Sunday, June 3, 2007

என் முதல் பதிவு

மும்பையில் வேலை பார்த்து கொண்டிருந்த சமயம்। வேலை அலுவலாக 15 நாட்கள் துபாய் சென்று வந்ததிலிருந்து, நாமும் வெளிநாடு சென்று வேலை பார்க்க வேண்டும் என்ற தாக்கம் அதிகமாயிற்று. என் நண்பன் கஞ்சா சரவணன் வெளிநாட்டு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருந்தான்.
"டேய் மாப்ளே என்னையும் ஆட்டையில் சேர்த்துகோடா " என்று அடைகலமானேன்.

கஞ்சா சரவணன் - பெயர் காரணம் நீங்கள் நினைப்பது போல் அல்ல. திண்டுக்கல் அருகில் உள்ள சின்னாளபட்டி சொந்த ஊர். (பொறியியல்) கல்லூரி நாட்களில் நன்கு படிப்பவன். பரிட்சை திருவிழாவை முதல் வாரத்திலேயே முடித்துவிட்டு மீதமுள்ள நாட்களில் எங்களுக்காக பிட் அனுப்புவது, எந்த கேள்விகளை பிட் எழுதி கொண்டு செல்ல வேண்டும் என்றுஅறிவுரை கூறுவது அவனது பொழுதுபோக்கு + கடமை.
பரிட்சை திருவிழா - நிறைய அரியர்ஸ் வைத்து கொண்டு ஒரு மாதத்திற்கும் மேலாக காலை, மாலை என்று இரவு பகல் பாராமல் பரிட்சை எழுதுவதால்.

"டேய் சீனி ! வெளிநாட்டில் பைபிங் வேலை தான் அதிக சம்பளம். அதனால் நாம் பைபிங் இஞ்ஜினியராக போகிறோம்" என்றான்.
"உனக்கு ஏற்கனவே தெரிந்த தொழில். ஆனால் எனக்கு? பைப் என்றால் வீட்டிலிருக்கும் குழாய் தான் தெரியும்." என்றேன்
"நான் உனக்கு சொல்லி தருகிறேன்" என்று கூறி பாடத்தை ஆரம்பித்தான். நானும் கேட்டுக்கொண்டேன் வாரமொருமுறை. கஞ்சா சரவணனுக்கு மும்பையில் நிறைய இடைததரகர்கள் தெரியும். ஓரு நாள் அவனிடமிருந்து போன், பாந்த்ரா குர்லா காம்ப்ள்க்ஸில் இருக்கும் வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பும் அலுவலகதிற்கு வந்துவிடு, உனக்கு நாளை பைபிங் இஞ்ஜினியருக்கு நேர்காண்ல். வெற்றியென்றால் நேர்காணல் எடுத்த அதிகாரிக்கு 1 மாத சம்பளம் கையூட்டு கொடுக்கவேண்டும்" என்றான்.
மறுநாள் நானும் இயன்றவரை பைப் பற்றி படித்து சென்றேன். இருந்தாலும் எதுவும் தெரியாத ஏரியாவில் நேர்காணல் என்றால் உதறல்
எடுக்கத்தானே செய்யும். ஆனால் நடந்ததோ வேறு.
" சீனி, பைபிங் இஞ்ஜினியருக்கு வேறு ஆளை போட்டு விட்டார்களாம், பைபிங் போர்மேன் களுக்கு ஆட்களை எடுக்கிறார்களாம்"
" டேய் கஞ்சா, பைபிங் போர்மேனா போனா என்னடா?"
" வேண்டாம்டா, வேறு வேலை பார்க்கலாம், கொஞ்சம் பொறு"
" இல்லடா, நேர்காணல் ஏற்பாடு செய்" என்றேன்.
கொஞ்ச நேரத்தில் ஏற்பாடு செய்து அலுவலகத்திற்குள் அனுப்பினான் என்னை. முதல் மற்றும் அடித்தளத்தில் இயங்கும் அலுவலகம் . நிறைய தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைக்கு முற்றுகையிடும் இடம். இதில் தமிழ், மலையாளம், பிஹார் மக்கள் தான் அதிகம்.
மலையாளிகள் அநேகமாக Skilled workers.
தமிழர்கள் - casual labours
பிஹாரி - Brick works / carpenters
Welder, Fitters போன்றவர்களுக்கு அடித்தளத்தில் நேர்காணல். வராந்தா வில் வரிசையாக மேசை போட்டு அதிகாரிகள் அமர்ந்திருந்தார்கள்.
இடைததரகர்கள் ஆட்களை நேர்காணலுக்கு அழைத்து வந்து விடுவார்கள். அந்த இடம் சந்தையை போன்று ஒரே சத்தம்.
நானும் நேர்காணல் அதிகாரி முன் சென்று அமர்ந்தேன். இது நாள் வரை என் வாழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட நேர்காணல் மற்றும் தொலைகாணல் கண்டிருக்கிறேன். சில நேர்காணல் மறக்க முடியாத அனுபவம். அதில் ஒன்றுதான் இது.
இந்தியில் தான் ஆரம்பித்தார். எனக்கோ இந்தி சரியாக வராது. தமிழகத்தில் அதிகம் பேர் இந்தியில் பேசுபவர்கள் உள்ள ஊரை சேர்ந்தவனென்றாலும் இந்தி கற்றுக்கொள்ள வில்லை. முதன் முதலில் மும்பை வந்தபோது இந்தி கற்றுக்கொள்ளாததின் வலியை உணர்ந்தவன். தாய் மொழி மேல் காதல் கொண்டிருந்தாலும், பிழைப்பிற்காக மற்ற மொழிகளை தெரிந்து வைத்து கொள்வது நலம் என்று கருதுபவன்.அதனால்தான் கொஞ்சம் தெலுங்கு, கொஞ்சம் கன்னடம், கொஞ்சம் மலையாளம், கொஞ்சம் இந்தி கற்றுகொண்டேன். ஏன், சீன மொழி கூட மொழிபள்ளிக்கு சென்று கற்றுகொண்டேன். நான் கற்றுக்கொள்ளவில்லை என்று வருத்தப்பட்ட ஒரே மொழி " மலாய்". மிகவும் எளிய மொழி. கற்றுக்கொள்ள வாய்ப்பிருந்தும் கற்றுக் கொள்ளவில்லை. ஏன் என்று எனக்கே தெரியவில்லை.

