Sunday, February 17, 2008

சவுதியில் திருடினேன்

நான் தங்கியிருந்த அறையில் என்னுடன் ஜோசப் என்று ஒரு நண்பர் தங்கியிருந்தார். பம்பாயை சேர்ந்தவர். 32 வயது. திருமணமான கொஞ்ச காலதிற்குள் சவுதி வந்தவர். அது கோடைகாலமானதால் அறை குளிரூட்டப்பட்டிருந்தது. வெளியே அதிக வெப்பம், உள்ளே அதிக குளிர். ஒரு நாள் சாயங்காலம் ஜோசப்புடன் தேநீர் அருந்தி கொண்டிருந்தேன். அப்பொழுது அவர் வாயின் இடது பக்கத்திலிருந்து தேநீர் வழிந்தது. அதைச் சுட்டிக்காட்டினேன். துடைத்தார். மறுபடியும் வழிந்தது. சுட்டிக்காட்டினேன்.


அப்பொழுதுதான் அவர் உணர்ந்தார், அவருக்கு இடது பக்கம் உணர்வில்லை என்று. அவரால் ஒரு கண்ணை மூட முடியவில்லை. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவரோ அரண்டு நடுங்கிக் கொண்டிருந்தார், நானும்தான். உடனே அவரை அருகிலுள்ள முதலுதவி அறைக்கு அழைத்துச் சென்றேன். அங்கு பிலிப்பினோ நர்ஸ் இருந்தார் ( ஆண் நர்ஸ் ). சவுதியில் ஆண்களுக்கு ஆண் நர்ஸ் தான். சிறிது நேரத்தில் அருகிலுள்ள யான்பு நகரத்திற்கு அழைத்துச் சென்றோம்.


எகிப்து மருத்துவர் சோதித்துவிட்டு, பயப்பட தேவையில்லை என்றார்.அவருக்கு வந்தது முக வாதம் (facial paralysis). இடது பக்க முகத்தில் மட்டும் வாதம். இடது கண்னை மூடினால் திறக்க முடியாது, திறந்தால் மூட முடியாது. சிரித்தால் இடது பக்க முகம் முழுவதும் அசையாது. எதனாலென்றால் இரவு தூங்கும்போது, வெளியே 45 டிகிரி
செல்சிய்ஸ், அறையினுள்ளே 16 டிகிரி செல்சிய்ஸ். மேலும் குளிர்சாதனத்திலிருந்து நேரே முகத்தில் குளிர்ந்த காற்று அடித்ததினால் உடம்பும் முகமும் வேறு வேறு டெம்பெரேச்சரில் இருந்திருக்கிறது தினமும். அதனால் இந்த முக வாதம். சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்ததினால் 1 மாததில் சரியாகிவிட்டது. ஆனால் இந்த சம்பவத்திலிருந்து பல பேர் பாடம் கற்றுக்கொண்டோம். அன்றிலிருந்து குளிர்காற்று என் மேலே படாதவாறு பார்த்துக் கொள்வேன், வீட்டிலேயும் காரிலேயும்.


இவ்வாறாக 2 மாதங்கள் ஓடிவிட்டது. வேலை இடத்தில் எனக்கு ஏற்பட்ட விபத்தில் என் சுண்டு விரலில் 8 தையல்கள். எனக்கு வேலை பிடிக்கவில்லை , சவுதியில் இருக்கவும் பிடிக்கவில்லை. வேலையிடத்தில் எல்லா பிலிப்பினோக்களும் சக பிலிப்பினோக்களுக்கு சாதகமாகவே நடந்து கொண்டார்கள்(இயல்புதானே) . என் ராஜினாமா கடிதத்தை தயாரித்து(8 பக்கங்கள்)அனுப்பினேன். ஒரு மாததில் வீடு திரும்பலாம் என கூறினார்கள். சவுதியை விட்டு வெளியே போவதற்கும் விசா வாங்க வேண்டும் (Exit Visa).


என் மனதில் சவுதி வந்ததிலிருந்து ஒரு ஆசை இருந்தது. " மாட்டிக் கொள்ளாமல் திருட வேண்டும்". சிறு வயதில் பல தடவை வீட்டில் திருடியிருக்கிறேன். எல்லாம் சில்லறைகள். அதிக பட்சம் 10 ரூபாய். வீட்டில் திருடி பல தடவை பிடிபட்டு நிறைய அடி வாங்கியிருக்கிறேன் அம்மாவிடம். ஆனால் இந்த முறை வெளியே திருட வேண்டும் அதுவும் மாட்டிக் கொள்ளாமல். ஒரு மாதம் முயற்சி செய்தேன், முடியவில்லை. கடைசி நாள், யான்புவில் ஒரு கடையில் Rexona Roll on perfume ஆட்டையை போட்டேன். சிறியதாக இருந்ததால் சுட முடிந்தது. ஏதோ பெரிய காரியத்தை சாதித்து முடித்தது போல் இருந்தது. எனக்கு நானே பெருமை பட்டுக் கொண்டேன். மாட்டியிருந்தால் கையை இழந்திருப்பேன்.
எதை செய்யாதே என்று கடுமையாக கூறுகிறோமோ அதைத் தான் மனம் செய்யத் தூண்டுகிறது.


24 மணி நேரம் பேரூந்தில் பயணம் செய்து திரும்பவும் தமாம் வந்தேன். அங்கிருந்து மும்பை வந்தடைந்தேன். இரண்டு நாட்கள் அக்கா வீட்டில் இருந்து விட்டு சிவகாசி வந்தடைந்தேன். சிவகாசி நண்பர்கள் எல்லோரும் சிறு வயது முதல் பழக்கம். சேர்ந்து செய்யாத சேட்டைகள் கிடையாது. அதைப்பற்றி தனியாக " சிவகாசி ஆட்டம்" எழுதலாம். வந்த மறுநாள், ராஜபாளையம் அருகில் இருக்கும் அய்யனார் அருவிக்கு சிவகாசி நண்பர்களுடன் செல்வதாக திட்டம்.


காலையில் 10 மணிக்கு சிவகாசியிலிருனந்து கிளம்பினோம். ராஜபாளையத்தில் வாங்க வேண்டியதை வாங்கி கொண்டு மேற்கு மலை தொடருக்குள் சென்றடைந்தோம்.
மலையினுள்ளே 2 கிலோமீட்டர் நடந்து ஒரு அருவியை அடைந்தோம். ரம்யமான இடம். அருவி, தடாகம், நடுவில் ஒரு பெரிய பாறை. சாப்பிடவும் குடிக்கவும் சுற்றி வைத்துக்கொண்டு, அருவியில் குளியல், தடாகத்தில் ஒரு நீச்சல், ஒரு ரவுண்டு ஊத்துதல். அந்த ரம்யமான நேரத்தில் நண்பன் இளங்கோ , டேய் மாப்ளே.. சவுதி எப்படி இருந்தது என்றான்.

அதற்கு நான், சொர்க்கம் இங்குதான்டா இருக்கிறது. சவுதி வாழ்க்கை என்பது " Parrot in a golden cage".



சவுதி ஆட்டம் முடிந்தது.....

5 comments:

said...

எங்கே ரொம்ப நாளா ஆளைக் காணோம்?

குளிர் காற்றுலே முகத்துலே பக்கவாதம் நானும் கேள்விப்பட்டுருக்கேன்.

ஒரு முறை ரயிலில் இரவுப்பயணத்தில் ஜன்னல் அருகில் இருந்த தோழி, அப்படியே உறங்கிவிட்டாள் ஜன்னலில் தலை வைத்தபடி. காலையில் வாய் கோணிப்போய் இருந்ததாம்.

said...

நல்லா சொல்லியிருக்கீங்க !

அட நீங்களும் யான்புவில் இருந்தீங்களா..?

நான் யான்பு அல்-சினைய்யாவில் 3 வருடம் இருந்தேன். (97-2000)

இன்னும் விபரம் தெரிஞ்சுக்கலாமா?

rsundartronics@gmail.com க்கு ஒரு மெயில் தட்டுங்களேன்.

அன்புடன்.

said...

இப்ப எல்லாம் வீடு புகுந்து நகை கொள்ளை..வழிப்பறி..மொபைல், பணம் திருட்டு என்பது மிகவும் வாடிக்கையகிவிட்டது இங்கே(ரியாத்)..பாலை நிலத்துக்குத் தொழில் களவு என்ற நம் தமிழர் கூர்று மெய்யாகி வருகிறது..

said...

தங்கள் வருகைக்கு நன்றி துளசி கோபால்,

கடந்த சில மாதங்களாக வேலை தேடுவதே வேலையாக இருந்ததால் காணாமல் போய்விட்டேன் ( நான்கு வாய்களுக்கு சோறு போட வேண்டும்)

said...

தங்கள் வருகைக்கு நன்றி சுரேகா,

நான் யான்புவில் ஜுன் 96- அக்டோபர் 96 வரை இருந்தேன். யான்பு சிமெண்ட் கம்பெனி கட்டுமானத்தில் சிறிது பங்கேற்றேன்.

சிவகாசி ஸ்ரீனிவாசன்