Wednesday, December 12, 2018

தெப்பம்



பாளையத்திலிருந்து  நிக்காஹ் (திருமணம்) ஆகி சிவகாசி வந்தபோது எல்லாமே வித்தியாசமாக இருந்தது, பாத்திமாவுக்கு. ஒரு பள்ளிவாசல், அதைச்சுற்றி மொத்தமே ஏழு தெருக்கள் தான் முஸ்லிம்கள் வசிப்பது. இருக்கும் முக்கால்வாசி முஸ்லிம்கள் நடுத்தர வர்க்கத்திற்கும் கொஞ்சம் கீழே  வாழ்பவர்கள். அச்சாபீசில் உள்ள சல்லித்தாளை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்யும் சில பேர் வசதியாக வாழ்கிறார்கள். மற்றபடி, வீட்டில் கணவனும்  மனைவியும் வேலைசெய்தால்தான் குடும்பத்தை ஓட்டமுடியும். தொழில் சார்ந்த குடியிருப்புக்கள். அட்டைப்பெட்டி ஒட்டுவது, அருகில் இருக்கும் தீப்பட்டி ஆபீசுக்கு கட்டை அடுக்குவதும், போன்ற சிறுதொழில்கள் தான் முக்கியமான தொழில். பெண்கள்தான் வீட்டிலேயே சிறுதொழில் செய்பவர்கள்.

ஒருமுறை சாவலு அம்மாவிடம் பேசும்போது அவர்கள் " கட்டைகளை தீப்பட்டி ஆபீசுக்கு தூக்கிட்டு போகும்போது சேலைக்குப் பதிலாக ஆண்கள் மாதிரி பேண்ட் சட்டை இருந்தால் வசதியாக இருக்கும். அதே மாதிரி முடியையும் ஓட்ட வெட்டினாலும் வசதி. அதிக நேரம் வேலைசெய்யலாம்" என்றபோது பெண்களின் வித்தியாசமான அதிகாரத்தை உணர்ந்த தருணம். எல்லோரும் வேலை வேலை என்றே ஓடிக்கொண்டிருக்கும் ஊர்.
 வீட்டிலேயே சிறு தொழில்கள் செய்வதால் பெண்கள் தான் வீட்டின் தூண்கள். அவர்கள்தான் வீட்டை நிர்வகிப்பவர்கள். பாளையத்தில் வளர்ந்தபோது அப்பாவும் அண்ணன்மார்கள் சொல்வதுதான் சட்டம். அவர்களுக்கு அடங்கியே வாழ்க்கை வாழ்ந்தது இப்போ நினைத்தாலும் அச்சலாத்தியா இருந்தது. திருமணமான பின்புதான் சுதந்திரக்  காற்றை சுவாசிக்க ஆரம்பித்தாள் பாத்திமா.

வந்த புதிதில் அருகில் இருக்கும் கடைக்குச் சென்றாலும் புர்கா போட்டுத்தான் செல்வாள் பாத்திமா. எல்லோரும் வித்தியாசமாக பார்த்தார்கள். அம்மணமா திரியிற ஊரில் கோவணங் கட்டியவன் முட்டாள் மாதிரி இருந்தது. அத்துடன் புர்காவை வீசியெறிந்தாள். சிலநாட்கள் எதையோ இழந்தது போல தெரிந்தது. பின்பு பழகிவிட்டது. சிலநேரம் முக்காடு போடுவதோடு சரி.