நேர்காணலை ஆரம்பிக்கலாமா என்று வினவினார். சரி என்றேன்.
" ஆங்க் லக்னெக்கேலியே கியா கியா சாஹியே" ( தீ பிடிக்க என்ன என்ன வேண்டும் )
" ஆங்க் சாஹியே" ( தீ வேண்டும் ) என்றேன்.
"பச் ! தீ பிடிக்க என்ன என்ன வேண்டும்"
"தீ வேண்டும்" என்றேன் மறுபடியும்.
" டீக்கே டீக்கே, ஓ ஆங்க் லக்னெக்கேலியே கியா கியா சாஹியே" (சரி சரி , அந்த தீ பிடிக்க என்ன என்ன வேண்டும் )
" தீ குச்சி வேண்டும்" என்றேன்
" வேற"
"side சாஹியே" என்றேன்
" வேற"
........
" அரே ! ஹவா சாஹியே" ( காற்று வேணும் ) என்று கூறி கெகே பிகே என்று சிரித்தார். பின்பு மேசை ட்ராயரிலிருந்து ஒரு ட்ராயிங் எடுத்து விரித்து " இந்த ட்ராயிங் பெயர் என்ன" என்றார். நானே ஒரு அண்ட்ராயர் (undrawer). scale வைத்து கோடு போட்டாலே நேர் கோடு வராது. கல்லூரி நாட்களில் machine drawing தேர்வில் ஒன்றும் தெரியாமல் அசிங்கமான படம் வரைந்து வைத்து விட்டு வந்ததால் விசாரணைக்கு ஆளானவன்.
" நஹி மாலும்" என்றேன்.
அடுத்து புகைபட அல்பம் ஒன்றை எடுத்தார்। அதில் ஒரு படத்தை காண்பித்து இது என்ன? என்றார். ( அது ஒரு சுமை தூக்கி). தெரியாது என்றேன். அடுத்து ஒரு படத்தை காண்பித்து "இதில் குழாய் ஏன் வளைந்துள்ளது" என்றார்.(Expansion Loop in steam piping)
"குழாய் போட இடமில்லை, அதனால் வளைத்து போட்டிருக்கிறார்கள்" என்றேன்.
கடுப்பாகி "ஒரு பதிலாவது சரியாக சொல்வாய் என எதிபார்த்தேன். சரி பரவாயில்லை. நீ தேர்வாகிவிட்டாய். உன் நண்பனை என்னை வந்து பார்க்க சொல் " என்றார்.
நானும் வெளியே வந்து சரவணனை உள்ளே அனுப்பினேன். திரும்பி வந்தவன் " சீனி, பத்தாயிரம் கேட்கிறாண்டா, சம்பளத்தை அதிகரித்தால் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறேன்" என்றான்.
இரண்டு நாட்களில் உடன்பாடு எட்டப்பட்டது. மாதம் 350 அமெரிக்க டாலர் சம்பளம். சவுதி அரேபியாவில் உள்ள "அல் மொஜில்" என்ற மிக
பெரிய கம்பெனியில் வேலை.
ஒரே மாதத்தில் விசா தயாராகிவிட்டது. மூன்றரை ஆண்டுகள் மும்பையில் வேலை பார்த்த கம்பெனியிலிருந்து ராஜினாமா செய்தேன்.
சவுதி அரேபியா கனவில் மிதக்க ஆரம்பித்தேன். கஞ்சா சரவணன் கடைசி வரை " " வேண்டாம் கொஞ்சம் பொறுடா வேறு வேலை பார்க்கலாம் " என்றான்.
போய் பார்த்துதான் பார்க்கலாமே என்னவென்று. பிடிக்கவில்லையென்றால் திரும்பி வரபோகிறேன்.

7 comments:

said...

அருமையான துவக்கம். அனுபவங்களில் துவங்கும் பதிவர்கள்தான் அதிகம். வந்து கலக்குங்க.

said...

நன்றி சிறில். எல்லாம் உங்கள் வழிகாட்டுதல்தான்.

ஸ்ரீனிவாசன்

said...

வாழ்த்துக்கள், ஸ்ரீனிவாசன் !

said...

வாங்க ஸ்ரீனிவாசன்.

ஜோதியில் வந்து கலந்ததுக்கு வாழ்த்து(க்)கள்.

Anonymous said...

வாங்க சீனி. நம்மூரா. வாழ்த்துக்கள்.

said...

வலையுலகத்திற்கு வந்தமைக்கு வாழ்த்துகளும் வரவேற்புகளும். சரியா வலது காலைதானே எடுத்து வச்சி வந்தீங்க? ;-) உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

said...

Srini,
Anupavathaivida vivarikkum paangum thelintha neerodai pola pazhagu thamizhum miga azhgu.Nee aen oru blog naavalukku muyarchi edukkakkoodathu?