையும் ரோனியையும் பலி மேடைக்கு அருகே அழைத்துச் சென்றான். பலிமேடை என்று எதுவும் சிறப்பாக இல்லை. அந்த இடம், அந்தக்காலத்தில் கிணற்றில் தண்ணீர் இறைக்க இரண்டு கற்பலகைகள் கிணற்று முனையில் துருத்திக் கொண்டிருப்பது போல அந்த மேடையில் இரண்டு  கற்பலகைகள் குழி முனையில் துருத்திக்கொண்டிருந்தது. இரண்டு பேர்கள் கையில் பெரிய அரிவாளுடன் எதிரெதிரே நின்றுகொண்டிருந்தார்கள்.
 
முதல் எருமைக் கடாவை மணிமாறனின் அப்பா ஒருவரிடம் மிகப்  பவ்யமாக பிடித்துக் கொடுத்தார். எருமை 'ம்மா' என அலறியது. பாதி அலறும்போதே ஒரே வெட்டில் தலை துண்டிக்கப்பட்டது. இதுவரை ஒரு உயிரை எடுப்பதை இவ்வளவு அருகிலிருந்து பார்த்தது கிடையாது அருளுக்கு. மாட்டின் தலை தனியாக குழிக்குள் விழுந்தது. அந்த மேடை முழுவதும் எருமை மாட்டின் ரத்தம்.
 
அருளுக்கு குருதியைப் பார்த்ததும் தலைச் சுற்றியது. அருளின் வெள்ளைச் சட்டையிலும் குருதி. மெதுவாக நினைவு தப்புவதுபோல் இருந்தது. இதைக் கவனித்த மணிமாறன் கைத்தாங்கலாக அவனைப் பிடித்து மேடையைவிட்டு வெளியே அழைத்து வந்தான். குழியின் முனையில் அமரவைத்தான் மணிமாறன். அடுத்த எருமை மேடையில் நின்றிருந்தது. இந்த முறை நன்கு வளர்ந்த பெரிய எருமை. இரண்டு பேரும் மாறிமாறி எருமையின் கழுத்தை வெட்டிக்கொண்டே இருந்தார்கள். எருமையின் அலறல், உறுமி மேளம், கொட்டுச் சத்தத்தைத் தாண்டி, அது சுற்றித்திரிந்த பகுதியில் கரைந்தது. சிறிது நேரத்தில் பல வெட்டுக்களுக்குப்பின் எருமையின் தலை தனியாக குழியில் விழுந்தது. நாலைந்து பேர் தலையில்லா எருமை உடலை குழியினுள் தள்ளிவிட்டார்கள்.
 
குழிக்குள் இருந்து வந்த துர்நாற்றம், எருமைகளின் அலறல், எருமைகளின் தலையற்ற உடல்கள், குருதிஉறுமி மேளம் கொட்டுச் சத்தம் எல்லாம் ஒன்று சேர்ந்து அருளை அங்கு இருக்கவிடாமல் செய்தது. மெதுவாக எழுந்து கூட்டத்தை விட்டு விலகி ஒரு மரத்தடியில் வந்து அமர்ந்தான். ரோனி, எந்தவித சலனமும் இல்லாமல் மக்களைக்  கவனித்துக்கொண்டிருந்தான்.
 
மணிமாறன், அருள் கையிலிருந்த உப்பு பொட்டலத்தைப் பிரித்து குழிக்குள் கொட்டி விட்டு அருளிடம் தண்ணீர் பாட்டிலுடன் வந்தான்.
 
டேய் மாப்ள! நீ சாமியாடிருவியோன்னு பயந்துட்டேன்டா. நினைச்சுப்பாரு, 'அம்மன் திருவிழாவில் சாமியாடிய தேவாலயத்தில் பூசை செய்யும் பாதிரியார்' நியூஸ்ல வந்தா எப்படியிருக்கும்  என்று சொல்லி பலமாகச் சிரித்தான் மணிமாறன்.
 
ஏண்டா! எங்கேயாவது சாமிக்கு பூஜை பண்றவர் சாமியாடிப் பாத்துருக்கியா? இல்ல, அலகு குத்தி, காவடி எடுக்குறதப் பாத்திருக்கியா?. போடா! போய் ரோனியப் பாத்து கூட்டிட்டு வா. தொலஞ்சிடப்போறான்.
 
சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு, மணிமாறன் வீட்டுக்குச் சாப்பிட கிளம்பினார்கள் மூவரும்.
 
போகும் வழியில் குழியைப்  பார்த்தான் அருள். சுமார் 50 எருமை மாடுகள் தலையில்லாமல் கிடந்தது. குழிக்குள் சிலபேர் தலையை ஒருபக்கமும், உடல்களை ஒரு பக்கமும் கயிறு கட்டி நகர்த்திக்கொண்டிருந்தனர். அவர்கள் உடம்பு முழுதும் மாட்டுக் குருதியால் நனைந்து இருந்தது. அருள் மனம் சலனப்பட்டு இருந்தது.
 
அருளுக்குப் பசித்தாலும் சாப்பிடப் பிடிக்கவில்லை. இருந்தாலும் அவனுக்காக சமைக்கப்பட்ட உணவுகளை வீணாக்க விரும்பவில்லை.
 
சீரகச் சம்பா வெள்ளாட்டு பிரியாணி பரிமாறப்பட்டது. அதில் இருக்கும் கறியைப் பார்த்ததும் பலி குழி ஞாபகம் வருவதைத் தடுக்க முடியவில்லை. தலையில்லாத மாடு, 'ம்மா' என மாட்டின் அடிவயிற்றிலிருந்து வரும் சத்தம், மாட்டுக் குருதி, துர்நாற்றம், உறுமி மேளம், கொட்டுச் சத்தம், சட்டையில் குருதி, மறுபடியும் குழி.
 
தின்பவனுக்கு பாவம்  இல்லை, கொலைப் பாவம் கொலை செய்தவருக்கே போய்ச் சேரும் என்றே சிறுவயதிலிருந்தே சொல்லப்பட்ட அருளுக்கு முதல் முறையாக கறியில் கை வைக்கத் துணிவில்லாமல் போனது.
 
 
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு
 
உயிர்களை உணவாக்கிக் கொள்ளச் சகதிக்குழியும் வாய் திறவாது. புலால் உண்ணாதவர்கள் இருப்பதால் பல உயிர்கள் கொல்லப்படாமல் வாழ்கின்றன.
----------------------------------------------------------------------