பாத்திமாவின் கணவன் இக்பால், சிவகாசியில் இதே வீட்டில் பிறந்து வளர்ந்தவன். நிறைய இடங்களில் வேலை பார்த்த அனுபவத்தில், தனியாக தொழில் செய்கிறான். சூடம் அட்டப் பெட்டி, மெழுகுவர்த்தி அட்டப் பெட்டி போன்றவற்றை வெளிஊரிலிருந்து  ஆர்டர் எடுத்து வந்து மற்ற அச்சாபீஸில் கொடுத்து, செய்து அனுப்ப வேண்டும். அடிக்கடி வெளியூர் செல்லும் வேலை, ஆர்டர் எடுப்பதற்கும், எடுத்த ஆர்டருக்கு பணத்தை வசூலிப்பதற்கும்.
பலவருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்தது. முஸ்லீம் நடுத்தெருவில் இருக்கும் டாக்டர் கல்பனா பாலமுருகன் ஆஸ்பத்திரிக்கு மருத்துவத்திற்காக நடையாய் நடந்தது வீண் போகவில்லை. பல வருடங்கள் கழித்து பிறந்ததால்,ஆசிப் தான் அவர்களின் உலகம்.
இரண்டு அறை கொண்ட ஒரு சின்ன ஓட்டு வீடு. வீட்டின் முன்னே கதவு இல்லாத ஒரு சிறிய கோட்டைச்சுவர்.  வீட்டிற்கும் கோட்டைச்சுவர்க்கும் இடையில் ஒரு மூன்றடி.  அதில்தான் இவர்கள் வளர்க்கும் கோழிகள் அடையும். பகல் முழுவதும் குப்பைமேட்டில் கிளறிக்கொண்டிருக்கும். சாயந்திரமானால் வீட்டில் வந்து அடைந்துவிடும். கோழிகளைப் பாதுகாக்க ரொம்ப மெனெக்கிடுவதில்லை. தற்சமயம் ஆறு கோழிகள், இரண்டு சேவல்கள் தான் இருக்கிறது.

எத்தனையோ தடவை சொல்லியாச்சு. ஒன்னு ஒரு கோழி கூண்டு வாங்கி பூட்டுப்போட்டு வைங்க, இல்லையென்னா   எல்லா கோழிகளையும் வித்துடுங்க. இன்னைக்கு காலையிலே குப்பைமேட்டில நம்ம செவலை கோழி இறக்கைகளை பார்த்தேன், இன்னைக்கு மதியம் பக்கத்து வீட்டு சாவலு (சாகுல்) அம்மா வீட்டிலிருந்து கறிக்கொழம்பு வாசம் வந்தது. அவாதான் நம்ம கோழிய திருடி சமைச்சிருக்கணும். நேரடியா கேட்கலாம்னு இருக்கேன். ஏற்கனேவே அந்த சாவலு  பய வெள்ள கோழி போட்ட முட்டய எடுக்கும்போது கையும் களவுமா பிடிச்சு எச்சரிச்சு அனுப்பினேன். பாத்திமா பொரிந்து தள்ளிக்கொண்டிருந்தாள் உள்ளே நுழைந்த இக்பாலிடம்.

அப்படி எதுவும் செய்ஞ்சிராத. பக்கத்து வீட்டுக்காரங்களோட சண்டைபோட வேணாம்.
கோழிதானே போனாப்போகுது. நான் ஊர்ல இருந்து வந்தவுடனே மிச்சமிருக்கிற எல்லாத்தையும் வித்துடலாம்என்றான் இக்பால்.

என் கோழியை விற்க வேணாம்பாஆசிப் க்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

"உன் கோழி எதுடா செல்லம் "என்ற இக்பாலிடம்

"கருப்புக்கோழி" என்றான் ஆசிப்.

"எப்பப்பாத்தாலும் அந்த கருப்புக்கோழி பின்னாடி அலைவானே பார்த்ததில்லையா நீங்க, அது என்னமோ அந்தக் கருப்புதான் இவனுக்குப் பிடிச்சிருக்கு" என்றார் பாத்திமா.

"தமிழ்நாட்டிலே கருப்பு பிடிக்காதவர்கள் யாரு இருக்கா, சொல்லு" என்று ஒரு புன்னகையுடன் பாத்திமாவிடம் கூறி ஆசிப் பைப் பார்த்து 

"வாப்பா ஊருக்குபோய்ட்டு இரண்டு நாளில் வந்திடுவேன், உனக்கு என்ன வேணும் சொல்லு" என மகனுடன் கொஞ்ச ஆரம்பித்தான் இக்பால்.

"எனக்கு கருப்பு கோழிய விக்கக்கூடாது. அது எனக்கு வேணும், என்னோட விளையாட எனக்கு வேணும்"

சரிதான்!!  இனி இவனிடம் பேசி பிரயோசனமில்லே. இனி திருப்பி திருப்பி இதையே தான் சொல்லுவான். 

"சரிப்பா!! உன் கருப்புக்கோழிய விக்கல.  வாப்பா ஊரிலிருந்து வந்தவுடன் ஒரு கூண்டு வாங்கி கருப்புக் கோழியே மட்டும் வளர்க்கலாம் சரியா" என்று அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தான் தற்காலிகமாக.

இக்பால் இரவு பஸ் பிடிக்க கிளம்பி போனபின்பு, மற்ற வேலைகளையெல்லாம் முடித்து படுப்பதற்கு 12 மணி ஆகிவிட்டது. உடம்பு அசதியில் படுத்தவுடன் தூங்கிவிட்டாள் பாத்திமா.
திடீரென்று விழித்தாள், அரவம் கேட்டு. மணியைப்பார்த்தாள். 3.30 காட்டியது. கோழிகளெல்லாம் சிறிது அரவமிட்டன. காதைக்கூர்மையாக்கி என்ன சத்தமாக இருக்கும் என் கவனித்தாள் பாத்திமா. ஒருவேளை சாவலு அம்மாதான் கோழி திருட வந்திருக்குதோ என நினைத்தாள்.

எப்படியாவது இன்னைக்கு கையும் களவுமா பிடிச்சிடனும் என மனதிற்குள் நினைத்துக்கொண்டே மெதுவாக எழுந்து  சென்று கதவைத் திறந்தாள், கொண்டியில் சத்தம் வராதவாறு. பாத்திமா கதவைத் திறப்பதற்கும்  கோழிகள் அலறுவதற்கும் சரியாக இருந்தது.
மங்கலான இருட்டில் வெள்ளை நிற தெரு நாய் ஒன்று கருப்புக்  கோழியை கவ்விக்கொண்டு வெளியே ஓடியது. சிறிதும் தாமதியாமல் வீட்டை  விட்டு  தெருவில் இறங்கி அந்த அர்த்தராத்திரியில் நாயைத்துரத்த ஆரம்பித்தாள் பாத்திமா. தெருவில் ஓடிய நாயை துரத்திக்கொண்டே கல்லைத்தேடினாள் பாத்திமா. நாய கண்டால் கல்லைக் காணோம் என்ற பழ மொழி உண்மைதான் போல என நினைத்துக்கொண்டாள்.

கோழியின் ஒரு இறக்கையை  நாய் கவ்வி இருந்ததாலும் , மறு  இறக்கையை கோழி பலமாக அடித்ததாலும்  நாயால் வேகமாக ஓட முடியவில்லை.  பாத்திமா ஸ்கூல் படிக்கும் போது வேகமாக ஓடியது. அதன் பிறகு இப்போதான் வேகமாக ஓட வாய்ப்பு வந்துள்ளது. இந்த நைட்டி வேற, ஓடுவதைத் தடுக்கிறது. வேட்டியை மடித்துக்கட்டுவதுபோல்  நையிட்டியை மடித்துக்கட்டினாள் பாத்திமா. இப்போ நன்றாக ஓட முடிந்தது.  நாய் சீதக்காதி தைக்காத்தெரு வைத்தாண்டியது.

யா அல்லா!! இந்த சக்கரை வாவா தெருவை தாண்டுவதற்குள் பிடித்து விடவேண்டும் என் வேகமெடுத்தாள் பாத்திமா.

எதிர்பாராத விதமாக நாய் பள்ளிவாசலுக்கு எதிர்புறமுள்ள தெப்பத்திற்குள் இறங்கியது. தெப்பத்தில் ஐந்தாவது படிக்கட்டு வரை தண்ணீர் கிடந்தது.

எப்படியாவது நாயிடமிருந்து கோழியை மீட்டு விடவேண்டும் என்ற வேகத்தில் தெப்பம் படிக்கட்டில் இறங்கினாள். பள்ளிவாசல் முன்பு இருந்த விளக்கு வெளிச்சத்தில் இப்போது நாய் நன்றாகத்  தெரிந்தது. நாய் ஆறாவது படிக்கட்டில் நின்றுகொண்டு கோழியை கீழே வைத்திருந்தது. பாத்திமாவுக்கு பகீரென்றது. ஒருவேளை கோழியைக் கொல்லப்போகிறதா, கோழியைக் கொன்றுவிட்டதா என நினைத்து நாய் அருகில் நெருங்கினாள் பாத்திமா. தெருநாய், கீழே வைத்திருந்த கோழியின் பிடியைத் தளர்த்தியது. இதுதான் சமயம் என்று இருந்த கோழி இறக்கையை அடிக்கவும் நாயின் பிடி நழுவியது.  அதே சமயம் ஆள் அரவம் கேட்டவுடன் நாய் ஓட்டம் எடுத்தது, கோழியை விட்டு விட்டு.

நாயிடமிருந்து மீண்ட கோழி, இறக்கையை படபடத்ததில், அருகில் இருந்த தண்ணீரில் விழுந்தது. மூச்சிரைக்க வந்து நின்ற பாத்திமாவுக்கு இப்போ வேறே மாதிரியான பிரச்னை. தண்ணீரில் விழுந்த கோழி நடு தெப்பத்திற்குச் சென்றுவிட்டது. பாத்திமாவிற்கு தெப்பத்தின் ஆழம் தெரியும். கோடைகாலத்தில் வறண்ட தெப்பத்தில்  கீழே சென்று தண்ணீர் ஊற ஊற குடத்தில் பிடித்து குடத்தை தூக்கிவந்ததால் இந்த தெப்பத்தைப்பற்றி நன்றாகத் தெரியும்.

நொடியும் தாமதியாமல் பாத்திமா தண்ணீருக்குள் பாய்ந்தாள். சிறுவயதில் நீச்சல் பழகியது கை  கொடுத்தது.  அதிகாலை 3.30 மணிக்கு யாருமேயில்லாத இந்த இரவு நேரத்தில் தனியாக, நாயை விரட்டிக்கொண்டு, ஒரு கோழிக்காக நீச்சலடித்து நடு தெப்பத்தை அடைந்தாள். ஒருவேளை நம்மைப்  பாதுகாப்பவர் வந்துவிட்டார் என பாதுகாப்பாக உணர்ந்ததுவோ, என்னவோ கோழி அசையாமல் இருந்தது. நடு தெப்பத்தில் கிடந்த கோழியை ஒருகையில் பிடித்துக்கொண்டு நீச்சலடித்து கரையை அடைந்தாள் பாத்திமா.
நைட்டியில் ஈரம் சொட்ட சொட்ட கையில் கோழியை பிடித்துக்கொண்டு  வீடு நோக்கி நடந்தாள். அப்போதுதான் கவனித்தார், மோதியார் (தொழுகைக்கு அழைப்பவர்) பள்ளிவாசலை நோக்கி நடந்துவருவதை. அருகில் வந்ததும் பாத்திமா மோதியாரை பார்த்து 
"அஸ்ஸலாமு அலைக்கும்" என்று முடிக்கும் முன்னரே "வாலைக்கும் ஸலாம்! ரஹ்மதுல்லாஹி பரகாத்துஎன்றார் மோதியார்.

ஈரத்தில் உடம்போடு ஒட்டிய நைட்டி, கையில் கருப்புக்கோழி இந்த கோலத்தில், இந்த இரவு நேரத்தில் தனியாக வந்த பாத்திமாவைப் பார்த்ததும் பதறிவிட்டார்.  என்னம்மா இந்த நேரத்தில்? " என்றார் குழப்பமாக.

தெரு நாய் கோழியை தூக்கிட்டு வந்த கதையை விளக்கினார், பாத்திமா.

"நான் இந்த கோழிய பிடிக்கலைன்னா, நான்தான் வித்துட்டேன்னு ஆசிப் நினைச்சுக்குவான். அதனால் தான் எப்பாடு பட்டாவது கோழியை பிடிக்கனும்னு ஓடி வந்தேன்.

அதற்கு மோதியார் " இதைக் கேட்டவுடன்  எனக்கு சிறு வயதில் படித்த குறள் ஞாபகம் வருது.
வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாக இருக்குது”.

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை

பார்த்து வீட்டுக்கு போமா, என்று பள்ளிவாசலுக்குள் நுழைந்தார் மோதியார், காலைத்தொழுகைக்கு பாங்கு (தொழுகைக்கு அழைக்க) சொல்ல.

==================================================================
வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச் செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள் கலைஞர்
=================================================================





0 comments: