Wednesday, January 23, 2019

மாட்டுங்கா மாமி

மும்பை மாட்டுங்கா ரயில் நிலையத்தில் செம்பூரில் இருந்து வந்த ரயில் புது மணஇணையரான கிருஷ்ணாவையும் கனியையும் 'தூ' எனத் துப்பிவிட்டுச் சென்றது. கூட்டத்துக்குள் நீந்தி வெளியே வந்து ஆர்ய சமாஜ் நோக்கி நடக்கத் தொடங்கினார்கள். மாட்டுங்கா, சயான், தாராவி இம்மூன்று இடமும் ஒட்டிய நிலப்பரப்பில் அதிக தமிழர்கள் வாழ்ந்தாலும், மாட்டுங்காவில் அதிக மேட்டுக்குடித் தமிழர்கள் வாழும் இடம்.

பத்து நிமிசந்தான். ஏதாவது கொடுத்தால் வாங்காதே. மணியனைப் பார்க்கிறோம், படத்துக்குக் கிளம்புறோம். சரியா?”, என்று  கறார் காட்டினான் கிருஷ்ணா.

"வீடு எங்கே இருக்கு?", கேட்டாள் கனி.

"ஆர்ய சமாஜ்க்கு பின்புறம். கனி, திரும்பவும் சொல்றேன் அந்த மாமிகிட்ட வளவளனு பேசாதே", என்றான் கிருஷ்ணா.

"ஏன், கடிச்சுக் கொதறிடுவாங்களா?" என்றதற்குச் சிரித்துக்கொண்டான் கிருஷ்ணா என்ற கிருஷ்ணகுமார்.

கிருஷ்ணாவுக்கும் கனிக்கும் திருமணம் முடிந்து 6 மாதங்கள் தான் ஆகியிருந்தது. கிருஷ்ணாவுக்குச் சொந்த ஊர் முதுகுளத்தூர், மும்பை வந்து 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.  கனிக்குச் சொந்த ஊர் கமுதி. கொஞ்சம் கொஞ்சமாக இந்தி கற்றுக்கொள்ளுகிறாள். இவர்கள் இருவரும், மாட்டுங்காவில் வசிக்கும் கோத்ரெஜ் மணியனைப்  பார்க்கப் போய்க்கொண்டிருக்கிறார்கள், இந்த மாதம் அவர் ஓய்வு பெறுவதால். அப்படியே சினிமாக்குப் போவதாகவும் திட்டம். 

மாட்டுங்காவில் வசிக்கும் வெள்ளை காலர் வேலையில் இருப்பவர்களை அவர்கள் வேலைபார்க்கும் கம்பெனி பெயரை  அடைமொழியாகப் போட்டு அடையாளப்படுத்துவதுண்டு. மணியன் கோத்ரெஜ் கம்பெனியில் வேலை பார்ப்பதால் கோத்ரெஜ் மணியன். இதைப்போல் பாண்ட்ஸ் பாண்டுரெங்கன், கிரோம்ப்டன்  கோபால்சாமி போன்றவர்களைக்  காணலாம்.
கோத்ரெஜ் மணியன் தம்பதியருக்கு  குழந்தை இல்லை. மணியன், செயலாளராக கோத்ரெஜ் கம்பெனியில் வேலை நேரம் போக செம்பூர் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டியில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக பகுதி நேர வேலை.

மாட்டுங்காவில் சில காலம் கிருஷ்ணா பேயிங் கெஸ்ட்டாக ஒரு வீட்டில் இருந்தபடியால், மாட்டுங்காவைப் பற்றியும் இங்கு வசிப்பவர்களைப் பற்றியும்  நன்கு அறிவான். அதுவும் மாட்டுங்கா மாமிகளைப் பற்றி மிக நன்கு அறிவான். 

மாமிகள் பலரகங்கள் இங்கு. அதில் ஒன்றுதான் NRI மாமிகள். நியூ ஜெர்சி, டெக்சாஸ், சான் பிரான்சிஸ்கோ என்று தெரியாமல் காதில் விழுமாறு பேசினால் முடிந்தது. மகன் இருக்கும் டல்லாஸ் நகரைப்பற்றியும் கொசுறாக, மகள் இருக்கும் சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பற்றியும் விலாவாரியாக விடாமல் பேசும் மாமிகள். ஹொட்மெயில் அக்கௌன்ட் இருக்கும் இந்த வகையான மாமிகளுக்கு ஆஸ்திரேலிய விசாவிலிருந்து அமெரிக்காவில் எப்படி கிரீன் கார்டு வாங்குவது வரை எல்லாமே அத்துப்படி.

மற்றொரு ரகம் James Bond மாமிகள். ஒருவர் பெயரைச் சொன்னால் போதும். அவர் எங்கு இருக்கிறார், எங்கு வேலை பார்க்கிறார். அவர் குடும்பம் மற்றும் அவர் மகள்  போனவாரம் ஒரு குஜராத்தி பையனுடன் சுத்துனதுவரை புட்டுப்புட்டு வைத்து விடும் ரகம்.

இன்னொரு வகை மாமி, படிப்பு மாமி. தெரியாம என் நண்பன் ஐஐடி ல படிக்கிறானு சொல்லிட்டா போதும். அந்த காலத்தில் அவள் மகன் JEE  எப்படி முதல் வகுப்பில் தேர்வானான், IIT போவாய் தவிர வேற IIT எதுவும் சரி கிடையாது என்று MIT முதல் ஹார்வர்ட் வரை அவள் சொந்தங்களைப்  பற்றி பெருமையாகப் பீற்றிக்கொள்ளும் மாமிகள்.

ஆளுயர டிபன் கேரியர்ல் அறுசுவை சாப்பாடு விற்கும் சாப்பாடு மாமிகள்.
அந்த பான் கடைல நீ சிகரெட் புடிச்சதப் பார்த்தேன். உன்கூட சுத்துனது அந்த கோவாகாரியா என நண்பர்கள் முன் விசாரிப்பது விசாரணை மாமிகள்.

அடுத்து கோவில் மாமி, எல்லா கோயில்களில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளும் தெரியும், பாய்ஸ் பட செந்தில் மாதிரி.  எந்த நிகழ்ச்சிக்குப்  போனாலும் திருமண வயதில் இருக்கும் ஆண் / பெண் விசாரிப்பது, தகவல் கொடுப்பது, மேட்ரிமோனி மாமி. எந்த கடையில் துணிகள் மலிவாக இருக்கும் என அடுக்கும் sale மாமிகளை அதிகமாக தாதர், பரேல் பகுதி கடைகளில் காணலாம்.

அது ஒரு பழைய தொடர்மாடிக் கட்டடம். இன்னைக்கோ நாளைக்கோ என கட்டடம் இருந்ததைக்கண்டு கனிக்கு பயம் மேலே ஏற. கிருஷ்ணா ஏறுவதைக் கண்டு பின்தொடர்ந்தாள் கனி. இரண்டாவது  மாடியில் வீடு,  அழைப்பு பொத்தானை அழுத்தினான் கிருஷ்ணா.

கோன் ஹை?”, என்ற மாமியின் சத்தத்தைத் தொடர்ந்து, கதவு துளையில் நிழல் வந்து மறைந்தது. மாமிதான் கதவைத்திறந்தாள்.

வாடா கிருஷ்ணா. எப்படி இருக்க?”,  என்ற மாமிக்குக் கனியை அறிமுகப்படுத்தினான்.

அதே நேரத்தில் கிருஷ்ணாவின் கைப்பேசி சிணுங்கவும் சரியாக இருந்தது.

என் நண்பன் பேசுறான், டிக்கெட் சொல்லியிருந்தேன். இதோ பேசிட்டு வந்திடுறேன்”, என்று பேசியபடி வெளியே சென்றான். 

உட்காரு...காபி?”, என்ற மாமிக்கு ஒரு சிறு புன்னகை மட்டும் உதிர்த்து விட்டு இருக்கையில் அமர்ந்தாள் கனி.   

புது இடம் எப்படி இருக்கு?”

சமாளிக்கிறேன் மாமி”, என்றாள் கனி.

இதற்கு மேல் என்ன பேசுவதென்றே தெரியாமல் வீட்டைச் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருந்தாள் கனி. கிருஷ்ணா வேற இந்த மாமிட்ட கொஞ்சம் கவனமாக இருக்கச் சொன்னான். இருந்தாலும் ஏதாவது பேசணுமே.

சார் வீட்டுல இல்லையா? “, என வினவினாள் கனி.

சாமி வெளியே போயிருக்கார், வந்திடுவார்”.  
மாமியே தொடர்ந்தாள். மேனேஜர் கூட சில பிரச்சனைன்னு சொல்லிக்கிட்டிருந்தானே, ப்ரோமோசன் கிடைச்சுதா?”

இல்லே மாமி”, என்று முகத்தில் சோகத்தைக்காட்டினாள் கனி.  

அவனுக்கு எப்பவுமே விவரம் பத்தாது. கோபம் அதிகம். மேனேஜரிடம் அப்படிச் சொல்லலாமா? We should not throw open challenge, you know. ஏ சப்  பீச்சே சுப் சாப் கர்னேகா. (இதெல்லாம் பின்புறம் அமைதியா பண்ணனும் )
அதுவும் கிருஷ்ணா ரொம்ப பாவம் பார்ப்பான். உஸ்கோ சம்ஜானா (அவனுக்குப் புரியவை). சில நேரங்களில் நம் கால் அடுத்தவர்கள் மேலே படுதேன்னு ரொம்ப பீல் பண்ணக்கூடாது. ஏறிப் போய்க்கிட்டே இருக்கணும்”.

இந்தநேரம் கிருஷ்ணா உள்ளே வர சரியாக இருந்தது.

மாமி நாங்க அரோரா தியேட்டர்ல படத்துக்குப் போறோம். மணியன் மாமா இந்த மாசம் ரிடையர்ட் ஆறதனால அப்படியே பாத்துட்டுப் போலாம்னு வந்தோம், வந்தா கேட்டதாகச் சொல்லுங்கோ. நேரமாச்சு, இன்னொரு நாள் வர்றோம் என்று விடைபெற்று, சாலைக்கு வந்து நடக்கத் துவங்கினார்கள்.

வெளியே வந்தவுடன் முதலில் கனி சொன்னது "இனி இந்த மாதிரி இடத்துக்கு என்னைக் கூட்டிட்டு வராதீங்க, எனக்கு இந்த மாமியப்  பிடிக்கல".

ஏன் என்னாச்சு”, எனப் பதறினான் கிருஷ்ணா.  

சார் எங்கேன்னு கேட்டா, சார் வெளியே போயிருக்கார்னு சொல்லணும். அது என்ன 'சாமி' வெளியே போயிருக்கார்?", என முகத்தில் இறுக்கம் காட்டினாள் கனி.

இதிலென்ன இருக்கு, அந்த மாமிக்கு மணியன் சாமியா இருக்கும்.”

! லூசு கணவா! 'சாமி' வெளியே போயிருக்கார்னு சொன்னா, அடுத்த தடவ 'சாமி!' எங்கனு கேளுடான்னு சொல்லாம சொல்றா. இதெல்லாம் தெரியாத  உன் கூட எப்படி குப்பை கொட்டப்  போறேனோ?”

கிருஷ்ணா அமைதியாக இருந்தான். கனி தொடர்ந்தாள்.

கிருஷ்ணா ப்ரோமோசன் என்ன ஆச்சுன்னு கேட்டாள், இன்னும் வரலனு சொன்னேன். 'நாலு பேர் மேல ஏறி மிதிச்சி மேலே வந்தாலும் ஓகே தான். அதெல்லாம் பார்த்தா முடியாது', அப்படிங்கிறா. இதப்பாரு கிருஷ்ணா, 
நாலு பேர மிதிச்சிக் கிடைக்கும் எந்த வெற்றியும் நமக்குத் தேவையில்ல. இதுல்லாம் அறமில்லாத செயல். இவர்களுடன் சேர்ந்தால் நமக்கு நல்லதில்ல.”எனச் சீறினாள் கனி. 

"எனக்குத் தெரியும் கனி. இதுமாதிரி நிறைய நடந்திருக்கு. அதனால தான் இந்த மாமிட்ட கவனமா இருன்னு சொன்னேன்". 

"என்ன நடந்திருக்கு?", வியப்புடன் கேட்க ஆயத்தமானாள் கனி.  

"ஒருமுறை என் அப்பாவும் அம்மாவும் இங்கு வந்திருந்தாங்க. இவர்களைப்பார்க்க அழைத்து வந்திருந்தேன். கெளம்பும்போது ஊறுகா, வடாம், அப்பளம் எல்லாம் கொடுத்துவிட்டுச்சி மாமி. எனக்கு பயங்கர மகிழ்ச்சி. ஒரே வாரத்தில் எனக்கு போன் பண்ணி ஊறுகா அப்பளத்துக்குரிய காசை வாங்கிட்டா மாமி. 

இதுமாதிரி, கைமாத்து வாங்கிய பணத்துக்கு வட்டி வாங்கியது, அவள் சொந்த காரன் ஒருவன் ஏஜென்சி எடுத்ததால தனியார் கம்பெனியில் பிக்சட் டெபாசிட் போட்டது. அதுலே இரண்டு பேர்கள் ஓடிட்டாய்ங்க. நான் 50 ஆயிரம் இழந்ததுதான் மிச்சம்.

ஒருமுறை சென்னையிலிருந்து வந்த அவர்களின் சொந்தக்காரன் பேயிங் கெஸ்ட்டா கொஞ்ச மாசமா  இருந்தான். அவன் இருந்த போது, பலகணி சுவரில் தெரியாமல் உட்கார்ந்ததில் சுவர் உடைஞ்சி கீழே விழுந்துட்டான். அவன் கை உடைஞ்சாலும் அவனிடம் பலகணி சுவரை சரிசெய்ய காசு வாங்கிடுச்சு அந்த மாமி. ஆர்ய சமாஜ் க்கு சொந்தமான இந்த வீட்டுக்கு இவர்கள் கொடுக்கும் வாடகையே ரொம்ப குறைவு, அதுவும் பலகணி உடைந்தால், சொசைட்டி தான் செலவு பண்ணும். யாருக்குச் சேர்த்துவைக்கிறாங்களோ? இதை என்னிடமே சொல்லி என்னையே பேயிங் கெஸ்ட்டா வரச்சொன்னபோது, மாட்டுங்காவிலிருந்து என் வீடுவரை பின்னங்கால் பிடரில பட ஓடிட்டேன்", என நீண்ட உரை நடத்தியிருந்தான்.  

"இவ்வளவு நடந்திருக்குல, பின்னே எதுக்கு இந்த மாதிரியான ஆட்களுடன் இன்னும் சகவாசம்.", எனக்கேட்ட கனியை ஒரு பார்வை பார்த்தான். ஒரு பெருமூச்சு விட்டுத் தொடர்ந்தான். 

"ஒரு பிளாஷ்பேக் சொல்றேன் கேள். அது ஒரு பெரிய கதை, 10 வருசத்துக்கு முன்னே எனக்கு மும்பைலே நேர்காணல். முதன்முதல்ல தமிழ்நாட்ட விட்டு வெளிய போறேன். காலைலே சென்னை சென்ட்ரல் நிலையத்தில் மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறிட்டேன். என்னோட பெட்டியை சங்கிலி போட்டு இருக்கையோட இணைத்து பூட்டுப்  போட்டு சாவியை என் பர்சில் வைத்திருந்தேன். வழியனுப்ப வந்த சரவணனும் கிளம்பிப்போய்ட்டான். வண்டி கிளம்புவதற்கு முன்னால, கழிவறைக்குப் போனபோது பர்ஸ் கீழே விழுந்துடக்கூடாதுன்னு கண்ணாடி முன் வச்சிட்டு, வேலைய முடிச்சிட்டு எழுந்து வரும்போது கழிவறையிலே பர்ஸை மறந்து வச்சிட்டு வந்துட்டேன்.

5 நிமிசத்துக்கப்புறந்தான் உணர்ந்து போய் பார்த்தால், பர்ஸக் காணோம். திகைச்சுப்போய் இருந்தேன். என் இருக்கைக்கு எதிர்ல இருந்த மணியன் தான், வரும் வழியில் பூட்டு சரிபண்றவனப்  பார்த்தேன், வண்டி கிளம்ப 15 நிமிடம்தான் இருக்கு. போய்  அழைச்சுட்டு வா. வண்டி கிளம்பிடுச்சினா மும்பை வரை எதுவும் பண்ண முடியாதுன்னு சொன்னார். 

ஓடிப்போய் பூட்டு உடைப்பவரைக்கூட்டு வந்து பூட்ட உடைச்சி , பெரிய வேலையாகிப்போச்சி. என்னிடம் காசு  இல்லாததால் மணியன் தான் பணம் குடுத்து உதவினார். புது ஊர், தெரியாத மொழி, திருட்டுப்  பிரச்னை, அந்த நேரத்தில் அவர் செய்த உதவியை என்றும் மறக்க மாட்டேன்.

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்

ஒருவர் செய்யும் மிகக்கடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால் அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது.

இந்தக்  குறள்  எனக்கு என் அம்மா கற்றுத் தந்தது. வாழ்வில் மறக்க முடியாத/ மறக்கக்கூடாத குறள். அதனால் தான் இவர்களோடு தாமரை இலைத்   தண்ணீர் போல இருக்கேன்." 

தொலைவில் அரோரா தியேட்டர்முன் இருந்த கட்டவுட் தெரிந்தது.



0 comments: