Tuesday, December 18, 2018

பசியாறிட்டீங்களா?



மனமுருக முருகனை தரிசித்து/வேண்டி  விட்டு பத்து மலைக் குகையிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தேன். ஐந்து மணிக்கு Sam ஐ சந்திக்கும் அவசரத்தில் வேகமாக படியில் இறங்கியபோதுகைபேசி சிணுங்கியது. சாம் தான் பேசினான்.

"வந்துட்டீங்களா" என்றதற்கு “நான் ஒரு மணி நேரம் முன்னேமே 'Uber' ல் வந்துட்டேன்”, என்றேன்.

நான் அருகில் இருக்கும் காகா கடையில் (தமிழ் முஸ்லீம் சாப்பாட்டுக்கடை) இருக்கிறேன். காடியில் (கார்) எண்ணெய் ஊத்திட்டேன்.  போற வழியில் எண்ணெய் போட நேரம் இருக்காதுடிராபிக் அதிகமா இருக்கும்.  இது பீக் டைம்  லா” என்ற சாமிற்கு 

படி இறங்கிக்கொண்டிருக்கிறேன் இன்னும் பத்து நிமிடத்தில் அங்கு இருப்பேன்" என்றேன் நான்.

கட்டட பொறியியல் படித்துவிட்டுதாது வெட்டி எடுக்கும் கம்பெனியில் சென்னையில் பணி செய்கிறேன். அடிக்கடி கோலாலம்பூர்  பயணம். வரும்போதெல்லாம் பத்து மலை முருகனை தரிசிக்காவிட்டால் ஏதோ ஒன்றை இழந்ததுபோல இருக்கும். சாம் என்ற சம்பந்தன் கோலாலம்பூர் அலுவலகத்தில் என்னுடன் வேலை பார்ப்பவன். மலேசியன். தமிழ் வம்சாவழி ஆனால் இந்தியாவிற்கு வந்ததில்லை. சம்பந்தன் என்றே நான் அழைப்பதுண்டு.

ஈப்போவில் (Ipoh) நம் சொந்தக்கார தாத்தா இருக்கிறார். ஒரு எட்டு போய் பார்த்திட்டு வாடா" என அம்மாவின் நச்சரிப்பு. 

அம்மா அவரை  தாத்தா என்பார்கள். எங்களுக்கு சொந்தமா இல்லையா எனத்  தெரியாது. நான் சிறு வயதில் இருக்கும்போது தாத்தா என் வீட்டிற்கு வந்திருக்கிறார். அதன் பின்பு கடித போக்குவரத்துதான். இந்த முறை கண்டிப்பாக போகவேண்டும் என அம்மாவின் கட்டளை. கைபேசி மூலம் சாயந்திரம் 7 மணிக்கு வந்து விடுவேன் என தாத்தாவிடம் தெரிவித்துவிட்டேன். 

இரவு சாப்பாடு நம் வீட்டில் தான் என தாத்தா சொன்னதால் சரியான நேரத்திற்கு போகவேண்டும் என எண்ணிக்கொண்டேன்என்னிடம் கார் இல்லாததால் சம்பந்தனிடம் கேட்டேன்.

"என்னோட காடிய எடுத்துட்டு போங்கலா. கையில் ஒரு 150 வெள்ளி சில்லறையாக வைத்துக்கொள்ளுங்க. போலீஸ் பிடித்தால் கொடுப்பதற்கு" என்றவனிடம் வற்புறுத்தி வரச்சொன்னதால் என்னை அழைத்துப் போக காத்திருக்கிறான்.

1925ம் வருடம், மலேயா நாட்டில் (இன்றைய மலேசியா) கோலாலம்பூரிலிருந்து 200 கிலோமீட்டர் வடக்கே (ஈப்போ நகரத்திற்கு அருகில்ராயா ஆற்றுக்கரையோரம் தமிழ்வாணன் குட்டி போட்ட பூனை மாதிரி அங்கும் இங்கும் ஓடி எல்லா வேலையாட்களை விரட்டிக்கொண்டிருந்தார்.

"ஏய் ராசய்யா.. இன்னுமாடா அந்த மாலையக் கட்டுறவேகமா கட்டுடா"

"டேய் சுப்பு,  வாழமரம் வெட்டி எடுத்துட்டு வரும்போதுஐயாவுக்குப் பிடித்த செவ்வாழை ஒரு தார் அறுத்து எடுத்துட்டு வாடா  "

"டேய் சாமி… எங்க போய்ட்டு இருக்கேஐயா வர்றதுக்குள்ளே கறிச்சோறு தயாரா இருக்கணும்புரிஞ்சுதா "

"ஏய் வீராஐயாவுக்கு பிடிச்ச சாமியாட்டம் அடிக்கனும். பறைய அடிக்கிற அடி பத்து குகையைத் தாண்டி கோலாலம்பூர்க்குக் கேக்கணும்.

காலையிலிருந்து தமிழ்வாணன் சுழன்றுகொண்டிருக்கிறார். இன்று காலை ஐயாடிம்மூரிலிருந்து (Timor, இந்தோனேசியாபினாங்கு  துறைமுகத்திற்கு வந்திறங்கியிருப்பார்.
தமிழ்வாணன் குறிப்பிடும் ஐயாவில்லியம் கெல்லி ஸ்மித் (William Kellie Smith) ஸ்காட்லாந்தில் பிறந்து இருபதாவது வயதில் மலேயாவுக்கு கட்டிட பொறியாளராக வேலைக்கு வந்தார். மலேயா ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. வந்த இடத்தில் தொழில் தொடங்கி பேராக் மாநிலத்தில் காடுகளை அழிக்க அரசிடமிருந்து சலுகைகளைப் பெற்றார்.

காடுகளை அழிக்க இந்தியாவிலிருந்து தமிழ் மக்களை அழைத்து வந்தார். இலாபம் கொட்டியது. 3000 ஏக்கர் காடுகளை வாங்கி தமிழர்களை வேலைக்கு அமர்த்தி காப்பித்தோட்டம் போட்டார். மேலும் பணம் கொட்டியது. சில வருடங்களில்சந்தையில் காபி விலை சரிந்ததால் வியாபாரம் நொடிந்தது. வேறு என்ன தொழில் செய்யலாம் என யோசித்த போது  தான் தமிழர் ஒருவர் சொன்ன "பச்சைலை" (Patcholi - தமிழிலிருந்து ஆங்கிலம் எடுத்துக்கொண்ட சொல்எண்ணை வடிகட்டும் ஆலை நிறுவி "பச்சைலை" நறுமண எண்ணெய் சீமைக்கு ஏற்றுமதி பண்ணினார். மீண்டு எழுந்து வந்தார் கெல்லி. அதனால் தமிழர்கள் மேல் அதீத அன்பு.

அடிவாரத்தில் இருக்கும்சாம் சொன்ன சாப்பாட்டுக்கடைக்குள் நுழைந்தேன். சாயந்திரமானதால் கடையில் கூட்டம் அதிகமில்லை. சிலர்  புரோட்டாவை  முட்கரண்டியால்  கொத்தி குத்தி தின்றுகொண்டிருந்தார்கள். சிலர் கோபி குடித்துக்கொண்டிருந்தார்கள்.

 “குடிக்கிறீங்களா” என்ற சாம்மிடம்

இல்ல பார்சல் வாங்கிக்கலாம் சம்பந்தன்” என கடைக்காரரிடம் ,

தே தாரிக் குராங் மனிஸ் (சீனி குறைவா ஒரு டீ )” என்றேன். தே  தண்ணியை நெகிழி பையில் ஊற்றிக்கொடுத்தார்கள். கடைக்காரரிடம் ஐந்து வெள்ளியை கொடுத்துவிட்டு வண்டி ஏறினேன்.

வண்டியை சாம்தான் ஓட்டினான்சாலையில் வெண்ணை போல வழுக்கிக் கொண்டு சென்றது. சில நிமிடங்களில் ஹவே 1 க்குள் நுழைந்ததுஹவே 1 தான் மலேசியாவின் முதுகெலும்பாக இருந்தது ஒரு காலத்தில். வடக்கே தாய்லாந்து எல்லை கடாரத்திலிருந்து சிங்கை எல்லை ஜோஹோர் பாரு வரை மலேசியாவின் அதிக ஊர்களை இணைக்கும் சாலை.

கெல்லிஒரு அரண்மனை கட்டி தனது மனைவிக்கு அன்புப் பரிசாக அளிக்க திட்டமிட்டிருந்தார். அதுவும் தமிழக கட்டிடக் கலையை பின்னணியாகக் கொண்டு பெரிய அரண்மனையைக் கட்ட  கெல்லி திட்டமிட்டார்.

அதைக் கட்டுவதற்கு ஆட்கள் தேடும்போதுதான் தமிழ்வாணன் அறிமுகமானார்காரைக்குடியில். நகரத்தார் வீடுகளை அழகியலுடன் கட்டுவதில் தமிழ்வாணன் கில்லாடி.
தமிழகக் கட்டிடக் கலையில் அரண்மனையைக் கட்ட தமிழக கட்டிடக் கலைஞர்கள் 70 பேரை மலேயாவுக்கு அழைத்துச் வந்தார்தமிழ்வாணன். அரண்மனைக்குத் தேவைப்பட்ட  செங்கல்லையும்மணல்பளிங்கு போன்றவற்றை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து இந்த அரண்மனையைக் கட்ட தொடங்கினார்.

மரவேலைப்பாடுகளுடன் நிலைசன்னல்கதவு என அரண்மனை ஆறடுக்கு மாடியாக  வளர்ந்தது.

அப்போதுதான் இடி மாதிரி அந்த நிகழ்வு. கட்டடப் பணியின்போது பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களைமர்மக் காய்ச்சல் கடுமையாகத் தாக்கியது. சிலர் இறந்தார்கள். வேலை தடைபட்டது. எல்லோரும் தமிழ்வாணனிடம் முறையிட்டார்கள்ஒரு கோயில் கட்டவேண்டுமென்று. ஆனால் கோயில் கட்ட பணம் வேணுமே. கோயில் கட்ட தமிழ்வாணன் கெல்லி ஐயாவை அணுகியபோதுகெல்லி ஐயா உடனடியாக ஒப்புக்கொண்டு இடமும் பணமும் கொடுத்தார்.அவரது பெருந்தன்மைக்கு நன்றி காட்டும்விதமாகஅவர்கள் கட்டிய முருகன் கோவில் சுவரில் மற்ற தெய்வங்களுக்கு அருகில் கெல்லி ஐயாவுக்கு ஒரு சிலை அமைக்கப்பட்டது.




அரைமணிநேரம் எந்தவித பிரச்னையுமில்லாமல் போய் கொண்டிருந்த கார் போக்குவரத்து நெரிசலால் மெதுவாக ஊர ஆரம்பித்தது.

ஹரி ராயா லீவு லாஅதனால்தான் நெரிசல் ..” என அலுத்துக்கொண்டான் சாம்.

பேச்சு சினிமா பக்கம் சுற்றிவந்து சாதியில் நின்றது. இப்பெல்லாம் யாரு சாதி பார்க்குறா  என்று வாயில் சொன்னாலும் மனதுக்குள் என்னவோ இவன் என்ன சாதியா இருப்பான் என எண்ணம் ஓடுகிறது. இவன் என்ன சாதியா இருக்கும் என தெரிந்து கொள்ள என் மனதுக்குள் ஒரு மிருகம் சுரண்டிக்கொண்டே இருந்தது.  நம்ம ஊரா இருந்தா ஊரை வைத்துசொந்தத்தை வைத்துகலரை வைத்து சாதியைக் கண்டுபிடிக்க பலவகை இருக்கு. இங்க உள்ளவர்ளை  கண்டுபிடிக்க  என்ன வழி  இருக்கு என யோசித்துப்பார்த்தேன். விடை தெரியவில்லை. கடைசியில் நேரடியாகவே கேட்டு விட்டேன்என்ன சாதியென்று. 

"தெரியாது லா" என்றான் சாம் சாதாரணமாக.

ஒரு மூவி பார்த்துட்டு என் அப்பாவிடம் கேட்டேன்லா. சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டாங்க.”  இரண்டு தலைமுறைகள் சாதினா என்னவென்று தெரியாத தலைமுறைகள். கேட்கவே மகிழ்ச்சியாயிருந்தது. எனக்கு அசிங்கமாகவும் இருந்தது.

ஈயம் வெட்டி எடுக்கும் தொழில் சம்பந்தமாக இந்தோனேசியா சென்று விட்டு ஒரு வருடம் கழித்து இப்போதுதான் கெல்லி வருகிறார். அதுவும் கோயில் கட்டிய பின், இப்போதுதான் வருகிறார். சாயங்காலம் ஏழு மணிக்கு ஐயா வருவதாக தகவல். மணி இப்போது ஆறு. எல்லாம் தயார் நிலையில் இருக்கிறது. எல்லோரும் வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறார்கள்கெல்லி ஐயாவின் வருகைக்காக.

ஈப்போ வைப்பற்றி சொல்லிக்கொண்டே வந்தான்சாம். ஒரு காலத்தில் ஈயம் வெட்டி எடுத்தார்கள். அதனால் சீனர்கள்தமிழர்கள் அதிகமாக குடியேறினார்கள். தாது வெட்டுவதைப் பற்றி நிறையவே பேசினோம்.

கெல்லியை வரவேற்க இருந்த கூட்டம் கோயிலின்முன் அமர்ந்திருந்தனநேரம் கடந்தோடுகிறது. லேசான தூறல் மழையாக மாறுகிறது. வரவேற்க இருந்த கூட்டம் எல்லாம் கோயில் அருகில் இருந்த மண்டபத்திற்குள் ஒதுங்கின.  மண்டபத்திற்குள் கறிச்சோறுஇனிப்பு பொங்கல் எல்லாம் வாழை இலையில் மூடி வைத்திருக்கிறார்கள். பறை அடிப்பவர்கள் ஓரமாக படுத்து ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இரவானதுபதினோரு மணியானது. தமிழ்வாணனுக்கு நம்பிக்கை இழந்தபோதுதூரத்தில் இரண்டு புள்ளி வெளிச்சங்கள்.

7 மணிக்கு வரவேண்டிய இடத்துக்கு இரண்டு மணி நேரம் தாமதமாக வந்து சேர்த்தோம்முருகன் கோயிலுக்கு அருகில் உள்ள சாலையில் திரும்பி  நிறுத்தினான் சாம். முகவரியை சரிபார்த்தேன். சரியாக இருந்தது. அழைப்பு மணியை அழுத்துவதற்கு ஸ்விட்சைத் தேடினேன்.

தாரை தப்பட்டை சத்தம் விண்ணை எட்டியது. பெண்டலி மோட்டார் காரிலிருந்து கெல்லி ஐயா இறங்கினார்.

தமிழ்வாணனிடம் கை குலுக்கினார். மற்றவர்களைப்பார்த்து வணக்கம் சொன்னார்.
ஒரு வாரத்தில் ஸ்காட்லாந்து பயணம்போகப் போவதாகவும் சீமையிலிருந்து திரும்பிவரும்போதுஅவரது மனைவியையும்  குழந்தைகளையும் அழைத்துவருவதாக இருப்பதால் 1926 சித்திரைக்குள் அரண்மனையை முடிக்க வேண்டும் என கூறினார்.

ஐயா வாங்கமுதலில் சாப்பிடலாம். எல்லோரும் உங்களுக்காக காத்திருக்கிறார்கள்”, என்றார் தமிழ்வாணன்.

வாப்பா தமிழ்வாணன். எப்படி இருக்கிறேஉன் தாத்தா 60 வருசத்துக்கு முன்னால் விட்டுட்டு போன இடத்துக்கு நீ வந்திருக்கேமகிழ்ச்சி" என தாத்தா வாசல் வரை வந்து வரவேற்றார்.

வீட்டில் இருந்தவர்களை  அறிமுகப்படுத்தினார்.

 "தமிழ்வாணன் முதலில் பசியாறுவோம்" என சாப்பிடும் அறைக்கு அழைத்துச் சென்றார்.

மண்டபத்திற்குள் நுழைந்த கெல்லி ஐயாசாப்பாடு எல்லாம் அப்படியே இருந்ததைக் கண்டு ஆச்சரியத்தில் தமிழ்வாணனிடம் “ஏன் நீங்கள் இன்னும் சாப்பிடவில்லையா?” என்றார்.

விருந்தினர் சாப்பிட்ட பின்புதான் நாங்கள் சாப்பிடுவோம்அது சாவா மருந்தே ஆனாலும். இது தமிழர்களோட பண்பாடு.

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று

It is not fit that one should wish his guests to be outside his house even though he were eating the food of immortality", என G.U.Pope சொன்னதை மொழிபெயர்த்துச் சொன்னார் தமிழ்வாணன்.

தமிழ்வாணனோடு வீட்டில் இருந்த எல்லோரும் சேர்ந்து அமர்ந்து பசியாற ஆரம்பித்தார்கள்.


0 comments: